கம்பெனிமயமாகும் கட்சிகள் : நிதிச்சட்டம் திருத்தப்படுகிறது

3 views
Skip to first unread message

Thevan

unread,
Mar 26, 2017, 9:13:00 AM3/26/17
to panbudan, mintamil
மருதுபாண்டியன் இரா.

கம்பெனிமயமாகும் கட்சிகள் :
நிதிச்சட்டம் திருத்தப்படுகிறது.

தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர்
தோழர் கி. வெங்கட்ராமன் சிறப்புக் கட்டுரை!
இந்திய நிதியமைச்சர் அருண் செட்லி நாடாளுமன்றத்தில் முன்வைத்துள்ள
“நிதிச்சட்டத் திருத்த முன் வடிவு – 2017”, கட்சிகளுக்கும்
குழுமங்களுக்கும் இடையிலுள்ள ஒட்டுண்ணி உறவை சட்டப்படியானதாக
மாற்றுகிறது. ஏற்கெனவே இருப்பதையும்விட இன்னும் மோசமாகி கட்சிகளின்
வழியாக கம்பெனிகளின் நேரடி ஆட்சி நடைபெறும் வாய்ப்பை, இச்சட்டத்திருத்தம்
ஏற்படுத்துகிறது.

இந்திய நிதியமைச்சர் நாடாளுமன்ற மக்களவையில் முன்மொழிந்துள்ள நிதி
மசோதாவில், பல்வேறு சட்டங்களுக்கு 40 திருத்தங்கள் வரை
முன்மொழியப்பட்டுள்ளன. அவற்றுள் ஒன்று, நிறுவனச் சட்டத்திற்கு (கம்பெனி
சட்டம்) வரும் திருத்தமாகும்.
நிறுவனச் சட்ட விதி 182 – அரசியல் கட்சிகளுக்கு தொழில் நிறுவனங்கள்
நன்கொடை அளிப்பது பற்றி வரையறுக்கிறது. இதுவரை 182 - படி ஒரு தொழில்
குழுமம் தனது கடைசி மூன்று ஆண்டு நிகர இலாபத்தில் 7.5 விழுக்காடு வரை
பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு நிதி வழங்கலாம் என்று கூறியது.
அவ்வாறு வழங்கப்படும் நிதி எந்தக் கட்சிக்கு எவ்வளவு தொகை என்பது குறித்த
குழும நிர்வாக மன்றத்தின் தீர்மானத்தின் அடிப்படையில் செய்யப்பட வேண்டும்
என்றும் அது கூறுகிறது.

அருண் செட்லி முன்வைத்துள்ள திருத்தத்தின்படி, விதி 182-லுள்ள
நிபந்தனைகள் நீக்கப்படுகின்றன. இனி, ஒரு குழுமம் அல்லது ஒரு தொழில்
நிறுவனம் தனது நிகர இலாபத்தில் பெரும் பகுதியைகூட ஒரு அரசியல் கட்சிக்கு
நிதியாக வழங்கலாம்! எந்தக் கட்சிக்கு எவ்வளவு வழங்கப்பட்டது என்பது
பற்றிய விவரங்களை பதிவு செய்ய வேண்டிய அவசியமில்லை!

கட்சிகளுக்கும் கம்பெனிகளுக்கும் உள்ள உறவு முதலாளியம் தோன்றிய
காலத்திலிருந்தே ஏற்பட்ட உறவுதான் என்றாலும், தாராளமயம் –
உலகமயத்திற்குப் பிறகு கட்சிகளுக்கும் கம்பெனிகளுக்கும் இடையிலிருந்த
இடைவெளி சுருங்கி, இவை இரண்டும் ஒன்றோடு ஒன்று பிரிக்க முடியாதபடி
பிணைந்து ஒன்று கலந்து விட்டன.

அதிலும், இந்தியாவில் மோடி ஆட்சி என்பது இந்திய மற்றும் பன்னாட்டுக்
குழுமங்களின் நேரடி ஆட்சியாகவே நடைமுறையில் இயங்குகிறது. அதானிக்கும்
அம்பானிக்கும் வழங்கப்படும் பல எண்ணெய் வள ஒப்பந்தங்கள், துறைமுக
ஒப்பந்தங்கள் ஆகியவற்றில் கணிசமான தொகை மோடி வழியாக பாரதிய சனதா
கட்சிக்கு செல்கிறது. குசராத் பெட்ரோலியக் கழகத்தில் அதானிக்குக் கொடுத்த
ஒப்பந்தம் மோடியின் பாரதிய சனதாவுக்கு நிதி வழங்குவதற்கென்றே
ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தம் என்ற திறனாய்வு உண்டு!

தமிழ்நாட்டில் எந்தப் பெரிய திட்டமும் செயல்படுத்தாமல் – எந்த அணையும்
கட்டாமல் – எந்த வளர்ச்சித் திட்டமும் செயல்படாமல் மாநில அரசின் கருவூலம்
காலியாகிக் கிடப்பதைக் காண்கிறோம். வரலாறு காணாத அளவில் 3 இலட்சத்து 14
ஆயிரம் கோடி ரூபாய் கடனில் தமிழ்நாடு அரசு மூழ்கிக் கொண்டுள்ளது! ஆளும்
அண்ணா தி.மு.க.வின் ஊழல் பணத் தேவைக்காகவே இக்கடன் சுமையில் பெரும்பகுதி
மக்கள் தலையில் விழுந்துள்ளது. இதில், கட்சித் தலைமைக்குக் கை
மாற்றுவதற்கென்றே உருவாக்கப்பட்ட நிறுவனங்கள் உண்டு!

தி.மு.க.வின் மாறன் சகோதரர்களின் 2ஜி ஊழலில், அரசுப் பணத்தை
இவர்களுக்கும் இவர்களது கட்சிக்கும் கைமாற்றுவதற்கென்றே உருவாக்கப்பட்ட
போலி நிறுவனங்கள் வெளிப்பட்டன.

இந்நிலையில் அருண் செட்லி முன்வைத்துள்ள இத்திருத்தம் செயலுக்கு வந்தால்,
அரசு என்பது நேரடியாக கம்பெனிகளின் நிறுவனமாக மாறுவதற்கு வழி
ஏற்படுத்தும்! நாடு தழுவிய சாலைகள், கடலோரமெங்கும் மின்சார நிலையங்கள்,
பாலங்கள் என்று பல உருவங்களில் அரசுப் பணத்தை செலவு செய்ததாகக்
காட்டுவதற்கு ஆளுங்கட்சி ஆட்களை வைத்து நிறுவனங்கள் தொடங்கி, அவற்றுடன்
அரசு ஒப்பந்தங்கள் போட்டு அரசுப் பணம் அனைத்தையும் கட்சிகளுக்கு
எடுத்துச் செல்ல வழி ஏற்படுகிறது.
இவ்வாறு கட்சி நடத்துபவர்களுக்கு மக்கள் வாக்குகளை தேர்தலில் பெறுவதற்கு
உத்தி வகுக்கத் தெரிந்தால் போதும். மக்களுக்கும், நாட்டுக்கும் பதில்
சொல்ல வேண்டிய அறக்கடமை அவர்களுக்கு இல்லை என்றாகிவிடும். மோடி – அமித்சா
மற்றும் செயலலிதா – சசிகலா ஆகியோரைப் பார்த்தாலே இந்த ஆபத்தின் ஆழம்
புரியும்!

கட்சிகளுக்கும் கம்பெனிகளுக்குமான கொள்ளைக்காரக் கூட்டணி, சட்ட
அங்கீகாரம் பெறுகிறது! கிழக்கிந்தியக் கம்பெனி ஆட்சி நடத்தியபோது, அது
கம்பெனி ஆட்சிதான் என்று வெளிப்படையாகத் தெரிந்தது. இப்போதும் இனியும்
நடக்கும் கம்பெனி ஆட்சி, “கட்சி” என்ற முகமூடி அணிந்து, “கட்சி” என்ற
கமிசன் ஏஜெண்ட் மூலம் செயல்படும்!

தேர்தல் பாதை நேர்மையாளர்களுக்கு இல்லை என்பது இறுதிக்கும் இறுதியாக
இப்போது சொல்லப்பட்டுவிட்டது! அது மட்டுமல்ல, ஊழல் கட்சிகளில்கூட,
சிறியக் கட்சிகள் இனி களத்தில் நிற்க முடியாது. கம்பெனிகளின் வரவு
செலவில் வந்ததற்குப் பிறகு அதன் சிக்கன நடவடிக்கைகளுக்கும் கட்சிகள்
உட்பட வேண்டும். ஏதோ ஒன்றிரண்டு கட்சிகளுக்கு பணம் கொடுப்பதோடு
நிறுத்திக் கொள்ள வேண்டும் என்பதையே, கம்பெனிகளின் நிதிக் கொள்கை
வரையறுக்கும். சிறியக் கட்சிகள் கம்பெனிகளுக்கு தொந்தரவு! இனி, இந்தத்
தொந்தரவுகளை கம்பெனிகளும் நீண்டநாள் அனுமதிக்கப் போவதில்லை.

வாண வேடிக்கைகளோடு நடக்கும் தேர்தல் திருவிழாக்களுக்கும்,
சனநாயகத்திற்கும் ஓரு துளி தொடர்புமில்லை! அதுமட்டுமல்ல, அதன் வெற்றி –
தோல்விக்குள் மக்கள் வாழ்வு முடங்கி விட வேண்டியதுமில்லை!

தேர்தல் களம் இனி கம்பெனிகளின் களம்! போராட்டக் களம் – மக்களின் களம்!
மக்கள், அவர்களது களத்தைப் புரிந்து நின்றால், வெற்றி நிச்சயம்! பலமாக
இருக்க வேண்டுமென்றால், முதலை தண்ணீருக்குள் மட்டுமே இருக்க வேண்டும்.
மக்களுக்கும் அதுதான்.

https://www.facebook.com/permalink.php?story_fbid=1931616770404281&id=100006679304116
Reply all
Reply to author
Forward
0 new messages