காலியாகும் தொழில் நகரம் ... என்ன செய்கிறது தமிழக அரசு?

10 views
Skip to first unread message

ஸ் பெ

unread,
Feb 19, 2015, 12:29:36 PM2/19/15
to panbudan
http://www.vikatan.com/article.php?module=magazine&aid=103777
காலியாகும் தொழில் நகரம் ... என்ன செய்கிறது தமிழக அரசு?

ட்சியாளர்களின் பொறுப்பற்ற செயல் பாடுகளால் தமிழக மக்களின் வரிப்பணம் எப்படி எல்லாம் வீணாகி வருகிறது என்பதை இந்த இதழிலும் பார்ப்போம்.

மக்கள் வரிப்பணம் விரயம்

இலவச கலர் டி.வி., இலவச கறவை மாடுகள், இலவச லேப்டாப் என தமிழக அரசின் இலவசத் திட்டங்களில் ஆட்சியாளர்களின் ஈகோ பிரச்னை, அலட்சியம், முறைகேடுகள் போன்ற பிரச்னை களால் தமிழக அரசுக்கு கோடிக் கணக்கான ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது என்று மத்திய கணக்குத் தணிக்கைத் துறை சுட்டிக்காட்டியுள்ள விவரங்களை கடந்த இதழ்களில் விரிவாகச் சொல்லியிருந்தோம்.  

கேபிள் இழப்புகள்!

தி.மு.க அரசால் 2007 ல் அரசு கேபிள் டி.வி கழகம் ஆரம்பிக்கப்பட்டது. அந்த நிறுவனத்தைத் தொடங்கியதன் மூலமாக அரசுக்கு 8:11 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட் டதாக சி.ஏ.ஜி சுட்டிக் காட்டியது. 'அரசின் முதலீ டாக ரூ. 25 கோடியும் கடனாக ரூ .36.35 கோடியும் பெற்று எம்.எஸ்.ஓ அந்தஸ்துடன் அரசு கேபிள் டி.வி கழகம் ஆரம்பிக்கப் பட்டது. போட்டிகள் நிறைந்த சூழலில், உள்ளூர் கேபிள் ஆபரேட்டர்களின் ஆதரவு மற்றும் மக்கள் விரும்பிப் பார்க்கும் சேனல்களை ஒளிபரப்புவதற்கான ஒப்பந்தம் மற்றும் ஏற்பாடுகளை முன்கூட்டியே செய்யாமல் வணிக செயல்பாட்டினை தொடங்கியதால் கேபிள் கார்ப் பரேஷனின் செயல்பாடு மோசமாக அமைந்துவிட்டது 'என்று சி.ஏ.ஜி அறிக்கை கூறியது.

மேலும், '' 2010-11 ம் ஆண்டு வரையில் மூன்று ஆண்டுகளில் 241.21 கோடி ரூபாயை ஈட்ட முடியும் என அரசு கேபிள் டி.வி கழகம் மதிப்பிட்டு இருந்தது. ஆனால் 2008 ஆகஸ்ட் முதல் 2010 அக்டோபர் வரை 2:48 கோடி ரூபாயை மட்டுமே ஈட்ட முடிந்தது. உள்ளூர் கேபிள் ஆபரேட்டர்களிடமிருந்து 95.50 லட்சம் ரூபாயை வசூலிக்க முடியவில்லை 'என்று சி.ஏ.ஜி அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ரூ .4 ஆயிரம் கோடி இழப்பு!

தமிழ்நாட்டில் செயல்படும் அரசு பொதுத் துறை நிறுவனங்கள் 66, செயல்படாத பொதுத் துறை நிறுவனங்கள் 11 என மொத்தம் 77 நிறுவனங்கள் உள்ளன. அவற்றில் 2.79 லட்சம் பணியாளர்கள் இருக்கிறார்கள். மாநில பொருளாதார வளர்ச்சியில் இந்த நிறுவனங்களின் பங்களிப்பு சுமார் 19 சதவிகிதம். 77 பொதுத்துறை நிறுவனங்களில் 40 நிறுவனங்கள் மட்டுமே 511.96 கோடி ரூபாய் ஆதாயத்தை ஈட்டின. 20 நிறுவனங்கள் 8,547.73 கோடி ரூபாய் இழப்பை சந்தித்துள்ளன. லாபத்தை ஈட்டிய நிறுவனங்களில் முதல் இடத்தில் இருந்தது தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனம்தான். நஷ்டத்தை ஏற்படுத்திய நிறுவனங்களில் தமிழ்நாடு மின்சார வாரியத்துக்குத் தான் முதல் இடம். 7,771.39 கோடி ரூபாய் அளவுக்கு நஷ்டத்தை சந்தித்தது மின்சார வாரியம்.

கடந்த மூன்று ஆண்டுகளுக் கான தணிக்கை அறிக்கை களில், பொதுத் துறை நிறுவனங் களில் 4,035.35 கோடி ரூபாய் இழப்பைக் கட்டுப்படுத்தியிருக்க முடியும் என்றும் 632.60 கோடி ரூபாய் அளவுக்குப் பலனில்லாத முதலீட்டை தவிர்த்திருக்க முடியும் என்றும் சி.ஏ.ஜி குறிப்பிட்டுள்ளது.

பயனற்றுப்போன ரூ .399 கோடி!

சென்னை, மதுரை, திருச்சி, கோவை, நெல்லை, சேலம் ஆகிய இடங்களில் தகவல் தொழில்நுட்பத்துக்கான சிறப்புப் பொருளாதார மண்டலங்களை நிறுவு வதற்கு தமிழ்நாடு மின்னணு நிறுவனத்துக்கு தமிழக அரசு 2006 ல் அனுமதி வழங்கியது. அதன்படி, சென்னையில் ஒன்று; மதுரையில் இரண்டு; நெல்லை, கோவை, திருச்சி, சேலம் மற்றும் ஓசூர் ஆகிய இடங்களில் தலா ஒன்று என எட்டு சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் 399.27 கோடி ரூபாயில் அமைக்கப்பட்டன.

'சிறப்புப் பொருளாதார மண்டலத்துக்கான திட்டங்களை நிறைவேற்றும் தனி யாரை தேர்வு செய்வதற்கான நபர் நியமிக்கப் படவில்லை. அனைத்து இரண்டாம் நிலை நகரங்களிலும் சிறப்புப் பொருளாதார மண்டல திட்டங்களைச் செயல்படுத்த சாத்தியக் கூறுகள், முதலீடுகளின் செலவு, பயன் குறித்த திட்ட அறிக்கை ஆகியவற்றை தயாரிப்பதற்கு முன்பாகவே மண்டலங்கள் அனைத்தையும் ஒரே நேரத்தில் செயல்படுத்தியது தவறான வழிமுறை. சேலம், நெல்லை ஆகிய இடங்களில் சுரங்கம் மற்றும் மலைப் பாங்கான பகுதிகளைத் தேர்வு செய்ததில் தவறு நடந்துள்ளது. இவை உள்ளிட்ட பல்வேறு குறைபாடுகளால் கோவை, திருச்சி, நெல்லை, மதுரை வடபழஞ்சி, இலந்தைக் குளம் ஆகிய சிறப்புப் பொருளாதார மண்டலங்களில் மனை விற்பனை பாதிக்கப்பட்டு, 184.57 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட திட்ட வசதிகள் பயனற்று இருந்தன. அன்னியச் செலாவணி ஈட்டுதல், வேலை வாய்ப்பை அதிகரித்தல் போன்ற நோக்கங்கள் நிறைவேற்றப்படவில்லை. இவற்றின் காரணமாக, சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் அமைப்பதற்கு செலவிடப்பட்ட 399.27 கோடி ரூபாய் பயனற்றதாக இருந்தது 'என்று சி.ஏ.ஜி கூறியுள்ளது.

விழிப்புடன் கர்நாடகம்!

'பெங்களூரு உட்பட அனைத்து மாவட்டங் களிலும் தொழில் துறைக்குத் தேவையான வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. குறிப்பாக பெங்களூரு, மைசூர் ஆகிய நகரங்களில் தொழில் தொடங்கிய நிறுவனங்கள் வேறு எந்த மாநிலத்துக்கும் இடம்பெயர நினைப்பதே இல்லை. புதிய தொழில் கொள்கை மூலமாக, தமிழகத்தில் இருந்து பல தொழிலதிபர்கள் நமது மாநிலத்துக்குத் தொழில் தொடங்க முன்வந்துள்ளனர். குறிப்பாக, கோவை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 100 க்கும் மேற்பட்டோர் நமது மாநிலத்தில் தொழில் தொடங்க முன்வந்துள்ளனர் 'என்று தெரிவித்து இருக்கிறார் கர்நாடக முதல்வர் சித்தராமையா.

கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகரில் மிகப்பெரிய தொழில் பூங்காவை அந்த மாநில அரசு அமைக்கிறது. அங்கு முதலீடு செய்ய தொழிலதிபர்களை ஈர்க்கும் வகையில் கர்நாடக அரசும் தொழில் கூட்டமைப்பும் இணைந்து கடந்த ஆண்டு ஜனவரி மாதம் கோவையில் ஒரு நிகழ்ச்சியை நடத்தின. கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 300 க்கும் அதிகமான தொழிலதிபர்கள் அதில் பங்கேற்றனர். அதில் பேசிய கர்நாடக முதல்வர் சித்தராமையா, சாம்ராஜ் நகரில் செய்யப்படும் முதலீடுகளுக்கு வழங்கப்படும் சலுகைகளைப் பட்டியலிட்டார்.

கர்நாடகா எவ்வளவு விழிப்புடன் செயல்படுகிறது என்பதற்கு இந்த நடவடிக்கை ஓர் உதாரணம்.

பின்னர் கர்நாடகாவுக்குத் திரும்பிய சித்தராமை யா, 'கோவை பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர்கள் 12 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு கர்நாடகாவில் தொழில் முதலீடு செய்ய முன்வந்துள்ளனர்' என்று சொன்னார்.

தமிழக அரசின் தொழில் துறை நிலவரம் பற்றிய அதிர்ச்சித் தகவல்கள் ...

அடுத்த இதழில் ...


பரிதாபத்தில் கோவை!

கோயம்புத்தூரின் தொழில் வளர்ச்சியை வைத்துத்தான் தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சியையே கணக்கிடுவார்கள். அந்த அளவுக்குத் தொழில் வளர்ச்சியில் பெரும் முன்னேற்றம் கண்டது கோவை நகரம். பம்புசெட், மோட்டார் இயந்திரங்கள், கிரைண்டர் உற்பத்தி, நூற்பாலைகள், ஜவுளி உற்பத்தி, பொறியியல் உதிரிபாகங்கள் தயாரிப்பு என பல விதமான தொழிலகங்களை ஏராளமாகக் கொண்டது கோயம்புத்தூர். அதன் மூலமாக, தமிழக அரசுக்கு பெரும் வருமானத்தைக் கொடுக்கிற, பல லட்சம் பேருக்கு வேலைவாய்ப்புகளைக் கொடுக்கிற நகரமாக கோவை விளங்கியது. தமிழகத்தில் வேலைவாய்ப்புகளைத் தேடி வெளியேறும் பின்தங்கிய மாவட்டங்களைச் சேர்ந்த மக்களை அரவணைத்து அவர்களை வாழவைக்கும் நகரமாகத் தொழிலில் செழித்து விளங்கியது கோயம்புத்தூர். அப்படிப்பட்ட கோவை நகரின் நிலைமை இன்றைக்கு பரிதாபத்துக்குரிய நிலையில் இருக்கிறது.

புதிய ஜவுளிக்கொள்கை எங்கே?

'தென்னிந்தியாவின் மான்செஸ்டர்' என்று பெருமையுடன் அழைக்கப்படும் கோயம்புத்தூரில், ஜவுளித்தொழிலும் மோசமான நிலையில்தான் பயணிக்கிறது. தமிழ்நாட்டில் தேவையைக் காட்டிலும் குறைவாகவே பருத்தி கிடைக்கிறது. பருத்தி உற்பத்தியை அதிகரிக்க அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்று பருத்தி விவசாயிகளும் தொழில் துறையினரும் குற்றம்சாட்டியுள்ளனர். மகாராஷ்டிரம், மேற்கு வங்கம், குஜராத் உட்பட பல மாநிலங்களில் புதிய ஜவுளிக் கொள்கை அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால், அந்த மாநிலங்களில் ஜவுளித் துறை சிறப்பான வளர்ச்சியை எட்டியுள்ளது. தமிழ்நாட்டில் இன்னும் ஜவுளிக்கொள்கை அறிவிக்கப்படவில்லை. கோவை பகுதியில் தொழில் வளர்ச்சி முடங்குவதற்கு தமிழக அரசின் இதுபோன்ற மெத்தனப்போக்கே காரணம் என்று தொழில் துறையினர் குற்றம்சாட்டுகின்றனர்.

திருப்பூரின் நிலையும் மோசம்

பின்னலாடை நகரான திருப்பூரில் ஆண்டுக்கு 10 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் உள்நாட்டு ஆடை உற்பத்தி, 18 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் ஏற்றுமதி வர்த்தகம் நடந்து வருகின்றன. சாயப்பட்டறைகள் மூடல், மின்வெட்டு, மின்கட்டண உயர்வு என திருப்பூர் பின்னலாடை உற்பத்தியாளர்களுக்கு அடிமேல் அடி. இன்னும் அவர்கள் எழ முடியாமல் இருக்கிறார்கள். பின்னலாடை தொழிலை மேம்படுத்த தமிழக அரசு சரியான கொள்கையை வகுக்கவில்லை என்பது தொழில் துறையினரின் பொதுவான குற்றச்சாட்டு. சீரான மின் விநியோகம், பின்னலாடை தொழில் துறையினருக்கு வரிச்சலுகை, சாய சலவை ஆலைகளுக்கு உள்ள நெருக்கடியைத் தீர்க்க புதிய திட்டம் என திருப்பூர் பின்னலாடை தொழிலை மீண்டும் தூக்கி நிறுத்துவதற்கு தமிழக அரசு செய்ய வேண்டிய நடவடிக்கைகளை பட்டியலிடுகின்றனர், பின்னலாடை தொழில் துறையினர். வெளியேறும் தொழிலதிபர்களையும் முதலீடுகளையும் தடுத்து நிறுத்த, தொழில் துறையில் முத்திரை பதித்த கோவை மண்டலத்துக்கு மீண்டும் உயிர்கொடுக்க தமிழக அரசிடம் திட்டங்கள் இருக்கிறதா? என்ன செய்யப்போகிறது தமிழக அரசு?


மூடப்படும் தொழிற்கூடங்கள்!

'கோவையின் தொழில் நிலைமை மிக மோசமாக இருக்கிறது. கிட்டத்தட்ட 50 சதவிகித ஆர்டர்கள் வெளிமாநிலங்களுக்குப் போய்விட்டன. பம்பு செட் மற்றும் ஆட்டோமொபைல் சார்ந்த பொருட்களின் ஆர்டர்கள்தான் இதில் அதிகம். இதனால் சிறு, குறு தொழிற்கூடங்கள் மூடப்பட்டு வருகின்றன.

மற்ற மாநிலங்களில், தொழில் வளர்ச்சிக்காக தொழில் முனைவோருக்கு பல்வேறு சலுகைகளை அந்தந்த மாநில அரசுகள் வழங்குகின்றன. மின் கட்டணத்தில் சலுகை, தொழில் தொடங்க மானியம், வரிச் சலுகை, மானிய விலையில் நிலம் என பல சலுகைகளை அந்த மாநில அரசுகள் வழங்குகின்றன. அதன் காரணமாக, அந்த மாநிலங்களில் தொழில் வளர்ச்சி புதிய உத்வேகம் பெற்றுள்ளன.

குஜராத், மகாராஷ்டிரா, கர்நாடகம் போன்ற மாநிலங்களில் முதலீடுகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. தமிழகத்தில் இருந்தும் பலர் அங்கு சென்று முதலீடு செய்துள்ளனர். பீகார், ஜார்க்கண்ட் போன்ற பின்தங்கிய மாநிலங்களில்கூட தொழில்கூடங்கள் அதிகரித்து வருகின்றன. ஆனால், தமிழ்நாட்டின் நிலைமை கவலைக்குரியதாக உள்ளது.

மின்தடையால் பாதிக்கப்பட்ட தொழில்கூடங்கள் ஜெனரேட்டர் வாங்குவதற்கு மானியம் வழங்கப்படும் என அரசு அறிவித்தது. ஆனால், இன்று வரை மானியம் வழங்கப்படவில்லை. இவைதான், கோவை நகரத்தின் தற்போதைய மோசமான நிலைக்குக் காரணம் 'என்று ஆதங்கப்படுகிறார், தமிழ்நாடு சிறு மற்றும் குறுந்தொழில் முனைவோர் சங்கத்தின் தலைவர் ஜேம்ஸ்.


-

தோழமையுடன்

ஸ்டாலின் பெலிக்ஸ் --------------------------------------------------------------------------------------------------------------

இந்த உலகத்தில் அநீதியும் அடிமைத் தனமும் இருக்கும் வரை. , , சுதந்திரத்தை இழந்து வாழும் மக்கள் இருக்கும் வரை. , , விடுதலைப் போராட்டங்களும் இருக்கத்தான் செய்யும். இது தவிர்க்க முடியாத வரலாற்று நியதி ..
-------------------------------------------------------------------------------------------------------------------------
-------------------------------------------------- --------------------------------------------
Reply all
Reply to author
Forward
0 new messages