நெல்லரிசி அரியல்

160 views
Skip to first unread message

kanmani tamil

unread,
Dec 3, 2023, 10:48:08 AM12/3/23
to vallamai
பெரும்பாணாற்றுப்படையில் இடம்பெறும் இன்னொரு நெல்லரிசிப் பண்டம் 'அரியல்' ஆகும்.
இது பெரிதும் அக்கால மக்களால் விரும்பி உண்ணப்பட்ட கள் வகை ஆகும். இதைத் 'தோப்பி' என்றும் பண்டு அழைத்தனர்.
இதன் செய்முறை வருமாறு:
"அவையா அரிசி அம்களித் துழவை
மலர்வாய்ப் பிழாவில் புலர ஆற்றி 
பாம்பு உறை புற்றின் குறும்பி ஏய்க்கும் 
பூம்புற நல்அடை அளைஇ தேம்பட 
எல்லையும் இரவும் இருமுறை கழிப்பி
வல்வாய்ச் சாடியின்  வழைச்சு அற விளைந்த
வெம்நீர் அரியல் விரல் அலை நறும்பிழி" (அ.275-281) 
குற்றாத கொழியல் அரிசியை பக்குவமாகக் களியாகத் துழாவிக் கூழாக அட்டு அகன்ற வாயை உடைய தட்டுப் பிழாவில் ஊற்றி உலர்த்துவர். ஆறிய பின்; பாம்பு வதியும் 
புற்றில் உள்ள புற்றாம்பழஞ் சோறு போன்ற பொலிவு பெற்ற புறத்தை உடைய முளையை இடித்து அதோடு சேர்ப்பர். இனிமை மிகுவதற்காக இரண்டு இரவும் இரண்டு பகலும் 
கழிந்த பின்னர்; வலிய சாடியில் புளிக்க வைப்பர். அதுவே முற்றின கள். வெந்நீரில் வேக வைத்து வடிகட்டி விரலால் அலைத்துப் பிழிவர். இது மணம் பொருந்தியது.
பொ.வே.சோமசுந்தரனார் எழுதிய உரைப்பகுதி. இருண்மைக் கவிதை மாதிரி இருக்கிறது...
இதில் சேர்க்கப்படும் முளை எதைக் குறிக்கிறது?
சக 
  

.           

kanmani tamil

unread,
Dec 4, 2023, 12:40:33 PM12/4/23
to vallamai
1931ம் ஆண்டு உ.வே.சாமிநாதையர் சென்னை கேசரி அச்சுக்கூடத்தில் பதிப்பித்து வெளியிட்ட நச்சினார்க்கினியர் உரையைப் பின்பற்றியே பெருமழைப் புலவர் பதவுரை எழுதியுள்ளார் (ப.75-76) 3ம் பதிப்பு: https://www.projectmadurai.org/pm_etexts/pdf/pm0492.pdf

அப்பதிப்பில் அகநா.8:1-2& சீவக,1614 ஆகிய பாடல்களில் பெரும்பாணாற்றுப்படைத் தொடர்களை ஒத்த தொடர்கள் இருப்பதை எடுத்துக் காட்டி உள்ளார். 

ஆயினும் நெல்லரிசி அரியலின் செய்முறை தெளிவாகவில்லை.

சக 

   
 

kanmani tamil

unread,
Dec 5, 2023, 12:51:07 AM12/5/23
to vallamai

நச்சினார்க்கினியர் உரை எழுதி உ.வே.சா. குறிப்பு எழுதிய பதிப்பில் இடம் பெறும் ஒத்த பாடல் குறிப்புகளைப் பார்ப்பதற்கு முன்....

இந்தக் காணொலியில் நெல்லரிசிக் கள்ளைச் செய்யும் முறை பெரும்பாணாற்றுப்படைப் பாடல் அடிகளைப் பெரிதும் தெளிவுறுத்துவதைக் காண்போம். 

இந்தக் காணொலி தமிழில் பேசவில்லை. கொரிய மொழி என்று அடியில் இடம் பெறும் விமர்சனம் சொல்கிறது. 

அந்த அம்மா நம் இலக்கியம் சொல்வதைப் போலவே தீட்டாத அரிசி'யை... 'அவையா அரிசியை நன்கு மசிய வேக வைக்கிறார்கள். 

துழாவித் துழாவி... எடுத்து வேக்காட்டைச் சோதித்து...

சரியான பதம் வந்தவுடன் அதை ஒரு ஓலைப்பாயில் விரித்து ஆற விடுகிறார்கள். நம் இலக்கியம் 'மலர்வாய்ப் பிழா' என்கிறது. உரை 'தட்டுப் பிழா' என்கிறது. 100விழுக்காடு பொருத்தமாக உள்ளது. ('பிழா' என்பது எங்கள் வட்டாரத்தில் இன்றும் பனையில் இருந்து பெறும் பெட்டி வகைகளைக் குறிக்கிறது. வாயகன்ற பனை ஓலைப் பெட்டியை (basin like...) பிழாப்பெட்டி/ பெழாப்பெட்டி என்று தான் சொல்வோம். 

ஆறிய பின்னர் அதோடு ஏதோ வெள்ளையான விதை போன்ற ஒன்றை... (அது என்ன என்று அடையாளம் தெரியவில்லை) மசித்துப் பொடியாக்கிக் கலக்கிறார்கள். சோறு ஆக்கும் போது அந்தம்மா மசிக்க வசதியாக அப் பொருளை உலை மூடியின் சூட்டில் வறுபட விட்டுப் பின்னர் பொடிக்கிறார். நம் இலக்கியம் 'முளை'யை இடித்துக் கலந்ததாகக் கூறுகிறது. tamilconcordance அவ்வவ் அடிகட்கு உரைக்கும் நேர்பொருளில் 'முளைகட்டிய நெல்' என்கிறது. 

அதை வீட்டிற்கு உள்ளே எடுத்துச் சென்று வைக்கிறார். எத்தனை நாள் வைத்தார் என்று புரியவில்லை. பின்புலத்தில் வேற்றுமொழி ஒலிக்கிறது. நம் இலக்கியம் 'தேம்பட எல்லையும் இரவும் இருமுறை கழிப்பி'; அதாவது... இரண்டு இரவுகள் கழியும் வரை சுவையைக் கூட்ட... அதை வைத்து விடச் சொல்கிறது. 

அதன் பின்னர் பன்றிக்கறி சமைக்கிறார். இடையே வெந்நீரைக் கொதிக்க விடுகிறார். நீரின் சூட்டை விரலால் சோதிக்கிறார். 
கலவையோடு இருக்கும் சோற்றுப்பானையில் வெந்நீர் விடுகிறார். நம் இலக்கியம் 'வெம்நீர் அரியல்' என்று தான் அடை கொடுக்கிறது. 

பன்றிக்கறி தயார் ஆனவுடன் வெந்நீர் ஊற்றிய கலவையைத் துணியால் அரிக்கிறார்... அதாவது வடிகட்டி இறுக்கிறார். 'அரியல்' என்ற பெயர் பொருந்தி விடுகிறது. 

பின்னர் தான் அரித்த துணியில் எஞ்சியதைக் கை விரல்களால் பிழிகிறார். நம் இலக்கியம் 'விரல் அலை நறும்பிழி' என்கிறது. 'பிழி' என்ற பெயரும் பொருந்தி விடுகிறது. 

கடியலூர் உருத்திரங் கண்ணனார் கூறும் 'முளை' பற்றிய ஐயம் தவிர வேறெந்த ஐயமும் எழ வழி இல்லை. இப்போது நெல்லரிசி அரியல் செய்முறை கிட்டத்தட்ட தெளிவாகி விட்டது. 

காணொலியில் அந்த அம்மா பொடித்த அவ் வெண்மையான பொருள் முருங்கை விதையுள் இருக்கும் பருப்பு போலக் காண்கிறது. இது எனது ஐயம் மட்டுமே... முடிவு இல்லை. 

(தொடரும்)

kanmani tamil

unread,
Dec 6, 2023, 7:34:50 AM12/6/23
to vallamai
பின்வரும் காணொலியில் வடநாட்டைச் சேர்ந்த ஒரு அம்மா அரிசிக்கள் தயாரிக்கிறார். நேற்று அனுப்பிய காணொலி போலவே... இடித்துச் சேர்க்கும் வெள்ளைப் பொடி தவிர பிற அனைத்தும் நம் இலக்கியச் செய்தியோடு ஒத்துப் போவது தான். இந்தக் காணொலியில் இன்னொரு சிறப்பு. தட்டுப் பிழா என்று பொருள் சொல்லப்பட்ட 'மலர்வாய்ப் பிழா'வின் பயன்பாடு. அதுவும்  அப்படியே பொருந்தி உள்ளது. அத்துடன் நம் இலக்கியம் அரியலைப் புளிக்க வைக்கப் பயன்படுத்தும் "வல்வாய்ச் சாடி வழைச்சு அற" என்ற குறிப்பிற்கு ஏற்ற பானையைப் பயன்படுத்துகிறார். குறுகிய வாயை உடைய இப் பானையின் பயன்பாடு அக்கலவை நொதிப்பதை சீர்படுத்திச் சுவை கூட்ட ஏதுவாகும். 


இடித்துச் சேர்ப்பதன் காரணம் வெந்த அரிசி நன்கு நொதிப்பதற்காக (புளிக்க) எனப் புரிகிறது. ஏனெனில் நவீன முறையில் rice wine செய்வோர் வேகவைத்து உலர்த்தி ஆறிய நெல்லுச் சோற்றுடன் yeast கலக்கின்றனர். அதோடு வாய் குறுகிய ceramic jar பயன்படுத்துகின்றனர். 
"வழைச்சறு சாடி மட்டு" (சீவக.1614) எனச் சீவக சிந்தாமணி பாடும் காரணமும் இவ்வழக்கம் தொன்று தொட்டுப் பாரம்பரியமாகப் பின்பற்றப் பட்டு வந்ததைக் காட்டுகிறது. 
(தொடரும்)

சக 

kanmani tamil

unread,
Dec 6, 2023, 11:11:51 PM12/6/23
to vallamai
பண்டு தமிழகத்தின் ஒரு பகுதியாக இருந்த கேரளத்திலும் இன்றும் வழக்கத்தில் இருக்கும் நெல்லரிசி அரியல் செய்முறையைப் பின்வரும் காணொலியில் பார்க்கலாம். அதே செய்முறை; அதே வெள்ளை நிற உருண்டைகள் பொடித்துச் சேர்க்கின்றனர்; அதே குறுகிய வாய் உடைய பானை; அதே வடிகட்டும் முறை. 


அந்த வெள்ளை உருண்டைக்கு raanu என்று பின்வரும் காணொலி பெயர் இடுகிறது. ஒரு கிலோ அரிசிக்கு ஒரு உருண்டை போதுமாம். 


அது என்ன எனத் துழாவியதில்:
The making involves the use of ranu tablets, which is essentially a combination of about 20-25 herbs and acts as a fermentor.

அதனால் பண்டைத் தமிழகத்து
வழக்கப்படி வெந்த நெல்லுச் சோறு நொதிப்பதற்கு முளையை (அது நெல்முளை ஆகவும் இருக்கலாம்) இடித்துச் சேர்த்தனர் எனத் தெரிகிறது. 
 
இன்று தமிழகத்தில் பேரும் மாறி செய்முறையும் வேறுபட்டு சுண்டக்கஞ்சி என்ற பெயரில்; வடிகட்டத் தேவை இன்றிப் பிழியாமலே மண்ணில் புதைத்துப் புளிக்க வைத்துக் கருவாடு பொரித்துச் சாப்பிடுகின்றனர். இதைக் கள் என்று சொல்ல இயலாது. அரியல், பிழி ஆகிய பெயர்களும் இதற்குப் பொருந்தாது. 
ஆனால் நொதிப்பதற்கு ஏதுவாகப் போடும் பண்டங்கள் நமக்கு நன்கு தெரிந்த தயிர், மாங்காய், சின்னவெங்காயம், பச்சை மிளகாய்...


அரிசிக்கள் தற்போது தமிழகத்தில் வழக்கில் இல்லை. 

சக 

kanmani tamil

unread,
Dec 7, 2023, 9:25:48 PM12/7/23
to vallamai
நொதிப்பதற்கு ஏதுவாகக் கலந்த முளை புற்றாஞ்சோறு போலக் காட்சி அளித்தது என்ற கட்புல உருக்காட்சிக்கு உரிய  உவமையை விளக்க உ.வே.சாமிநாதையரின் குறிப்புரையுடன் கூடிய நச்சினார்க்கினியர் உரை அகநானூறு 8ம் பாடலைச் சுட்டுகிறது.

"ஈயல் புற்றத்து ஈர்ம் புறத்து இறுத்த
குரும்பி வல்சிப் பெருங் கை ஏற்றை
தூங்கு தோல் துதிய வள் உகிர் கதுவலின்,
பாம்பு மதன் அழியும் பானாட் கங்குலும்" அகம்-8

மழைக்காலத்தில் ஈசலாகி வெளிவரும் கறையானின் சேகரமாகிய உணவிற்காகப் புற்றினுள் கையை விட்ட கரடியால் உள்ளிருந்த பாம்பு மருண்டது என்பது காட்சி. 'குரும்பி வல்சி' போல; நொதிப்பிற்குப் பயன்படுத்திய முளை தோன்றியது என்கிறது பெரும்பாணாற்றுப்படை. 

புற்றில் இருந்து எயிற்றியர் வாரி வந்த புல்அரிசி பற்றிய குறிப்பும் பெரும்பாணாற்றுப்படையில் உளது. அதை வாடூனுடன் (உப்புக் கண்டத்துடன்) சமைத்தனர் (பெரு.91-100).

எனவே நொதிப்பிற்கெனச் சேர்க்கப்பட்ட முளை; நெல்லரிசி முளையோ அன்றிப் புல்லரிசி முளையோ எதுவாகவேனும் இருக்கலாம் எனக் கருத இடம் உளது. இதற்கு முன்னர் நாம் கண்ட காணொலியில் சேர்க்கப்பட்ட raanu எனும் வெள்ளை உருண்டைகள் 20-25 மூலிகைகளின் சேர்க்கை என்பதால் முளைக்கும் பயிருக்கு அதில் இடமிருக்க வாய்ப்பு உளது.

(தொடரும்) 
சக

kanmani tamil

unread,
Dec 8, 2023, 8:20:35 PM12/8/23
to vallamai
நெல்லரிசியினின்றும் செய்த கள்ளைத் தோப்பி என்றும் பெரும்பாணாற்றுப்படை சுட்டுகிறது. பசுக்களை மீட்ட மறவர் இல்லில் செய்த கள்ளின் தோப்பி பருகினர். 
"இல்லடு கள்ளின் தோப்பி பருகி"(பத்துப் பாட்டு- தொகுதி- l, பெரும்பாணாற்றுப் படை ப.84, அ.142, 2007, கழக வெளியீடு, சென்னை.).
'இல் அடு கள் இன்தோப்பி' எனப் பிரித்துத்; தோப்பியின் இனிமையை விதந்து கூறுகிறார் பொ.வே.சோம சுந்தரனார் (ப.87). பிற பண்டை இலக்கியக் குறிப்புகளையும் சுட்டிக் காட்டுகிறார். 

மகட்போக்கிய தாய் தன் மகள் சென்ற ஆற்றின் இடர்ப்பாடு பற்றிப் பேசும் போது மறவர் செய்யும் நடுகல் வழிபாட்டில் இக்கள்ளைப் படைப்பர் என்கிறாள். 
"தோப்பிக் கள்ளொடும் துரூஉப் பலி கொடுக்கும்" (அகம்.35) என்ற அடிக்கு உரையாசிரியர் ந.மு.வேங்கடசாமி நாட்டாரும் ரா.வேங்கடாசலம் பிள்ளையும் சேர்ந்து எழுதிய பதவுரை 'நெல்லால் ஆக்கிய கள்' ஆகும் (அகம்.களிற். (2009), ப.100).

"துழந்து அடு கள்ளின் தோப்பி" என்கிறது மணிமேகலை (துயில் எழுப்பிய.அ.71).
அதைத் தயார் செய்யும் போது துழந்து அட்டனர் என உரைப்பது 'அம்களித் துழவை' என்ற பெரும்பாணாற்று அடியை ஒத்துச் செல்கிறது. 

தோப்பி என்பது வீட்டில் தயார் செய்யும் கள்வகைகட்கு உரிய பொதுப் பெயராகக் காணப் படுகிறது. 

"பாப்புக் கடுப்பு அன்ன தோப்பி" (அகம்.348);
எனும் பாடலடியின் படி தோப்பியைப் பருகும் போது பாம்பின் விடம் ஏறுவதைப் போல போதை ஏறும் என்ற பொருள் கிடைக்கிறது. இப்பாடலடியைப் பெரும்பாணாற்றுப்படையில் இடம் பெறும் 'தோப்பி'க்கு விளக்கவுரை எழுதும் போது பொ.வே.சோ. சுட்டிக் காட்டுகிறார். ஆயின் பாடலின் முற்பகுதி சொல்லும் செய்தியின் படி இது நெல்லரிசிக் கள் அன்று. மாம்பழச்சாறையும் பலாப்பழச் சாறையும் தேனொடு கலந்து மூங்கில் குழாயில் ஊற்றி நிலத்தினுட் புதைத்துப் புளிக்க வைத்துச் செய்த கள் ஆகும்.
"தேன்தேர் சுவைய திரளரை மாஅத்துக் 
கோடைக்கு ஊழ்த்த கமழ்நறுந் தீங்கனி
பயிர்ப்பு உறுபலவின் எதிர்ச் சுளை அளைஇ
இறாலோடு கலந்த வண்டுமூசு அரியல் 
நெடுங்கண் ஆடமைப் பழுநிக் கடுந்திறற் 
பாப்புக் கடுப்பன்ன தோப்பி' (அகம். நித்தி. 2008, ப.109)...

(தொடரும்) 

சக 

வேந்தன் அரசு

unread,
Dec 9, 2023, 12:06:21 AM12/9/23
to vall...@googlegroups.com
அருமைமிக்க செய்திகள்.நன்றி அம்மை.

சனி, 9 டிச., 2023, முற்பகல் 6:50 அன்று, kanmani tamil <kanmani...@gmail.com> எழுதியது:
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CA%2BjEHcvBqU09EMTtgpnmFtQKjR-xxpC%2B0u7E4oMXj2SDXkTCqw%40mail.gmail.com.


--
வேந்தன் அரசு
வள்ளுவம் என் சமயம்

kanmani tamil

unread,
Dec 9, 2023, 8:19:47 AM12/9/23
to vallamai
வேங்கடத்து வெம்மையான குடியிருப்புகளில் ஏற்றினைக் கொன்று அதன் கொழுப்பு மிகுந்த ஊனைச் சுட்டுத் தின்றோர் பின் தாகம் தீரத் தோப்பி பருகியதாகப் பேசுகிறது அகம்.265. 
"விளரூன் தின்ற வேட்கை நீங்கத் 
துகளற விளைந்த  தோப்பி  பருகிக் 
குலாஅ வல்வில் கொடுநோக்கு ஆடவர்...
மராஅஞ் சீறூர் மருங்கின்...
... வேங்கடம் தழீஇ 
வெம்முனை" 
என அவரது குடியிருப்புகள் சுட்டப்படுவதால் இப்பாடல் சுட்டும் தோப்பி வீட்டில் செய்தது ஆகிறது. 

வீட்டில் புளிக்க வைக்கும் கள் அனைத்தும் தோப்பி என்பதை இன்னொரு சான்று மூலமும் நிறுவலாம். விலை கொடுத்து வாங்கும் கள்ளை நறவு என்பர். பெரும்பாணாற்றுப்படையே இக்கருத்தை விளக்குதற்கு திற்கு உரிய ஆதாரத்தைத் தருகிறது. 

கேளா மன்னர் கடி புலம் புக்கு 
நாள் ஆ தந்து நறவு நொடை தொலைச்சி 
இல் அடு கள் இன் தோப்பி பருகி
பெரு.அ.140-142
பகை மன்னர் ஆநிரைகளைக் கவர்ந்து வந்தோர் தாம் கடனாகப் பெற்றுக் குடித்த நறவுக்கு விலையாக அற்றைப் பொழுதில் தாம் கவர்ந்த பசுவைக் கொடுத்துக் கடனை அடைத்தனர் என்று சொல்லிய பின்னர்; வீட்டை அடைந்து அங்கே ஆக்கிப் புளிக்க வைத்த தோப்பியைப் பருகினர் என்பதால்; தோப்பிக்கும் நறவுக்கும் இடையிலான வேறுபாடு தெரிகிறது. 

"அவிழ்நெல்லின் அரியல்" புறம்.395
என்ற புறநானூற்றுத் தொடர் நெல்லரிசி அரியல் பற்றிய இன்னொரு தெளிவைத் தருகிறது. 

சக 

kanmani tamil

unread,
Dec 9, 2023, 7:36:03 PM12/9/23
to vallamai
///அருமைமிக்க செய்திகள்.நன்றி அம்மை./// வேந்தர் ஐயா நேற்று எழுதியது...
Thanks for your complementary comment Venthar aiyaa
Sk

N. Ganesan

unread,
Dec 9, 2023, 10:46:07 PM12/9/23
to vall...@googlegroups.com
On Fri, Dec 8, 2023 at 7:20 PM kanmani tamil <kanmani...@gmail.com> wrote:
நெல்லரிசியினின்றும் செய்த கள்ளைத் தோப்பி என்றும் பெரும்பாணாற்றுப்படை சுட்டுகிறது.

தோப்பி < தோய்ப்பி (தோய்ப்பு-தல் :: நொதிக்கச் செய்தல்)
----------------------------------------

தோப்பி - சொல்வரலாறு
--------------------
On Wednesday, January 20, 2016 at 9:10:58 PM UTC-8, Neander Selvan wrote:
> மாடுகளுக்கு அரிசி ஒயினான சேக்கில் மசாஜ் செய்கிறர்கள். இப்படி செய்வதால் இரைச்சி மிருதுவாக இருக்குமாம்

சாக்கே என்னும் அரிசி பீர் (beer) - https://www.youtube.com/watch?v=rf1AU2XWiyI
https://en.wikipedia.org/wiki/Sake
சாக்கே பீரை பல அழகான மட்கலயங்களில் சூடு செய்து பரிமாறுகின்றனர்.

சூடாக அரிசிக்கள்ளை தமிழரும் குடித்ததற்கான குறிப்புகள் உள்ளன.
பலவகையான சாராயம் காய்ச்சப்பட்டாலும், சூடாகக் குடிப்பதை “அடுநறா” என்றார்கள் போலும்.
மடுத்தல் > அடுத்தல் (cf. மலர் > அலர்). அடுநறா = தீமடுத்து (சூட்டில் சமைத்து) அருந்தும் நறவு (கள்வகை).

ஜப்பானின் ஸாக்கே போன்ற அடுநறா (ஊறுகாய் போலும் ஓர் வினைத்தொகை) திருவள்ளுவரும்
குறிப்பிடுகிறார்.
உண்டார்கண் அல்லது அடுநறாக் காமம்போல்
கண்டார் மகிழ்செய்தல் இன்று

------------------------------------------------------------

அரிசிக்கள்ளுக்கு “தோப்பி” என்பது சங்க இலக்கியப் பெயர். தோய்ப்பது என்னும் fermentation குறித்த
சொல்லைத் தரும் சொல்: தோய்ப்பி > தோப்பி. மது அருந்தினால் மூளை இருளும்.
எனவே, மைப்பு = மய்ப்பு = மப்பு. மப்பும்,மந்தாரமும். மப்பு, தோப்பி, ... - இவற்றில் ய் மெய் ஒளிந்துள்ளது.
தோப்பி = தோய்ப்பி. தோய்குதல் என்னும் வினையை தோய்தயிர், தோசை போன்றவர்றிலும் காணலாம்.
தோய்கு = தோகு > தகி (dahi vaDaa என இந்தியில் தயிர்). தோப்பி இன்றும் தயாரிக்கப்படுகிறது.
முத்துராமலிங்கத் தேவர் பிறந்தநாளில் கலசங்களில் தென்னம்பாளை செருகி, அரிக்கள்ளான தோப்பி
ஊர்வலங்களில் படையல்கள் செல்கின்றன.

ஃபெர்மெண்ட்டேஷனுக்கான தோய்தல் உள்ள சொல் தோய்ப்பி. தோப்பி என சங்க இலக்கியத்திலும், இன்றும்
வழங்கும் சொல். இந்திய உணவறிஞர் அச்சய்யா எழுதாத செய்தியிது:
https://groups.google.com/forum/#!msg/mintamil/x8hNCc7sndo/wKxh3kwIDQAJ

நா. கணேசன்


kanmani tamil

unread,
Dec 10, 2023, 9:28:21 PM12/10/23
to vallamai
"அவிழ்நெல்" என்ற சொற்றொடர் முளைவிட்ட நெல்லைக் குறிக்கிறது. நீரில் ஊறிய நெல்லினின்று முளை வெளிவரும் போது அதன் மேல்தோலாகிய உமி விரிந்து வழிவிடும் நிலையே அவிழ்தல் ஆகும். 'அம்களித் துழவையை மலர்வாய்ப் பிழாவில் புலர ஆற்றிப் பாம்பு உறை புற்றின் குறும்பி ஏய்க்கும் பூம்புற நல்அடை அளைஇ'ப் புளிக்க வைக்கும் நெல்லரிசி அரியலின் செய்முறையில் நெல்முளை நொதிப்பியாகப் (fermentor) பயன்பட்டமைக்கு இது ஏற்ற ஆதாரம் ஆகிறது.

அவல் என்பது தட்டையாகிய நெல்முளை ஆகும். 

இன்றைய நடைமுறையிலும் நெல்முளை நொதிப்பியாகப் பயன்படுகிறது என்பதற்கு ஆப்பம் செய்முறையில் அவல் சேர்ப்பது குறிப்பிடத் தக்க ஆதாரம் ஆகிறது. 


பாரம்பரியமாக முளைகட்டிய நெல்லை உலர்த்தி; அரிசியின் பச்சைத் தன்மையைப் பாதுகாத்து; உமி மட்டும் நீங்குதற்குரிய பக்குவமான நடவடிக்கைக்குப் பின்னர் தட்டையாக்குவதால்; பாசவல் என்று சிறப்புப் பெயர் பெற்ற அவலின் செய்முறை நினைதற்கு உரியது ஆகிறது (பார்க்க: பெரிய கார்த்திகையும் அவல் பாயசமும்- வல்லமை குழுமத்தில் 20 ஜூலை 2023 முதல் வெளியான இழை). 

பாரம்பரியச் செய்முறை மட்டும் அல்லாது நடைமுறையிலும் இட்லி மாவு நொதிப்பதற்குத் தோதாகத் தமிழ் இலக்கியம் 'பாசவல்' என்று சொல்லும் அவல்/flattened rice சேர்த்து அரைக்கும் வழக்கைப் பின்வரும் செய்முறை காட்டுகிறது. 
இதனால் அவிழ்நெல் நொதிப்பியாகப் பயன்பட்டமை உறுதிப்படுவதுடன் பாசவல் பெயர்க் காரணமும் தெளிவாகிறது. 

அரியல் என்ற பெயர் கள்வகைகட்கு உரிய பொதுப் பெயரே ஆகிறது. 
'கள் விற்கும் அரியல் பெண்டிர்  குறுகிய வாயையுடைய அல்கில் சொம்பில் பாளை சுரந்த கலுழிக் கள்ளை ஊற்றித் தரப் போருக்குச் செல்லும் ஆடவர் உண்டனர்' என்கிறது அகம்.157. 
"அரியற் பெண்டிர் அல்கிற் கொண்ட
பகுவாய்ப் பாளைக் குவிமுலை சுரந்த
அரி நிறக் கலுழி ஆர மாந்தி,
செரு வேட்டு, சிலைக்கும் செங் கண் ஆடவர்"
என்ற பாடற்பகுதி நோக்குக. இங்கே முத்தின் நிறத்தை உடைய கலங்கல் வடிகட்டப்பட்டுப் பனங்கள் ஆவதால் அரியல் எனப்படுகிறது. 
"பிணர்ப் பெண்ணைப் பிழி மாந்தியும்" (பட்டினப்பாலை- அ.89) எனப் பனங்கள் 'பிழி' என்ற பெயராலும் அழைக்கப்படுகிறது. 

பலாப்பழம் முற்றி வெடித்து வழியும் சாறு புளித்து அரியல் ஆகும் வாடை தூக்கலாக எங்கும் நிறைந்து மூக்கைத் துளைக்கும் நுகர்புல உருக்காட்சி 
"பலாஅம் பழுத்த பசும்புண் அரியல் 
வாடை தூக்கும் நாடு" பதிற்றுப்பத்து 61
என்ற அடிகளில் இடம் பெற்று உள்ளது. 
இதனால் அரியல் எனும் பெயர் நெல்லரிசிக் கள்ளை மட்டும் இன்றிப் பனங்கள், பழச்சாற்றுக் கள் எனக் கள்வகைகளின் தொகுதிக்கு உரிய பொதுப்பெயர் ஆகிறது.

காரணப் பெயர்களாகும் அரியல், பிழி ஆகிய பொதுப்பெயர்கள் செய்முறை அடிப்படையில் நெல்லரிசிக் கள்ளுக்கு உரியதாக அமைந்து; நெல்முளை அல்லது புல்முளையை இடித்து; நொதிப்பியாகத் தோய்த்து வீடுகளில் தயார் ஆனதால் தோப்பி எனும் பெயரும் பெற்றது. 

(முற்றும்)

சக 

N. Ganesan

unread,
Dec 11, 2023, 9:41:07 PM12/11/23
to vall...@googlegroups.com
SK > அரிசிக்கள் தற்போது தமிழகத்தில் வழக்கில் இல்லை. 

பல ஆண்டுகளுக்கு முன், ஆவணம் இதழில் தோப்பிக் கள் தயாரிக்கும் முறை தெரிவிக்கும் கட்டுரை படித்த நினைவு. தென்னை, பனை, ஈஞ்சை இதுபோன்ற Palm species மிகுந்த நிலம். எனவே, கள் அளிக்கும் இந்தப் பாளையை அறுத்து கலசத்தில் (அரிசி? கஞ்சி? பழஞ்சோறு (ஓதனம்)? ) செருகிவைத்தால், புதுமை (= வழைச்சு) மாறிக் கள்ளாகும்.
“வழைச்சு அறு சாடி மட்டு” (சிந்தாமணி) இதுவாகலாம்.
“வல் வாய்ச் சாடியின் வழைச்சு அற விளைந்த வெந்நீர் அரியல்”
– பெரும்பாணாற்றுப்படை 280
அரி என்பது அரிசி. வ்ரீஹி :: வரி/அரி. அரி(சி) தரும் கள் அரியல்.
மேலும், வெந்நீர் அரியல் என்பதால். அரிசியைக் கஞ்சி (அ) சோறு ஆக்கிப் பின்னர் தென்னம் பாளை செருகிப் புதுமை போக்கி (ஒரு வாரம் நொதிக்கச் செய்து) செய்வது அரியல் எனலாம்.

ஆவணம் எந்த இதழ் எனக் கேட்டுள்ளேன். கிடைத்தால் தருகிறேன். இன்றும் வழக்கத்தில் உள்ள தோப்பி செய்முறை அது.
சங்கச் சொல் அறிவோம் - தோப்பி.       எழுத்தாளர்: இரா.வெங்கடேசன்
https://groups.google.com/g/houstontamil/c/fPFAQiPpuZ0

அரிசிக் கள்ளு சமயத்துடன் தென்கிழக்கு ஆசியா முழுக்க உண்டு.
https://www.whetstonemagazine.com/journal/malaysian-toddy-tuak-and-tapai-keep-tradition-alive
"Rice wine is a spiritual and cultural offering for many indigenous communities in East Malaysia, who may choose to steer away from it when they convert from animism to Islam or Christianity. "
இது தொடர்பாக, தமிழர் காணொளி:
தென்னம் பாளையில் சுடு கஞ்சியை பக்தர்கள் மீது தெளித்த பூசாரிகள்
https://www.youtube.com/watch?v=uYWgPV389kE

There are about 1000 fermented beverages and foods in India. The ferment starter culture involves molds, yiest,
bacteria combinations.
https://academic.oup.com/femsyr/article/6/1/30/548560
http://www.ifrj.upm.edu.my/18%20(02)%202011/(2)%20IFRJ-2010-122.pdf
https://twitter.com/ThanjaiMadhavan/status/1536720991392452609

NG


--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

வேந்தன் அரசு

unread,
Dec 12, 2023, 6:47:33 AM12/12/23
to vall...@googlegroups.com
Beer, Vine, Whisky போன்றனவற்றுக்கு எந்த தமிழ்ச்சொல்பொருந்தும் எனக்கண்டு சொல்வீரா?

செவ்., 12 டிச., 2023, முற்பகல் 8:11 அன்று, N. Ganesan <naa.g...@gmail.com> எழுதியது:

N. Ganesan

unread,
Dec 16, 2023, 8:51:19 AM12/16/23
to vall...@googlegroups.com, housto...@googlegroups.com
On Wed, Dec 6, 2023 at 10:11 PM kanmani tamil <kanmani...@gmail.com> wrote:
பண்டு தமிழகத்தின் ஒரு பகுதியாக இருந்த கேரளத்திலும் இன்றும் வழக்கத்தில் இருக்கும் நெல்லரிசி அரியல் செய்முறையைப் பின்வரும் காணொலியில் பார்க்கலாம். அதே செய்முறை; அதே வெள்ளை நிற உருண்டைகள் பொடித்துச் சேர்க்கின்றனர்; அதே குறுகிய வாய் உடைய பானை; அதே வடிகட்டும் முறை. 


அந்த வெள்ளை உருண்டைக்கு raanu என்று பின்வரும் காணொலி பெயர் இடுகிறது. ஒரு கிலோ அரிசிக்கு ஒரு உருண்டை போதுமாம். 


அது என்ன எனத் துழாவியதில்:
The making involves the use of ranu tablets, which is essentially a combination of about 20-25 herbs and acts as a fermentor.

இந்த Starter culture for rice beer சீனாவின் மஞ்சள் ஆற்றுப் படுகையில் உருவானது. ஒட்டுகிற அரி (அரிகி/அரிசி, வ்ரீஹி) யின் அரியல் செய்ய உருவானது. Starter tablets/balls made from glutinous (sticky) rice and herbs were from China. These got introduced to South East Asia around 1000 CE. பிரியாணி என்ற சொல் வ்ரீஹி என்னும் அரி (அரிசியில்) உடன் தொடர்புள்ளது. கேரளாவில் அரிக்கள்ளு என்கிறார்கள் அரியலை.
வடகிழக்கு இந்தியாவுக்கு, கம்போடியா போன்ற நாடுகளில் இருந்து சீனி உருண்டை அரியல் தயாரிக்க வந்துள்ளது. இந்த உருண்டைகள் பழந்தமிழில் இல்லை.

மேலும் ஆராய,
Rice Fermentation Starters in Cambodia:
Cultural Importance and Traditional Methods of Production
YAMAMOTO Sota and MATSUMOTO Tetsuo
Southeast Asian Studies, Vol. 49, No. 2, September 2011
https://www.jstage.jst.go.jp/article/tak/49/2/49_KJ00007250479/_pdf
or
https://kyoto-seas.org/pdf/49/2/490202.pdf
https://www.researchgate.net/publication/282740776_Traditional_dried_starter_culture_Medombae_for_rice_liquor_production_in_Cambodia
https://en.wikipedia.org/wiki/Sra_peang
https://sombai.com/cambodia-rice-wine/

எனவே, இந்த ராணு உருண்டைகள் சங்க காலத்தில், தோ(ய்)ப்பிக் கள் வகைகள் செய்யப் பயன்படவில்லை. நமக்கு எப்போதும் உள்ள ஈச்சம்பாளை, தென்னம்பாளை, பனம்பாளையை அறுத்து மட்கலயங்களில் செருகுதலும், மற்ற நொதிப்பான்களும் (உ-ம்: சுண்டக்கஞ்சி செய்யும்போது சேர்த்தும் தயிரில் (தயிர்/தஹி < தோய்கு- வினை) நொதிக்கச் செய்யலாம்).

~NG




அதனால் பண்டைத் தமிழகத்து
வழக்கப்படி வெந்த நெல்லுச் சோறு நொதிப்பதற்கு முளையை (அது நெல்முளை ஆகவும் இருக்கலாம்) இடித்துச் சேர்த்தனர் எனத் தெரிகிறது. 

இருக்கலாம். 
 
--

kanmani tamil

unread,
Jan 14, 2024, 2:24:34 AM1/14/24
to vallamai
அகம். 284 தினையரிசியில் இருந்து செய்த கள்ளை உண்ட பின்னர் மறவர் வேட்டைக்குச் சென்றதாகக் கூறுகிறது. 
"புன்_புலம் தழீஇய பொறை முதல் சிறுகுடி
தினை கள் உண்ட தெறி கோல் மறவர்
விசைத்த வில்லர் வேட்டம் போகி"
என்ற மேற்கோள் காண்க.
புன்செய் நிலத்துக் குன்றுகளை ஒட்டி வாழ்ந்தவர் ஆதலால்; அந்நிலத்து விளைபொருள் ஆகிய தினையில் இருந்து கள்ளைத் தயாரித்தனர் எனத் தெரிகிறது. 

அதனால் பண்டைத் தமிழகத்தில் பொதுமக்கள் தத்தம் இல்லங்களில் தானியங்களில் இருந்து கள் தயார் செய்தமை வெளிப்படை.

சக 
Reply all
Reply to author
Forward
0 new messages