உள்ளே நுழையும் போது சதாசிவம் என்னைப் பார்த்து ஒரு புன்னகை சிந்தி
உட்காருமாறு சைகை செய்தார் , தொலைபேசியில் யாரிடமோ உத்தரவுகள்
போட்டுக்கொண்டிருந்தார்
ஆமாம் இன்னும் ஒருமணிநேரத்துலே தக்காளி .கேரட்டு மொத்தத்தையும் அறுவடை
பண்ணிடணும் இல்லேன்னா காஞ்சு போயிடும்
அதுக்கு அப்புறம் அந்த நெல்லு அதையும் இன்னும் அரைமணி நேரத்துக்குள்ள
அறுவடை ஆரம்பிக்கணும்
சேகர் கிட்ட சொல்லி உடனே மொத்த வயலையும் உழது
இன்னிக்கு 4 மணிக்குள்ளே திருப்பியும் மொத்த வயல்லேயும் நெல் போடச்
சொல்லு கொஞ்சம் ரூபா சேக்கணும், அமாம் ஆமாம் மல்டிபில் டூல் யூஸ்
பண்ணச் சொல்லு
டீசல் தீந்து போச்சுன்னா ஆளைவிட்டாவது இன்னிக்கு அறுவடை பண்ணியே ஆகணும்
அப்புறம் ப்ரியாகிட்ட சொல்லு அவளோட வயல்லயும், இன்னிக்கு பதினோரு
மணிக்கு மொத்தம் அறுவடை பண்ணனும், அப்போதான் சரியா 12 மணிக்கு உழுது
திருப்பியும் கேரட்டு போட நேரம் சரியா இருக்கும்
நான் இன்னிக்கு ஒரு மணி நேரம் சீக்கிறம் வந்துடுவேன், நானும் வந்த
வுடனே என்னோட வயல்ல மொத்தத்தையும் அறுவடை பண்ணிட்டு சன் ப்ளவர்
போட்ருவேன்,
என்று கூறிக்கொண்டே அந்த முக்கியமான பைலில் கையெழுத்திட்டார்
நான் அந்த பைலை வாங்கிக்கொண்டே சார்
இந்த மாதிரி ஒரு இன்டெர் நேஷனல் லெவெல்ல இருக்கிற ஒரு அலுவலகத்துலே
இவ்ளோ பெரிய மேனேஜரா இருந்தாலும் உங்க குடும்பத்தோட விவசாயத்திலெ
இவ்வளவு ஆர்வமா இருக்கீங்களே உங்களை நெனைச்சா எனக்கு ரொம்பப் பெருமையா
இருக்கு, இன்னிக்கும் நம்ப நாடு ஓரளவாவது விவசாயத்துறையிலே முன்னணிலே
இருக்குன்னா அதுக்கு உங்களை மாதிரி நல்லவங்கதான் காரணம் என்றேன்
நாங்க கூட விவசாயக் குடும்பம்தான் சார்,
நாட்டுலே தண்ணி இல்லே, உரமெல்லாம் சரியா கிடைக்க மாட்டேங்குது, மின்சாரம்
கிடைக்கலே,இனிமே விவசாயிக்கெல்லாம் மதிப்பிலைடா, விவசாயம் செய்யறதே
இனிமே கஷ்டம்தான், அதுனாலே நீயாவது ஒரு நல்ல வேலைக்குப் போயி
குடும்பத்தைக் காப்பாத்துன்னு சொல்லி ,எங்க அப்பா என்னை ரொம்பக் கஷ்டப்
பட்டு படிக்க வெச்சாரு என்றேன்
என்னை ஒரு முறை நிமிர்ந்து பார்த்துவிட்டு விலாப்புடைக்க சிரிக்க
ஆரம்பித்தார் அவர்
இவர் இவ்வளவு சிரிக்கும்படி என்ன சொல்லிட்டொம்னே புரியாம திரு திருன்னு
முழிச்சிண்டு உக்காந்திருந்தேன், அவர் சிரித்து முடித்து விட்டு
சேகர் நாங்க இந்த கம்யூட்டர்லே இணைய தளத்திலே பேஸ்புக்க்னு ஒரு
விளையாட்டு இருக்கு , அதுலே இந்த விளையாட்டு விளையாடிண்டு இருக்கோம்,
அப்பிடியே வயல், அதுலே எல்லாக் காய்கறிகளும், நெல்லு எல்லாமே எப்பிடி
விளையுதுன்னு அருமையாப் பண்ணி இருக்கான்
ப்லாஷ் ப்ளேயர்ன்னு ஒரு மென் பொருள் இருக்கு, அதுலே என்னமா டிசைன் பண்ணி
இருக்கான் தெரியுமா என்று கேட்டுவிட்டு மீண்டும் சிரிக்க ஆரம்பித்தார்
மேனேஜர்
அன்புடன்
தமிழ்த்தேனீ