இணையவாற்றுப்படை - மரபுச் செய்யுளில் புதுவரவு

0 views
Skip to first unread message

N. Ganesan

unread,
Jun 13, 2024, 2:18:11 PMJun 13
to Santhavasantham, tiruva...@googlegroups.com, மு இளங்கோவன், Dr. Y. Manikandan, Thiruppur Krishnan, Erode Tamilanban Erode Tamilanban
இணைய ஆற்றுப்படை - மரபுச் செய்யுளில் புதுவரவு
-----------------

தமிழிலே காலங்காலமாய்ப் பிரபந்தங்கள் பல எழுந்துள்ளன. தொழில்நுட்பப் புரட்சிகள் மீதான பிரபந்தங்கள் அரிதானவை. அமெரிக்காவின் தாவரமாகிய புகையிலை தமிழகம் வந்தடைந்த பின்னர், மூக்குப்பொடி, சுருட்டு முதலியன உருவாகின. 18-ம் நூற்றாண்டின் இறுதியில் புகையிலை மீதான சிற்றிலக்கியத்தைச் சீனிச்சருக்கரைப் புலவர் பாடினார். புகையிலை விடுதூது என்னும் அரிய பிரபந்தம் அது. தமிழ்த் தாத்தா உவேசா அவர்கள் ஏடுதேடிக் கண்டு அச்சுவாகனம் ஏற்றினார். மதுரை முன்னியம் வாயிலாக, உவேசா பதிப்பினை வாசிக்கலாம்.
https://www.projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0381.html
அதேபோல, எதிர்த்திசையில் இப்போது அமெரிக்காவிற்குத் தமிழகத்தில் இருந்து சந்தனம் வருகிறது. ஹூஸ்டனில் குடிகொண்டுள்ள மீனாட்சி அம்மன் மீது திருச்சிப் புலவர் இராம. இராமமூர்த்தி பாடிய “சந்தனம் விடுதூது” பிரபந்தத்தை அரங்கேற்றினோம்.

17-ம் நூற்றாண்டிலே, கண்ணிலே பார்வைக் குறையை நிவாரணம் செய்யும் கண்ணாடி கண்டுபிடிக்கப்பட்டது. அதனால் பலன் அடைந்த தமிழ்ப்புலவர், 18-ம் நூற்றாண்டிலே கோவை அருகே விளாங்குறிச்சி என்னும் சிற்றூரிலே வாழ்ந்திருக்கிறார். கண் கண்ணாடியால் முழுப்பார்வை பெற்ற மகிழ்ச்சியால், பேரூர்ப் பட்டீசர் கண்ணாடி விடுதூது பாடியுள்ளார். அதனை வாசிக்க,
திருப்பேரூர்ப் பட்டீசர் கண்ணாடி விடுதூது:
https://www.projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0183.html

ஒலிநாடா பின்னர் ஒளிநாடா பெரிய அறிவியற் சாதனை, இந்திய மாந்தருக்குப் பலவகையில் பயன்படுவது. பல பெரிய பாடகர், அறிஞர் குரல்களை இன்றும் நம்மால் கேட்க முடிகிறதாகில் ஒலிநாடாவே துணை. மனைவிக்கு மத்தியகிழக்கு நாடான ஏமனிலிருந்து அனுப்பிய ஒலிநாடாவுடன் கவிமாமணி இலந்தை இராமசாமியார் இயற்றிய ஒலிநாடா விடுதூதை என்னிடம் தந்தார். அரிய தூதுப்பொருள் கொண்டு பாடிய இத்தூதை அனுப்பிய ஆசிரியர் மடலில் குறிப்பிட்டது: ஒலிநாடா விடு தூது 1987ல் ஏமனில் இருந்த போது எழுதியது. தூதுப் பாடல்கள் பொதுவாக கலிவெண்பாவில்தான் எழுதப்பட வேண்டும். ஆனால் புதியன புகுதல் முறையில் எளிமையாக இருப்பதற்காக அகவலில் எழுதியுள்ளேன் - இலந்தை". தந்தி விடுதூது உண்டு.
https://nganesan.blogspot.com/2004/05/blog-post_23.html

இணைய ஆற்றுப்படை:
-----------------
தமிழில் சங்க காலத்தில் இருந்து ஈராயிரம் ஆண்டாய் ஆற்றுப்படை இலக்கியங்கள் தோன்றியுள்ளன. பொருநர் ஆற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை புகழ்மிக்கவை. தமிழுக்குக் கடவுள் ஆகிய முருகனை முன்னிறுத்தி திருமுருகு ஆற்றுப்படையை நக்கீரர் பாடியுள்ளார். இந்தியாவில் எழுந்த பக்தி இயக்கத்தின் தோற்றுவாய் தமிழ் இலக்கியங்கள் என்ப. பாரதப் பக்தி இயக்கத்தின் முதல் நூல் முருகாற்றுப்படை. இந்தியாவில் செம்மொழிகள் இரண்டே!   Letter to The Hindu, on the decision to add more languages other than Tamil & Sanskrit as Classical Languages of India:
https://nganesan.blogspot.com/2010/09/bhk.html

இரு செம்மொழிகளின்  சமையச் செய்திகள் கலந்து முருகாற்றுப்படையை  உருவாக்கியுள்ளார் புலவர்பிரான் நக்கீரர். தமிழ்த் தாத்தா உவேசா மறைந்தபின் பல ஏட்டுச் சுவடிகளைக் கண்டுபிடித்தவர், மகாவித்துவான் வே. ரா. தெய்வசிகாமணியார் ஆவார். சங்க இலக்கியம் போலவே, சென்னிமலை புலவராற்றுப்படை பாடியுள்ளார்:
https://tamildigitallibrary.in/admin/assets/book/TVA_BOK_0011678_சென்னிமலை_முருகன்_புலவராற்றுப்படை.pdf

தமிழுக்கு எதிர்காலம் இணையத்தில் உள்ளது. தமிழை இணையத்தில் ஏற்றியதில் உத்தமம் (INFITT) பெரும்பணி ஆற்றியுள்ளது அறிவீர்கள்.  செயற்கை நுண்ணறிவும், தமிழ்க் கணிமையும் போன்ற தலைப்புக்களில், கணிஞர்கள் கலந்துகொண்டு உத்தமம் ஆய்வு மாநாட்டில் பேசுகின்றனர். பயிலரங்குகள் உள்ளன. டெக்சாஸ் மாநிலத்து டல்லஸ் மாநகரில் உள்ள டெக்சாஸ் பல்கலையில் உத்தமம் மாநாடு, ஜூன் 14-16, 2024-ல் நிகழ்கிறது. அதுவமையம், “இணையத்தில் தமிழ் வளங்கள்” என்ற சொற்பொழிவைப் பேரா. மு. இளங்கோவன், புதுச்சேரி தர உள்ளார். சான் ஆண்டானியோ நகரில் ஜூலை 4 அன்று நிகழ உள்ள பெட்னா மாநாட்டில், “இணைய ஆற்றுப்படை” என்ற மரபு இலக்கியம் அரங்கேறுகிறது. இணைய ஆற்றுப்படைப் பிரபந்தத்தின் வெள்ளோட்ட நிகழ்ச்சியாக, பேரா. மு. இளங்கோவன் உரை உத்தமம் மாநாட்டில் திகழும். அனைவரும் கேட்க வருக!

நா. கணேசன்
https://infitt.org

N. Ganesan

unread,
Jun 16, 2024, 6:06:19 AM (13 days ago) Jun 16
to Santhavasantham, tiruva...@googlegroups.com, மு இளங்கோவன், Dr. Y. Manikandan, Thiruppur Krishnan, Erode Tamilanban Erode Tamilanban
இணையத்தில் தமிழ் வளங்கள் - பேரா. மு. இளங்கோவன், புதுவை. - உத்தமம் 2024 உரை:
https://youtu.be/QAn4RCKb3Hw
Reply all
Reply to author
Forward
0 new messages