கடைசி பஸ்

0 views
Skip to first unread message

Pandiyaraja

unread,
1:25 PM (5 hours ago) 1:25 PM
to மின்தமிழ்

இது எனது அடுத்த தொடரடைவுக்கான அறிவிப்பு.

இப்பொழுதெல்லாம் விடிய விடிய பேருந்துகள் ஓடிக்கொண்டிருக்கின்றன. ஆனால், ஒரு காலத்தில் பேருந்துகள் - அதிலும் நகர்ப்பேருந்துகள் - இரவு 11 மணிக்கு நிறுத்திவைக்கப்படும். எனவே, கடைசி பஸ் என்ற ஒன்று இருந்தது. அதைத் தவறவிட்டால், மறுநாள் காலைவரை காத்திருக்கவேண்டும்.

அதிலும், கிராமப்புறங்களில், இந்தக் கடைசி பஸ்ஸுக்கு மவுசு ரொம்ப அதிகம். சில கிராமங்களில் மாலை 5 மணியளவில் வந்துசெல்லும் பேருந்துகளே கடைசி பஸ் ஆகும். எனவே அந்தப் பேருந்து வரும்போதே ’பாம், பாம்’ என்று ஒலி எழுப்பிக்கொண்டே வரும். வந்து அது திரும்பிச் செல்ல ஆரம்பிக்கும்போது, எங்கிருந்தோ ஒரு சந்துக்குள்ளிருந்து ஒரு பெரியவர் ’ஸ்டாப், ஸ்டாப்’ என்று கூவிக்கொண்டு ஓடமாட்டாமல் ஓடிவரும் காட்சி அடிக்கடி நடக்கும். அப்போதெல்லாம், அந்தப் பேருந்துக்கு அருகில் இருக்கும் சிலர், அவரைக்காட்டிலும் அதிகாமக ’ஸ்டாப், ஸ்டாப்’ என்று கத்தி, அந்தப் பேருந்தை நிறுத்துவார்கள். கண்டக்டர் எட்டிப்பார்த்து, ‘சீக்கிரம், சீக்கிரம்’ என்று துரிதப்படுத்துவார். இதற்கிடையில் இன்னும் ரெண்டு மூன்று பேர் வேகமாக வந்து தொத்திக்கொள்வார்கள்.

இப்பொழுது என் நிகண்டுகளுக்கான தொடரடைவு உருவாக்கமும் இப்படி ஆனது.

ஏறக்குறைய முக்கியமான நூற்றுக்கும் மேற்பட்ட இலக்கியங்களுக்குத் தொடரடைவுகள் உருவாக்கிவிட்ட பின்னர், வேறு எதனை எடுக்கலாம் என்று யோசித்தபோது, எனக்கு நினைவில் வந்தது ‘நிகண்டுகள்’-தான். தமிழ் இணையக் கழகத்தில் மூன்று நிகண்டுகள் இருந்தன. அவற்றுக்குத் தொடரடைவுகள் உருவாக்கினால் போதும் என்ற எண்ணத்தில்தான் முதலில் தொடங்கினேன். அந்த நிகண்டுகளின் அமைப்பில் மனத்தைப் பறிகொடுத்த நான் வேறு நிகண்டுகளையும் பல இணையதளங்களில் தேடிக்கண்டுபிடித்து ஒவ்வொன்றாக இணைக்கத் தொடங்கினேன். 15 நிகண்டுகளை இவ்வாறு எடுத்து முடித்தேன். இனி போதும் என்று முடிவுசெய்து, இப்போது தனித்தனியாக இருக்கும் 15 நிகண்டுகளையும் ஒன்றிணைத்து, அவற்றை ஒரே தொடரடைவுக்குள் கொண்டுவரும் முயற்சியைக் முன்னெடுக்கும்போது, அந்தக் கடைசி பஸ் கூக்குரல் கேட்டது. ”ஸ்டாப், ஸ்டாப், நானும் வர்ரேன்’ என்று ஒரு நிகண்டு கூவியது. திரும்பிப் பார்த்தால், அதன் பெயர் அகராதி நிகண்டு. அகராதி என்றால், சொற்களை அகரவரிசையில் அடுக்கி, அவற்றுக்குப் பொருள் தருவது. நிகண்டு என்றால் சொற்களை, தெய்வம், மக்கள், விலங்கு எனப் பல்வேறு பிரிவுகளாக வகுத்து அவற்றுக்கு, நூற்பா வடிவில் பொருள் தருவது. இந்த அகராதி நிகண்டு என்பது, அகரவரிசையில் சொற்களை அடுக்கி, அவற்றுக்கு நூற்பா வடிவில் பொருள் தருவது. மச்ச கன்னி மாதிரி. சரி, இதனையும் எடுத்துக்கொள்ளலாம் என்று பார்த்தால், அதே பெயரில் வேறு இரண்டு நிகண்டுகளும், எங்களையும் சேர்த்துக்கொள்ளுங்கள் என்று கூவுகின்றன. ஆம், அகராதி நிகண்டு என்ற பெயரில் மூன்று நிகண்டுகள் உள்ளன.

இந்த மூன்றனுள், நான் முதலில் எடுத்தது,  உ.வே.சா நூலகம் 2003-இல் வெளியிட்ட ஓர் அகராதி நிகண்டு. இதன் ஆசிரியர் பெயர் தெரியவில்லை. பசுபதி, மேகலா, சாயிராமன் என்ற மூவர் இணைந்து பதிப்பித்தது.

இந்த அகராதி நிகண்டுக்கான தொடரடைவு இப்போது உருவாக்கப்பட்டுள்ளது. இதனை tamilconrdance.in என்ற எனது இணையதளத்தில், தொடரடைவுகள் -- > நிகண்டுகள் என்ற தலைப்பின் கீழ் காணலாம். இது எனது 16-ஆவது நிகண்டு. மொத்தத்தில் தொடரடைவுக்கான 117-ஆவது நூல்.

இனி, அடுத்த அகராதி நிகண்டுக்கான தொடரடைவுச் செய்தியுடன் சந்திக்கிறேன்.

நன்றி,

ப.பாண்டியராஜா

 

 

Reply all
Reply to author
Forward
0 new messages