சுவிஸ்பேங்க், மொரீஷியஸ் மற்றும் வரிகளற்ற சொர்க்கங்கள்!

7 views
Skip to first unread message

ஸ் பெ

unread,
Nov 27, 2016, 8:31:38 AM11/27/16
to panbudan

சுவிஸ்பேங்க், மொரீஷியஸ் மற்றும் வரிகளற்ற சொர்க்கங்கள்!

Date: 2016-11-22@ 10:25:05

* ரூ. 500, 1000 நோட்டுகளை விடுங்கள்.                 
* நிஜமான கருப்புப் பணத்தை எப்படிதான் ஒழிக்கப் போகிறோம்?

கருப்புப் பணத்தை எங்கே பதுக்குகிறார்கள்?

கருப்புப் பணத்தின் அடிப்படை ஊழல், லஞ்சம், வரி ஏய்ப்பு, அடித்துப் பிடுங்கல், ஏமாற்றுதல், சூழ்ச்சியால் திசை திருப்பல். ஊழலும், ஏய்ப்பும்தான் கருப்புப் பணத்தின் விதை. சம்பளம் வாங்குபவர்களுக்கு சம்பளத்திலேயே பிடித்தமெல்லாம் போக மிச்சம்தான் கைக்கு வரும். ஆனால் அரசியல்வாதிகள், முதலாளிகள், பெரும் பணக்காரர்கள், சினிமா போன்றவற்றில் இது கிடையாது. அவர்கள் கொடுக்கும் கணக்கிலிருந்துதான் வரி விதிக்கப்படும். இங்கிருந்துதான் ஆரம்பிக்கிறது ஏய்ப்பும் ஊழலும். எப்படியெல்லாம் ஏய்க்கிறார்கள். ஊழல் எங்கிருந்தெல்லாம் செய்யப்படலாம். எவ்வாறெல்லாம் பணத்தினை லஞ்சமாய், திசை திருப்பலாய்ப் பிடுங்கலாம் என்பதெல்லாம் இனி வரும் நாட்களில் பார்க்கலாம்.

ஏய்த்த, ஊழல் செய்த பணத்தினை உள்நாட்டில் வைத்திருப்பது ஆபத்து. அதனால் இதனைப் பாதுகாப்பான ஒரு இடத்தில் வைத்திருக்க வேண்டும். ஒரு வேளை உள்நாட்டில் ஏதாவது குளறுபடிகள் நடந்தால், பணம் பத்திரமாய் இருக்க வேண்டும். தேவையென்றால் உலக கரன்சிகளில் மாற்றி வைத்திருந்தால், வேறெங்காவது போய் கடை பரப்ப ஏதுவாக இருக்கும். நாம் வைத்திருக்கும் பணம் பத்திரமாகவும், பாதுகாப்பாகவும் முக்கியமாய் ரகசியமாகவும் இருக்க வேண்டும். பணமிருப்பது தெரிந்தால் எதிரிகள் இறுதி முயற்சியாய் போட்டும் தள்ளலாம். இத்தனை எதிர்பார்ப்புகளோடு எங்கே பணம் வைக்க முடியும்? சுவிட்சர்லாந்து.

கருப்புப்பணமும், சுவிட்சர்லாந்தும்

ஐரோப்பாவின் ஆல்ப்ஸ் மலையின் சரிவில் இருக்கும் ஒரு குட்டி நாடு. சுவிஸ் சாக்லெட்கள், ஆல்ப்ஸ் மலையின் ஸ்கீயிங் போன்றவற்றுக்கு மிகப் பிரசித்தம். அதைவிடப் பிரசித்தம் – சுவிஸ் வங்கிகள்.

உலகின் நம்பர் 1 ரகசிய வங்கிகளின் தாயகம். நேர்மையான காரணங்களில் ஆரம்பித்து அடாவடியான செயல்களில் ஈடுபட்டு சேர்த்த பணம் வரை கழுத்தை வெட்டினாலும் காட்டிக் கொடுக்காத நேர்மையோடு இருக்கும் ஒரே நாடு. சுவிஸ் வங்கிகள் மட்டும்தான் இதைச் செய்கின்றன என்று அர்த்தமல்ல. உலகில் பல்வேறு குட்டித் தீவுகள், பிரிட்டிஷ் அரசுக்குக் கீழே வரும் காலனிகள், அமெரிக்க அரசின் ஆதரவு பெற்ற குட்டித் தீவுகள் எனப் பலவும் இந்த மாதிரியான ஆஃப்ஷோர் பேங்கிங்கிற்கு (Offshore Banking) பிரசித்தி பெற்றவையே. ஆனாலும், ரகசிய வங்கிப் பரிவர்த்தனைகளில் சுவிஸ்தான் சச்சின் தெண்டுல்கர்.

சுவிட்சர்லாந்து, 300 ஆண்டுகளாய் யாரோடும் சண்டைக்கு போகாத, மல்லுக்கு நிற்காத தேசம். மொத்த ஐரோப்பாவும் திசைக்கு ஒருவராய் தோள் தட்டி நின்ற இரண்டாம் உலகப் போரின்போது கூட வெளியே நின்ற தேசம். சுவிட்சர்லாந்தில் வங்கிகள் எப்படி உருவாகின என்பது ஒரு சுவாரசியமான கதை.

1713-ல் ஆரம்பிக்கிறது இந்தக் கதை. ‘கிரேட் கவுன்சில் ஆப் ஜெனிவா’வில் அந்த வருடத்தில் தான் ரகசிய வங்கி பரிவர்த்தனைகள் மற்றும் வாடிக்கையாளர்களின் விவரங்களின் மீதான உச்சக்கட்டப் பாதுகாப்பு யாரிடத்திலும் பகிராமை என்கிற கூறுகளோடு சட்டம் இயற்றினார்கள். அன்றைக்கு ஆரம்பித்ததுதான் சுவிஸ் வங்கிகளின் இன்றைய ப்ரீமியம் மதிப்புக்கான காரணம். இன்று வரைக்கும் ஒரு வேளை ஒரு வங்கியால் விவரங்களை வெளியே கொடுத்தாலும் அது சிவில் கேஸ் மட்டுமே. கிரிமினல் கேஸ் கிடையாது. அதனால், வாய் மூடிய, செவி திறந்த பேங்கர்கள் சுவிட்சர்லாந்தினை சொந்த ஊராய் நினைத்துக் கொண்டு கப்பலேறினார்கள்.

சுவிஸ் வங்கிகள் கொஞ்சம் கொஞ்சமாய் பிரபலமாகத் தொடங்கின. பிரபுக்கள், தனவந்தர்கள், ராஜவம்சத்தினர் முக்கியமாய் பிரெஞ்ச் ராஜவம்சத்தினர் என பதினெட்டாம் நூற்றாண்டில் ஆரம்பித்த இந்த வாடிக்கையாளர் கூட்டம், இருபத்தியோராம் நூற்றாண்டில் நல்லவர்கள், சர்வாதிகாரிகள், முதலாளிகள், நிறுவனங்கள், மாபியாக்கள், போதை மருந்து கடத்துபவர்கள், ஊழல் அரசியல்வாதிகள், புரோக்கர்கள் என மாபெரும் மனித சமூக அடையாளங்களோடு நிறைந்திருக்கிறது. பக்கத்தில் போய் கேட்டால், சுவிஸ் அதிகாரிகள் “அதெல்லாம் சும்மா, நாங்க உஜாலா சுத்தம், வேணும்னா டெஸ்ட் பண்ணிக்கிடுவோம்” என்று சீன் போடுவார்கள். இதற்கும் ஒரு காரணம் இரண்டாம் உலகப் போரில் ஆரம்பித்தது.

இரண்டாம் உலகப் போர் உச்சத்தில் இருந்த நேரம். ஹிட்லர் ஒவ்வொரு பிரதேசமாய் சுவாகா பண்ணிக் கொண்டிருந்த வேளை. ஐரோப்பாவிலிருந்த யூதர்கள் தங்களுடைய வாழ்நாள் பணத்தினை சுவிஸ் வங்கிகளில் சேர்க்க ஆரம்பித்தார்கள். ஹிட்லர் அப்போது ஜெர்மனியில் ஒரு சட்டமியற்றினார். ஜெர்மானியர்கள் எவரெல்லாம் அந்நிய நாட்டில் பணம் வைக்கிறார்களோ அவர்களுக்கு மரண தண்டனை. போர் உச்சக்கட்டத்திலிருந்த நேரம். இந்த சட்டம் இயற்றப்பட்டவுடனே, சுவிட்சர்லாந்து அரசு இன்னமும் தங்களின் வங்கி ரகசியத்தைப் பேண ஆரம்பித்தது. பின்னாளில், போர் நடந்த சமயத்தில், நாஜி ஆட்களே கொள்ளையடித்த பணத்தை சுவிஸ் வங்கிகளில் நிரப்பியதும் நடந்தது.

இந்த நேரத்தில்தான் சுவிஸ் வங்கிகள் எதிர்பார்க்காத காரியத்தினை செய்தன. நாஜிக்கள், யூதர்களின் ஆவணங்களை அழிக்க ஆரம்பித்தார்கள். யாருக்குமே கிடைக்காத பரிசு அது. போரால் உலகமே சின்னா பின்னாமாகிக் கொண்டிருந்தபோது போரில் கலந்து கொள்ளாத ஒரு நாட்டில் பணமும், தங்கமும் கொட்டோ கொட்டென்று கொட்டியது. ஹோலோகாஸ்டில் சாகடிக்கப்பட்ட யூதர்களின் பணத்தையெல்லாம் சுவிஸ் வங்கிகள் விழுங்கிவிட்டது என்கிற குற்றச்சாட்டு பின்னாளில் வந்து அது இன்று வரை ஓடிக் கொண்டிருக்கிறது.

இத்தனைக்கும் காரணம் சுவிஸ் ப்ராங்கின் [அந்நாட்டு நாணயம்] நிலையான தன்மை. கரன்சிகள் அனைத்தும் ஏற்றத்தாழ்வுகளோடே இருக்கும் என்பது பொருளியல் விதி. ஆனால் கிட்டத்ட்ட நிலையாய் இருக்கும் ஒரே கரன்சி – சுவிஸ் ப்ராங்க். அதுவுமில்லாமல், வங்கியில் இருக்கும் பணத்திற்கு ஈடாய் 40% தங்கமாய் வைத்திருக்கும் ஊரும் சுவிஸ்தான். பணத்துக்குப் பணம். பாதுகாப்புக்கு தங்கம். அதனால்தான் எல்லாரும் அங்கே ஓடுகிறார்கள்.

நம்பர்டு அக்கவுன்ட் பாதுகாப்பு

சுவிஸ் வங்கிகள் நம்மூர் வங்கிகள் போலத்தான். சேமிப்பு, நடப்புக் கணக்குகள்; சில்லறை வங்கிச் சேவை; வரிகள் போன்றவையெல்லாம் உண்டு. ஆனால், சுவிஸ் வங்கிகளின் உலகப் பெருமை என்பது அவர்களின் நம்பர்டு அக்கவுன்ட் (Numbered Accounts) என்பதில் ஆரம்பிக்கிறது.

எம்ஜிஆர் சமாதிக்கு வரும் மொட்டை போட்ட ஊரார்கள் எல்லார்க்கும் சொல்லப்படும் கதை – ‘காது வைச்சுக் கேளுங்க, எம்ஜிஆர் கட்டியிருந்த கடிகாரம் இன்னமும் ஓடிக்கிட்டு இருக்கு. அதுல தான் அவரோட சுவிஸ் பேங்க் நம்பர் இருக்கு’. பிலிப்பென்ஸின் முன்னாளைய அதிபரின் மனைவி இமால்டா மார்கோஸ். வருமானத்திற்கு மீறிப் பணம் சேர்த்ததாகக் குற்றச்சாட்டு. $430 மில்லியன் சுவிஸ் வங்கிகளில் வைத்திருப்பதாகச் சொன்னார்கள். சுகார்தோ சுவிஸ் வங்கியில் போடக் கொடுத்த காசு, ஊர் உலகமெல்லாம் சுற்றி, கடைசியில் கோயமுத்தூரில் ஒரு பேக்டரியில் வந்து விழுந்தது என்றுகூட இன்னும் கொங்கு மண்டலத்துக் காரர்கள் கதை சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். ஐந்து வருடங்களுக்கு முன் எகிப்தில் காலாவதியான ஹோஸ்னி முபாரக், புரட்சிப் படையினரால் கொல்லப்பட்ட லிபிய கடாபி என எல்லார்க்கும் சுவிஸ் வங்கியில் இருந்தது ஒரு நம்பர்டு அக்கவுன்ட்.

இந்த நம்பர்டு அக்கவுன்ட்தான் கருப்புப் பண சேமிப்புக் கூடம். நம்பர்டு கணக்கில் உங்கள் பெயரோ, முகவரியோ இருக்காது. உங்களுடைய கணக்கு என்பது 34 இலக்க எண் அல்லது ஒரு புனைபெயர். உங்களைப் பற்றிய தகவல்கள் வெகு ரகசியமாய், உங்கள் கணக்கினைத் துவங்கும் அதிகாரி மற்றும் வங்கியின் உயர்நிலை அதிகாரிகளுக்கு மட்டுமே தெரியும். வங்கியில் இருந்தாலும் வேறு யாருக்கும் தெரியாது. குறைந்த பட்ச வைப்பு: $100,000 பின்னாளில் நடக்கும் பரிவர்த்தனைகள் குறைந்த பட்சம் $50,000 க்கு மேலிருக்க வேண்டும். நம்பர்டு கணக்கில் மட்டும்தான் உலகிலேயே நீங்கள் வங்கியில் வைத்திருக்கும் பணத்திற்கு, வங்கிக்கு வட்டி செலுத்தவேண்டும். 10 வருடங்கள் பரிவர்த்தனைகள் இல்லாமல் போனால் உங்களை உலகில் தேட ஆரம்பிப்பார்கள். விவரங்களை நீங்கள் ஒழுங்காய் கொடுத்திருந்தால் பணம் வாரிசுக்குப் போகும். இல்லையென்றால், வங்கிக்கு. விழுந்தால் உமக்கு, விழாவிட்டால் சுவிஸுக்கு என்கிற லாட்டரித்தனமான வர்த்தகம்.

சுவிஸ் வங்கிகளை கட்டுப்படுத்துவது யார்?

இந்தக் கணக்கிற்குதான் பணக்கார உலகம் ஆலாய்ப் பறக்கிறது. பிரபலங்கள் பலரும் ஐரோப்பாவுக்கு சீசன் டிக்கெட் எடுக்கிறார்கள். அக்கால இடி அமீனிலிருந்து இன்று வந்த நடிகர் வரை ஆசைப்படுகிறார். லண்டனில் சுவிஸ் வங்கி சேவை ஆலோசனை நிறுவனங்கள் தடுக்கி விழுந்தால் கிடைக்கும். எல்லார் கனவும் சுவிஸ் வங்கியில் கணக்கு வைத்திருப்பது. இம்மாதிரியான சேவைகளால்தான் பரிமாற்றங்கள், பரிவர்த்தனைகள் அதீதப் பணம், அதன் மூலம் வரும் திமிர், கர்வம்,தடைகளற்ற வாசல் திறப்புகள், அதிகார மமதை. சேர்த்த பணத்தினை விஸ்தரிக்க வழியில்லாமல் போனால், யாருக்கும் அதிகமாய் சம்பாதிக்கத் தோன்றவே தோன்றாது. ஆனால் சுவிஸ் வங்கிகள் வெறும் பாதுகாப்பு மட்டுமல்ல, அங்கிருந்து உலக வர்த்தகத்தில் பணத்தினைப் போட்டு இன்னமும் பெருக்கலாம். 

கரன்சி சந்தைகள், ஆயில், கமாடிட்டி, ரியல் எஸ்டேட், குதிரைப் பந்தயம், க்ரூஸ் கப்பல்கள், படகுகள் என நீளும் பணப்பெருக்க முயற்சிகளில் எதில் வேண்டுமானாலும் இறங்கலாம். சுவிட்சர்லாந்தின் மொத்த வங்கிப் பொருளாதார கணக்கினை இரண்டே வங்கிகள் தான் கட்டுப்படுத்துகின்றன. UBS என்றழைக்கப்படும் யுனைட்டட் பேங்க் ஆப் சுவிட்சர்லாந்து மற்றும் கிரெடிட் ஸ்யூஸே (Credit Suisse) வங்கி. நடக்கும் பரிவர்த்தனைகளில் 50% இவ்விரண்டு வங்கிகளின் மூலமே நடக்கும். ஊரை ஏமாற்றி உலையில் போட இன்னும் சில முறைகளும்கூட இருக்கின்றன.

வரிகளற்ற சொர்க்கங்கள்

பணக்காரர்கள் எப்படி பணக்காரர் களாகவே இருக்கிறார்கள்? அடிப்படை சம்பளம் வாங்கும் நமக்கே பத்தாயிரம் பிக்கல் பிடுங்கல்கள். அப்படியிருக்கையில் ஒரு பணக்காரனுக்கு எவ்வளவு இருக்கும்? அரசியல்வாதிக்கு, நடிகனுக்கு, தொழிலதிபர்களுக்கு, தனவந்தர்களுக்கு, அதிகாரிகளுக்கு மட்டும் எப்படி பணம் சடாலென வளர்கிறது ? நேர்மையான முறையில் பணத்தினைப் பெருக்க, வளர்க்க நாயடி, பேயடி படவேண்டுமென்பதுதான் நிதர்சனம். ஆனால், நியாயமாய் சம்பாதிக்காத பணத்தினை எப்படி நியாயமான வருமானமாகக் காட்டுவீர்கள்? அங்கே தான் இந்த “வரிகளற்ற சொர்க்கங்கள்” தன் வாசற்கதவை பெரும்பணக்காரர்களுக்கும், நிறுவனங்களுக்கும், அரசியல் / சர்வா திகாரிகளும் திறந்து காட்டி ரத்தினக் கம்பளம் விரிக்கிறது.

எங்கெல்லாம் வரிகள் இல்லை?

வரிகளற்ற சொர்க்கங்கள் என்றால்?

இவை ஒரு நாடாகவோ, மாநிலமாகவோ, ஒரு கட்டமைப்பின் கீழ் வரும் பகுதியாகவோ இருக்கலாம். வரிகளற்ற இடங்களைக் கண்டறிவது சுலபம். இங்கே வரிகள் குறைவாக அல்லது பூஜ்யமாக இருக்கும். அன்னிய நாட்டு வரித் துறையோடு பெரும்பாலும் தொடர்புகள் இருக்காது அந்த ஊரில் இருக்கவேண்டுமென்கிற கட்டாயங்கள் இருக்காது. சட்டங்கள், அரசு, பரிவர்த்தனைகள், ஆளுமை எதுவுமே “வெளிப்படையாக” இருக்காது. தங்கள் இருப்பிடத்தை Offshore Financial Center என்று பெருமிதமாகச் சொல்லிக் கொள்வார்கள்.

இந்த வரிகளற்ற சொர்க்கத்தின் தலைமையகம் – லண்டன்சூரியன் அஸ்தமிக்காத பரம்பரைதான் தன்னுடைய ‘காலனி’ நாற்றினை உலகமெங்கும் நட்டு அது இப்போது வளர்ந்து செழித்தோங்கி குட்டி சொர்க்கங்களாக மாறியிருக்கின்றன. இரண்டாம் உலகப் போர் முடிந்த காலக்கட்டத்தில் பிரிட்டன் பல நாடுகளிலிருந்து வெளியேறினாலும், இன்னமும் பல நாடுகள், தீவுகள் ஆஸ்திரேலியா உட்பட “மாட்சிமை தாங்கிய ராணியை” தலையில் வைத்துக் கொண்டு நிர்வாகம் செய்யும் தேசங்கள். லண்டன் – பிரிட்டனின் தலைநகரமென்பது மூணாம் வகுப்பு பாப்பா கூட சொல்லும். சொல்லாதது, லண்டன் வைத்திருக்கும் வரிகளற்ற சொர்க்கங்களின் மறை மூடிய சிலந்தி வலைப்பின்னல். இதை இரண்டாகப் பிரிக்கலாம். உள்வட்ட அதிகாரத்தின் கீழ் இருப்பவை; வெளிவட்டத்தில் இருப்பவை – சுருக்கமாய் உள்வீடு / வெளிவாசல்.

உள்வீட்டில், பிரிட்டனுக்கு பக்கத் திலேயே இருந்துகொண்டு – ஆனால், கொஞ்சம் “சுயமாகவும்” நிதிக்கான சட்டதிட்டங்களைப் போட்டுக் கொண்டிருக்கும் பிரதேசங்கள்; ஜெர்ஸி (Jersey), க்வர்ன்சே (Guernsey) மற்றும் ஐஸல் ஆப் மேன் (Isle of Man)- இவை அனைத்தும் பிரிட்டனின் ராஜபரம்பரையினை அண்டி வாழும் மாகாணங்கள். இது தவிர கேமென் தீவுகள் (Cayman Islands), பிரிட்டிஷ் விர்ஜின் தீவுகள் (British Virgin Islands – BVI). வெளியே இருந்தாலும், இன்னமும் உள்வீட்டு காலனி தான். வெளி வாசலில், ஹாங்காங், ஓரளவுக்கு சிங்கப்பூர், துபாய் எல்லாம் ஒரு காலத்தில் பிரிட்டிஷ் காலனி தேசமாய் இருந்து, விடுதலைப் பெற்று இன்னமும் பிக்பென் பார்த்து ராகு காலம், எம கண்டம் குறிக்கும் தேசங்கள்.

அமெரிக்காவிற்குப் பக்கத்தில் இருக்கும் பெர்மூடா, ஹவாய் போன்ற தேசங்களிலும் பிரிட்டனின் மகத்துவம் பெரிது. லண்டன் உலக நிதி வர்த்தகத்தின் தலைநகரம் [இதை கொஞ்சநாள் நியூயார்க் வைத்திருந்தது. 2008 பொருளாதார சீர்குலைவிற்கு பின், அந்த நிலை மாறிவிட்டது] இங்கே தான் எல்லா முக்கிய முடிவுகளும், மாற்றங்களும் நடக்கும். பக்கத்து ஊரான அயர்லாந்து பொருளாதார மந்தத்தில் மோசமாய் அடிப்பட்ட நாடு. காரணம் ஊரான் பணத்தில் வாழ்ந்த நாடது.

முதலீடுகளின் ரூட்டு

எதற்காக லண்டன் இந்த மாதிரியான ஒரு கட்டமைப்பினைக் கையில் வைத்துக் கொண்டு, ஆனால், உலக நிதி உத்தமர் என்று போஸ் கொடுக்க வேண்டும்? சூட்சுமமே அங்கு தான் இருக்கிறது. லண்டனிலிருந்து ஆட்கள் எல்லா கால, நேர சூழல்களிலும் வணிகம் செய்யமுடியும். இந்த பக்கம் சிங்கப்பூர், ஹாங்காங், துபாய், மொரீஷியஸ். அந்த பக்கம் ஜெர்ஸி, கேமென் தீவுகள், பெர்முடா – இது 24 மணி நேரமும் பணம். பணம். பணம். பணத்தினை எப்படிக் கொண்டு வருவது, எப்படி சேர்ப்பது, எப்படி கைமாற்றுவது, எந்த நாட்டுக்கு அனுப்புவது மட்டுமே. இதில் நல்ல, கெட்ட, யோக்கிய, அயோக்கிய, நியாயமான, அநியாயமான, அதர்மமான எல்லாவிதமான பணமும் அடங்கும்.

எத்தியோப்பியாவில் சர்வாதிகாரத்தால் ஆபத்து என்று நினைக்கும் தொழிலதிபரும், ம.பி, உ.பி, இ.பி யில் அரசியல்வாதிகள் குவிக்கும் பணமும் ஒரே மாதிரி தான் பார்க்கப்படும். ஒரே மாதிரி ஹவாலா + மாற்று வழிகளில் ஏதேனும் ஒரு நாட்டுக்கு போய் அங்கிருந்து இன்னொன்று, அங்கிருந்தும் வேறு என்று ஊர் உலகம் சுற்றி பின் அந்த நாட்டுக்கே “அன்னிய நேரடி முதலீடாக” (Foreign Direct Investment)போய்ச் சேரும். எல்லா அன்னிய முதலீடுகளும் மோசமானவை கிடையாது. ஆனால், இது தான் ரூட்.

எப்படி இந்தியாவில் கிளம்பி, சிங்கப்பூரிலோ, துபாயிலோ கொடுக்கப்பட்டு, அங்கிருந்து கேமென் தீவுகளுக்கோ, பிரிட்டிஷ் விரிஜின் தீவுகளுக்கோ போய், அமெரிக்க முகம், பிரிட்டிஷ் பாஸ்போர்ட் சகிதம் மொரீஷியஸிற்கு வந்து கம்பெனி நிறுவி, டெல்லி ஹில்டனில் ரூம் போட்டு, கோட்-சூட் மனிதர்களோடு கை குலுக்கி, போட்டோ எடுத்து, மறுநாள் எகனாமிக் டைம்ஸில் இன்னார் நிறுவனம், இந்த துறையில் 2000 கோடி முதலீடு செய்ய இந்தியாவில் உத்தேசித்து இருக்கிறது என்பதற்கு பின்னிருக்கும் கதைகள் எல்லாம் த்ரில்லர் ரகம்.

மொரீஷியஸ் மேஜிக்

நம்பர் 1, கேதீட்ரல் ஸ்கொயர், போர்ட் லூயிஸ் என்பது மிக முக்கியமான முகவரி. மொரீஷியஸிற்கு போகும் பெரும் தனவந்தர்கள், இன்வெஸ்ட்மென்ட் பேங்கர்கள், ஹெட்ஜ் பண்ட் ஆட்கள், இன்ன பிற தரகர்களின் மெக்கா இந்த இடம் தான். இங்கிருக்கும் கியுபிக்கிள்களில் தான் தினமும், பல மில்லியன் டாலர்கள் உள்வந்து, வெளியேறுகின்றன. மொரீஷியஸ் இந்திய கருப்பு / வெள்ளை மற்றும் வெளிநாடுகளிலிருந்து இந்தியாவுக்குக் கொண்டு வரப்படும் “வெள்ளையான” பணத்தின் தாயகம்.

இந்தியாவின் செல்லப்பிள்ளை

1983. மொரீஷியஸிற்கும் இந்தியாவுக்கும் ஓர் ஒப்பந்தம் கையெழுத்தாகிறது. அதன்படி மொரீஷியஸில் நிறுவனங்கள் வைத்து, இந்தியாவில் முதலீடு செய்யும் நிறுவனங்களின் வருமானத்தினை மொரீஷியஸ் அரசாங்கம் வரி விதிக்கும். ஒரு வேளை இந்தியாவில் வரி விதிக்கப்பட்டிருந்தால், அவை மொரீஷியஸில் வரி விதிக்கப்படாது. இதற்கு இரட்டை வரி நிறுத்த உறவு (Double Taxation Avoidance Treaty) என்று பெயர். இந்திரா காந்தி செத்துப் போவதற்கு ஒரு வருடத்திற்கு முன் வந்த இந்த உறவு தான் நம் மொரீஷியஸ் கனவுகளுக்கு ஆரம்பம்.

மொரீஷியஸ் என்றவுடனேயே எல்லாமே கருப்பு என்பதும் கிடையாது. இந்தியாவில் இருக்கும் பெரும்பாலான வென்ச்சர் கேபிடல் நிறுவனங்கள் தங்கள் நிதியினை மொரீஷியஸ் வழியாகவே கொண்டு வருகின்றன. கொஞ்சம் கூர்ந்து எகனாமிக் டைம்ஸ் படித்தால், இந்தியாவில் நடக்கும் பெரும்பாலான கையகப்படுத்துதல், நிறுவனங்களை வாங்குதல், விற்றல், லாபத்தினைப் பங்கு போடல் என எல்லா சங்கதிகளிலும் மொரீஷியஸிற்கு ஏதாவது ஒரு பங்கு இருக்கும்.

ரொட்டேஷன் ஆப்பு

மொரீஷியஸிலிருந்து மட்டும் 40% அன்னிய முதலீடு நமக்கு வந்திருக்கிறது என்று ரிசர்வ் வங்கியின் அறிக்கையொன்று சொல்கிறது. மொரீஷியஸ், கேமென் தீவுகள், பிரிட்டிஷ் விரிஜின் தீவுகள், பெர்மூடா என்கிற குட்டித் தீவுகள் தான் இந்தியாவின் அன்னிய முதலீட்டில் கிட்டத்தட்ட 75-80% வரைக்கும் கொண்டு வந்து கொட்டுகின்றன. இந்தியாவின் பிரச்னை, நாம் பெரும்பாலான குட்டித் தேசங்களோடும், இரட்டை வரி நிறுத்த உறவினை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறோம். 

இது தான் சிக்கலின் ஆரம்பம். வெறும் அன்னிய முதலீடுகளுக்காக ஏற்படுத்தப்பட்ட வசதியானது, பின்னாளில் இங்கே லஞ்சம், ஊழல், வரி ஏய்ப்பு, ஏமாற்றுதல், கமிஷன் வாங்கிய ஆட்கள் எல்லாம் தங்களுடைய பணத்தினை வெவ்வேறு வழிகளில் இம்மாதிரியான குட்டித் தீவுகளுக்கு கொண்டு போய், நாம்கேவாஸுக்கு பேப்பர் நிறுவனங்களை அமைத்து அதன் மூலம், மீண்டும் இந்தியாவிற்கு அரசு மரியாதையோடு பணத்தினை தங்களுடைய பினாமி நிறுவனங்களிலேயே முதலீடு செய்கிறார்கள் என்பதுதான் கருப்புப் பண சுழற்சியின் மிக முக்கியமான தொழில்முறை ரகசியம்.

சுலபமாய் அறிந்துகொள்ள உங்கள் ட்ராவல் ஏஜெண்டிடம் சிங்கப்பூர், துபாய், லண்டன், ஹாங்காங் இந்த நான்கு நகரங்களுக்கும் ஒரு நாளில் இந்தியாவிலிருந்து எத்தனை விமானங்கள் போகின்றன என்று கேளுங்கள். அவர் சொல்லும் விடைக்கும் மேலே படித்தவற்றுக்கும் இருக்கும் சம்பந்தத்தினை இதழோரம் தவழும் புன்னகை சொல்லும்.

So now what?

இரண்டு உலகளாவிய நிறுவனங்கள் இந்த வரிகளற்ற சொர்க்கங்களைப் பயன்படுத்தி எப்படி வரிகளை ஏய்க்கின்றன, அதன் மூலம் அரசுக்குச் சேர வேண்டிய பணம் எப்படி தனியார் நிறுவனங்களுக்குப் போய்ச் சேருகிறது என்று பார்ப்போம். கூகுள். இணையத்தின் நெ.1 நிறுவனம். கூகுள் உலகெங்கிலும் கிளை பரப்பிய ஆலமரம். அதன் விழுதுகள் வீழாத இடங்கள் அட்லஸில் இல்லை என்று சொல்லலாம். ஐரோப்பா அதன் மிகப் பெரிய சந்தை. அது சம்பாதிக்கும் கோடானுகோடி தொகையும் அதன் விளம்பர வருவாயிலிருந்து வருவது.

ஐரோப்பாவில் நிறுவன வரி விதிப்பு அதிகம் ஆனால், சாமர்த்தியமாய் கூகுள், தன்னுடைய ஐரோப்பிய வருமானம் அனைத்தையும் அயர்லாந்து > நெதர்லாந்து > பெர்மூடா என்கிற வழிகளைக் கொண்டு, அந்த நாடுகளின் வரி சட்டங்களில் இருக்கக்கூடிய ஓட்டைகளைப் பயன்படுத்தி வெறும் 2.4% மட்டுமே வரியாகக் கட்டுகிறது. மொத்த ஐரோப்பாவும் இதைக் கசப்பாகப் பார்க்கிறது. இதன் மூலம் கூகுள் வருடத்திற்கு பல்லாயிரம் கோடிகள் ரூபாயை ‘வரிகளற்று’ நேரடியாய் தன்னுடைய பாலன்ஸ் ஷீட்டில் கேஷாக வைத்திருக்கிறது. 

“Don’t be Evil” என்பது கூகுளின் கொள்கை என்பதறிக. முதலில் ஹட்ச் நாய், பின் சூசூக்கள் என்று இந்தியாவில் கொண்டாடப்படும் வோடஃபோன். ஹட்சினை கையகப்படுத்திய வோடஃபோன் ஒரு பன்னாட்டு நிறுவனம். அதற்கும், இந்திய வருமான வரித்துறைக்கும் பல வருடங்களாக டக்கப்-வார் மும்பை நீதிமன்றத்தில் ஓடிக் கொண்டிருந்தது. உச்சநீதிமன்றமே வோடஃபோன் நிறுவனத்துக்கு ஆதரவான ஒரு தீர்ப்பினை வழங்கிய நிலையில், இந்திய அரசு தன்னுடைய வரிவசூலிப்பு முறைகளையே மாற்றியமைக்க வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளானது. 

காரணம்: வோடஃபோன் இந்தியாவில் பல்லாயிரம் கோடிகள் வரியாக செலுத்த வேண்டும் என்று இந்திய வருமானத்துறை வற்புறுத்தியது. வோடஃபோனோ, அதன் மொரீஷிய நிறுவனங்களின் வழியே இந்தியாவில் முதலீடு செய்யப்பட்ட தொகையின் லாப ஈட்டுத்தொகையின் வரியை மொரீஷியிஸில் தான் கட்டுவேன் என்கிறது. மொரீஷியஸில் கிட்டத்திட்ட 0% என்பதறிக.

மேலே சொன்ன இரண்டு உதாரணங்கள் தான் ஆரம்பம். வரி ஏய்ப்பு இப்படி தான் உலகளாவிய அளவில் இன்றைக்கு நடக்கிறது. இதன் மூலம் போகும் பணம், நிறுவனங்களுக்கு, தனி நபர்களுக்கு, அரசாங்களுக்கு என பங்கு பிரிக்கப்பட்டு பின்னர் வேறு வழியாக மீண்டும் தன்னுடைய நாட்டுக்கே whiter than white ஆக வரும்.

- நரேன் ராஜகோபாலன்

http://www.dinakaran.com/News_detail.asp?Nid=260541


--

தோழமையுடன்

ஸ்டாலின் பெலிக்ஸ்
--------------------------------------------------------------------------------------------------------------
இந்த உலகத்தில் அநீதியும் அடிமைத் தனமும் இருக்கும் வரை. . . சுதந்திரத்தை இழந்து வாழும் மக்கள் இருக்கும் வரை. . . விடுதலைப் போராட்டங்களும் இருக்கத்தான் செய்யும். இது தவிர்க்க முடியாத வரலாற்று நியதி..
-------------------------------------------------------------------------------------------------------------------------
----------------------------------------------------------------------------------------------
Reply all
Reply to author
Forward
0 new messages