இலங்கையில் தமிழ்நாட்டிற் போல் அல்லாமல் சற்றொப்ப 3,000 அளவில் பிராமி எழுத்து கல்வெட்டுகள் காணப்படுவதாக சொல்லப்படுகிறது. இவை இலங்கையில் புத்த மதம் அசோகனால் அறிமுகம் ஆவதற்கு முன்பிருந்தே கிடைக்கப்பெறுகின்றன. இவ்வெழுத்துகள் தமிழி எழுத்தும் வட பிராமி எழுத்தும் கலந்து எழுதப்பட்டவையாக உள்ளன. இங்கு பேராசிரியர் செயரத்ன பத்திர ஆராச்சி மேற்கொண்ட கள ஆய்வின் வழி வெளிப்பட்ட இராவணன் குல வழி கல்வெட்டுகள் அலசப்படுகின்றன. இவை இலங்கையை விசையன் கைப்பற்றிய காலத்திற்கு பின்பாக வெட்டப்பட்டவை என தெரிகின்றது. இவற்றில் சமண, புத்த, ஆசீவக மத செய்திகள் ஏதும் இல்லை. இலங்கையர் சிலர் வலிந்து இவை சமண, ஆசீவகம் சார்ந்தவை என தருக்கம் செய்கின்றனர். ஒரு மதம் தோன்றிப் பரவ குறைந்தது 50 ஆண்டுகளேனும் ஆகும். அந்த வகையில் கி.மு.5 ஆம் நூற்றாண்டை சார்ந்த இவை வானப்பிரஸ்த வழியை கைக்கொண்டோருடையதாக உள்ளன. இதே காலகட்டத்தில் தான் புத்த, சமண, ஆசீவக மதங்கள் வட இந்தியாவில் தோன்றின என்னும் போது அவை உடனே இலங்கையில் பரவி இருக்க முடியாது. வானப்பிரஸ்தம் என்ற துறவை ஒருவர் வாழ்க்கையின் இடைப் பகுதியில் பாட்டன் ஆகிப் போன 50 ஆம் வயதில் மேற்கொள்வர். அந்த வகையில் ஒருவர் கி.மு. 6 ஆம் நூற்றாண்டில் பிறந்திருந்தால் கூட கி.மு. 5 ஆம் நூற்றாண்டில் தான் வானப்பிரஸ்தத் துறவை ஏற்றிருப்பர். - மஹ ரஜஹ அமதே பதகு லெணெ > வேந்தர்க்கு அமைச்சரான பதகுவின் குடைவுத் தளம் இது.
- மகரஜஹ புத பருமக ஈஜு லெணெ > வேந்தர் மகன் ஈஜுவின் குடைவுத் தளம் இது.
- மஹரஜஹ அமதே மகரஹ லெணெ > வேந்தரின் அமைச்சர் மகரவின் குடைவுத் தளம் இது.
- மஹரஜஹ அமதே மகரஹ புதஹ ஸோனஹ லெணெ > வேந்தர்க்கு அமைச்சர் மகரவின் புதல்வன் சோனகன் குடைவுத்தளம் இது.
- ரவண அமதே பதகு லெணெ > முதல் எண் கல்வெட்டு குறிக்கும் பதகு ராவணனின் அமைச்சர் என்கிறது இக்கல்வெட்டு. அவரது குடைவுத் தளம் இது.
- மஹமத பமததஹ லெணெ > தாய்வழிப் பாட்டன் பிரம்ம தத்தனின் குடைவுத்தளம் என்பது கல்வெட்டு பொருள். மாதமஹ என்பது இங்கு மஹ மத என்று எதிர் எதிராக குறிக்கப்பட்டுள்ளது. அஜாதசத்ருவின் தந்தை பிம்பிசாரனின் காலத்து அங்க நாட்டு அரசன் பெயர் பிரம்மத்தன். இவனது காலம் கி.மு. 6 ஆம் நூற்றாண்டு. இவனுக்கும் இராவணனுக்கும் என்ன தொடர்பு?
- ரவண பாட கம > செயரத்ன பத்திர ஆராச்சி 1995 இல் மத்திய மாகாண இலங்கையில் ஸெலவ எனும் கிராமத்தில் வயல் நடுவே இருந்த பாறையில் கண்டு இவ்வாறு படித்துள்ளார். கல்வெட்டு பிற்பட்ட கால எழுத்தமைதியில் உள்ளது. இராவணன் படித்த கிராமம் என்று பொருள்.
- பருமக விஸவ புத பருமக ரவண லெணெ > மேன்மைமிகு விஸவன் மகன் இராவணன் தந்தை விஸவனுக்கு ஏற்படுத்திய அல்லது இராவணனுக்கு ஏற்படுத்திய குடைவுத் தளம் இது. தமிழ்நாட்டு மேட்டுப்பட்டி தமிழி கல்வெட்டு 9:4 குறிக்கும் (ம)திர அந்தை {வி}ஸுவன் இவன் தானோ?
- பருமக விஸவ புத விபிஸண லெணெ > மேன்மைமிகு விஸவன் மகன் விபீஷணன் தந்தை விஸவனுக்கு ஏற்படுத்திய அல்லது விபீஷணனுக்கு ஏற்படுத்திய குடைவுத் தளம் இது
- பருமக விஸவ புத கு _ _ _ > மேன்மைமிகு விஸவன் மகன் கு (ம்பகர்ணன்) தந்தை விஸவனுக்கு ஏற்படுத்திய அல்லது கு____ ஏற்படுத்திய குடைவுத் தளம் இது.
- விஸவ புத குவைர லெணெ > விஸவன் மகன் குவைரன் தந்தை விஸவனுக்கு ஏற்படுத்திய அல்லது குவைரனுக்கு ஏற்படுத்திய குடைவுத் தளம் இது.
- பருமக உதரஸ புத உவஹ லெணெ ஸகஸ > மேன்மைமிகு உதரனின் மகன் உவகன் தந்தை உதரனுக்கு ஏற்படுத்திய அல்லது உவகனுக்கு ஏற்படுத்திய குடைவுத் தளம் இது. குகை வாழ்க்கை ஏற்ற நாளில் வந்தவருக்கு சோறு இடப்பட்டது (ஸகஸ).
- பருமக திஸ பம ததஹ லெணெ > மேன்மைமிகு திஸன் பிரம்ம தத்தனுக்கு ஏற்படுத்திய குடைவுத் தளம் இது. 6 ஆம் கல்வெட்டு இதே ஆளை குறிக்கிறது.
- உபஸ உதரஹ லெணெ > எந்நேரமும் இறை சிந்தையில் மூழ்கிய (உபசன்) உதரனின் குடைவுத்தளம் இது. 12 ஆம் கல்வெட்டு இவரை தன குறிக்கிறது. 12 அம கல்வெட்டு இவனை குறித்ததோ?
- A. பருமக திரி புத பருமக அபய லெணெ B. பருமக திரி லெணெ > A. மேன்மைமிகு திரியின் மகன் மேன்மைமிகு அபயன் தந்தைக்கு ஏற்படுத்திய குடைவுத் தளம் இது. B. மேன்மைமிகு திரியின் குடைவுத் தளம் இது.
- பருமக ஸபலி லெணெ > மேன்மைமிகு ஸபலியின் குடைவுத் தளம் இது.
- ததஹ லெணெ ஸஹஸ > தத்தனின் குடைவுத்தளம் இது.
- கமிக வேலஹ _ _ _ _ > ஊர்தலைவன் வேலன் _ _ _
- கணஸ லெணெ ஸஹஸ > கணனின் குடைவுத்தளம் இது. சோறு இடப்பட்டது.
- கமிக வஸப மருகஹ கமிக ஸுமன புத அசிரிய குதஹ லெணெ > ஊர்த் தலைவன் வஸபனின் பேரன், ஊர்த் தலைவன் சுமனன் மகனான ஆசிரியன் குப்தனுடைய குடைவுத் தளம் இது. இதில் தாத்தா, தந்தை, பேரன் ஆகியோர் குறிக்கப்படுகின்றனர்.
- அசரிய கபில லெணெ > ஆசிரியன் கபிலனின் குடைவுத்தளம் இது.
- பருமிக ரவண ஜிதி ஸோஹிலி லெணெ ஸகஸ > மேன்மைமிகு இராவணன் மகள் சோஹிலியின் குடைவுத்தளம் இது. சோறு இடப்பட்டது.
- ரவண வபியே ஈம குவிர விஹரியட திநி > குபேரன் திரிகின்ற துறவு ஏற்ற நாளில் இராவணன் நீர்த் துறையில் வருந்தி அழுதான் (ஈம).
- மஹரஜ அமதே திரிபலஹ லெணெ ஸகஸ > வேந்தனுடைய அமைச்சன் திரிபலனுக்கு ஏற்படுத்திய குடைவுத்தளம் இது. சோறு இடப்பட்டது.
- மஹரஜஹ ரவண படகரிக பருமக கொஸஹ லெணெ > வேந்தன் இராவணனின் காலாட் படைத் தலைவன் மேன்மைமிகு கோசனுடைய குடைவுத் தளம் இது.
- மஹரஜஹ ரவண அகிநி ததக லெணெ ஸகஸ > வேந்தன் இராவணன் என்னும் அக்கினி தத்தனுடைய குடைவுத் தளம் இது. சோறு இடப்பட்டது. இங்கு இராவணனின் பிராமணப் பெயர் அக்கினி தத்தன் என குறிக்கப்படுகின்றது. இதாவது, வேள்வித் தீ கொடுத்த பிள்ளை என்று பொருள்.
- மஹரஜஹ ரவண தொட போஜக ஸுலஹ லெணெ ஸகஸ திநெ > வேந்தன் இராவணனிடம் நட்புறவான அடுவான் (சமையல்காரன்) சுலகனின் குடைவுத் தளம் இது. அவன் வானப்பிரஸ்த துறவு ஏற்ற நாளில் சோறு இடப்பட்டது.
- ரவண பவதமந பதஸந ரவண ரஜஹ குடகஹ வபியெ ஈம > இராவணனுக்கு உலக பிறவி சுழற்சியை விளக்க (பவதமந பதஸந) அரசன் இராவணன் கூனிக் குறுகி (குட) நீர்த் துறையில் வருந்தி அழுதான் (ஈம). இது அவன் எவரோ துறவு ஏற்ற போது இந்த அறிவுரையை கேள்விப் பட்டிருக்க வேண்டும். அப்போது வருந்தி இருக்கலாம்.
- விபிஸந புதஹ கரிநி லெணெ. மதக்கஸி லோசன யஹ வருஸல > விபீஷணன் மகன் கரிநியுடைய குடைவுத்தளம் இது. காமம் மிகுக்கும் கண்ணால் இவன் ஒழுக்கம் தவறியவன் (வருஸல) .
- பருமக வய லெணெ > மேன்மைமிகு வயதடைய குடைவுத் தளம் இது.
- பருமக அகிநி ததயஹ லெணெ > மேன்மைமிகு அக்கினி தத்தனுடைய குடைவுத் தளம் இது. 26 ஆம் கல்வெட்டில் இது இராவணனுடைய பெயர்.
- பருமக அதிகய லெணெ > மேன்மைமிகு அதிகனுடைய குடைவுத் தளம் இது. 34 ஆம் கல்வெட்டு இவனுடையதோ?
- ணெலெநி ரகவ ணெலெய நஸ பிவி > நிலையில்லாமல் தடுமாறும் இராகவன் நிலைப்பதற்கு மூக்கிலிடும் மூலிகை சாற்றை உறிஞ்சினான். இது இராமனை குறிக்கிறதா அல்லது இரகு வம்சத்தவன் என்ற முறையில் இலக்குவனையும் குறித்ததா? குடித்தான் என்ற பொருளுடைய பிவி தவிற பிற வினைச் சொற்கள் பிராகிருதம் அல்லாதவை; தமிழோடு தொடர்புடையவை.
- மஹரஜ ரவண புத பருமக ஈஜு புத பருமக அதிய லெண > வேந்தன் இராவணனின் மகன் ஈஜுவின் மகன் அதியனின் குடைவுத் தளம் இது. ஈஜு தான் இந்திரஜித்தனா?
- தணசடக ததஹ லெணெ ஸகஸ > தணசடக தத்தனின் குடைவுத்தளம் இது. சோறு இடப்பட்டது.
- பசெக புதஹ கநஹ லெணெ > கடைசி மகன் கனனின் குடைவுத் தளம் இது. குசனுக்கு மகன் இவன் என்று 48 ஆம் கல்வெட்டு சொல்கிறது.
- பதண ஹுதஸஹ கிதஹ ரஜஹ அபய நகரியந ஸகஸ > 38 ஆம் கல்வெட்டு இதையே சொல்கிறது.
- பதண ஹுதஸஹ கிதஹ ரஜஹ அபய நகரியந ஸகஸ > வேள்வி நெருப்பின் வாயிலிட்டபடி பாடி ஒலித்துவிட்டு அரசன் அபயன் நகரை ஊர்ந்தான். சோறு இடப்பட்டது. நகரைவிட்டு நீங்கினான் என்பதே சரியான பொருள். இதற்கு 39 ஆம் கல்வெட்டு துறவு பூண்டான் என்று துப்பு தருகிறது.
- அபய ரஜஹ ஜய லோக ஸலிசகி கிரி பதஹ லெணெ > அரசன் அபயன் உலகிற்கு வெற்றி உண்டாக குங்குலிய மரக்காட்டு (Boswellia Serrata - ஸலிசகி ) மலைப் பாதையில் குடைவுத் தளம் கொண்டான்.
- மஹரஜஹ பணித படகரிக பருமக சுமநஹ லெணெ > வேந்தனுடைய பாராட்டுப்பெற்ற (பணித) காலாட் படைத் தலைவன் மேன்மைமிகு சுமனனுடைய குடைவுத்தளம் இது. 20 ஆம் கல்வெட்டு குறிக்கும் சுமனன் இவனா?
- சொரிகிய மஹதிஸஹ லயம் மஹரஜிஹ மஜிமஹ பரிய தோவிய லெணெ > கள்ள மகதிஸன் திருப்பி தந்ததை வாங்கிக் கொண்டு மாமியார், மனைவி துதித்து புகழ்ந்த குடைவுத்தளம் இது.
- ஸிஹ்ஹந ரஜஹ புத அமிசதநஹ புத சொரிகிய மஹ திஸஹ மஜிம பரிய ஜித பதந மலிய லெணெ ஸகஸ (குறியீடு) > படிக்கின்ற அரசன் மகன் அமிச்சதனன் மகன் கள்ள மஹதிஸன் மாமியார், மனைவி, மகள் பாதம் பட்ட குடைவுத் தளம் இது. சோறு இடப்பட்டது.
- உப ரஜஹ புத அயஅபய புத அயதிஸஹ புத திஸஅயந கரிதே மஹ லெணெ. அகத அநகத சதுதிஸ ஸகஸ திநி > இளவரசன் மகன் அயஅபயனின் மகன் அயதிஸயனால் உருவான பெரும் குடைவுத் தளம் இது. துறவு நிகழ்ச்சிக்கு வந்தவர் வராதவர் என நாற்றிசை மக்களுக்கும் அன்று சோறு இடப்பட்டது.
- ரஜ ஸிவ ஸதனே வஸ தேரஸ லெணெ > அரசன் சிவன் வீட்டில் வாழும் தேர்ந்தவனுடைய குடைவுத் தளம் இது.
- ரஜ ஸிவ ஹத அயஸிவஹ மஹ ஸுதஸனே லெணெ > அரசன் சிவனைக் கொன்ற (ஹத) அயசிவனுடைய மஹாசுதர்சினி என பெயரிடப்பட்ட குடிவுத்தளம் இது. அய என்பதற்கு இளவரசன் என்ற பொருள் உண்டு.
- ரவண அசிரிய புத பருமக புஸ மிதஹ லெணெ ஸகஸ (குறியீடு) திணி ரஜஹ புத பருமக தஸர லெணெ ஸகஸ > இராவணனுக்கு ஆசிரியன் மகன் மேன்மைமிகு பூச மித்திரனுடைய குடைவுத் தளம் இது. சோறு இடப்பட்டது. திணி அரசன் மகன் மேன்மைமிகு தஸரனுடைய குடைவுத் தளம் இது. சோறு இடப்பட்டது. இரு வேறு கல்வெட்டு செய்திகள். தஸர என்பது தஸரதனோடு ஒத்து போகுமா?
- ரஜ கநஸ புத ரஜஹ புத கநஸ லெணெ அகத அநகத சதுதிஸ ஸகஸ > அரசன் கனனுடைய மகன் அரசன் மகன் கனனுடைய குடைவுத் தளம். சோறு இடப்பட்டது. 19, 36 & 48 ஆம் எண் கல்வெட்டுகள் குறிக்கும் ஒரே கனன் குசனுடைய கடைசி மகன்.
- திஸ குஸ ரஜ புத பருமக கநஸ லெணெ > திஸன் குச அரசன் மகன் மேன்மைமிகு கனனின் குடைவுத் தளம் இது. இது இராமன் மகன் குசனா?
இராவணன் தந்தை விஸவனோ அல்லது அண்ணன் குவைரனோ அரசனாக இல்லை என்பதை வைத்து இராவணன் தன் தாய்வழிப் பாட்டன் வாரிசாக வேந்தனாக ஆகி இருப்பானோ? என்று எண்ணத் தோன்றுகிறது. மேலும் இவர்கள் வட இந்தியாவில் இளமையை கழித்துவிட்டு வானப்பிரஸ்த துறவிற்காக மட்டும் இலங்கையை தேர்ந்தெடுத்தாரோ என்றும் எண்ணத் தோன்றுகிறது. இலங்கையின் வெதண நிலை, உண்ணச் சோறு எளிதாக கிடைத்ததனால் கப்பலேறி இங்கு வந்தாரோ?
இராமாயணத்தின் சில கதைக் கூறுகள் இக் கல்வெட்டுகளோடு பொருந்துகின்றன. இங்கு கல்வெட்டுகள் சுட்டும் அமைச்சகர்கள் பெயர் இராமாயணத்தில் இடம்பெறக் காணோம். 2,500 ஆண்டுகள் முன் வாழ்ந்த இம்மனிதர் அடுத்த 1,000 கழித்து காவிய நாயகர்களாக ஆக்கப்பட்டது மட்டும் அல்ல தெய்வமாகவே உயர்ந்தது வியப்பிலும் வியப்பு அன்றோ? இந்த பிராகிருத மொழி கல்வெட்டுகள் குறித்து கருத்துரை வழங்கத் தக்கவர் வட இந்திய பிராகிருத மொழி அறிஞர்கள் தாம். அவர்கள் ஒப்புதல் இல்லாமல் இவற்றை சிங்கள பிராகிருதம் என அறிவிப்பது குற்றம் ஆகும். பேராசிரியர் செயரத்தன பத்திர ஆராச்சி இந்த கல்வெட்டுகளின் மெய்யான மைப்படியை வெளியிடாமல் கையால் வரைந்த எழுத்து வடிவத்தை மட்டுமே தருகின்றார் என்ற குற்றச்சாட்டும் உள்ளது,
கீழே உள்ள தொடுப்பில் மேற்கண்ட 48 பிராமி கல்வெட்டு எழுத்துக்களையும் படிக்க முடியும். பார்க்க பக்கம் 56 முதல் 91 வரை.