Re: 'இந்தி எதிர்ப்புப் போராளி' சி.இலக்குவனார் பிறந்த நாள்

1 view
Skip to first unread message

N. Ganesan

unread,
Nov 19, 2016, 10:39:54 AM11/19/16
to மின்தமிழ், vall...@googlegroups.com, housto...@googlegroups.com, pira...@googlegroups.com, panb...@googlegroups.com
On Thursday, November 17, 2016 at 1:17:26 AM UTC-8, மாயோன் wrote:


திராவிட இயக்கத்தின் அடியொற்றி வளர்ந்த அறிஞர்களுள் ஒருவராக இலக்குவனார் அறியப்பட்ட போதிலும் பெரியாரைப் போல் சிலப்பதிகாரத்தை பழித்தவர் அல்ல; 1951ஆம் ஆண்டு ஆம்பூரில் திராவிடர்கழகத்தின் இலக்கியப் பிரச்சாரகராக இருந்து கொண்டே சிலப்பதிகாரம் பெண்ணைப் பெருமைப்படுத்திப் பேசும் இலக்கியம் என்று பேசினார். அதை விடுதலை ஏடு (15.3.1951) 'சிலப்பதிகாரத்தின் சிறப்பு' என்று தலைப்பு கொடுத்து வெளியிட்டது.


ம. பொ. சிவஞானம் திராவிட இயக்கப் புலவர்கள் சி. இலக்குவனார், சாமி. சிதம்பரனார் எழுதிய சிலம்பு மீதான கட்டுரை விடுதலை இதழில் வெளியானதைக் குறித்தும், பெரியார் சிலம்பின் மீது
கொண்டிருந்த கருத்துகள் குறித்தும் ஏப்ரல் 1951-ல் எழுதிய கட்டுரை.   சாமி சிதம்பரனார், சி. இலக்குவனார், ம.பொ.சி. கிராமணியார், ... இன்னும் பலரது நூல்கள் - சுமார் 2 லட்சம் - பிடிஎப் ஆனால் 20-ஆம் நூற்றாண்டு வரை வளர்ந்துவந்த தமிழ் இலக்கியங்களை, அவற்றை தமிழர் உணர்ந்த முறைகளை இன்றைய தமிழ் மாணவர்கள் அறிய ஏதுவாகும்.  நா. கணேசன்

 கண்ணகியைப் பழிக்கும் கருஞ்சட்டைத் தலைவர்


ம. பொ. சிவஞானம், தமிழ் முரசு, ஏப்ரல் 1951.

சிலப்பதிகாரத்திற்கு சிறப்புத்தேட தேசீய வாதிகள் மாநாடு கூட்டுகின்றனர் என்ற செய்தி கேட்டவுடனே திராவிடக்கழக் வட்டாரத்தில் கலக்கம் கண்டு விட்டது. தேசீய வாதிகள் என்றாலே, வடமொழிக்கும் வடவருக்கும் அடிமைப்பட்டவர்கள்; தமிழுக்கும் தமிழருக்கும் துரோகம் செய்பவர்கள் என்று இத்தனை காலமும் செய்து வந்த பிரச்சாரம் எல்லாம் பொய்யாய்- கனவாய்- பழங்கதையாய்ப் போய்விடுமே என்பதுதான் கலக்கத்திற்குக் காரணம். ஆகவே, சிலப்பதிகார மாநாடு நடக்கு முன்பே, சிலம்பின் பெருமையைப்பற்றி 'விடுதலை' பிரச்சாரம் செய்ய ஆரம்பித்து விட்டது. திராவிடக் கழகத்தின் இலக்கியப் பிரச்சாரகரான புலவர் இலக்குவனார், ஆம்பூரில் சிலப்பதிகாரத்தின் சிறப்புப் பற்றிச் சொற்பொழிவாற்றினார். அதை 15-3-51-ல் "சிலப்பதிகாரத்தின் பெருமை"என்ற தலைப்புக் கொடுத்துப் பிரசுரித்தது 'விடுதலை' 21-3-51 இதழில், சாமி சிதம்பரனாரைக் கொண்டு சிலப்பதிகாரத்தைப் பற்றி மிக நீண்ட ஆராய்ச்சிக் கட்டுரை ஒன்றை எழுதச் செய்து, அதையும் பிரசுரித்தது 'விடுதலை' இவற்றால் நாம் மருளவில்லை; மகிழ்ந்தோம். சிலம்பைப் பழித்தவர்களும் அதன் சிறப்பை உணர்ந்து பாராட்டுவதென்றால் மகிழத்தானே வேண்டும்! மொழித் தொண்டு கட்சிப் பூசல்களுக்கு அப்பாற்பட்டதலவா?

ஆனால், ஈ.வெ.ரா. இத்தனைக்கும் எதிமாறான போக்கிலே 30-3-51ல் காங்கேயத்தில் சிலப்பதிகாரத்தைப் பழித்துப் பேசியிருக்கிறார்:
    "உண்மையான திராவிடன் -தமிழ் மகனாக
    இருந்தால் சிலப்பதிகார மாநாடு நடத்துவானா?
    பார்பனருக்கு நல்ல பிள்ளயாக நடந்து கொள்
    வதற்கு ஆக நடத்தப்படுவது என்பதல்லாமல்
    வேறு என்ன சொல்ல முடியும்?"
என்று சிலப்பதிகார மாநாடு நடத்தியவர்களுக்கு 'சிறப்புரை' வழங்கியிருக்கிறார் ஈ.வெ.ரா.அவர் கருத்துப்படி, சிலப்பதிகார மாநாடு நடத்துவோர் அத்தனை பேரும் போலித் தமிழர்களாகின்றனர்.இதற்குப் பதில்ளிக்க வேண்டிய பொறுப்பை புலவர் பெருமக்களுக்கு விட்டுவிடுகிறோம்.

"சிலப்பதிகார மென்பது ஆரியத்தைப் பரப்புகிற ஒரு நூலென்பது அல்லாமல், வேறு என்ன?ஆரம்ப முதல் இறுதிவரை ஒரே ஆரியந்தானே காட்சியளிக்கிறது.

என்கிறார் ஈ.வெ.ரா. 'மிரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்' என்பார்கள். அதுபோல எப்போதோ, எதற்காகவோ ஆரியத்தின் மீது வெறுப்பேற்பட்டதன் காரணமாக,காண்பதெல்லாம் 'ஆரிய'மாகக் காட்சியளிக்கிறது ஈ.வெ.ரா.வுக்கு!

கொடுங்கோலனை எதிர்த்துப் போராடும் 
கண்ணகியின் புரட்சி 'ஆரியம்’!

அறியாது செய்த பிழைக்கு, தனது உயிரையே
அர்ப்பணிக்கும் நெடுஞ்செழியனின் தியாகம் ’ஆரியம்’!

அரசன் உயிர் நீத்த அக்கணமே தானும் உயிர் நீத்த 
கோப்பெருந்தேவியின் அன்பு நிறைந்த காதல் 'ஆரியம்’!

வாய் கொழுத்துப் பேசிய வட வேந்தருடன் போரிட்டுத் தமிழரின் 
ஆற்றலைப் புலப்படுத்திய செங்குட்டுவன் செயல் 'ஆரியம்’!

மூன்றாகப் பிளவுபட்டுக் கிடந்த தமிழகத்தை ஒன்றாகப் பிணைத்துக் 
காட்டிய இளங்கோவின் சித்திரம் 'ஆரியம்’!

விலை மகளூக்குப் பிறந்தும் ஒருவனையே காதலித்து வாழ்ந்து அவன் இறந்த 
பிறகு வாழ்விற்குரிய இன்பங்கள் அனைத்தையும் இழந்துவிட்ட மாதவியின் 
மனப் பண்பு 'ஆரியம்’!

பார்ப்பனத் தோழியின் கருத்து வழி காமன் கோயில் சென்று 
வழிபட மறுத்த கண்ணகியின் செயல் 'ஆரியம்’!

இத்தனையும் தமிழ்ப் பண்பிற்கு எதிரான 'ஆரியப் பண்பு’தான் என்றால், 
அந்த ஆரியப் பண்பு நீடூழி வாழ்வதாகுக.!

"கோவலனுக்கும் கண்ணகிக்கும் நடக்கிற கல்யாணம் பெண்ணடிமைத் திருமணம். அடுத்தபடியாக அது பண மூட்டைகள் திருமணம்."

என்கிறார் ஈ.வெ.ரா. எங்கேயோ - யாரோ செய்துகொண்ட திருமணத்தை நினைப்பிலே வைத்துக்கொண்டு கண்ணகியின் திருமணத்தைக் கண்டித்துப் பேசியிருக்கிறார் போலும்! உணர்ச்சிக்காக அல்லாமல்- கடமைக்காகவும் அல்லாமல், வெறும் உடைமைக்காக மட்டும் திருமணம் செய்துகொண்ட பெண் அல்லள் கண்ணகி. கண்ணகியின் காதலன் பணக்காரக் குடும்பத்தில் பிறந்தவன்தான், ஆனால், அவனுடைய பணத்துக்காக தனது இளமையை அடகு வைக்கும் அறிவுகெட்ட நிலை கண்ணகிக்கு இருந்ததில்லை.

பார்ப்பனப் புரோகிதர் மறைவழிப்படி நடத்தி வைத்ததற்காக, கண்ணகி-கோவலன் திருமணத்தைப் பழிப்பது ஆராய்ச்சி அறிவன்று -ஆபாசக் கூக்குரல்!

"கண்ணகி என்று கூறப்பட்டிருக்கிற பெண்ணுக்கு சிறிதளவாவது அறிவு- 
மனித உணர்ச்சி- தன்மானம் இருந்தது என்று யாராவது ஒப்புக் கொள்ளமுடியுமா?"

என்று கம்பீரமாகக் கேள்வி போடுகிறார் ஈ.வெ.ரா. உணர்ச்சிக்காக அல்லாமல் உடைமைக்காக முதுமையைக் காதலிக்கும் பெண் மனித உணர்ச்சி அற்றவள் தான்! ஊரார் பழிக்கும் நிலையிலும் உணர்ச்சியற்ற கட்டையாக கிழத்தோடு பவனி வரும் பெண் தன்மானமற்றவள்தான்!

இந்தக்குறைபாடுகள் அனைத்தும் கொண்ட ஒரு பெண்ணை ஈ.வெ.ரா. எப்போதோ- எங்கேயோ சந்தித்து விட்டார் போலும்! அவளை நினைவில் வைத்துக் கொண்டு கண்ணகியைச் சாடுகிறார்.

கண்ணகிக்கு அறிவு இருந்ததால்தான் கணவனைப் பிரிந்த காலத்திலும் கற்புநெறி தவறாது வாழ்ந்தாள்.

மனித உணர்ச்சி இருந்ததால்தான் ஆயர்சேரியில் கோவலன் தன்னை இறுதியாகப் பிரியும்போது அவனது போற்றா ஒழுக்கத்தை எடுத்துக்காட்டி இடித்துக் கூறினாள். 
அவளுக்குத் தன்மானம் இருந்ததால் தான் குற்றமற்ற தன் கணவனைக் கள்வன் எனக் குற்றம் சாட்டிக்கொன்ற கொடுங்கோல் அரசை அழித்தாள்!

அத்தகைய பெண்ணரசியையா பழிப்பது? என்ன துணிச்சல்? புலவர் பெருமக்களே! நெற்றிக்கண் திறந்தாலும் குற்றம் குற்றமே என்ற நக்கீரன் பரம்பரைதானா நீங்கள்? 'ஆம்' என்றால், இளங்கோவைப் பழிப்பதைப் பார்த்தும் பொறுத்திருப்பதேன்? ஒருவேளை தமிழே வீரத்தைவிட்டு விலகி விட்டதோ? அறிவு பீடத்தை விட்டு விலகிவிட்டதோ? பதில் கூறுங்கள்.

திராவிடத்தார்க்களுக்கு ஒரு நிலையான கொள்கை கிடையாது என்று நாம் கூறினால் கோபம் பொத்துக் கொண்டுவருகிறது சில 'புரட்சி' வீரர்களுக்கு. இதோ பாருங்கள், இலக்கியத் துறையில் அவர்களுக்குள்ள ஞானத்தை!

"சிலப்பதிகாரம் பெண்ணைப் பெருமை படுத்திப் பேசும் பேரிலக்கியம்"

என்று பேசுகிறார் திராவிடக் கழகத்தின் இலக்கியப் பிரச்சாரகரான புலவர் இலக்குவனார். அதை'சிலப்பதிகாரத்தின் சிறப்பு' என தலைப்புக் கொடுத்துப் பிரசுரிக்கிறது 'விடுதலை'.

"சிலப்பதிகாரம் சிந்தித்து ஆராய்வதற்குரிய சிறந்த தமிழ்நூல்...தமிழர் நாகரிகத்தை விளக்கும் நூல்...ராமாயணத்தைப்போல்-பெரிய புராணத்தைப்போல்- ஜீவக சிந்தாமணியைப் போல் பூசை பண்ணும் மனப்பான்மை உண்டாக்கும் நூலல்ல. இதுதான் அந்த நூலுக்குரிய தனிச்சிறப்பு."

என்று 21-3-51 'விடுதலை'யில் எழுதுகிறார், பெரியாரை நிழல்போலப் பின்பற்றிச் செல்லும் சாமி. சிதம்பரனார். இதை:

"சிலப்பதிகாரம் சொல்லும் செய்திகள் யாவை?
பகுத்தறிவு, ஜனநாயகம், தன்மானமே தமிழர்பண்பு".

என்று கொட்டை எழுத்துக்களில் இரண்டு பத்தி தலைப்புக் கொடுத்து 'விடுதலை'யில் பிரசுரித்திருக்கிறார் அதன் ஆசிரியர். அந்தக் கட்டுரையில் சாமி சிதம்பரனார் மேலும் கூறுவதைப் படியுங்கள்:

"கண்ணகி சிறந்த குணமுடையவள், அழகும்
அரிய குணங்களும் அவளிடமிருந்தன."

என்கிறார் ஈ.வெ.ரா.வின் சீடர். குருவுக்கு அறிவு- மனித உணர்ச்சி- தன்மானம் 
முதலிய நல்ல குணங்கள் அற்றவளாகக் காட்சியளிக்கிறாள் கண்ணகி. 
சீடருக்கோ அத்தனை குணங்களும் உடையவளாகக் காட்சியளிக்கிறாள். 
ஒரே பாத்திரம்; இரு வேறுகாட்சிகள். காண்பவர்கள் இருவரும் ஒரே கட்சியினர்; 
அதுமட்டுமல்ல; குருவும் சீடரும். இதைக்கண்டு வெட்கப்படுவது மட்டுமல்ல; 
இவர்களையும் பொதுவாழ்வில் நடமாடவிட்டதற்காக வேதனையும் படவேண்டும்.

சிலப்பதிகாரத்தின் கருப்பொருளைப் பற்றிக் கூறும்போது "ஆரிய நெறியைப் பரப்புவதற்காகவே எழுதப்பட்டது" என்கிறார் ஈ.வெ.ரா. "ஆரம்பமுதல் இறுதி வரையில் ஒரே ஆரியந்தானே காட்சியளிக்கிறது." என்றும் ஆத்திரத்தோடு கேட்கிறார். அவருக்கு நாம் பதிலளிக்கத் தேவையில்லை.அவரது சீடர் சிதம்பரனாரைக் கொண்டே பதிலளிக்கச் செய்கிறோம்.'விடுதலை'யில் தாம் எழுதிய கட்டுரையின் இறுதியில் சிலப்பதிகாரத்தின் சீரிய கருப் பொருள்களைக் கணக்கோடு கூறுகிறார் சிதம்பரனார்.

"சிலப்பதிகாரக் கதையிலே கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல்களைப் புகுத்திப் படித்தால், இந்த மூன்று உண்மைகளை மறுக்கமுடியாது. (1) தெய்வீகச் சடங்குகளால் பயனில்லை. (2) அறிவின்றி, விசாரணை யில்லாமல் நிரபராதிகளுக்குத் தண்டனை அளிக்கும் அரசாங்கம் பொதுமக்களால் அழிக்கப்படும். (3) தமிழன் தன்னை அவமதிக்கும் எவனுக்கும் தலைவணங்க மாட்டான். தன்னை அவமதிப்போரை அடக்கித் தன்மானத்தைக் காப்பாற்றியே தீர்வான். பிரித்தாளும் சூழ்ச்சிக்குத் தமிழன் ஏமாறமாட்டான். இந்த உண்மைகளை விளக்கவே சிலப்பதிகாரம் எழுதப்பட்டது. இதை மெய்ப்பிக்க நாம் எப்பொழுதும் தயார். எந்த இடத்திலும் வாதிக்கவும் முன்னிற்போம்." இது சாமி சிதம்பரனாரின் கருத்துக்கள். 

சிலப்பதிகாரம் பயனுள்ள நூல்-படிக்க வேண்டிய நூல்- கழிக்க தக்கன சில இருப்பினும், பொதுவாகப் பாராட்ட வேண்டிய நூல் என்று கூறுவது மட்டுமல்ல; அவ்ரது கூற்றை மறுப்போரை வாதுக்கும் அழைக்கிறார் சிதம்பரானார். ஈ.வெ.ரா. வுக்குத் தன்மான மிருப்பின் சிதம்பரனாரோடு சமருக்குச் செல்லட்டும். இல்லையேல் சிதம்பரனாரின் சிலப்பதிகாரப் பற்று உண்மையாயின்; தமது மானத்தைக் காத்துக் கொள்வதற்காக வேனும் ஈ.வெ.ரா.வின் வட்டாரத்தை விட்டு அவர் வெளியேறட்டும். பாலுக்கும் காவல்; பூனைக்கும் தோழன் என்பது போல, தமிழுக்குத் தொண்டு செய்வதாக நடிப்பது அதே சமயத்தில் தமிழ்ன் பெருமையை இழித்துப் பேசும் ஈ.வெ.ரா. வுக்கும் துதிபாடுவது என்ற இழிநிலை இனியும் நீடிக்கக் கூடாது.

இப்படி முன்னுக்குப் பின் முரணாக ஒருவர்க்கு ஒருவர் எதிர்மாறாகப் பேசும் ஒரு கூட்டமும் தமிழ் நாட்டில் இருக்கிறதே!

இந்த லட்சணத்தில் சிலப்பதிகார மாநாடு கூட்டியவர்களின் தமிழ்ப்பற்றை நையாண்டி செய்கிறது 'திராவிட நாடு'. அதுமட்டுமல்ல. தாங்கள் என்றென்றும் சிலப்பதிகாரப் பக்தர்கள் போலவும், தேசிய வாதிகள் இப்போதுதான் சிலம்பின் சிறப்பைப்பற்றிச் சிந்திக்கத் தொடங்கி இருப்பதாகவும் கூறுகிறது.

தமிழ்மொழிக் கலைகளுக்கோ, காவியங்களுக்கோ திராவிடத்தார்கள் எந்தக் காலத்திலும் மதிப்பளித்ததில்லை. அதுமட்டுமல்ல, அவற்றிற்கு மதிப்பளிக்கும் அறிஞர்களின் மானத்தைக் கெடுக்கும் வகையில் ஊருக்கு ஊர் கூட்டம் போட்டு ஏசிப்பேசுவதும் அவர்களின் அன்றாடவேலை. ஆங்கிலேயன் இந்த நாட்டை விட்டுப் போகமாட்டான் என்ற நம்பிக்கை இருந்தவரை, திராவிடத்தார்கள் ஆங்கிலமாயைக்கு அடிமைப்பட்டுக் கிடந்தார்கள். சைமன் ராமசாமி, ஸ்டாலின் ஜெகதீசன், எட்வர்டு மாணிக்கம், மேயோ குப்பம்மாள், மிஸஸ் மிராண்டா என மேல் நாட்டாரின் ஆங்கிலப் பெயர்களைத் தங்கள் பெயர்களுக்கு முன்னே முடிசூட்டியது போன்று வைத்துக் கொள்வதில் ஆனந்தப்பட்டார்கள். 

ஆனால், தேசிய எழுச்சியாலும், பாரதியாரின் கவிதைகளாலும் மக்களிடையே நாட்டுப் பற்றோடு மொழிப்பற்றும் வேகமாக வளர்ந்தது. அதோடு, வெள்ளையாட்சி வெளியேறுவது திண்ணம் என்ற நிலையும் தோன்றியது. ஆகவே, தமிழை வாழ்த்தினாலொழிய தாங்கள் வாழமுடியாது என்பதை உணர்ந்து கொண்டனர் திராவிடத்தார்கள். அதனால் சைமன், ஸ்டாலின், எட்வர்டு, மேயோ, மிராண்டா என்ற பெயர்களுக்கெல்லாம் தலை முழுக்குப் போட்டுவிட்டு, நாராயண சாமி- நெடுஞ்செழியரானார்! ராமையா-அன்பழகனானார்! நடராசர்- கூத்தரசரானார். ஆம்; விலை போகாத பண்டத்திற்கு வியாபாரி லேபிள் மாற்றுவது போல, புதிய பெயர்களில் பழைய பேயாட்டங்களைத் தொடர்ந்து நடத்துகின்றனர். உள்ளத்தில் உண்மைத் தமிழ்ப்பற்று இல்லாவிடினும், இவர்களது நடிப்பில் மயங்கி இவர்களும் உண்மையான தமிழ்ப் பற்றுடையவர்கள்தான் என்று நம்பினர்- நம்புகின்றனர் பண்டிதப் பெருமக்களில் பலர். ஆனால், என்னதான் திறமையாக வேஷம் போட்டாலும், சில சந்தர்ப்பங்களில் வேஷம் கலைந்து உண்மை வெளிப்பட்டு விடுகிறது.

சிலப்பதிகாரம், நாம் திராவிடர் அல்லர்-தமிழர்; நமது தாயகத்தின் பெயர் திராவிடமன்று-தமிழகம்; அதன் வடக்கெல்லை விந்தியமன்று-வேங்கடம்; தமிழ் நாட்டு அந்தணர் ஆரியரல்லர்-தமிழர் என்கின்றது. மற்றும், தமிழருடைய பண்பாடும் பழக்க வழக்கங்களும் பெரும்பாலும் வேங்கடத்திற்கு வெளியே உள்ளவர்களின் பண்பாடுகளுக்கும் பழக்க வழக்கங்களுக்கும் வேறானவையாயினும் விரோதமானவையல்ல என்று சிலப்பதிகாரம் கூறுகின்றது. இந்த உண்மைகளுக்கு நேர்மாறான போக்கிலே'காலட்சேபம்' நடத்திக் கொண்டிருக்கும் ஈ.வெ.ரா., சிலப்பதிகாரத்தை எதிர்ப்பதில் வியப்பொன்றுமில்லை. ஆனால், ஒரு கோடி ஈ.வெ.ரா.க்கள் புறப்பட்டாலும், தமிழ் மக்களிடையே சிலப்பதிகாரத்திற்குள்ள செல்வாக்கை குறைக்க முடியாது.

-தமிழ் முரசு -ஏப்ரல்-1951.

தெரிவு: 
N. Ganesan

Reply all
Reply to author
Forward
0 new messages