பள்ளிப்படிப்பை தாண்டாத இந்தியர் தளபதி ஆனார்

4 views
Skip to first unread message

செல்வன்

unread,
Jan 2, 2017, 11:40:37 PM1/2/17
to செல்வன்
பள்ளிப்படிப்பை தாண்டாத இந்தியர் கிர்கிஸ்தான் நாட்டு ராணுவ தளபதி... எப்படி?

மத்திய ஆசியாவில் உள்ள மிகச்சிறிய நாடான கிர்கிஸ்தானின் ராணுவ மேஜர் ஜெனரலாக, இந்தியாவைப் பூர்வீகமாக கொண்ட ஷேக் ரஃபீக் முகமது நியமிக்கப்பட்டுள்ளார். சோவியத் யூனியன் உடைந்தபோது, தனியாகப் பிரிந்த கிர்கிஸ்தானை வளர்ச்சிப் பாதையில் கொண்டு சென்றதில் ரஃபீக் முகமதுவின் பணி அளப்பரியது. அதற்காக ரஃபீக்  முகமதுவுக்கு அளிக்கப்பட்ட பரிசே இப்பதவி. இவ்வளவு உயர்ந்த பதவியை அடைந்துள்ள ரஃபீக் முகமது, ஏழாம் வகுப்பு வரை மட்டுமே படித்து விட்டு வேலைதேடி, வளைகுடா நாட்டுக்குச் சென்றவர் என்பது உங்களுக்கு தெரியுமா?

கேரள மாநிலம் கோழிக்கோட்டைச் சேர்ந்தவர் ஷேக் ரஃபீக் முகமது. அங்குள்ள ஒரு பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தபோதே, வேலைதேடி மும்பைக்குச் சென்றார். அதன்பிறகு, அங்கிருந்து வளைகுடா நாட்டுக்குச் சென்றுள்ளார். முகமது, வளைகுடா நாட்டுக்குச் சென்றது என்னவோ வேலை தேடித்தான். ஆனால், அவரது உழைப்பால் பல்லாயிரக்கணக்கானவர்களுக்கு வேலை கொடுக்கும் அளவுக்கு உயர்ந்தார். ஆரம்பத்தில் சவுதி அரேபியாவில் கட்டுமானப் பணிகளில் சிறுசிறு ஒப்பந்தங்களை எடுத்து செய்து வந்தார். அன்றைய காலக்கட்டத்தில் துபாய், சவுதி, அபுதாபி என ஐக்கிய அரபு நாடுகள், உள்கட்டமைப்பில் அதிக முக்கியத்துவம் கொடுத்து வளர்ச்சியை நோக்கிச் சென்று கொண்டிருந்தன. இதனை உணர்ந்த ஷேக் ரஃபீக் முகமது, ''Gammon Group'' என்ற நிறுவனத்தைத் தொடங்கினார்.  

துறைமுகங்கள், எண்ணெய் மற்றும் எரிவாயுக் குழாய், அணு சக்தி நிலையம், அணைகள், பாலங்கள் உயர்ந்த கட்டட கட்டமைப்புகள், சர்வதேச விமான நிலையங்கள், நெடுஞ்சாலைகள், ரசாயன உரத் தொழிற்சாலைகள், இரும்பு ஆலைகள் என அனைத்து பொறியியல் கட்டுமானப் பணிகளையும் 'Gammon Group' செய்து வந்தது. இந்த நிலையில், ஈரான் அரசுக்குத் தேவையான ஒரு கட்டுமானத் திட்டத்தை முடித்துக் கொடுத்த ஷேக் ரஃபீக் முகமது, இதே போன்ற ஒரு திட்டத்தை செயல்படுத்த மத்திய ஆசியாவில் உள்ள சிறிய நாடான கிர்கிஸ்தானுக்குச் சென்றுள்ளார். அப்போது கிர்கிஸ்தானில் உள்ள ஒரு மாகாணத்தின் கவர்னராக இருந்த குர்மான்பேக், அதிபர் தேர்தலுக்கு போட்டியிடத் தயராகிக் கொண்டிருந்தார். ''நான் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டால், உங்களின் கட்டுமானத் திட்டத்துக்கு பச்சைக் கொடி காட்டுகிறேன்'' என குர்மான்பேக் வாக்குறுதி அளித்திருந்தார். 

தேர்தலில் வெற்றிபெற்று, அதிபரான குர்மான்பேக், ரஃபீக் முகமதுவுக்கு ஒரு 'சர்ப்ரைஸை'-யும் கொடுத்தார். ரஃபீக் முகமது முன்வைத்த திட்டத்துக்கு அனுமதி கொடுத்ததுடன், அவரை தனது தலைமை ஆலோசகராகவும் நியமித்துக் கொண்டார். அது ரஃபீக் முகமது வாழ்வில் ஒரு மைல்கல்லாக அமைந்தது. குர்மான்பேக், அடுத்தடுத்து இரண்டு முறை கிர்கிஸ்தான் அதிபராகத் தேர்ந்தேடுக்கப்பட்ட நிலையில், அந்நாட்டில் உள்ள முக்கிய கட்டுமானப் பணிகளை ரஃபீக் முகமதுவின் 'Gammon' நிறுவனமே செய்தது. அத்துடன் மத்திய ஆசியப் பகுதிகளில் தனது நெட்வொர்க்கையும் 'Gammon' நிறுவனம் விரிவாக்கிக் கொண்டது. கிர்கிஸ்தானில் ஒரு பொருளாதார ராஜதந்திரியாக செயல்பட்ட ரஃபீக் முகமது, வெளிநாட்டு முதலீட்டாளர்களை ஈர்க்கும் விதமாக பல திட்டங்களைக் கொண்டு வந்தார். 

சோவியத் யூனியனில் இருந்து பிரிந்து வந்ததால், கிர்கிஸ்தானின் பொருளாதாரம் மந்தமாகவே இருந்துள்ளது. கிர்கிஸ்தான் போன்ற சிறிய நாடுகளை வெளிநாட்டு முதலீட்டாளர்கள் கண்டுகொள்ளாத நிலையில், ரஃபீக் முகமது பரிந்துரைத்த எளிதான வரி என்ற திட்டம், முதலீடுகளை ஈர்ப்பதில் முக்கியப் பங்கு வகித்தது. சோவியத் யூனியனில் இருந்தவரை சோசலிசப் பாதையில் சென்று கொண்டிருந்த இந்நாடு, அதன்பிறகு  முதலாளித்துவ முறைக்கு மாறியது. 

2005 முதல் 2010-ம் ஆண்டு வரை, கிர்கிஸ்தானின் ஆலோசகராக இருந்த ரஃபீக் முகமது, அதன்பிறகு வேறு திட்டங்களை செயல்படுத்துவதற்காக துபாய், அபுதாபி போன்ற நாடுகளுக்குச் சென்றார். மீண்டும் தனது தொழிலில் ஈடுபாடு காட்டிய அவர், 28 நாடுகளில் தனது நிறுவனத்தை வளர்த்துள்ளார். இந்த நிறுவனத்தில், தற்போது இரண்டு லட்சம் பேர் பணியாற்றுகின்றனர். இதற்கிடையே, கிர்கிஸ்தான் நாட்டின் வளர்ச்சிக்காக ரஃபீக் முகமது ஆற்றிய பணிகளுக்காக, அவருக்கு அந்நாட்டின் உயர் பதவியான ராணுவ மேஜர் ஜெனரல் பதவி அளிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு அமைச்சர் முன்னிலையில் மதிப்புமிக்க இப்பதவியை ஷேக் ரஃபீக் முகமது ஏற்றுக் கொண்டார்.

மத்திய ஆசிய நாட்டின் ராணுவ மேஜர் ஜெனரல் பதவியை ஒரு இந்தியர் ஏற்பது இதுவே முதல்முறையாகும். இந்தியாவில் இருந்து சென்று, உலகம் முழுவதும் இரண்டு மில்லியனுக்கும் மேற்பட்ட கேரள மக்கள் வாழ்ந்துவரும் நிலையில், அவர்களுக்கு எல்லாம் பெருமை சேர்த்துள்ளார் கேரளாவின் மைந்தரான ரஃபீக் முகமது. அவரது சகோதரியான ருக்யா கூறுகையில், ''மதிப்புமிக்க பதவியை ரஃபீக் முகமது பெற்றுள்ளதால் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறோம். எங்களின்  அப்பா மீனவராக இருந்தவர். பின் தங்கிய குடும்பத்தில் பிறந்து, மிகப்பெரிய பதவிக்கு வந்திருக்கிறார். கடைசியாக, 2007-ம் ஆண்டு கோழிக்கோடு வந்திருந்தார். ஈரான் பெண்ணை திருமணம் செய்து கொண்டு, வளைகுடா நாடுகளிலேயே வசிக்கிறார்'' என்றார். "சமீபத்தில்.  கோழிக்கோட்டில் ஒரு மதரஸா கட்டுவதற்காக 25 லட்ச ரூபாய் கொடுத்தார். சொந்த ஊரில் இருந்து யார் உதவி கேட்டாலும், உதவும் மனப்பான்மை கொண்டவர்'' என ரஃபீக் முகமதுவை புகழ்கிறார்கள் கோழிக்கோடு மக்கள்.

வாழ்த்துகள்!

- ஆ.நந்தகுமார்@ Vigadan E mag.
Reply all
Reply to author
Forward
0 new messages