Re: தமிழகத்தில் மடங்களின் தோற்றம்

1 view
Skip to first unread message

N. Ganesan

unread,
Jul 19, 2017, 10:32:34 AM7/19/17
to மின்தமிழ், minT...@googlegroups.com, vall...@googlegroups.com, housto...@googlegroups.com, panb...@googlegroups.com, pira...@googlegroups.com
மடம் ‘Mutt where pilgrims are fed', மடைப்பள்ளி ‘kitchen', மடையர் ‘cooks', மடுத்தல் ‘to cook',
- இவற்றை ஒருமித்துக் காணும்போது மடுப்பு > அடுப்பு என்று ஆனதாகத் தெரிகிறது.
அடுத்தல், அண்டுதல், அண்டை, அள்ளை, அட்டை - ‘nearness' சொற்களுக்கும், அடுப்பு ‘to cook' என்பதற்கும் தொடர்பில்லையே.
மலர் > அலர் போல மடுப்பு > அடுப்பு.

சங்க இலக்கியம் படித்தால் மடுத்தல் = சமைத்தல் என்பது தமிழின் அடிப்படையான 
வினைச்சொற்களில் ஒன்று என அறியலாகும். வகுத்தல் என்னும் வினை தருவது வகுப்பு.
அதுபோல், மடுத்தல் (=சமைத்தல்) என்னும் வினைதருவது மடுப்பு. சொன்முதல் ம் கெட்டு
அடுப்பு எனவரும். மடுத்தல் சொன்முதல் ம் கெட்டு அடுத்தல் (= சமைத்தல்) எனப் புழங்குகிறோம்.

அடுதீ = மடுக்கும் தீ, அதாவது சமைக்கும் தீ. இதனைக் கலித்தொகை கொண்டு விளக்கலாம்.
அடுத்தல் < மடுத்தல், அடுப்பு < மடுப்பு என அறியலாகும்.
மடுத்தல் = சமைத்தல் (சங்க இலக்கியச் சான்று)
எனவே தான், மடுப்பு > அடுப்பு; மடுத்தல் > அடுத்தல் (சமையல்)

கலித்தொகை 59

ஆய்தொடி யைதுயிர்த் திவனுண்ணோ யாதென்னு
நோயிலை யிவட்கென நொதுமலர் பழிக்குங்காற்
சிறுமுத்த னைப்பேணிச் சிறுசோறு மடுத்துநீ
நறுநுத லவரொடு நக்கதுநன் கியைவதோ;
எனவாங்கு;

நச்சினார்க்கினியர் மடுத்தல் = சமைத்தல் என விளக்குகிறார்:
எ - து: ஆராய்ந்திட்ட தொடியினையுடையாய்! நீதான் ஐதாக உயிர்த்து இவன் மனத்திலுண்டாகிய நோய் யாதென்று கேட்கும் நோய் இவட்கு இல்லை யென்று யான் கூற அதுகேட்டு அயலார் நினைப்பழிக்குமளவிற் சிறிய குழமகனைப் பேணி வளர்த்து அவனுக்கு வேறொருத்தியுடைய பெண் மகனைக் கோடற்குச் சிறுசோற்றைச் சமைத்து ஆயத்திற்கு இட்டு நீ நறிய நுதலையுடைய மகளிரோடே மகிழ்ந்த நோன்பின் பயன் நினக்கு வந்து பொருந்துமோ? பொருந்தாது காண்; எ - று.

எனவாங்கு
எ-து; என்று; எ - று. ஆங்கு - அசை. ||

மடுதல்/அடுதல் சமைக்கும் தீயிற்கும், சுடுதல் அழிக்கும் தீயிற்கும் பயன்படும்.
இதனைப் புறப்பாட்டு குறிப்பிடுகிறது:

|| “அடுதீ யல்லது சுடுதீ யறியாது
இருமருந்து விளைக்கு நன்னாட்டுப் பொருநன்” (புறம். 70)

என்பதனால் தங்கள் உணவு அடுதற்குரிய தீயைச் சுடுதீயென்னாது வேறோர் நன்பெயர்
கொடுத்து அடுதீயெனப் பாகுபடுத்திப் பாராட்டுதலும் அறிவின் பயனேயாம். சிலப்பதிகாரம்
வஞ்சின மலையில் “எரியங்கி வானன்வன்” (49) எனவும் வருதல் காண்க.  “ ||
பாஷா கவிசேகரர் மகாவித்துவான் ரா. இராகவையங்கார், அண்ணாமலைப் பல்கலைக்கழகம்

-----------------

மடுத்தல் = அடுப்பில் ஏற்றித் தீ மூட்டிச் சமைத்தல்.
எனவே, மடுப்பு > அடுப்பு

வளைத்து நின்று ஐவர் கள்வர்
            வந்துஎனை நடுக்கம் செய்யத்
தளைத்து வைத்து உலையை ஏற்றத்
            தழல் எரி மடுத்து நீரில்
திளைத்து நின்று ஆடுகின்ற
            ஆமைபோல் தெளிவு இலாதேன்
இளைத்து நின்று ஆடுகின்றேன்
            என்செய்வான் தோன்றினேனே.

சமணமுனிவர் தோலாமொழித் தேவர்
சூளாமணியில் மடுப்பு > அடுப்பு என்ற
சொல்முளை காட்டும் பாடல் தந்துள்ளார்:

மலையெடுத் திடுகோ மாநிலம் பிளக்கோ
     மறிகட லறவிறைத் திடுகோ
வுலைமடுத் துலகம் பதலையா வூழித்
     தீமடுத் துயிர்களட் டுண்கோ
சிலையிடத் துடையார் கணைவலத் துடையார்
     சிலர்நின்று செய்வதீங் கென்னோ
நிலையிடத் தவரு ணிகரெனக் குளரே
     னேடுமின் சென்றென நின்றான்.
 
     (இ - ள்.) மலை எடுத்திடுகோ - உலகின்கண்ணுள்ள இமய முதலிய மலைகளைத்
தூக்குவேனோ! அல்லது, மாநிலம் பிளக்கோ - பெரிய பூமியை இரண்டாகப் பிளப்பேனோ!
அன்றி, மறிகடல் அற இறைத்திடுகோ - அலைகள் மறிகின்ற கடல்கள் நீர் அற்றுப் 
போம்படி காலால் எற்றுவேனோ! அன்றி, உலகம் பதலையா - இவ்வுலகமே ஒரு
பானையாகக்கொண்டு, உலைமடுத்து - அப்பானையை அடுப்பில் ஏற்றி வைத்து, ஊழித்தீ
மடுத்து -அவ்வடுப்பில் ஊழித்தீயைக் கொளுவி, உயிர்கள் அட்டு உண்கோ - உயிர்களைச்
சமைத்து உண்பேனோ, (என் பெருமைக்கேற்ப இன்னோரன்ன செய்வதல்லாமல்,)
சிலையிடத்துடையார் - வில்லை இடக்கையிலுடையராய், கணைவலத்துடையார் - 
அம்புகளை வலக்கையிலுடையராய், சிலர் - ஒருசில பேதையர் ஈண்டு உளர், நின்று 
செய்வது ஈங்கு என்னோ - இவ்விடத்தே நின்று யாம் செய்தற்குரிய செயல் யாதுளது?,
நிலையிடத்தவருள் - இப்போர்க்களத்தே நிற்குமவருள், எனக்கு நிகர் உளரே - எனக்கு
நிகராய் நின்று போர் செய்வாரும் உளர்கொல்லோ!, சென்று நேடுமின் - உளராயில் நீயிர்
சென்று தேடுங்கோள் என்று கூறி, நின்றான் - ஓரிடத்தே நிற்பான் ஆயினன், (எ - று.)
அவ்விடத்தே தோன்றிய தூமகேதனன், மலை எடுத்திடுதல் முதலிய அருஞ்செயலைச் 
செய்வதன்றி, ஈண்டு வில்லுங் கணையும் கொண்டு நிற்கும் புல்லியரோடு யான் போர்புரிதல்
தகுமோ! இக்களத்தே என்னோடு எதிர்க்கும் ஆற்றலுடையார் யாரேனும் உளராயின்
அவரைத் தேடுங்கோள் எனக் கூறி நின்றான் என்க.

----------------

தமிழில் பல சொற்களிலே ம்- முதலில் வரும், பின்னர்
அந்த ம்- அழிபட்டுச் சொற்கள் உருவாவது வழமை.
சில உதாரணங்கள்:
(1) மலர் > அலர்
(2) மாமரம் > ஆமர > ஆம்ர (வடமொழிகளில் தமிழ்ச்சொல்)
(3)  முழ்-/முட்டை/முண்ட > மண்டை > அண்ட ‘egg'; 
(இன்னும் வேதத்தில் அண்டம் என்ற சொல்வேர் தேடிக்கொண்டுளர்!)
(4) முன்னு-தல்  > உன்னு-தல்
(5) மோய்தல்:ஓய்தல்
(6) மோடு(முகடு) > ஓடு,  
(7) மிழ்-/மிண்டு/மிடுக்கு > மேழம் (மிழ்- மிஷ்- என வடசொல் ஆகிறது
மிஷதி - ஆட்டுக் கிடாக்கள் மிண்டுதல், சண்டையிடல்)
மேழகம் > ஏழகம் (சிலப்பதிகாரத்தில்).
(8) மூழ்கம் > ஊழ்கம் (= தியானம்)
(9) மடுத்தல் =  தீ மூட்டுதல் To kindle; 
கொலைஞர் உலையேற்றித் தீமடுப்ப (நாலடி, 331).
மடைப்பள்ளி : அடுப்பில் தீமூட்டிச் சமைக்கும் இடம்.
மடுப்பு  > அடுப்பு
(10) முத்தி > உத்தி
(11) முள்ளல்:உள்ளல் ‘hilsa fish', மீன்வகை.
(12) முளி:உளி
முள் என்ற சொல்லே ”உள்” என சொன்முதல் ம் இழந்து, பின்னர்
“உல்” என்றாகியது. முள்- “sharp edge". இது தச்சரின்
இழைப்புளி போன்றவற்றில் வரும் உளி (< முளி).
எனவே, முள் > உள்/உல் 
உல் ul , n. (J.) 1. Sharp stick or iron to peel coconuts; தேங்காயுரிக்குங் கருவி. 2. Impaling stake; கழு.
உல்லியம் [ ulliyam ] கிணறு.  முள் (> உள்/உல்) போன்ற கூர்நுனி கொண்ட ஆயுதங்களால் தோண்டும் கூவல். (கூ(ர்) ஆயுதங்களால் தோண்டுவது கூ+அம் = கூவல்/ம்).
உல்லியர் [ ulliyar ] கூவநூலோர். (water diviners)
உல்லுகம் [ ullukam ] கொள்ளி.
(நா. கதிரைவேற்பிள்ளை அகராதி)


நா. கணேசன்


On Monday, July 17, 2017 at 8:54:53 PM UTC-7, N. Ganesan wrote:
On Thursday, August 4, 2016 at 11:16:22 PM UTC-7, singanenjan wrote:
> wood   என்பதற்கு "எரி கரும்பு"  என்று எழுதி யிருக்கிறீர்கள் . இது  மரபு கருதியா?

தமிழ் சைவ மடங்கள் தமிழைக் காத்தளித்த திருமடங்கள். அங்கேதான் தமிழுணர்ச்சியை உவேசா போன்றோர் அடைந்தனர்.
அழகான, மங்கலமான மொழிவழக்குகள் உருவாகிய இடங்கள் சைவமடங்கள். அதன் தமிழ் அழகானது. அப்படி ஒரு மடப்பள்ளி
வழக்கத்தை வெண்பாவில் காளமேகம் படம்பிடித்துக்காட்டியுள்ளார். திருவானைக்காத் தாசியுடன் அம்மடத்தில் பாடியதாகலாம்.

சாம்பார் என்பதை சாப்பாடு & சாப்பிடு என ஆக்குவதும் இதுபோன்ற மங்கல மொழிவழக்கே.

          எங்கள் மடத்துக்கு எரிகரும்பு வெட்டுதற்குப்
          புங்கங்கொம் பங்கிங்கொன் பதுபுளி - யங்கொம்பங்
          கிங்கொன் பதுவெட்டி நறுக்கிய வெள்வேலங்
          கொம்பங் கிங்கொன் பது.

வெள்வேல் - வென்வேல் என தட்டுப்பிழை (ப்ராஜக்ட் மதுரையில்). ள்-ன் எழுத்துமயக்கம் கையெழுத்தில் எளிது.

சோழநாடு சோறுடைத்து என்றாள் ஔவை. திருமடங்களில் தலைவாழை இலையில் தினமும் சாப்பாடு பரிமாறினர்.
மடம் என்ற சொல்லே மடுத்தல் “உண்ணுதல்” என்னும் தமிழ்ச்சொல் என இரா. நாகசாமி விளக்கியுள்ளார். மடம் Mutt
e.g. Kanchi Mutt  என இந்தியா முழுதும் பிரபலம்.  வாழையிலையை தோகை என்பதும் தமிழ்ச் சைவ மரபுகளில் ஒன்று.
யாகசாலை நிர்மாணத்துக்கு “வாழைத் தோகை” என்றி வாழையிலைகளைக் குறிப்பிடுகின்றனர். கவிஞர் வாலி
திருப்பராய்த்துறை ஊர்க்காரர். சீரங்கத்தில் இளைஞராய் வாழ்ந்தவர். வாழை மிகுதியும் காவிரியால் பயிராகும்
ஊர்கள் அல்லவா? ”வாழைத் தோகை” என்பதை அடிமைப்பெண் (எம்ஜிஆர் படம், 1969) பாடலில் தன் மண்வாசனை
தெரியப் பாடியுள்ளார் வாலி. இங்கே முதல்வர்கள் இருவர் ஆடக் காண்போம்,

வானில் நீந்தும் மேகம் கண்டால்
வண்ண மயில்கள் ஆடாதோ ? 
வாழை போல தோகை விரிய
வளர் பிறை ஆயிரம் தோன்றாதோ ? 
அழகும் கலையும் வாழும் நாடு
ஆண்டவன் வீடாய்த் திகழாதோ ? 
இவைகளை எல்லாம் அழிக்க நினைத்தால்
சரித்திரம் உன்னை இகழாதோ ?

இந்தனத்திற்கு எரிகரும்பு என்பதும்,  கரும்பு, நெல், சோளம், வாழை இலைகளை தோகை என்பதும் தமிழின் அழகுகளில் ஒன்று.

நா. கணேசன்

On Monday, July 17, 2017 at 2:13:35 PM UTC-7, தேமொழி wrote:

இந்துசமய மறுமலர்ச்சியில் தோன்றிய மடங்களே மடங்கள், அதில் கற்பித்த (ஆன்மிகம்/பொதுக்கல்வி) ஆசிரியர்களே குருக்கள் என்பதுதான் செல்வன் கொடுத்த வரையறை. 

அவ்வாறுதான் அவர் கூறுவதாக  நான் புரிந்து கொண்டேன். 

சரியே. இந்து சமய மறுமலர்ச்சிக்கு அடிப்படை தமிழகத்தில் எழுந்த பக்தி இயக்கம். பாத்மபுராணம், பாகவத மாகாத்மியம் இரண்டிலும்
ஒரு புகழ்பெற்ற வாக்கு இருக்கிறது: பக்தி என்னும் பெண்குழந்தை தமிழ்நாட்டில் பிறந்து மேற்கு பாரதத்தில் வளர்ந்து வயதுக்கு வந்து
விரஜ பூமியில் புத்தெழுச்சி பெற்றாள். இது நிகழ்ந்தது 6-16ஆம் நூற்றாண்டு இந்தியாவில். ஹிந்து சமயம் மறுமலர்ச்சி அடைந்த காலம்.

இதற்கு தமிழ்ச் சொல்லாகிய மடுத்தல் என்னும் வினையடிப்பிறந்த மடம் (MaTha in Skt., Mutt in English as seen in Hindu Law books) என்ற சொல்லும்,
அதன் அடிப்படையான அடியார்களுக்கு உணவு அளித்தலும், பிற்காலத்தில் மடத் தலைவர்கள் செய்த சமயச் செய்கைகளும் காரணம்.
நாகசாமி கட்டுரையில் பக்தி இயக்கம் தோன்றிய காலத்தில் கோயில்களுடன் தொடர்புடைய திருமடங்கள், அவற்றின் செய்கைகள்
பற்றி கல்வெட்டுகள், இலக்கியங்கள் கொண்டு விளக்குகிறார்.

சத்திரம் வேறு, திருமடம் வேறு. சத்திரம் கோயிலோடு தொடர்பு இருக்க வேண்டியதில்லை. உ-ம்: வாணியர் சத்திரம்.
ஆனால், மடங்கள் கோயில்களோடு தொடர்புடையவை. உ-ம்: சிருங்கேரி சங்கர மடம். திருவாவடுதுறை மடம்,
பேரூர் சாந்தலிங்கர் திருமடம், .... இவற்றுக்கு சத்திரம் என்ற பெயர் பொருந்தாது.

நா கணேசன்

Reply all
Reply to author
Forward
0 new messages