தலையெடு பொருள்

16 views
Skip to first unread message

seshadri sridharan

unread,
Oct 4, 2025, 11:36:33 PM (10 days ago) Oct 4
to வல்லமை, hiru thoazhamai
தலையெடு பொருள் 

இப்போது அருகிய வழக்காகிவிட்ட சொல் தலையெடு. முன்பு பெரியோர்கள் பிள்ளைகள் வளர்வதை குறிக்க இந்த சொல்லை  பயன்படுத்தினர். இதாவது, விதை முளைத்து அந்த பிளந்த விதையோடு மண்ணுக்கு மேலே தூக்கி நிற்கும். இப்படியாக ஒரு  பிள்ளை மெள்ள  முளை போல் வளர்ந்து தம் சொந்த முயற்சியில் வாழ்க்கையை தொடங்குவதை தலையெடுத்தல் என்றனர். இச்சொல் இப்போது இளைய தலைமுறைக்கு செவிப்படாத சொல் ஆகிவிட்டது. இப்போது உள்ள மூத்த தலைமுறையும் இல்லாது போனால் இனி, அகராதியில் மட்டும் புகலிடம் கொண்ட சொல் ஆகிவிடும்.

அதே போல ஏறெடு என்ற சொல் எழுச்சியை குறிக்கும். இங்கு  தலையை நிமிர்த்தி பார்க்கும் விதமாக தலையை தூக்குவது ஆகும். இந்த இரண்டு சொல்லிலும் எடு என்ற சொல் தான் எழுச்சிக்கு வித்தக சுட்டுவதாக உள்ளது . 

N. Ganesan

unread,
Oct 5, 2025, 9:48:59 AM (9 days ago) Oct 5
to vall...@googlegroups.com
தலையெடுத்தல் - நீக்குதல் என்ற பொருளில் முதன்முதலாய் மணிமேகலையில் காண்கிறோம்.

எத்தனையோ சொற்களுக்குப் புனர்வாழ்வு அளித்தவர் கவிச்சக்கரவர்த்தி கம்பர். மூன்றுமுறை நீங்கள் சொல்லும் பொருளை ஆள்கிறார். பின்னர், தாயுமானசாமி, வள்ளலார், ...

கழகம் என்றால் சூதாடுமிடம் எனப் பொருள். கம்பர் தான் மாற்றுகிறார், "கலை பயில் கழகம்". இப்பொழுது பல கட்சிகளும் கழகம் என்ற பெயரில் இயங்குகின்றன. ஆங்கில ஸ்பெல்லிங் தெலுங்கு/கன்னடமாய் உள்ளது (kazhagam). இருப்பவற்றுள் இளையது: த.வெ.கழகம்,

-எடு - இங்கே துணைவினை (auxiliary verb). உ-ம்: கையெடுத்தல் = கும்பிடுதல். நூற்றுக்கணக்கான சொற்கள் இவ்வாறு துணைவினைகளை ஏற்கின்றன.

பிற பின்,
நா. கணேசன்


seshadri sridharan

unread,
Oct 5, 2025, 9:06:23 PM (9 days ago) Oct 5
to வல்லமை
நன்று சொன்னீர். நான் விட்டுவிடு என்பதில் வரும் விடு போல வந்தால் தான் துணை  வினை என்று கருதி இருந்தேன்.

ஒரு காட்டு உயிரை எடுக்கிறாய்  

N. Ganesan

unread,
Oct 5, 2025, 11:16:11 PM (9 days ago) Oct 5
to vall...@googlegroups.com
Verbalizer. பெயர்ச்சொல் பின்னால் வினையைச் சேர்த்துதல்.

என் 2023 கட்டுரை:

பேச்சுமொழி மரபுத்தொடர்களில் உருவுதல் என்னும் வினைச்சொல்
முனைவர் நா. கணேசன், ஹூஸ்டன், அமெரிக்கா

பேரா. ம. பெ. சீனிவாசன் எழுதிய ‘மரபுத்தொடர் பேச்சுமொழியின் நன்கொடை’ சிறப்பான கட்டுரை (தமிழ்மணி, 7-5-2023). பெயர்ச்சொல்லின் பின் கூட்டுவினையாக செய், உருவு, ஆட்டு, திரி, போன்ற பல வினைகள் இடம்பெறுகின்றன. இவை வேற்றுமைத் தொகையாகவே இருக்கும்; துணைவினை, உபசர்க்கம், வினையாக்கி, அகராதி ஏற்றச்சொல் எனப் பலவகையாகப் பகுக்கலாம். திருக்குறள் 97 போன்றவற்றில் பெயரும், வினையடியும் சேரும் ‘தலைப்பிரிதல்’ என்னும் தொடரை ‘ஒருசொல் நீர்மைத்து’ எனப் பரிமேலழகர் குறிப்பிடலைத் தமிழ் இலக்கணத்தில் கூட்டுவினை ஆய்வுகளின் தொடக்கம் எனலாம். தரவிறக்கு (download), வலையேற்று (upload), தரையிறங்கு (landing), வானேறு (liftoff) போன்ற கலைச்சொல் ஆக்கங்களிலும் கூட்டுவினை உண்டு. வாலுருவுதல், கயிறுருவுதல் இன்றும் புழக்கத்தில் உள்ள சொற்கள். எனவே, அகராதி ஏறுதன்மை கொண்டவை. 2016-ம் ஆண்டில் ஜல்லிக்கட்டுப் போராட்டம் மெரினா கடற்கரையில் ஆயிரக்கணக்கான மொபைல் பேசிகளின் விளக்கைக் காட்டி நடந்தது. தமிழ்நாட்டிலும், உலகெங்கிலும் தமிழர்கள் இணைய வளர்ச்சியால் பங்கேற்ற முதல் போராட்டம் அது. அப்போது கவிஞர் வைரமுத்து எழுதிய ‘அடங்காநல்லூர்’ உரைவீச்சில் ‘மூக்கணாங் கயிறுருவி நைலான் கயிறு பூட்டாதீர்’ என்றார். பதினெட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒப்பிலாமணிப் புலவர் பாடிய வெண்பா பேச்சுத்தமிழாக இருக்கிறது. இரசிகமணி டிகேசி மணிக்கணக்கில் இந்த வெண்பாவை விதந்து பாடி, நெல்லை வட்டத்தொட்டி இலக்கிய நிகழ்ச்சிகளில் பேசியிருக்கிறார் (தகவல்: நாஞ்சில் நாடன்). கயிறுருவுதல் என்னும் மரபுத்தொடர், இரதத்தில் பூட்டிய குதிரைகள் சூரியனின் ஒற்றை ஆழித் தேரை விட்டுவிட்டு ஓடிப் போனதோ எனப் பொருள் தந்து உயிரூட்டுகிறது.

           அரவம் கரந்ததோ அச்சுமரம் இற்றுப்
           புரவி கயிறுருவிப் போச்சோ - இரவிதான்
           செத்தானோ வேறுதிசைச் சென்றானோ என்தோழீ
           எத்தால் விடியும் இரா

உருவுதல் கூட்டுவினை தரும் மரபுத்தொடர்கள்

தமிழ் மொழியில் உள்ள பல கூட்டுவினைகளில் உருவு- என்ற வினைச்சொல்லை மட்டும் எடுத்துக்கொண்டு சில உதாரணங்களைப் பார்ப்போம். "வரிப்புலியை வாலுருவி விடாதே' என்ற பொருள் கொண்ட மரபுத் தொடரை வில்லி பாரதம் பேசுவதாக ‘வயப்புலியை வாலுருவி விடுகின்றீரே’ உள்ளது. கால்நடை வேளாண்மையின் ஏறுதழுவல் விளையாட்டில் கயிறுருவுதல் சீவக சிந்தாமணி, திணைமாலை நூற்றைம்பது இரண்டிலும் காண்கிறோம். கொங்குவேளிர் செய்த பெருங்கதையில் கயிறுருவு- என்பதற்கு எதிராக, கயிறுபிணி- என்று குதிரையைத் தேரில் பூட்டும் மரபுத்தொடர் இருக்கிறது: “பருமக் காப்பின் படுமணைத் தானத்து, அருமைக் கருவி அலங்குமயிர் எருத்தின் வயமா பண்ணி, வாய்க் கயிறுபிணித்து”. 

ஒற்றன் எதிரிப் படையில் ஊடுருவினான். இங்கே, உள்ளே நுழைதல் ஊடுருவல் ஆகும். ஒட்டுண்ணிக் கொடித் தாவரம் மரத்தைப் புல்லி (தழுவி) ஊடுருவி வளரும். அந்த வகைக் கொடி ‘புல்லுருவி’ ஆகிறது. ‘குடலுருவி’ மாரியம்மன் என்று ரத்தக் களரியாகப் பலியிடும் கிராமக் கோவில்கள் உண்டு.                           

உடம்பை எண்ணெயில் நீவி ஒத்தடம் பிடித்தல், தைவருதல் என்பது ஔவையார் உயர்த்திப் பாடிய சனி நீராடலில் ஓர் பகுதியாகும். மஸாஜ் எண்ணெயை ‘உருவு எண்ணெய்’ என்பதும், இந்தக் குளிப்பாட்டலை ‘எண்ணெய் உருவுதல்’ என்பதும் தொன்றுதொட்டு வரும் மரபு. கண்களும் காதலனை மெதுவாகத் தடவிப் பார்க்கும் தன்மை கொண்டது. இதற்கான மரபுத்தொடர், ‘கண்ணுருவுதல்’ என்பது திருக்குறளின் காலிங்கர் உரையினால் தெரியவருகிறது. அதாவது, கூற்றத்தின் கொடுமையும், கண்ணுருவலின் அருள் கருணையும், மடமான் விழியின் மருட்சியும் மாறிமாறிக் கொண்டது இவளது கண்கள் என்பது குறளின் பொருள்.

கூற்றமோ கண்ணோ பிணையோ மடவரல்                                                                                                                    நோக்கம்இம் மூன்றும் உடைத்து (திருக்குறள் 1085)

காலிங்கர் உரை: “நெஞ்சமே! இவள் கண் நமது உயிர் நடுக்கம் செய்தலாற் கூற்றம் என்றும், குளிர்ந்த நோக்குடைமையிற் கண்ணுருவு தானேயோ என்றும், வெரூஉதற் பேதைமை தோன்றப் பிறழ்தலின் பிணைமான் விழிவடிவோ என்றும், இங்ஙனம் நீயே உற்றுவருந்துதலான் இவை இத்துணையும் ஒருங்குடைத்து இவள் நோக்கம்; என்பதனால் தனது வருத்தம் ஒருகாலைக்கு ஒருகால் மிக்குச் செல்லுகின்றமை மிகுத்துரைத்தது கருத்து என்றவாறு.” (வித்துவான் தி, பட்டுச்சாமி ஓதுவார், திருக்குறள் உரைக்கொத்து, காமத்துப்பால், ஸ்ரீ காசிமடம், திருப்பனந்தாள், 1958).

கவிச்சக்கரவர்த்தி கம்பரும் கண்ணுருவுதலை விளக்கி ஒரு பாடல் செய்துள்ளார். சனிநீராடலில் முக்கிய அமிசம் நெய்யுருவுதல். அதாவது, விளக்கெண்ணெய் தேய்த்துத் தடவி நீவி உருவுதல். பல வீர விளையாட்டுகள் ஆடிய பின் மங்கலர்கள் நெய்யுருவி வளர்ந்ததால் கரிய இராமபிரானின் தேகம் தேஜசுடன் ஒளிவீசியதாக அமைந்தது.


     ‘மையோ, மரகதமோ, மறி  கடலோ, மழை முகிலோ,
      ஐயோ, இவன் வடிவு!’ என்பது ஓர் அழியா அழகு உடையான்.

விசுவாமித்திர முனிவர் சனக மகராசனுக்கு மருமகன் ஆகவிருக்கிற இராமனை அறிமுகம் செய்கிறார். ‘அலைகள் நீவும் கடல் வண்ணத்துடன் தேஜஸ் மிகுந்த இராமன் புஜ பலத்தை, நீ கண்ணுருவிப் பார்க்க வேண்டும்’ என்பது முனிவர் அன்புரை. நெய்யுருவல் போல, அங்குலம் அங்குலம் ஆக கண்ணால் நீவி நோக்குக என்றார்.

     அலையுருவக் கடலுருவத்து ஆண்டகைதன் நீண்டுயர்ந்த
     நிலையுருவப் புயவலியை நீயுருவ நோக்கையா

கிருஷ்ணனின் பால லீலைகளில் பெரிதாகப் பேசப்படுவது இளங்கன்றாக வந்த வத்சாசுரனை வீசி, மரத்தில், விளாங்கனியாக இருந்த அசுரனைக் கொன்ற நிகழ்ச்சி. இதனைக் கொம்புருவுதல் என்னும் மரபுத்தொடரைப் பயன்படுத்தி, திருமங்கையாழ்வார் பாடியுள்ளார்.

 

அம்புருவ வரிநெடுங்கண், அலர்மகளை
    வரையகலத் தமர்ந்து, மல்லல்
கொம்புருவ விளங்கனிமேல் இளங்கன்று
    கொண்டெறிந்த கூத்தர் போலாம்,

திவ்வியப் பிரபந்தம் அசுரனைப் பன்னிரு முறை நேராக விளங்கனி என்கிறது. எனவே, உருவம் என்றால் வடிவம் எனக் கொண்டு, கிளை வடிவம் என்ற அருத்தம் பொருத்தமாக இல்லை எனத் தோன்றுகிறது. துறட்டி கொண்டு மாங்காய், விளாங்காய், புளியங்காய் போன்றன கிளையில் இருந்து உருவுவது வழக்கம். கயிறுருவு போல, கொம்புருவு என்பது மரபுத்தொடர். இளங்கன்றை வீசி, தழைத்த மரக் கிளையில் இருந்து விளங்கனி அசுரனை உருவிக் (கழற்றிக்) கொன்றான் என்றால் பாசுரப் பொருள் சிறக்கும்.



--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/vallamai/CAHwwLPS_zeKk5Xv85txepk2sk%2BmSN0sr4nJCO6Zska_ggdmTNg%40mail.gmail.com.
Reply all
Reply to author
Forward
0 new messages