மனைவியை புரியாதவர்களுக்கு, உடன் நேசிப்பவர்களுக்கும், மகள்களைப் பெற்றவர்களுக்கும் (கவிதை) வித்யாசாகர்

9 views
Skip to first unread message

வித்யாசாகர்

unread,
Feb 17, 2018, 3:08:20 AM2/17/18
to தமிழ் சிறகுகள், பகலவன், மின்தமிழ், தமிழ் பிரவாகம், தென்றல், பண்புடன், தமிழ் அமுதம், தமிழுலகம், வல்லமை, Gulf_tami...@yahoogroups.com, முத்தமிழ்



நீயே தாயுமானவள்..


னை

நன்றியோடு மட்டுமே தொட்டிருக்கிறேன்..

 

உனை

உடலால் நான் தொட்டதேயில்லை

 

மனதால் நேசித்து

உயிர்பருகிய நாட்களே நமக்குள் அதிகம்

 

எனது

பிள்ளைகளுக்கு பாலமுதூட்டிய உன்

அங்கம் தொடுகையிலும்

எனது தாயின் நன்றியையே மனதால் ஏந்தியிருக்கிறேன்

 

உனக்காய்

எப்போதுமே

இரு வணக்கமுண்டு, எனை தாங்கிய மடியில்

எனது பிள்ளைகளையும் தாங்கிய வணக்கமது

 

வீடு கழுவி

வாசல் துடைத்து

உணவூட்டி

மனதால் சிரித்து நிற்கும்

மருத் தாய் நீ

 

எனக்காய்

வீடு துறந்தவள்,

சொந்தங்களைவிட்டு தொலைதூரம் வந்தவள்

சேராததையெல்லாம்

சேர்த்துக்கொண்டவள் நீ

 

அப்பத்தா வந்துயெனைக் கொஞ்சி நிற்கையில்

அம்மம்மாவை எண்ணியழுத

அம்மாவின் ஈரவிழிகளை

மௌனத்துள் ஒளித்துக்கொண்டவள், மொழியை

புன்னகையாக மட்டுமே மாற்றிக்கொண்டவள் நீ

 

கொஞ்சம் வலித்தாலும்

நெஞ்சு வலித்தாலும்

யாருக்கும் வலிக்காதிருக்க

மரணத்தையும் சமைப்பவள், அன்பை மட்டுமே

ஆணுக்குப் பகிர்பவள்

விட்டுக்கொடுத்தலின் மெத்த பரிசு நீ..

 

எப்போதெல்லாம் நான்

என்னம்மாவை யெண்ணி அழுகிறேனோ

அப்போதெல்லாம்

உனக்காகவும் அழாத கண்ணீர்த்துளிகளே

பிறப்பிற்குமெனை நெருப்பெனச் சுடுகிறது..

 

உண்மையில் அந்தயென்

நான் உயிர்புகுந்த இருட்டுக்கோயில்

அந்த கர்ப்பப்பை

உன் வழியே யெனைச் சபித்தாலும் தவறில்லை

 

உன் வீட்டு

விளக்கைக் கொண்டுவந்த

என் வீட்டை உன் மௌனத் தீ அது

எரித்தாலும் பிசகில்லை,

 

எண்ணிப்பார்க்கிறேன்

ஒரு நாள் கனவில்

தங்கையை பிரியமுடியாத அண்ணன்கள் நாங்கள்; நீ

அழ அழ

அழைத்து வருகிறோமே. எப்படி ?

 

அதென்ன

சமூக நீதியோ தெரியவில்லை,

பெற்றதும்

வளர்த்ததும்

கட்டிகொடுத்து விட்டுவிட

உள்ளே உயிர்க்குள் வைத்திருக்கும் அன்பை

அப்பாவை

அம்மா அண்ணன் தம்பிகளை

அன்பு நாய்க்குட்டியை

அக்கா தங்கையை

எனது வீட்டு மரங்களை

கட்டிக்கொடுத்ததும் விட்டுவிட

எவரிட்ட சமூக நீதியோ அது..

 

ஆனால் ஒன்று மட்டும்

எப்போதும் நிகழ்கிறது,

எனது அப்பாவோடு வந்த அவள்தான்

என்னிடமும் சொல்கிறாள்

போ.. போய் அவளை அழைத்து வா என்று,

 

நான்

அழைத்துவருகையிலும் சரி

வந்தப்பின்னரும்

வரும் முன்னருங்கூட சிந்திக்கிறேன்

அய்யோ நாளையென் மகளை எப்படி அனுப்பிவைப்பேன்..???

-------------------------------------------------------------------

வித்யாசாகர்

Reply all
Reply to author
Forward
0 new messages