நன்னெறி வாழ்விற்கு முதன்மை அளித்த வ.சுப. மாணிக்கம் — தேமொழி

16 views
Skip to first unread message

தேமொழி

unread,
Apr 24, 2026, 2:17:55 PM (6 days ago) Apr 24
to மின்தமிழ்
நன்னெறி வாழ்விற்கு முதன்மை அளித்த வ.சுப. மாணிக்கம்

  —   தேமொழி


va suba manikkam.jpg
வரும் தலைமுறையினர் வாழ்வைச் செம்மைப்படுத்தும் அக்கறை கொண்டவர்களாக இருந்து; அதே நோக்கை எண்ணம், சொல், செயல் ஆகியவற்றிலும் முன்னெடுப்பவர்களாகத்  திகழ்பவர்கள் நம்மில் தோன்றுவது மனிதக்குலம் பெற்ற பேறு. அவர்களுள் ஒருவர் மூதறிஞர் செம்மல் வ.சுப. மாணிக்கம் அவர்கள்.   அவர் 1. ஆத்திசூடி (ஒளவையார்), 2. கொன்றை வேந்தன் (ஒளவையார்), 3. மூதுரை (ஒளவையார்), 4. நல்வழி (ஒளவையார்), 5. நறுந்தொகை (அதிவீரராமபாண்டியர்), 6. நன்னெறி (சிவப்பிரகாசர்), 7. உலகநீதி (உலகநாதர்) ஆகிய ஏழு நூல்களையும் வளர்பருவ இளைஞர்களுக்காக  "ஏழிளந்தமிழ்" (நீதி நூல்கள்) என்ற தலைப்பில் அவற்றுக்குப் பொருள் எழுதித் தொகுத்து தமிழ் உலகுக்கு அளித்தார்.  

     "ஆத்தி சேர் கொன்றை அழகு தமிழ் மூதுரை
     பாத்தி சேர் நல்வழி பண்புலகம் - பூத்த
     நறுந்தொகை நன்னெறி ஏழும் குழந்தைக்
     குறுந்தமிழ் என்றறிந்து கொள்."
       [ —  மூதறிஞர் செம்மல் வ.சுப. மாணிக்கனார்]
என்பது அவர் அளித்த பாடல். ஆத்திசூடி முதலிய இந்த ஏழு நூல்களையும் நம் முன்னோர்கள் திண்ணைப் பள்ளிகளில் முறையாகப் பயிற்றுவிக்கப்பட்டுள்ளனர்.  இந்த ஏழு நூல்களையும் பத்து வயதிற்குள் நன்கு பொருளறிந்து மனனம் செய்து படித்துவிட்டால் மாணவர்களின் தமிழறிவும், தமிழ் இலக்கிய இலக்கண அறிவும், வாழ்வும் சிறக்கும் என்று நூல் முன்னுரையில் அவர் குறிப்பிடுகிறார். இந்த நூல்களின் கருத்துகள் சிறுவர்களிடம் கொண்டு செல்வதற்காகவும்  போட்டிகள் பல நடத்தி, பரிசுகள் வழங்கி சிறுவர்களை ஊக்குவித்துள்ளார்.

 வ.சுப. மாணிக்கம் அவர்கள் நன்னெறிகள் அறிவுறுத்தும் கல்வியில் ஆர்வம் மிகக் கொண்டவர் என்பதால் சிறுவருக்காக ஆத்திசூடி அமைப்பில் 'தமிழ்சூடி'; நல்ல கருத்துக்களின் தொகுப்பாக  'மாணிக்கக் குறள்'; திருக்குறளுக்குச் செவ்விய தெளிவுரை ஆகியன இயற்றி நன்னெறிச் சிந்தனைகளைத் தெளிவாகச் சிறுவர்களிடம் கொண்டு சென்றுள்ளார்.

வ.சுப. மாணிக்கம் புதுக்கோட்டை மாவட்டம் மேலைச் சிவபுரியில்  ஏப்ரல் 17, 1917 அன்று வ. சுப்பையா - தெய்வானை இணையருக்கு மகனாகப் பிறந்தவர். பெற்றோரைச் சிறுவயதில் இழந்த இவர், வளர் இளம்பருவத்தில் வட்டித்தொழில் கற்க  பர்மாவில் பணிபுரிந்த பொழுது, கடை முதலாளியின் கட்டளைப்படி பொய் சொல்ல மறுத்ததால் வேலையில் இருந்து துரத்தப்பட்டு தாயகம் திரும்பினார். பின்னர் பண்டிதமணி மு.கதிரேசச் செட்டியார் வழிநடத்துதலால் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் 'வித்துவான்' படிப்பில் (1940) முதல் வகுப்பில்  தேர்ச்சி  பெற்ற பின்னர், பி.ஓ.எல் (1945); எம்.ஓ.எல் (1948); எம்.ஏ (1951); பி.எச்.டி (1957) என்று தமிழ்க் கல்வியைத் தொடர்ந்தார்.

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராகவும்; காரைக்குடி அழகப்பா கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகவும்,  முதல்வராகவும்; மீண்டும் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்த் துறைத் தலைவராகவும், புல முதன்மையராகவும்;  மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகவும் பணிபுரிந்தவர். தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம் தொடங்கிய போது அதன் அமைப்புக் குழு தலைவராகவும் இருந்தார்.

'செம்மல்', 'முதுபெரும் புலவர்', 'பெருந்தமிழ்க்காவலர்',  'முதுபேராய்வாளர்', டி.லிட். பட்டங்களையும், பெற்றவர். தமிழக அரசால் 'திருவள்ளுவர் விருது' (1989, இறந்த பின்பு) அளிக்கப்பட்டுச் சிறப்பிக்கப்பட்டார். முப்பதுக்கும் மேற்பட்ட நல்ல பல நூல்களைத் தமிழுக்குத் தந்தவர். இவருடைய 'கம்பர்' என்ற நூல் தமிழக அரசின் முதற்பரிசு பெற்றது. தமிழக அரசு 2007-ல் இவரது நூல்களை அரசுடைமை ஆக்கியது. வ.சுப. மாணிக்கம்  ஏப்ரல் 25, 1989 அன்று மறைந்தார்.

தமிழ்வழிக் கல்விக்காகத் தனி இயக்கம் தொடங்கியும், மழலையர் பள்ளி முதல் பல்கலைக்கழகம் வரை தமிழே பயிற்று மொழியாக இருக்க வேண்டும்  என்பதை வலியுறுத்தியும், தில்லை அம்பலத்தில் தமிழ் அரங்கேற வேண்டும் என்ற போராட்டங்களையும்  முன்னெடுத்தார். எந்தவொரு காரியத்தையும் ‘உ’ ‘சிவமயம்’ போட்டு எழுதும் மரபிற்கு மாறாக  ‘த’ (தமிழ்) என்று மாதிரி எழுதும் வழக்கம் கொண்ட தமிழ்ப்பற்றாளராகக் காலம் முழுவதும் வாழ்ந்தவர். அவருடைய தமிழ்ப்பணிகளுக்காக 'தமிழ் இமயம்' என்று தமிழ் அறிஞர்களால் போற்றப்பட்டார்

இவர் எழுதியவற்றுள் என்னைக் கவர்ந்தது;

     நல்லாவின் பால் முழுதும் கன்றுக்கில்லை;
     நறும்பூவின் மணமுழுதும் சோலைக்கில்லை:
     நெல்லாகும் கதிர் முழுதும் நிலத்துக்கில்லை;
     நிறைகின்ற நீர் முழுதும் குளத்துக்கில்லை
     பல்லாரும் கனி முழுதும் மரத்துக்கில்லை:
     பண்ணரம்பின் இசை முழுதும் யாழுக்கில்லை:
     எல்லாமே பிறர்க்குழைக்கக் காணுகின்றேன்;
     என் வாழ்வும் பிறர்க்குழைக்க வேண்டும் வேண்டும்!
[ —  மூதறிஞர் செம்மல் வ.சுப. மாணிக்கனார்]
என்ற பாடல்.   இத்தகைய கருத்து தொன்று தொட்டு தமிழ் உலகில் பேசப்பட்டாலும் அன்றைய சங்கப்பாடல்கள் முதல், இன்றைய திரையிசைப்பாடல்கள் வரை அது பெண்ணின் வாழ்விற்கு மட்டுமே பொருத்திக் காட்டப்பட்டு வந்துள்ளது.

     பல உறு நறும் சாந்தம் படுப்பவர்க்கு அல்லதை
     மலையுளே பிறப்பினும் மலைக்கு அவை தாம் என் செய்யும்
     நினையும்-கால் நும் மகள் நுமக்கும் ஆங்கு அனையளே
     சீர் கெழு வெண் முத்தம் அணிபவர்க்கு அல்லதை              15
     நீருளே பிறப்பினும் நீர்க்கு அவை தாம் என் செய்யும்
     தேரும்-கால் நும் மகள் நுமக்கும் ஆங்கு அனையளே
     ஏழ் புணர் இன் இசை முரல்பவர்க்கு அல்லதை
     யாழுளே பிறப்பினும் யாழ்க்கு அவை தாம் என் செய்யும்
     சூழும்-கால் நும் மகள் நுமக்கும் ஆங்கு அனையளே              20
 —  கலித்தொகை-9
என்ற வரிகள், தலைவனுடன் உடன்போக்கு சென்று விட்ட தலைவியைக் குறித்து வருந்தும் செவிலித்தாயை நோக்கி,  இனிய மணம் தரும் சந்தனக்கட்டைகள் தன்னை அரைத்து மேனியில் பூசிக் கொள்பவர்களுக்கு அல்லாமல் அவை தான் பிறந்த மலைக்கு நறுமணம் தராது. உன் மகளும் அத்தகையவளே.  நீரில் பிறந்த சிறப்புப் பொருந்திய நல் வெண்முத்துக்கள் அவற்றை அணிபவருக்குப் பயன் தருமே அன்றி அதன் பிறப்பிடமான நீருக்கு அவற்றால் பயன் எதுவும் இல்லை. உனது மகளும் உனக்கு அவ்வாறே. யாழின் ஏழு நரம்புகளால் கூட்டி எழுப்பும் இனிய இசையால் இசைப்பவர் மகிழ்வாரன்றி, அதனால் யாழுக்கு எந்தப் பயனும் இல்லை. உன் மகளுக்கும் உனக்கும் உள்ள தொடர்பும் யாழ் எழுப்பும் இசைக்கும் யாழுக்கும் உள்ள தொடர்புதான் என்று பெண் தலைவனைச் சென்று சேர்ந்துவிடுவாள், பெற்றவர்கள் இந்த உண்மையை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று முக்கோற்பகவர் கூறுவதாக அமைகிறது.

மாறாக, வ.சுப. மாணிக்கனார், எல்லோருமே பிறர்க்கு உழைக்கக் காணுகின்றேன். என் வாழ்வும் பிறர்க்கு உழைக்க வேண்டும் வேண்டும் என்று பிறருக்கு உழைப்பவர்களுடன் இணைத்துக் கூறுவது கருத்தைக் கவர்வதாக அமைந்துள்ளது. 
Reply all
Reply to author
Forward
0 new messages