ஒளியின் வேகமும், யோஜனைத் தூரமும் - சாயணர் வழியில் பாரதியார்

5 views
Skip to first unread message

N. Ganesan

unread,
Sep 13, 2016, 7:56:32 AM9/13/16
to சந்தவசந்தம், மின்தமிழ், vallamai, housto...@googlegroups.com, panb...@googlegroups.com, pira...@googlegroups.com, Omsakthi Publications
கோவை ஓம்சக்தி இதழின் தீபாவளி மலருக்காக எப்பொழுதும்போல் முழுப்பக்க விளம்பரம் உங்களுக்குக் கொடுக்கிறோம், கட்டுரை ஒன்றும் வேண்டும் என ஆசிரியர் கவிஞர் பெ. சிதம்பரநாதனிடமிருந்து தொலைபேசி. பாரதியார் கணித்த ஒளியின்வேகமும், அதனால் தெரியலாகும் யோஜனை என்னும் தூர அளவையும் பற்றி இவ்வாண்டுக் கட்டுரை தருகிறேன் என்றேன். நல்ல விஷயம் என்றார். பாரதியார் நினைவுநாளில் விஞ்ஞானத்தில் ஈடுபாடு கொண்ட அவர் ஒளியின் வேகத்தைச் சாயணர் வழியில் கணித்ததைப் பார்ப்போம். யாரும் சாயணர்-பாரதியார் கணக்கை தமிழில் எழுதியதாக அறியேன். அப்படிச் செய்தவர் இருந்தால் நூற்பெயரும், பக்க எண்ணின் ரெஃபெரன்ஸ் அளிக்க வேண்டுகிறேன்.

பகவத் கீதையின் முன்னுரையில் சாயணரைப் பற்றி நிறையக் கூறியுள்ளார் பாரதியார். திரு. சு. கோதண்டராமன் அவர்களின் ‘பாரதியின் வேதமுகம்’ நல்ல நூல்: https://books.google.com/books?id=97WMCwAAQBAJ&
என்னதான் இருக்கிறது வேதத்தில்? சு. கோ. http://134804.activeboard.com/t60010871/topic-60010871/?page=1&w_r=1440407127

யோசனை - எவ்வளவு தூரம்?

பிள்ளைப்பெருமாளையங்கார் திருவரங்கத்து மாலையில் திருப்பாற்கடலின் விஸ்தீரணத்தை விவரித்தார்.
5.கறங்காழிநாலெட்டிலக்கமியோசனை கட்செவியின்
பிறங்காகமும்மையிலக்கமியோசனை பேருலகி
லிறங்காழிமேகமெனவேயரங்கத்திலெந்தையதி
லுறங்காகநீளமைந்தைம்பதினாயிரமோசனையே.

(இ - ள்.) கறங்கு - ஆரவாரிக்கின்ற, ஆழி - திருப்பாற்கடலினது, (நீளம்) -, நால் எட்டு இலக்கம் யோசனை - முப்பத்திரண்டுலக்ஷம் யோஜனை யளவாம்; கட்செவியின் - (அதனிடையேயுள்ள) திருவனந்தாழ்வானுடைய, பிறங்கு ஆகம் - விளங்குகின்ற திருவுடம்பினது, (நீளம்) -, மும்மை இலக்கம் யோசனை - மூன்றுலக்ஷம் யோஜனையாம்; பேர் உலகில் இறங்கு ஆழி மேகம் எனவே - பெரிய இந்நிலவுலகத்தி லிறங்கிவந்த சக்கராயுதத்தையு டையதொரு மேகம்போல, அரங்கத்தில் எந்தை அதில் உறங்கு - திருவரங்கத்தி லெழுந்தருளியிருக்கின்ற எம்பெருமான் அந்தத்திருவனந்தாழ்வான் மேலே (பள்ளிகொண்டு) யோகநித்திரைசெய்தருள்கின்ற, ஆகம் - திருமேனியினது, நீளம் -நீட்சி, ஐந்து ஐம்பதினாயிரம் ஓசனை - இரண்டரை லக்ஷம் (இரண்டுலக்ஷத்து ஐம்பதினாயிரம்) யோஜனையாகும்; (எ - று.)

[...]
யோசனை - நான்குகுரோசங் கொண்டது; அவ்வளவை, 
"அங்குலமறுநான் கெய்தினதுகரம் கரமோர்நான்கு, 
தங்குதல் தனுவென்றாகும் தனுவிரண்டது வோர்தண்டம், 
இங்குறுதண்டமானவிராயிரங்குரோ சத்தெல்லை, 
பங்கமில்குரோசநான் கோரியோசனைப்பாலதாமே" 
என்பதனாற் காண்க. யோசனை, சற்று ஏறக்குறையக் காதவளவாம்.
(அஷ்டப்பிரபந்தம் உரையிலே திருவல்லிக்கேணி  வை.மு.சடகோபராமாநுஜாசாரியரும் சே.கிருஷ்ணாசாரியரும் வை.மு.கோபாலகிருஷ்ணசாரியரும் மேற்கோள் காட்டுவது கந்தபுராணச் செய்யுள். இதே போல மாதவச் சிவஞான யோகிகளும் யோசஜனைக்கு அளவு தந்துள்ளார் சிவஞான மாபாடியத்தில். இவை இரண்டும் 18 (=9*2) மைல். இலங்கையிலும் இவ்வளவை இருந்ததாக இ. பால்ஃபோர் குறிப்பிட்டுள்ளார்.)

ரிக்வேத பாஷ்யத்தில் ஒளியின் வேகம் பற்றி சாயணர் தரும் சூத்திரத்தால் ஒரு யோஜனை என்பது எவ்வளவு மைல்கள் எனக் கணிக்க முடிகிறது. இந்த அளவே, கௌடில்யரின் அர்த்தசாஸ்திரத்திலும் கொடுக்கப்பட்டுள்ளது: The Kauṭilīya Arthaśāstra: An English translation with critical and explanatory notes. Kauṭalya, R. P. Kangle
Motilal Banardsidass Publishers, Delhi, 1995.

பாரதியார் ஒரு காதம் = ஒரு யோசனை என்று கொண்டுள்ளார். எவ்வாறு தெரிகிறது என்றால், இலந்தையார் கொடுத்துள்ள பாரதி வாசகம் ரிக்வேதத்தின் 1.50 சுலோகத்தின் சாயண பாஷ்யத்து மொழிபெயர்ப்பு.
சாயணர் யோசனை என்ற இடத்தில் காதம் என்று பயன்படுத்துகிறார் பாரதியார்.

Sāyaṇa (c. 1315-1387) was a minister in the court of King Bukka I of the
Vijayanagar Empire in South India; he was also a great Vedic scholar who
wrote extensive commentaries on several ancient texts. In his commentary
on the fourth verse of the hymn 1.50 of the Rigveda on the sun, he says:

tathā ca smaryate yojanānāṃ sahasre dve dve śate dve ca yojane
ekena nimiṣārdhena kramamāṇa namo 'stu ta iti

Thus it is remembered: [O Sun,] bow to you, you who traverse
2,202 yojanas in half a nimeṣa.

We have no knowledge that Sāyaṇa was an astronomer and he acknowledges
that he is only quoting from an old tradition, so we label this note as
"Sāyaṇa's astronomy" only in the sense of what was known by his time in
the fourteenth century.

Padmakar Vishnu Vartak in a recent book has argued that this statement
refers to the speed of light. He says, "One Yojana is equal to 9 miles,
110 yards = 9 1/16 miles = 9.0625, ...and according to Mahābhārata,Sānti
Parva, 231, half a nimeṣa equals 8/75 seconds. If calculated on this data the
velocity of light comes to 187,084.1 miles per second... Sir Monier Williams
gives one Yojana equal to 4 Krosha = 9 miles. Taking 1 Yojana = 9 miles,
the velocity comes to 186,413.22 miles per second. The well accepted popular
scientific figure is 186,300 miles per second."

Note that 1 nimESa = 16/75 seconds is used. This is the value that majority of texts in Sanskrit give.
Some other values exist in small number of mss. for nimESa close to 16/75 second, but they do not
match with the speed of light computations.

ஆக, 1 யோஜனை = 9.0625 மைல். இதனைப் பாரதி   10 மைல் என்று கொண்டுள்ளார்.
சாயணர் யோசனை என்று சொல்லுமிடத்தில் பாரதியார் காதம் என்று பாவிப்பது
அவர் 1 யோஜனை = 1 காதம் என்று கொண்ட கருதுகோளைக் காட்டுகிறது.


On Wednesday, July 13, 2016 at 6:11:07 AM UTC-7, elandhai wrote:
சாண் முழம் கணக்குப்படி பார்த்தால்      சாண் என்பது 9 அங்குலம்

ஒரு முழம் ஒன்றரை அடி.  ஒரு கோல் - 6 அடி    கூப்பிடு  3000 அடி     ஒரு காதம்   12000 அடி . அதாவது 2.273 மைல். . காதம் என்பது கிட்டத்தட்ட 10 மைல் எனக்கேள்விப்பட்டிருக்கிறேன். ஒரு காலத்தில்,   நிமிடத்தை விநாடி என்றும்  செகண்டை நொடி என்றும் சொல்லியிருக்கிறார்கள்.


பாரதியார் 3-4- 1909ல் இந்தியா பத்திரிகையில் எழுதியுள்ள திசைகள் என்ற கவிதையில்


ஒரு நொடிப்போதில் ஓர் பத்து
ஒன்பதாயிரமாம் காதம்
வருதிற லுடைத்தாஞ் சோதிக்
 கதிரவன் வகுப்பானான்றோர்
கருதவும் அரிய தம்மா!

என்கிறார். அதாவது  ஒரு நொடியில் ஒளி செல்லும் தூரம் 19000 காதம் என்கிறார். அதாவது 1,90,000 மைல்.   கிட்டத்தட்டச் சரிதான். ஒளியின் வேகம் 1,86,000 மைல். 

சூரியனிடமிருந்து பூமிக்கு ஒளிவர 

கதிருடை விரைவும் அஃது
பருதியின் நின்றோர் எட்டு
விநாடியிற் பரவு மீங்கே” என்கிறார். அதாவது கிட்டத்தட்ட 8 நிமிடங்கள் என்பது அவரது கணக்கு. அதுவும் சரிதான். சரியான அளவு எட்டு நிமிடங்கள் 20 நொடிகள். 

காதம் என்பதைப் 10 மைல் என்று கொள்வதுதான் பொருத்தம் என நினைக்கிறேன்.  ஒரு காதத்திற்கு 6.5 கி மீ என்றும் இல்லை அதில் பாதி என்றும் சொல்பவர்கள் உண்டு. பலத்த ஆய்வு நடைபெற்றிருக்கிறது. ஆனால் முடிவுதான் எட்டவில்லை. 

“ மண்டலத்தை அணுவணு வாக்கினால்
வருவதெத்தனை அத்தனை யோசனை
கொண்ட தூரம் அவற்றிடை வைத்தனை” என்கிறான் பாரதி.

ஒரு யோசனை என்றால் எவ்வளவு தொலைவு?

இலந்தை


யோஜனை Yoking என்னும் ஆங்கிலச் சொல்லுக்கு இணையான சம்ஸ்கிருதச் சொல். காவதம் (Gaavada) என்பதும் எருதுகள் பூட்டுவதை (யோஜனம், Gau - எருதுகள்)க் குறிப்பதே. ஒருநாள் பிரயாணம் எவ்வளவு  தொலைவோ அவ்வளவைக் குறிப்பிடும் சொற்கள். 10 யோசனை (நைடதம்) = 10 காதம் (நளவெண்பா). 1 யோசனை = 1 காதம் என்பது பொதுவாக எடுக்கும் பொருள். சிரமண சமயங்கள் உயர்வுநவிற்சியுடையன. தீர்த்தங்கரர்கள் உயரம், போதிசத்துவர்கள் உயரம் எல்லாம் கற்பனைக்கும் அதிகமான வடிவில் சொல்லப்படும் அச்சமயங்களில். சில சமயம் 4 காதம் = 1 யோசனை என்பது அம் மதங்களில். அப்படிப் பார்த்தால், 1 காதம் = 10 மைல் (சென்னைப் பேரகராதி, பாரதியார்) என்றால், அப்புறம் யோசனை 40 மைல் ஆகும்! வதன சரோருக எனத் தொடங்கும் திருப்புகழில் 1 காதம் = 12 மைல் என அருணகிரிநாதர் கொடுத்துள்ளார். ஏனெனில் வள்ளிமலை - திருத்தணி தூரம் நாம் நிச்சயிக்கமுடியும். அதேபோல், பூவணப் புராணமும் 1 காதம் = 12 மைல் என்றே காட்டுகிறது. கந்தபுராணம், சிவஞான மாபாடியம் 1 யோசனை = 18 மைல் என்கிற அளவைக் கொடுக்கிறது.

1 காதம்/காவதம் = ~12 மைல். ஆனால், பாரதியார், அண்ணளவாக 1 யோசனை = 1 காதம் எனக் கொண்டுள்ளார் எனப் பார்த்தோம், அப்படித்தான் சாயணர் சுலோகத்தை மொழிபெயர்த்துள்ளார்.
ஒரு யோசனை = ஒரு காதம் (= ~10 மைல்) நடந்த எருதுகள் இளைப்பாறுகின்றன. 
நண்பர் சுப்பராமன் அழகிய ஓவியமும், வி. சிந்தாமணிப் பாடலும் தந்துள்ளார்:

N. Ganesan

unread,
Sep 15, 2016, 3:55:57 AM9/15/16
to சந்தவசந்தம், minT...@googlegroups.com, vall...@googlegroups.com, housto...@googlegroups.com, panb...@googlegroups.com, pira...@googlegroups.com, Dr. Y. Manikandan, sirpi balasubramaniam, Dr. Krishnaswamy Nachimuthu, Erode Tamilanban Erode Tamilanban
பாரதியார் 3-ஏப்ரல்-1909ஆந் தேதியில் இயற்றிய “திசை” என்னும் வானியல் விஞ்ஞானக் கவிதையை முழுதும் படிப்போம். 5 விருத்தம். இரண்டாம் செய்யுளில் வானில் மிக்கொளி கொண்ட நாய்மீன் (ஸிரியஸ்) பற்றிப் பேசுகிறார். ஆனால், ஒளிக்கற்றை சிரியசில் இருந்து பூமியை எட்டும் ஆண்டுக்கணக்கைத் தவறாகச் சொல்லியுள்ளார். அதனைச் சரியாகச் சொல்லும் தமிழ் நூல்பற்றியும், நாய்மீன் தமிழகக் கோவில் சிற்பங்களில் எங்குள்ளது எனவும் பார்ப்போம். மறைந்த கவிஞர் ஞானக்கூத்தன் கட்டுரை ஒன்றும் இணைத்துள்ளேன். ~நா. கணேசன்

======================================================================================

திசை


ஒருநொடிப் பொழுதி லோர்பத்

     தொன்பதா யிரமாங் காதம்

வருகிற லுடைத்தாஞ் சோதிக்

     கதிரென வகுப்பர் ஆன்றோர்

கருதவும் அரிய தம்ம!

     கதிருடை விரைவும் அஃது

பருதியி னின்றோர் எட்டு

     விநாடியில் பரவு மீங்கே

 

உண்டொரு வான்மீன் அஃதை 

     ஊணர்கள் சிரிய சென்ப

கண்டவம் மீனின் முன்னை

     விரைவொடு கதிர்தான் இந்த

மண்டலத் தெய்வ மூவாண்

     டாமென மதிப்ப ராயின்

எண்டரற் கெளிதோ அம்மீன்

     எத்தனை தொலைய தென்றே

 

கேட்டிரோ நரர்காள், வானிற்

     கிடக் குமெண் ணரிய மீனிற்

காட்டிய அதுதான் பூமிக்

     கடுகினுக்கு அணித்தாம் என்பர்

மீட்டுமோர் ஆண்டு மூவா

     யிரத்தினில் விரைந்தோர் மீனின்

 ஒட்டிய கதிர்தான் இங்ஙன்

     உற்றிடுந் தகைத்தும் உண்டோ !

 

மானுடக் கிருமி கோடி

     வருத்தத்தால் பயின்று கண்ட

ஊனுறு கருவி யால்இஃது 

     உணர்ந்தஎன் றுஉணரு வீரால்

தானுமிக் கருவி காணத்

     தகாப் பெருந் தொலைய வாகும்

மீனுள கோடி கோடி

     மேற்பல கோடி என்பர்

 

அறிவெனும் புள்ளும் எய்த்தங்கு

     அயர்வொடு மீளும் கண்டீர்

செறியும்இத் திசைதான் எல்லை

     யிலதெனச் செப்பு மாற்றம்

பொறிதவிர்ந் துரைத்தல் அன்றிப்

     பொருளிதென்று ளத்தின் உள்ளே

குறிதரக் கொள்ள லாமோ ?

     கொஞ்சமோ திசையின் வெள்ளம்


----------------------------------------


http://www.gnanakoothan.com/2015/09/09/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/



http://www.navinavirutcham.in/2016/02/blog-post_5.html

வழித்துணை?


ஞானக்கூத்தன் 



வாழ்க்கையில் ஒரு கட்டத்தில் சுந்தரமூர்த்தி நாயனாருக்குக் கண் பார்வை போய்விட்டது. எதற்கெடுத்தாலும் மற்றவர்களுடைய உதவியை அவர் கேட்கத் தொடங்கினார். இதனால் வீட்டில் இருந்தவர்களுக்குக் கஷ்டம். அவரவர்களுக்கு வேலை இருக்கும்போது இவர் அடிக்கடி தனக்கு உதவி செய்யக் கூப்பிட்டால் எப்படி? நாயனாருக்கும் வருத்தம். திருவொற்றியூர் உறை சிவபெருமானிடம் தனக்கு நேர்ந்த குறையைச் சொல்லி முறையிட்டார். பத்துச் செய்யுளில் ஐந்தாவது செய்யுளில் சொல்கிறார்:
கழித்தலைப்பட்ட நாயது போல
ஒருவன் கோல் பற்றிக் கறகற இழுக்கை
ஒழித்து நீ அருளாயின செய்யாய்
ஒற்றியூர் எனும் ஊர் உறைவனே.

தெருவில் அவருக்கு உதவி செய்ய வந்தவன் அவர் பிடித்துக்கொண்டிருந்த ஊன்றுகோலின் மறுமுனையைப் பிடித்துக் கறகற என்று இழுத்துச் சென்றானாம். நாயனார் அப்படி ஒன்றும் ஊர் அறியாத அநாமி அல்லர். இருந்தும் அவருக்குக் கிடைத்த மரியாதை இவ்வளவுதான் – கறகற இழுக்கை – வீட்டுக்கு வெளியில் இந்த நிலைமை என்றால் வீட்டிலும் அப்படித்தான்.
அகத்திற் பெண்டுகள் நான் ஒன்று சொன்னால்
அழையேல்! போகுருடா! எனத் தரியேன்
முகத்திற் கண்ணிழந் தெங்ஙனம் வாழ்கேன்
முக்கணா, முறையோ?

என்கிறார் நாயன்மார். எதற்காகவாவது கூப்பிட்டால் அழைக்காதே போ குருடா என்று வீட்டில் உள்ளவர்கள் சொல்லிவிடுகிறார்களாம். ‘குருடா’ என்று திட்டவே செய்துவிடுகிறார்கள். உலகுக்கு நாயன்மாராக இருந்தாலும் வீட்டில் அதற்கென்று ஒன்றும் தனி மதிப்பில்லை; இந்த ஒரு விஷயத்தை நாயன்மாரின் வாழ்க்கைப் பின்னணியில் வைத்துப் பார்த்தால் பல கேள்விகளைக் கேட்கத் தோன்றுகிறது. ஆனால் இக்கட்டுரையில் வேறொன்றைப் பார்க்க வேண்டியிருப்பதால் அந்தக் கேள்விகளை எடுத்துக்கொள்ளவில்லை. மேலே கொடுக்கப்பட்ட அடிகளுக்கு முந்திய அடிகள் –
மகத்திற் புக்கதோர் சனியெனக் கானாய்
மைந்தனே மணியே மணவாளா

இந்த அடியில் மகத்தில் சனி இடம்பெயர்வது போல் இருக்கிறது நீ என்னிடம் இருப்பது என்று சிவபெருமானைக் குறிப்பிடுகிறார்.
ஒரு சமய சொற்பொழிவாளர் இந்த அடியை எடுத்துத் தனக்குள்ள – அல்லது ஒரு மட்டில் உள்ள – ஜோதிட அறிவைக் காட்டிக்கொண்டு உரையாற்றிக்கொண்டிருந்தார். அவரது சொற்பொழிவைக் கேட்கப் பொறுக்காத ஒருவர் கூட்டத்தை விட்டு வெளியேறிவிட்டார். அவருக்கு மகத்தில் சனியாம். அந்த ஆன்மீகச் (?) சொற்பொழிவாளர் நாகரிகம் பற்றாத வெற்றுப் பேர்வழி என்று வருந்திவிட்டுப் போனார்.
சுந்தரர் தனது நிலைமையைக் கூறும்போது வான சாத்திரம், சோதிடம் பற்றிக் கூறினார். தமிழுலகத்தில் அந்த வான சாத்திர அறிவு பற்றி அறிஞர்களிடத்தில் சர்ச்சை உண்டு. ‘ஹோரா’ என்ற கிரேக்கச் சொல் தமிழின் ‘ஓரை’ என்ற சொல்லிலிருந்து பெறப்பட்டது என்று சொல்லப்படுவதுண்டு. சங்க இலக்கியத்தைச் சார்ந்த கலித்தொகையை ஒப்பச் சிறந்த நூலான பரிபாடலிலும் வான இயல் அல்லது கோள்களின் இருப்பு பற்றிப் பேசப்படுகிறது. வையை நதியைப் பற்றி ஆசிரியர் நல்லந்துவனார் இயற்றிய பரிபாடலில் வான சாத்திரக் குறிப்புகள் இடம்பெறுகின்றன. இந்தப் பாட்டுக்கு நாகனார் பாலைப் பண்ணில் இசையமைத்திருந்தாராம். பரிபாடல் தொடக்கத்திலேயே வான சாத்திரக் குறிப்புகள் தரப்படுகின்றன.
விரிகதிர் மதியமொடு வியல்விசும்பு புணர்ப்ப
எரிசடை எழில்வேழம் தலையெனக் கீழிருந்து
தெருவிடைப் படுத்த மூன்று ஒன்பதிற்று இருக்கையுள்
உருகெழு வெள்ளிவந்து ஏற்றியல் சேர
வருடையைப் படிமகன் வாய்ப்பப் பொருள்தெரி
புந்தி மிதுனம் பொருந்தப் புலர்விடியல்
அங்கி உயர்நிற்ப அந்தணன் பங்குவின்
இல்லத் துணைக்குப் பால்எய்த இறையமன்
வில்லிற் கடைமகரம் ஏவப் பாம்பொல்லை
மதிய மறைய வருநாளில் வாய்ந்த
பொதியின் முனிவன் புரைவரைக் கீறி
மிதுனம் அடைய விரிகதிர் வேனில்
எதிர்வரவு மாரி இயைக என இவ்வாற்றால்
புரைகெழு சையம் பொழிமழை தாழ
நெரிதரூஉம் வையைப் புனல்…

பரிபாடலின் இந்தப் பகுதிக்குப் பரிமேலழகர் உரைத் தமிழைப் படிப்பது நன்றாக இருக்குமல்லவா.
‘1. – 3. விசும்பு மதியத்தோடு புணர்ப்பனவாகிய எரியும் சடையும் வேழமும் முதலாக அவற்றின் கீழிருந்து வீதியால் வேறு படுக்கப்பட்ட ஓரொன்று ஒன்பது நாளாகிய மூவகை இராசிகளுள். மேலவாய    நாண்மீன்களைக் கீழதாகிய மதி புணர்தலாவது அவ்வ நேர் நிற்றன் மாத்திரமாகலின் அவற்றை விசும்பு புணர்ப்ப என்றார்.
2. – எரி. அங்கியைத் தெய்வமாக உடைய கார்த்திகை; அதனால் அதன் முக்காலை உடைய இடபம் உணர்த்தப்பட்டது. சடை – சடையையுடைய ஈசனைத் தெய்வமாகவுடைய திருவாதிரை: அதனால் அதனையுடைய மிதுனம் உணர்த்தப்பட்டது. வேழம் – வேழத்திற்கு யோனியாகிய பரணி: அதனால் அதனை உடைய மேடம் உணர்த்தப்பட்டது.
இவை முதலாக இவற்றின் கீழிருந்தலாவது இவற்றது பெயரான் இடபவீதி, மிதுனவீதி, மேடவீதியென வகுக்கப்பட்டு அம்மூவகை வீதியுள்ளும் அடங்குதல். அவற்றுள் இடபவீதி: கன்னி துலாம் மீனம் மேடமென்பன; மிதுன வீதி: தேள் வில்லு மகரம், கும்பமென்பன. மேட வீதி, இடபம், மிதுனம், கற் கடகம், சிங்கம் என்பன. ஓரிராசியாவது இரண்டே கால் நாளாகலின், நந்நான்கிராசியாகிய இவை ஓரொன்று ஒன்பது நாளாயின. கோட்களுக்கு இடனாகலான் இவை பன்னிரண்டும் இருக்கை எனப்பட்டன.
4 – 10 நிறத்தையுடைய வெள்ளி இடபத்தைச் சேரச் செவ்வாய் மேடத்தைச்சேரப் புதன் மிதுனத்தைச்சேரக் கார்த்திகை உச்சமாக விடிதலுண்டாக வியாழம் சனியின் இல்லமிரண்டாகிய மகர, கும்பங்கட்கு உப்பாலை மீனத்தைச்சேர யமனைத் தமையனாக உடைய சனி வில்லுக்குப் பின்னாகிய மகரத்தைச் சேர, இராகு மதியமறையும்படி வருநாளின் கண்…
இதனாற்சொல்லியது ஆவணித் திங்கள் அவிட்ட நாளின் இக்கோட்கள் தமக்குரிய நிலமாகிய இவ்விராசிகளில் நிற்பச் சோமனை அரவு திண்ட என்பதாயிற்று.’
வைகையில் புதுவெள்ள வருகைக்கு ஜாதகம் கணித்திருக்கிறார் ஆசிரியர் நல்லந்துவனார். ஆற்று வெள்ளம் பயனுடையதாக இருக்குமா வேறு விதமாக இருக்குமா என்று தெரிந்துகொள்வது அவசியமல்லவா? பரிபாடலில் அறம், பொருள் நீங்க இன்பமே பொருளாக அமைந்து கடவுள் வாழ்த்தையும் சேர்த்துக்கொள்கிறது. கடவுள், காமம் இரண்டுமான இந்தக் கலவைக்குக் கொஞ்சம் சோதிடம் பார்ப்பது நல்லது என்று அந்துவனார் கருதினார் போலும்.
சுந்தரமூர்த்தி நாயனாரும் அந்துவனாரும் சோதிடத்தை, வானிலை சாத்திரத்தை ஆதங்கமான விஷயங்களோடு தொடர்புபடுத்தியுள்ளனர். ஆனால் சுப்பிரமணிய பாரதியார் வான சாஸ்திரம் சொன்ன விஷயங்களைக் கண்டு வியந்தவர். அவர் ‘சோதிடம்தனை இகழ்’ என்றவர். பிரபஞ்சத்தைப் பற்றிய அவர் விருத்தத்தில் அவரைத் திகைக்கவைத்தது திசைய ஆனால் அச்செய்யுளில் சூரியனிடத்திலிருந்தும் நட்சத்திரத்திடமிருந்தும் நம்மை அடைய ஒளி எடுத்துக்கொள்ளும் காலத்தையும் ஒளியின் வேகத்தையும் குறித்தே பேசுகிறார். இக்கவிதை அவரது இந்தியா இதழில் (3.4.1909) வெளியானது.
ஒரு நொடிப் பொழுதில் ஓர்பத்
தொன்பதா யிரமாம் காதம்
வருதிறல் உடைத்தாம் சோதிக்
கதிரென வகுப்பர் ஆன்றோர்
கருதவும் அரிய தம்ம.
கதிருடை விரைவும் அஃது
பருதியின் நின்றோர் எட்டு
விநாடியிற் பரவும் ஈங்கே.

உண்டொரு வான்மீன் அஃதை
யூணர்கள் ஸிரியஸ் என்ப.
கண்ட அம் மீனின் முன்னை
விரைவொடு கதிர்தான் இந்த
மண்டலத்து எய்த மூவாண்டு
ஆமென மதிப்பராயின்
எண் தரற்கு எளிதோ அம்மீன்
எத்தனை தொலையதென்றோ!

கேட்டிரோ நரர்காள் வானிற்
கிடக்கம் எண்ணரிய மீனிற்
காட்டிய அதுதான் பூமிக்
கடுகினுக்கு அணித்தாம் என்பர்.
மீட்டுமோர் ஆண்டு மூவா
யிரத்தினில் விரைந்தோர் மினின்
ஓட்டிய கதிர்தான் இங்ஙன்
உற்றிடும் தகைத்து முண்டே.

பாரதியார் தரும் செய்திகளைக் கேட்டு நாமும் ‘கருதவும் அரிய தம்ம’ என்று சொல்ல விரும்பினாலும் நம்மை அவர் ‘நரர்காள்’ என்று அழைக்கும்போது ‘ஓய், ஓய்’ என்று சொல்லத் தோன்றுகிறது.
பிச்சமூர்த்தியின் ‘வழித்துணை’ என்ற நெடுங்கவிதை வான நூல் அறிவை வெளிப்படுத்துகிறது. என்றோ நமது புராணங்களில் படித்த ஒரு கதை இதற்கு ஆதாரம். கருவை மட்டும் எடுத்துக்கொண்டேன் என்ற பீடிகையோடு தொடங்குகிறது இந்நெடுங்கவிதை.
பண்டைப் பழங் குயவன்
….. ….. …..
….. ….. …..
ஏமாற்றும் காற்றை
உட் கொண்ட பாண்டங்கள்
ஒலிக்காத பேச்சில்
வினவுவதை உணர்ந்தான்
….. ….. …..
….. ….. …..
சட்டிப் பானைக்
கடைக் காரனாநீ
மரமும் அறியாத
மலட்டுக் கலைஞனா?
வனப்புக் கடலறியா
வாவித் தவளையா?

பழங்குயவன் வேலை செய்துகொண்டிருந்தபோது அவனிடத்திலிருந்த இடே நேரத்திரையில் பல வினோதமான காட்சிகளைப் பார்க்கிறான். அவரிடத்தில் பானைகள் பேச் தொடங்கிவிட்டன. இதற்கு ஏமாற்றும் காற்று, தூண்டுதலாய் உள்ளது. குயவன் மூர்ச்சித்துவிட்டான். குமர புரத்திலிருந்து வீசிய மூலிகைக் காற்று முகத்தில் பட்டதும் விழியைத் திறக்கிறான். இந்தக் குமர புரத்தில் வாழ்ந்த தச்சனை வருணிக்கிறார் ந.பி.மூ. சுவடில்லாத பாதையில் வழிகாட்ட ஒரு (மந்திர) கைக்கோலைச் செய்யக் காட்டிற்குப் போகிறான். காட்டில் அதற்கேற்ற மரத்தைத் தேடுகிறான். அவன் இருப்பிடத்துக்கு அருகில் இந்த மரம் முளைத்திருக்கவில்லை. காட்டில் பல மரங்கள் அவனைத் தன்னைப் பயன்படுத்திக்கொள்ளும்படி அழைக்கின்றன. தச்சன் எதையும் எடுக்காமல் ஒவ்வொன்றின் இயல்பை ஆராய்கிறான். தச்சன் நல்லதைப் பொறுக்கப் பிடித்த நாளைக் கணக்கிட்டால் பழங்குயவனுக்கு வியப்பாக இருக்கிறது. இங்கே ந.பி.மூ. கோள்களின் சலனப் படத்தை அறிமுகப்படுத்துகிறார்.
நண்டு நடமாடும் கடகத்தில் இருந்த ரவி
இன்றோ
முதலைக் கரவிருக்கும்
மகரத்தில் தென்பட்டான்

கடகத்தில் இருந்த சூரியன் (ரவி – ந.பி.மூ. சூரியனை ‘ரவி’ என்றே பிற இடங்களிலும் குறிப்பிடுகிறார்) மகரத்துக்கு வந்துவிட்டான் என்கிறார். இது காலக் கழிவை மட்டும் காட்டாமல் அந்தத் தச்சனின் அகவாழ்வின் சலனங்களையும் காட்டப் பயன்படுவது போல் தெரிகிறது. வானத்தில் ஒரு ஜன்னலை வசதியாக அமைத்துக்கொண்டு தச்சனைக் கவனித்துவந்த குயவன்
கண்டறியும் கிண்டலுடன்
காட்டுக்கு வந்தான்

இங்கே ந.பி.மூ. கோள்களின் நிலை பற்றிக் குறிப்பிடுகிறார்.
காட்டுக்கு வந்த அன்று
சிம்மத்தில் இருந்த குரு
இன்றும் இருக்கின்றான்
ஈராறு வருடம்
இன்றோடு ஓடியும்…

கிரகங்களின் சஞ்சாரத்தை வைத்துக்கொண்டும் வேறு சில செய்திகளைக் (உ.ம்) (மெய்ப்பொருளின் கதவிடுக்கா…) கொண்டு வந்தும் ந.பி.மூ. வாசகனுக்குப் பேருணர்வு ஒன்றைத் தர முயன்றுள்ளார்.
காண்டஹார் மன்னர் பரம்பரை
இலை உதிர் காலத்து
வாதா மரம் போல
இலை இலையாய் உதிர்ந்து
மொட்டைப்பேய் மரமாகி
காலக் கொடூரத்தின்
கண்ணாடி ஆயிற்று.

பழங்குயவனுக்கு வியப்பாக இருக்கிறது.
அவன்
தச்சனா தச்சனா
தச்சன் தானா?

இக்கவிதை 1963ல் வெளியாயிற்று. இருபதாம் நூற்றாண்டுத் தமிழ்க் கவிதைகளில் தலைசிறந்தனவற்றில் இதுவும் ஒன்று. இதில் ந.பி.மூ. தந்திருக்கும் கிரக சஞ்சார பலனை அத்துறை அறிந்தவர்கள் யாரேனும் விளக்கினால் நன்றாக இருக்கும். யாராவது செய்வார்களா?
Reply all
Reply to author
Forward
0 new messages