குமரி துறைமுகம் kumari harbour

3 views
Skip to first unread message

ஸ் பெ

unread,
Feb 18, 2018, 11:30:52 PM2/18/18
to panbudan

பெரும் குப்பை மேடாக மாறப்போகும் குமரி முனை

கன்னியாகுமரி. கண்ணுக்கினிய கடலும் இயற்கை எழில் அழகும் பார்ப்போரை கொள்ளை கொள்வதால், ஆண்டுக்கு 20 லட்சம் மக்கள் சுற்றுலாத் தளமான கன்னியாகுமரிக்கு வந்து செல்கிறார்கள். இப்போது அந்த சுற்றுதளத்திற்கு மட்டும் அல்ல, ஒட்டுமொத்த குமரி மாவட்டத்திற்கும் அங்கு வாழும் மக்களுக்குமே பெரும் ஆபத்தும் அழிவும் வந்துள்ளது.
தேசிய தொலைநோக்குத் திட்டம் ஏப்ரல் 2016 (National Perspective Plan April 2016). இதன் கீழ் சாகர் மாலா (Sagarmala Project) அதாவது கடல் மாலை திட்டம் என்ற புதிய திட்டத்தை உருவாக்கியுள்ளது மோடி அரசு. குஜராத்தில் ஆரம்பித்து கன்னியாகுமரியைச் சுற்றி கொல்கத்தா வரை இந்திய கடற்கரைப் பகுதி முழுவதையும் ஒரு மாலை போல இணைத்து கடற்கரை பொருளாதார மண்டலங்களை உருவாக்கி, நாட்டை “துறைமுகம் கொண்டு செழிப்பு” (Port-led Prosperity) ஆக்கப் போகிறதாம் மோடி அரசு. இந்தியக் கடற்கரைகளை துறைமுகங்களால் இணைப்பது மட்டுமல்ல. அந்த துறைமுகங்களோடு இந்திய நாட்டின் நீர்வழிப்பாதைகளையும் சாலை, இரயில் போக்குவரத்தையும்கூட இணைக்கப் போகிறார்களாம். அதோடு, துறைமுகங்களை மய்யப்படுத்தி தொழில்மயமாக்கமாம். 14 கடற்கரை பொருளாதார மண்டலங்கள். அவற்றில் 12 பெரும் துறைமுகங்களும் 14 சிறிய துறைமுகங்களும் உள்ளன. இந்தத் துறைமுகங்களை புதிய துறைமுகங்கள் செயற்கையாக உருவாக்கப்பட உள்ளன. அந்த கடல் மாலையில் பெரிய கண்ணிகளாக உள்ள தூத்துக்குடி துறைமுகத்திற்கும் கொச்சி துறைமுகத்திற்கும் இடையே சிறு கண்ணிகளாக கேரளாவில் விழிஞ்ஞத்திலும் தமிழ் நாட்டில் குமரி மாவட்டம் குளச்சலிலும் சிறு வர்த்தகத் துறைமுகங்களைக் கொண்டுவரத் திட்டம் போட்டு வேலைகளை ஆரம்பித்தார்கள். 
மீனவ மக்களும் கடற்கரையோர மற்ற மக்களும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால், விழிஞ்ஞம் துறைமுக வேலைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அதே வேளை, குமரி மாவட்டத்தில் குளச்சல் துறைமுகத்திற்கு எதிர்ப்பு வலுத்ததால், அதை இனையம் பகுதிக்கு மாற்றினார்கள். இனையம் பன்னாட்டு சரக்குப் பெட்டக மாற்று முனையம் Enayam International Container Transhipment Terminal (EICTT) என்று அந்தத் துறைமுகத்திற்கு பெயரும் சூட்டினார்கள். இந்த சரக்குப் பெட்டக மாற்று துறைமுகம் இனையத்திற்கு வந்தால், கடல் வளம் அழிந்து போகும், மீனவர்கள் வாழ்வாதாரங்கள் ஒழிந்து போகும் என்பது மட்டுமல்ல துறைமுகத்திற்காக கடற்கரையில் உள்ள குடியிருப்புகளும் துறைமுகத்திற்கு சரக்குகளை கொண்டு செல்லவும் அங்கிருந்து சரக்குகளை எடுத்துச் செல்வதற்காகவும் போடப்படும் பாதைகளால் இனையத்தைச் சுற்றியுள்ள கிராமங்களும் காலி செய்யப்படும் என்பதால் இந்த சர்வதேச சரக்குப் பெட்டக மாற்று முனைய துறைமுகத்திற்கு கடும் எதிர்ப்பு வலுத்தது. போராட்டங்கள் வெடித்தன. இப்போது, இனையம் சரக்குப் பெட்டக மாற்று முனையத்தை கன்னியாகுமரிக்கு அருகே உள்ள கோவளம் மற்றும் கீழ மணக்குடிக்கும் இடையே உள்ள பகுதியில் கொண்டுவருவதற்கான ஆயத்த வேலைகளை தூத்துக்குடி வஉசி துறைமுகப் பொறுப்புக் கழகம் மேற்கொண்டுள்ளது. இனையத்தைவிட கோவளக் கடற்கரை பல வகையில் நன்மையாக உள்ளது என்பதால் துறைமுகத்தை இனைத்தில் இருந்து கோவளம், கீழ மணக்குடி பகுதிக்கு மாற்றுகிறோம் என்று தூத்துக்குடி துறைமுகப் பொறுப்பு கழகத்தின் தலைவர் ஜெயகுமார் சொல்கிறார். 
சர்வதேச கிழக்கு-மேற்கு கப்பல் பாதையில் இருந்து இரண்டு இடங்களும் 14 கடல் மைல்கள்தான், கடற்கரை அருகே ஆழம் இரண்டு பகுதியிலும் 18 மீட்டர்கள்தான், ஆனால் துறைமுகத்தில் இருந்து சாலையையும் இரயில் பாதையையும் இணைக்கும் தூரம் இனையத்தில் இருந்து என்றால் 12 கி.மீ. அதற்காக 100 ஹெக்டேர் நிலம் கையகப்படுத்த வேண்டியிருக்கும் கோவளத்தில் இருந்து என்றால் 2.4 கி.மீட்டர்கள்தான், அதற்காக 40 ஹெக்டேர் நிலம் கையகப்படுத்தினால் போதும் அது மட்டுமல்லாதது இனையத்தில் இருந்து 225 குடும்பங்களை வெளியேற்ற வேண்டியதிருக்கும், கோவளத்தில் இருந்து என்றால் எந்தவொரு குடும்பத்தையும் வெளியேற்ற வேண்டியதில்லை என இனையத்தில் இருந்து கோவளத்திற்கு துறைமுகத்தை மாற்றுவதற்கான காரணங்கள் என்று அரசுத் தரப்பில் சொல்லப்படுகிறது. அரசுத்தரப்பில் சொல்லப்படுவது ஒரு வகையில் உண்மை என்றாலும், அது அவர்களின் வசதியில் இருந்து மட்டுமே சொல்லப்பட்டுள்ளது என்பதை பார்த்தாலே தெரியும். ஆனால், மக்களோ, துறைமுகம் குளச்சலில், இனையத்தில், கோவளத்தில் எங்கு வந்தாலும் கடல் வளங்களும் கடல் வாழ் உயிரினங்களும் இயற்கை வளங்களும் முற்றிலும் அழிந்து போகும். குமரியின் மாவட்ட இயற்கை வளங்களும் மக்களும் விலங்குகளும் மாண்டு போகும் நிலை ஏற்படும் என்கிறார்கள்.
கோவளம் திட்டத்திற்காக ரூ.19,884 கோடி செலவாகும் என்றும், முழுமையான சோதனைகள் முடிந்தபின்புதான் இன்னும் கூடுதலாக எவ்வளவு செலவாகும் என்று சொல்லமுடியும் என்கிறார் தூத்துக்குடித் துறைமுகக் கழகத் தலைவர் ஜெயக்குமார். அதற்குமுன், நிலத்தில் துளை போட்டு மண் பரிசோதனை, தண்ணீர் சோதனைகள், அலைகளின் போக்கு பற்றியெல்லாம் சோதனைகள் செய்ய வேண்டுமாம். இவ்வாண்டு மார்ச் மாதத்திற்குள் திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு விடுமாம். இப்படி பல கோடிகள் செலவு செய்து சோதனைகளை கடலிலும் கடற்கரையிலும் செய்யவிருக்கும் அரசு, அதற்குமுன் அங்கு வாழும் மக்களின் கருத்துக்களைக் கேட்கவில்லை. கேட்கவில்லை என்பது மட்டுமல்ல பகுதி மக்களுக்குத் தகவல் கூடத் தரப்படவில்லை. எவ்வித முன்னறிவிப்பும் இன்றி திடீர் என்று வந்து கோவளத்தில் வர்த்தகத் துறைமுகத்திற்கு கடந்த டிசம்பர் மாதம் அடிக்கல் நாட்டு விழா நடத்தப்போனார்கள். மீனவமக்கள் ஒன்று திரண்டு தடுத்து நிறுத்தினார்கள். மக்களுக்கு இத்திட்டம் பற்றி எதையும் சொல்லாத இந்த அரசு, இப்போது பொய்ப் பிரச்சாரம் செய்து கொண்டிருக்கிறது. 
கோவளக் கடற்கரையில் வரவிருக்கும் துறைமுகத்தைத் தடுப்பது என்பது கிடைக்கும் வைரக் கீரிடத்தை வேண்டாம் என்று சொல்வது போல் என்கிறார் மத்திய அமைச்சர் பொன்.ராதாகி ருஷ்ணன். தமிழக முதல்வர் பழனிச்சாமியோ, “மாநிலத்தின் வளர்ச்சிக்கு இந்தத் துறைமுகம் முக்கியமானது அதை சிலர் தடுக்கப்பார்க்கிறார்கள். அணுஉலை எதிர்ப்பாளர் உதயகுமார் தலைமையில் ஒரு டிசம்பர் 23 அன்று கூட்டம் நடைபெற்றுள்ளது. ஆனால், அதில் இருந்து இரண்டு நாட்களுக்குப் பின்னர் துறைமுகத்தை வரவேற்பவர்கள் கூட்டம் கோவில்விளையில் நடந்துள்ளது திட்டத்தை நிறைவேற்ற தனி அலுவலர் ஒருவர் தமிழக அரசால் நியமிக்கப்பட்டுள்ளார்” என்று சட்டமன்றத்தில் பேசுகிறார். கூடங்குளம் அணுஉலை பற்றி அரசுகள் செய்து வரும் பிரச்சாரத்தைப்போல், வர்த்தகத் துறைமுகத்திற்கும் செய்து வருகிறார்கள். கோவளம் துறைமுகத்தை எதிர்ப்பவர்கள், தேசத் துரோகிகள் என்று முத்திரை குத்தப்படுகிறது. 
சிங்கப்பூர், இலங்கை போன்ற நாடுகளுக்குச் செல்லும் சரக்குப் பெட்டகங்கள் குமரி துறைமுகம் வழியாகச் செல்லும். வங்காள தேசம், பர்மா போன்ற நாடுகளின் சரக்குப் பெட்டகங்களும் இத் துறைமுகம் வழியாகச் செல்லும். ஏற்றுமதி, இறக்குமதி பெருகும். தொழிற்சாலைகளே இல்லாத குமரி இனி தொழில் நகரமாக மாறும். தொழில் பூங்காக்கள் உருவாகும். நிலக்கரி இறக்குமதி நடக்கும். தொழிற்சாலைகள் பல்கிப் பெருகும். கப்பல் போக்குவரத்தின் காரணமாகவும் துறைமுகத்தில் சரக்குகள் ஏற்றி இறக்குவதன் மூலம் ஓட்டுநர்களுக்கு, கட்டுமானப் பணியாளர்களுக்கு என்று பல ஆயிரம் பேருக்கு வேலை கிடைக்கும். உள்ளூர் மக்களுக்கு துறைமுகத்தில் வேலைகள் கிடைக்கும் (இப்படித்தான் கூடங்குளத்திலும் சொன்னார்கள்) இதையெல்லாம் தடுக்கிறார்கள் சில சுயநலவாதிகள் என்று மோடி-எடப்பாடி கட்சியினர் அரசாங்க ஆசியுடன் பிரச்சாரக் களத்தில் இறங்கியுள்ளார்கள். 
ஆனால், வரவிருப்பதோ பேரழிவு. கோவளம் கீழ மணக்குடிக்கு இடையே துறைமுகம் வரவிருக்கும் பகுதியில் 2.4 கி.மீ நீளத்திற்கு 100 மீட்டர் அகலத்திற்கு மக்கள் குடியிருப்புகள் இல்லை, 535 ஏக்கர் நிலப்பரப்பிற்குள் துறைமுகம் அமைக்கப்படும் என்கிறது அரசு. உண்மையில், இந்தப் பகுதி மணல் திட்டுகள், மணல் குன்றுகளால் ஆன பகுதியாகும். இது எவ்வித கட்டுமானப் பணிகளும் செய்யப்படக்கூடாது என தடை செய்யப்பட்ட பகுதியாகும். ஆகவே, இந்தப்பகுதியில் நடக்கும் துறைமுக வேலைகளால் கன்னியாகுமரி, கோவளம், கீழ மணக்குடி உள்ளிட்ட மீனவ கிராமங்கள் மட்டுமின்றி அவற்றையொட்டியே முகிலன் குடியிருப்பு, கோவில்விளை, கிண்ணி கண்ணன்விளை, தென் தாமரைக்குளம், கோம்பன் விளை, இலந்தையன் விளை, அஞ்சுகூட்டு விளை, நரியன்விளை ஆகிய கிராமங்களின் மீன் பிடித் தொழில் மட்டுமின்றி, விவசாயமும் பெரும் பாதிப்புக்குள்ளாகும்.
இத்திட்டத்திற்காக, கடலில் செயற்கையாக தூண்டில் வளைவுகள் ஏற்படுத்தப்படும். அதற்காக கடலில் பாறைகளும், மண்ணும் கணக்கில்லாமல் கொட்டப்படும். கடற்கரை நிலம் முற்றிலுமாக மாற்றியமைக்கப்படும். பக்கத்து மலைப் பகுதிகளில் இருந்து பாறைகள் பெயர்த்து எடுக்கப்பட்டு மலைக் காடுகள் அழிக்கப்படும். அவற்றைக் கொண்டுவரும் போதும் போகும்போதும் லாரிகளின் போக்குவரத்தால் திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் பெரும் பகுதி கிராமங்கள், விளைநிலங்கள் நாசமாக்கப்படும். மணல் லாரிகளின் போக்குவரத்தாலே பல கிராமங்களில் விளைநிலங்கள் பாழாக்கப்படுவதும், விபத்துக்கள் தொடர்ந்து நடப்பதும் இன்றும் தொடர்வதை நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். 
இனையத்தில் என்னவெல்லாம் அமைக்கப் போவதாகச் சொல்லிக் கொண்டிருந்தார்களோ அவற்றையெல்லாம் கோவளத்தில் அமைக்கவிருக்கிறார்கள். அதாவது, பெட்ரோலியப் பொருள்கள் சேமிப்பு திரவக் கிடங்குகள், 2000 மெகாவாட் அனல் மின் நிலையத்திற்குத் தேவையான நிலக்கரி சேமிப்புக் கிடங்குகள் அமைக்கப்படவுள்ளன. அதனால், நிச்சயம் சுமார் 15 கி;மீட்டர் சுற்றளவுக்கு மட்டுமல்ல அதைத் தாண்டியும் உள்ள நிலப்பரப்புகள் பாதிப்புக்குள்ளாகும். அதையொட்டி இருக்கக் கூடிய, விவசாய நிலங்கள், வயல்கள், தென்னந் தோப்புகள், குளங்கள், ஏரிகள், அரியவகை மணல்கள், சதுப்பு நிலங்கள், அலையாத்திக் காடுகள், கழிமுகக் குன்றுகள் கடும் பாதிப்புள்ளாகும். (சதுப்பு நிலங்களும் அலையாத்திக் காடுகளும் இருந்ததால்தான் சுனாமியின் போது இந்தப் பகுதி பெரும் பாதிப்புக்குள்ளாகவில்லை). துறைமுகத்திற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இந்த இடம் கடற்கரையோர வரையறுக்கப்பட்ட பிராந்தியங்களில் (Coastal Regulation Zone, CRZ) முதலிடமாக (CRZ-1-A)வருகிறது. அலையாத்திக் காடுகள், பவளப்பாறைகள், மணல் மேடுகள், உப்பு சதுப்புநிலங்கள், கடல் ஆமைகள் இனவிருத்தி போன்றவை உள்ள பகுதியாகும். கடலோரக் கட்டுப்பாட்டு மண்டல வரையறை 2011ன் படி (சுற்றுச் சூழல் சட்டம் 1986)ன் அடிப்படையில் இந்தப் பகுதியில் எந்தவிதமான கட்டுமான பணியும் மேற்கொள்ளக் கூடாது.
நிலக்கரிச் சேமிப்புக் கிடங்குகளால் சுற்றுச் சூழல் மொத்தமாகப் பாதிக்கப்படும். கடற்பகுதியை ஆழப்படுத்தும் போதும் துறைமுகக் கட்டுமானத்தின் போதும் பின்னர் அங்கு அமைக்கப்படும் கிடங்குகள் மற்றும் துறைமுகச் செயல்பாட்டால் உருவாகும் கழிவுகள் எல்லாம் கடலில்தான் கொட்டப்படும். இதன் விளைவாக, கடலில் மீன்கள் காணாமல் போகும். சென்னையில் கப்பலில் இருந்து எண்ணெய் கொட்டியதால் ஏற்பட்ட அபாயத்தையும் அந்த எண்ணெய்யை நம் அறிவார்ந்த! அமைச்சர்கள் கையடக்கக் கருவிகளைப் பயன்படுத்தி அப்புறப்படுத்தினார்கள் என்பதை நாடே கண்டு வியந்ததை நாம் பார்த்தோம்.
இப்படி நாட்டு மக்களின் வாழ்வாதாரத்தை அழித்து உயிரினங்களை ஒழித்து யாருக்காக இந்தத் திட்டங்கள்?. முந்த்ரா துறைமுகத்தின் முதலாளி அதானியும் ஜாம்நகர் துறைமுகத்தின் உரிமையாளர் ரிலையன்ஸ் அம்பானியும் சர்வதேச கார்ப்பரேட் முதலாளிகளும் தங்கள் சரக்குகளை, பெட்ரோலியப் பொருள்களை, நிலக்கரியை, வேதிப் பொருள்களை, ராணுவத் தளவாடங்களை எவ்வித தங்கு தடையின்றி ஏற்றி இறக்க இந்தியக் கடற்கரைகளில் உள்ள 12 பெரிய துறைமுகங்களையும் இணைக்கும் வகையில் 200க்கும் மேற்பட்ட சிறிய செயற்கைத் துறைமுகங்களை 80 லட்சம் கோடி ரூபாய் செலவில் உருவாக்குகின்றனர். உலகத் தரத்திற்கு இந்தியத் துறைமுகங்களை மாற்றுவதே சாகர்மாலா திட்டத்தின் முதல் கடமையாம். 2014-15 கணக்குப்படி நம் நாட்டில் உள்ள பெரிய துறைமுகங்களில் சரக்குப் பரிமாற்றங்கள் 4-5 நாட்களாக உள்ளனவாம். அதேவேளை உலகளவில் மற்ற துறைமுகங்களில் 1-2 நாட்கள்தான் ஆகின்றனவாம். அதற்கேற்ப துறைமுகங்களையும் நீர்வழி, தரைவழி, தண்டவாள வழிப் போக்குவரத்துகளையும் மாற்றி, சிறப்புப் பொருளாதார மண்டலங்களை அமைத்து பன்னாட்டு இந்நாட்டு பெரு முதலாளிகள் கையில் ஒப்படைப்பதே இந்த சாகர்மாலா திட்டம். இந்தத் திட்டத்தினால், 1 கோடி பேருக்கு வேலை கிடைக்குமாம். ஆனால், 25 கோடி மீனவர்கள் தங்கள் வாழ்க்கையையே இழந்துவிடுவார்கள். 
ராணுவத் தளவாட உற்பத்தியில் தனியார் ஈடுபட மோடி அரசு அனுமதித்துள்ளதும் அதில் அம்பானிகள் இறங்கியுள்ளதும் அரசோடு அவர்கள் ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளதும் நாம் அறிவோம். அதேபோல், சமீபத்தில் ராணுவ அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம், நம்மூரு அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் நான்குநேரி சிறப்புப் பொருளாதார மண்டலத்தில் ராணுவத் தளவாட உற்பத்தித் தொழிற்சாலை அமைக்கப் பட வேண்டும் என்ற கோரிக்கை வைத்ததையும் அதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும் என்று ராணுவ அமைச்சர் சொன்னதையும் நான்குநேரியில் இருந்து நூறு கி.மீ. தூரத்தில் தான் சர்வதேச சரக்குப் பெட்டக முனையம் அமையவிருக்கும் கன்னியாகுமரி கோவளம் உள்ளதையும் நாம் இணைத்துப் பார்க்க வேண்டும்.
பன்னாட்டுச் சரக்குப் பெட்டக மாற்று முனையம் அமைய உள்ள கோவளம் மணக்குடியில் கிறிஸ்தவ தேவாலயங்கள் உள்ளன என்பது மட்டுமல்ல. அவ்விடத்தில் இருந்து சில கிலோ மீட்டர்கள் தூரத்தில்தான் கன்னியாகுமரி அம்மன் கோவிலும் சுசீந்திரம் கோவிலும் சுவாமித்தோப்பு வைகுண்டர்பதியும் கூட உள்ளன. இவையெல்லாம் மாசு பட்டு நாசமாகி நரகமாக மாறும். ராமர் கோவில், அனுமார் பாலம் என்று கோவில்களை வைத்து கூத்து அடித்துக் கொண்டிருக்கிற பாஜக சங் பரிவாரக் கூட்டங்கள் கன்னியாகுமரி, சுசீந்திரம் கோவில்கள் நாசமானலும் பரவாயில்லை, மோடியின் நண்பர்கள் நாட்டைச் சூறையாடிக் கொண்டு போனால் தவறில்லை என்கிறார்கள். இவர்களுக்கு கோவில்களும் சாமிகளும் அரசியல் ஆதாயத்திற்கே அன்றி, கும்பிடுவதற்கு அல்ல. ஆகையால்தான், ஆலயங்களைக் கூட அழித்துவிட்டு வரும் அதானி அம்பானிகளின் வளர்ச்சிதான் நாட்டின் வளர்ச்சி என்கிறார்கள். கண்ணுக்கினிய அழகிய குமரிக்கரையை குப்பை மேடாக ஆக்க உழைக்கும் மக்கள் நாம் ஒருநாளும் அனுமதியோம்.

மாலெ தீப்பொறி பிப்ரவரி 16-28, 2018 இதழில் வெளிவந்தது.


https://www.facebook.com/spudayakumaran/posts/1826277120729323

--

தோழமையுடன்

ஸ்டாலின் பெலிக்ஸ்
--------------------------------------------------------------------------------------------------------------
இந்த உலகத்தில் அநீதியும் அடிமைத் தனமும் இருக்கும் வரை. . . சுதந்திரத்தை இழந்து வாழும் மக்கள் இருக்கும் வரை. . . விடுதலைப் போராட்டங்களும் இருக்கத்தான் செய்யும். இது தவிர்க்க முடியாத வரலாற்று நியதி..
-------------------------------------------------------------------------------------------------------------------------
----------------------------------------------------------------------------------------------
Reply all
Reply to author
Forward
0 new messages