தமிழகத்தின் தேசிய அடையாளம் முத்துராமலிங்க தேவர்! "தினமணி' ஆசிரியர் கே. வைத்தியநாதன்

0 views
Skip to first unread message

Thevan

unread,
Nov 19, 2015, 4:25:33 AM11/19/15
to mintamil, panbudan, thiru-th...@googlegroups.com, may17members@googlegroups.com vallamai

தமிழகத்தின் தேசிய அடையாளம் முத்துராமலிங்க தேவர்! "தினமணி' ஆசிரியர் கே. வைத்தியநாதன்


  • சென்னைப் பல்கலைக்கழகத்தில் புதன்கிழமை நடைபெற்ற பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் நினைவு சொற்பொழிவு நிகழ்ச்சியில்
    சென்னைப் பல்கலைக்கழகத்தில் புதன்கிழமை நடைபெற்ற பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் நினைவு சொற்பொழிவு நிகழ்ச்சியில் "தினமணி' ஆசிரியர் கே. வைத்தியநாதனுக்கு நினைவுப் பரிசு வழங்குகிறார் பல்கலைக்கழக துணைவேந்தர் இரா. தாண்டவன். உடன்(இடமிருந்து) பல்கலைக்கழக தமிழ் துறை தலைவர் பாலு, அண்ணா பொது வாழ்வியல் மைய பேராசிரியர் ரவிஷங்கர்.

தமிழகத்தின் தேசிய அடையாளம் முத்துராமலிங்க தேவர் என "தினமணி' ஆசிரியர் கே. வைத்தியநாதன் புகழாரம் சூட்டினார்.
 சென்னைப் பல்கலைக்கழக அண்ணா பொதுவாழ்வியல் மையம் சார்பில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் நினைவுச் சொற்பொழிவு புதன்கிழமை நடத்தப்பட்டது. இதில் "அரசியலும், ஆன்மிகமும்' என்ற தலைப்பில் "தினமணி' ஆசிரியர் கே. வைத்தியநாதன் சொற்பொழிவாற்றி பேசியது:


 ஆன்மிகமும், அரசியலும் ஒருசேர இணைந்து "தேசியமும் தெய்வீகமும் இரண்டு கண்கள்' என்கிற புதிய சிந்தனையை ஏற்படுத்திய சங்கநாதம் பசும்பொன் பூமியிலிருந்து உதித்தது.
 இந்தியாவைப் பொருத்தவரை தேசியம் இல்லாமல் அரசியலும் இல்லை. ஆன்மிகம் இல்லாமல் தேசியமும் இல்லை.


 அடிமை இந்தியாவில் தியாகிகளை ஒருங்கிணைப்பதற்காக லோகமான்ய கங்காதர திலகர் வகுத்த வியூகம்தான் விநாயகர் சதுர்த்திக் கொண்டாட்டம். இன்றைக்கு அது மிகப் பெரிய விழாவாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. ஆன்மிகத்துடன் இணைத்துதான் அண்ணல் காந்தியடிகளின் அரசியல் இருந்தது. தமிழகத்திலும் அப்படிப்பட்ட ஒரு சிந்தனையை உருவாக்கிய தலைவர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்.


 "யாதும் ஊரே யாவரும் கேளீர்' என்ற மிகப் பெரிய ஆன்மிக, மனிதாபிமான தத்துவத்தை உலகுக்குக் கொடுத்த இனம் இந்தியத் துணைக் கண்டத்தில் வாழும் இனம். உலகுக்கு இந்தியாவின் கொடை என்றால் அது ஆன்மிகம்தான். 


 அரசியல் என்பது மனிதனை உயர்த்துவதற்காக மேம்படுத்துவதற்காக, அடித்தட்டில் இருப்பவனை கைதூக்கி விடுவதற்காக, மக்களைப் பற்றிய கவலை கொள்வதாக இருக்க வேண்டும். அப்படி இருப்பதற்கு ஆன்மிகம் அடிப்படையாக இருந்தே தீரவேண்டும். இதை அன்றே உணர்ந்தவர் தேவர் திருமகனார்.
 பள்ளி மாணவனாக அவர் இருந்தபோதே, மதப்பிரசாரம் செய்யும் பாதிரியார் ஒருவரிடம் விடுத்த கோரிக்கை இன்றைக்கும்கூடப் பொருத்தமானதாக இருக்கிறது. 


 ""பிற மதத்தைக் குறை சொல்லி, உங்கள் மதத்தை உயர்த்தவும், வளர்க்கவும் பார்க்காதீர்கள். பிடித்திருந்தால் உங்கள் மதத்தை ஒருவர் பின்பற்றட்டும். அதற்குத் தடையாக ஒருவரும் நிற்கமாட்டார்கள். எனவே, மதத்தை வளர்க்க வேண்டும் என்றால் நம்பிக்கையை வளருங்கள். உங்கள் மதத்தின் மேன்மையை எடுத்துக்கூறுங்கள். எல்லா மதத்துக்கும் மையப் பொருளாக இறைவன்தான் இருக்கிறார் என்பதை மறந்துவிடாதீர்கள்'' என்பதுதான் முத்துராமலிங்கம் என்கிற பள்ளிச் சிறுவன் கிறிஸ்தவப் பாதிரியாரிடம் முன்வைத்த வேண்டுகோள்.


 1927-ஆம் ஆண்டு தனது சொந்த வழக்குத் தொடர்பாகத் தனது வழக்குரைஞராக இருந்த ஸ்ரீநிவாச அய்யங்காரை சந்திக்க சென்னைக்கு வந்த தேவருக்கு அரசியல் பிரவேசம் ஏற்படுகிறது. அரசியலும், ஆன்மிகமும் கலந்த காந்தியடிகள் மீது அவருக்கு ஈர்ப்பு ஏற்படுகிறது. அப்போது சென்னையில் நடந்து கொண்டிருந்த ஆசிய இந்தியக் காங்கிரஸ் மாநாட்டில் கலந்து கொள்ளும் வாய்ப்பும், நேதாஜி சுபாஷ் சந்திரபோûஸ சந்திக்கும் வாய்ப்பும் ஏற்படுகிறது. அந்த சந்திப்பு அவரது வாழ்க்கையைப் புரட்டிப்போடுகிறது. அதுமுதல் நேதாஜியின் அணுக்கத் தொண்டராகிறார் தேவர். 


 1927-இல் தேவரின் ஆரம்பகால அரசியலுக்கு வழிவகுத்தது காங்கிரஸும், காங்கிரஸ் மாநாடும்தான் என்றாலும், அடிப்படைக் காரணம் அன்றைய பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் குற்றப் பரம்பரைச் சட்டம்தான். இந்தச் சட்டத்தை எதிர்த்து கிராமம் கிராமமாக அவர் பிரசாரம் செய்தார். கொள்கைக்காக அமைச்சர் பதவியையே தூக்கி எறிந்தவர் அவர். 1946-இல் முதுகுளத்தூர் தொகுதி சட்டப்பேரவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டபோது, அவருக்கு அமைச்சர் பதவி தர முன் வருகிறார் அன்றைய முதல்வர் சுப்பராயன். ஆனால், அதை ஏற்க மறுத்துவிட்ட தேவர், அமைச்சர் பதவிக்கு பதிலாக குற்றப் பரம்பரைச் சட்டத்தை அகற்றுங்கள் போதும் என்று கேட்கிறார். பதவிக்காகவும் அதிகாரத்திற்காகவும் கொள்கையைக் காற்றில் பறக்கவிடும் அரசியல்வாதிகளை மட்டுமே பார்த்துக் கொண்டிருக்கும் இந்தியாவில், கொள்கைக்காகப் பதவியை மறுத்த அரசியல்வாதிகளில் முத்துராமலிங்கத் தேவர் முதலாமவர்.


 1937-ஆம் ஆண்டில், சர்தார் வல்லபபாய் படேலின் வேண்டுகோளுக்கு இணங்க ராமநாதபுரம் தொகுதியில், நீதிக்கட்சி வேட்பாளராக இருந்த சேதுபதி அரசரை எதிர்த்துப் போட்டியிட்டு வென்றது முதல் 1962-இல் தனது இறுதித் தேர்தல் போட்டிவரை, ஒரு முறைகூடத் தேவர் தோல்வியைச் சந்தித்ததில்லை. சட்டப் பேரவைக்கும் நாடாளுமன்றத்துக்கும் போட்டியிட்டு இரண்டிலுமே தொடர்ந்து வெற்றி பெற்ற சரித்திரம், தமிழகத்தில் அவருக்கு மட்டுமே சொந்தம்.


 முதுகுளத்தூர் இடைத்தேர்தலில் ஜாதிக் கலவரம் தூண்டிவிடப்படுகிறது. இந்த ஜாதிக் கலவரத்தைத் தூண்டியதாக தேவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறார். அவர் மீது கொலைக்குற்றம் சாட்டப்படுகிறது. பின்னர் 1959-இல் குற்றமற்றவர் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்து, அவர் விடுவிக்கப்படுகிறார். இதுகுறித்த விவாதத்தை தொடர விரும்பவில்லை. 


 பெருந்தலைவர் காமராஜரின் அரசியல் வாழ்க்கைக்கு அடித்தளம் இட்டவர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்தான் என்பதை மறந்துவிடலாகாது. விருதுநகரில் சாதாரண காங்கிரஸ் தொண்டனாக இருந்த காமராஜரை நீதிக்கட்சி வேட்பாளருக்கு எதிராகப் போட்டியிட வைத்தவர் தேவர்தான். சொத்துவரி கட்ட முடியாதவர்கள் தேர்தலில் நிற்க முடியாது என்பதால், நான்கு ஆடுகளை வாங்கி, அதற்கு காமராஜரின் பெயரில் நகராட்சியில் வரிகட்டி ரசீது வாங்குகிறார். அதைக் காட்டித் தேர்தலில் காமராஜரைப் போட்டிபோடச் செய்து அவரது வெற்றியையும் உறுதிப்படுத்தியவர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர். தேவரின் உறவு இல்லாமல் போயிருந்தால் விருதுநகர் காங்கிரஸ் தொண்டன் பெருந்தலைவர் காமராஜர் என்கிற மிகப்பெரிய ஆளுமையாக பிற்காலத்தில் உருவாகி இருப்பாரா என்பது சந்தேகம்தான்.


 நாம், இதில் ஒன்றை சிந்திக்க வேண்டும். அவர் தேர்தல்களில் போட்டியிட்டு வெற்றிபெற்ற அருப்புக்கோட்டை, ஸ்ரீவில்லிபுத்தூர், முதுகுளத்தூர், ராமநாதபுரம் ஆகிய பகுதிகளில் எல்லாம் அவர் சார்ந்த முக்குலத்தோர் சமுதாயத்தினர் 50 சதவீதத்துக்கு மேல் கிடையாது. எனவே, ஏனைய சமூகத்தைச் சார்ந்தவர்களின் வாக்குகளும் அவருக்குக் கிடைத்ததால்தான் அத்தனைத் தேர்தல்களிலும் அவர் வெற்றி பெற்றிருக்கிறார். ஆகையால், ஏதோ முக்குலத்தோர் சமூகத்தினரின் பெரும் ஆதரவால்தான் அவர் தொடர்ந்து வெற்றி பெற்றார் என யாராவது நினைத்துக்கொண்டிருந்தால், அது தவறு.


 அதேபோல, பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரை, ஹரிஜன விரோதி, தாழ்த்தப்பட்டோருக்கு எதிரானவர் என்று கருதுவதும் தவறான புரிதல். பசும்பொன் தேவரின் உதவி இல்லாமல் போயிருந்தால், மதுரை மீனாட்சி அம்மன் ஆலயத்தில் தியாகி வைத்தியநாத அய்யர் தலைமையில், கக்கன், எல்.எம்.ஆர். சுப்புராமன் போன்றவர்கள் ஹரிஜன ஆலயப்பிரவேசம் நடத்தியிருக்க முடியாது.


 இங்கு ஒரு விஷயத்தையும் நாம் கருத்தில்கொள்ள வேண்டும். பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் தனது வாழ்நாளில் ஒரு முறைகூட, எந்தவொரு முக்குலத்தோர் சங்கக் கூட்டங்களிலும், பாராட்டு விழாவிலும் கலந்துகொண்டதில்லை. அவர் ஒரு சமுதாயத்தின் தன்மானப் பிரச்னையான, சுயமரியாதைப் பிரச்னையான "குற்றம்பரம்பரைச் சட்டம்' அகற்றப்பட வேண்டும் என்பதற்காகப் போராடியவரே தவிர, ஜாதி சங்கத்துக்கு ஆதரவாகப் போராடியவரல்ல என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.


 அவர் பிற மதங்களை பழிக்கவில்லை. வெறுக்கவில்லை. ஆனால், இந்தியாவின் அடிப்படைக் குணங்கள் அழிந்துவிடக் கூடாது, நமது பண்பாடு, கலாசாரம் சிதைக்கப்பட்டுவிடக் கூடாது என்பதில் தெளிவாக இருந்தார். அவர் நாத்திகவாதிகளை ஏற்றுக் கொள்ளவில்லை. பிரிட்டிஷாரின் ஆதரவாளர்களாக இருந்த நீதிக்கட்சியினரையும் ஏற்றுக்கொள்ளவில்லை. 


 காசி பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் சர் சி.பி. ராமசாமி அய்யரின் அழைப்பை ஏற்று உரையாற்றச் சென்ற பசும்பொன் தேவரிடம் மாணவர்கள் "ஆட்டோகிராப்' கேட்கிறார்கள். "அரசியலில் நேதாஜியையும், ஆன்மிகத்தில் விவேகானந்தரையும் பின்பற்றுங்கள்' என்று எழுதி கையெழுத்திடுகிறார் தேவர். இதுதான் இன்றைய இளைஞர்களுக்கு விட்டுச் சென்றிருக்கும் அறிவுரை என்று கொள்ளலாம்.


 இந்திய தேசியம் என்பது ஆன்மிகத்தின் மீதுதான் கட்டமைக்கப்பட வேண்டும் என்பதில் மகாத்மா காந்தியைப் போல, தேவரும் உறுதியாக இருந்தார். ஆன்மிகத்தின் அடிப்படையில்தான் தேசியம் என்பது அவருடைய வாழ்வியல் கோட்பாடு. 


 அவர் வாழ்ந்த 55 ஆண்டுகளில், அவருடைய அரசியல் வாழ்க்கை 35 ஆண்டுகள். இந்த 35 ஆண்டுகளுக்குள் மிகப் பெரிய சாதனையை, தாக்கத்தை அவர் ஏற்படுத்தியிருக்கிறார்.


 இப்படிப்பட்ட தொலைநோக்கு சிந்தனையாளரை தயவுசெய்து ஜாதியக் கூண்டிலிருந்து விடுதலை செய்யுங்கள். முத்துராமலிங்கத் தேவர் ஒரு ஜாதிக்குச் சொந்தக்காரர் அல்ல. அவர் தமிழகத்தின் தேசிய அடையாளம் என்றார் கே. வைத்தியநாதன்.


http://www.dinamani.com/tamilnadu/2015/11/19/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D-/article3135399.ece



--
“எல்லாரும் ஒன்றாக தேச சுதந்திரத்திற்காகப் பாடுபட்டோம். இப்போது நாம் எதிர்பார்த்த தேசியம் “பிள்ளையார் பிடிக்க குரங்காய் முடிந்த” கதையாய் இருக்கிறது.” - பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்.

http://perumalthevan.blogspot.in/
Reply all
Reply to author
Forward
0 new messages