இராஜேந்திர சோழன் வடநாடு சென்றாரா?

5 views
Skip to first unread message

Seshadri Sridharan

unread,
Aug 4, 2026, 1:27:30 AM (3 days ago) Aug 4
to தமிழ் மன்றம்
இராஜேந்திர சோழன் வடநாடு சென்றாரா?
............................................
இராஜராஜனுக்கும் வானவன் மாதேவிக்கும் மகனாகப் பிறந்தவர்தான் இராஜேந்திர சோழன். இராஜராஜனே வயதானப் பிறகு அரியணையில் ஏறியதால், அவருக்கு உறுதுணையாகத் தந்தையின் சார்பில் பல போர்களுக்குத் தலைமையேற்றுச் சென்றவர் இராஜேந்திர சோழனே.
இளவரசு பட்டம்
இராஜேந்திரன் 1012-இல் இளவரசனாகப் பட்டம் சூட்டிக்கொண்டார். இவர் பட்டத்துக்கு வந்த ஆறே ஆண்டுகளில் தன் மகன் இராஜாதி ராஜனுக்கு முடி சூட்டினார். இன்னொரு மகனான சுந்தர சோழனைப் பாண்டிய நாட்டுக்கு அரசனாக்கினார். இராஜேந்திரனுக்கு கடாரம் கொண்டான், கங்கை கொண்டான், மதுராந்தகன் என்ற பட்டப்பெயர்களும் உண்டு.
கடார வெற்றி
தற்போதைய மலேசியாவில் உள்ள கெடா தான் அப்போது கடார நாடு என்று அழைக்கப்பட்டது. அந்த கடாரத்தின் மீது படையெடுத்து வென்றதால் கடாரம் கொண்டான் என்ற சிறப்புப் பெயர் பெற்றார். இராசேந்திர சோழன் தனது தளபதி அரையன் ராஜராஜன் தலைமையில் படைகளை அனுப்பி, கங்கைக்கரை மாளவம், கோசலம், வங்காளம் (பால வம்சம்) உள்ளிட்ட பல வட இந்திய நாடுகளை வென்றார்.
அரசர்கள் தங்களின் போர் வெற்றிக்குப் பிறகு, கல் அல்லது இரும்பினால் ஆன வெற்றித் தூண்களை (ஜெயஸ்தம்பம்) நிறுவுவது வழக்கம். ஆனால், இராஜேந்திர சோழன் ஜல ஸ்தம்பத்தை நிறுவினார். வெற்றியின் நினைவாகக் கொண்டு வந்த கங்கை நீரை ஊற்றி, சோழ கங்கம் என்னும் ஏரியை உருவாக்கினார். அந்த ஏரி இப்போது பொன்னேரி என்று அழைக்கப்படுகிறது. சோழ கங்கையைச் சுற்றி ஊர் அமைத்து, அதற்கு கங்கை கொண்ட சோழபுரம் என்று பெயர் சூட்டினார். தலைநகரைத் தஞ்சையிலிருந்து கங்கைகொண்ட சோழபுரத்திற்கு மாற்றினார். தன் தந்தை கட்டியதைப் போல் கலைநயத்துடனும், அதே நேரத்தில் அக்கோயிலை விஞ்சிவிடாமலும் இருக்கும்படி ஒரு சிவாலயம் எழுப்பினார்.
கோதாவரி சென்றார்
தந்தையின் காலத்தில் இலங்கையின் ஒரு பகுதியை மட்டும் வென்ற இராஜேந்திரன் தன்னுடைய ஆட்சிக் காலத்தில் இலங்கை முழுவதையும் வென்று வெற்றிக்கொடி நாட்டினார்.
அரசர்கள் எல்லாப் போர்க்களங்களுக்கும் செல்வதில்லை. அரசர்கள் சார்பில் அவர்கள் அனுப்பும் படையுடன், படைத் தளபதிகள்தான் நிறைய போர்களுக்குச் செல்வார்கள். அப்படித்தான் இராஜேந்திரன் அனுப்பிய சோழர் படை, வடநாட்டை வெற்றி கொண்டது.
தன் சார்பாக வென்ற தளபதிகளை வரவேற்க, இராஜேந்திரசோழன் ஆந்திர மாநிலம் கோதாவரி வரை படையுடன் சென்றார் என்று குறிப்பிடுகிறது விழுப்புரம் மாவட்டம் எண்ணாயிரம் என்ற ஊரில் உள்ள கல்வெட்டு. கங்கைகொண்ட சோழபுரம் அரியலூர் மாவட்டத்தில் உள்ளது.
இராஜேந்திரன் தன் ஆட்சிக் காலத்தில் ஜாவா, சுமித்ரா, மலேசியா, தாய்லாந்து, இலங்கை, இந்தோனேஷியா போன்ற நாடுகளை வென்றதால் ‘அலைகடல் மீது பல கலம் செலுத்திய’ அரசர் என்று புகழப்படுகிறார்.
பொ.யு. 1014 முதல் 1044-ஆம் ஆண்டு வரை இவரது ஆட்சி இருந்தது. இராஜேந்திரன் அரசனாகப் பதவி ஏற்ற ஆயிரமாவது விழா 2014-இல் கொண்டாடப்பட்டது.
சோழ கேரளன் திருமாளிகை
கங்கைகொண்ட சோழபுரத்தில் இரண்டு கோட்டை மதில்கள் இருந்துள்ளன. ஒன்றின் பெயர் இராஜேந்திரன் சோழன் மதில். இன்னொன்றின் பெயர் உள்படை வீட்டு மதில். வீர இராஜேந்திரன் (இராஜேந்திரனின் மகன் இவர்) காலத்தில் பொறிக்கப்பட்ட கல்வெட்டில், இங்குள்ள அரண்மனையின் பெயர் ‘சோழ கேரளன் திருமாளிகை’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இராஜேந்திர சோழனின் பெயர்களில் ஒன்றுதான் சோழ கேரளன்.
ஆதிபூமி, கீழை சோபானம், மாவலி வானாதிராஜன் பள்ளிக்கட்டில் என அரண்மனைப் பகுதிகளுக்குப் பெயர்களாக இருந்துள்ளன.
இராஜராஜன் பெருவழி
கங்கை கொண்ட சோழபுரத்திற்கு வருவதற்கு இராஜராஜன் பெருவழி, இராஜேந்திர சோழன் பெருவழி, விளாங்குடையான் பெருவழி, கூழை யானை போன பெருவழி போன்ற வழிகள் இருந்துள்ளன. வேம்பு குடி வாயில் என்று ஒரு வாயிலுக்குப் பெயர் இருந்துள்ளது. இராஜராஜன் காலத்தில், தஞ்சை புகழின் உச்சியில் இருந்தது. அப்படி இருக்க 1014இல் மன்னனாகப் பொறுப்பேற்ற ராஜேந்திர சோழர், தஞ்சையை விட்டு, ஏன் ஏறக்குறைய நூறு கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள கங்கைகொண்ட சோழபுரத்தில் புதிய நகரை உருவாக்கினார்?
''பெரும் படைகள் போவதற்கும் வருவதற்கும் தஞ்சை போதுமானதாக இல்லை. வணிகர்களின் பெருக்கம், வெளிநாட்டவர் வருகை எனத் தஞ்சை நெரிசல்மிக்க இடமாக மாறியது. தஞ்சாவூர் விவசாய நிலங்கள் அதிகம் இருந்த இடம். தவிரவும் காவிரி ஆறு, பாசனத்திற்கு மட்டுமே ஏற்றதாக இருந்தது. அது நீர் வழிப்போக்குவரத்திற்கு (கப்பல்கள்) ஏற்றதாக இல்லை. அதனால் அவருக்கு மாற்றுச் சிந்தனை உதித்தது. தற்போது கொள்ளிடம் ஆறு என்று கூறப்படும் 'இராஜேந்திர சோழப்பேராற்றை' நீர் வழிப் போக்குவரத்திற்குப் பயன்படுத்த நினைத்தார். கப்பற்படையில் சிறந்தவரான ராஜேந்திர சோழர், கொள்ளிட ஆற்றில் கலன்கள் மூலம் ஆயுதங்கள், படைகளைக் குணகடலுக்குள் (வங்காள விரிகுடா) அனுப்ப முடியும் என்று எண்ணினார். அதனால் புதிய தலைநகரைக் கங்கைகொண்ட சோழபுரத்தில் உருவாக்கினார்” என்று அரசியல், சமூகக் காரணங்களைக் குறிப்பிடுகிறார் கங்கைகொண்ட சோழபுர மேம்பாட்டுக் குழுவின் தலைவர் பொறியாளர் கோமகன்.
இன்னொரு காரணம் ''திருச்சியில் இருந்து எதிரிப்படைகள் தஞ்சையை அடைவது எளிது. கங்கைகொண்ட சோழபுரம் கொஞ்சம் தூரத்தில் உள்ளது. இதைக் கருத்தில் வைத்தும், அவர் தஞ்சையில் இருந்து தலைநகரைக் கங்கைகொண்ட சோழபுரத்திற்கு மாற்றி இருக்கலாம்'' என்று கூறுகிறார், ஓய்வு பெற்ற தொல்லியல் ஆய்வாளர் சாந்தலிங்கம்.
இப்படிப் பல காரணங்களை யோசித்து உருவாக்கிய நகரம், சிறிது பாண்டியர்களாலும், முழுதும் மாலிக்காபூரின் படையெடுப்பாலும் அழிந்தது. கங்கைகொண்ட சோழபுரத்தில் உட்கோட்டை - மாளிகைமேடு என்னும் இடத்தில் இருந்த சோழர்களின் அரண்மனை, இன்று வெறும் செங்கல் கட்டடமாகச் சிதைவுற்ற நிலையில் காட்சியளிக்கிறது. அங்கு இருந்த கோட்டைச் சுவர்களின் கற்களைச் சுற்றி இருந்த ஊர் மக்கள் தங்கள் சொந்தப் பயன்பாட்டிற்கு பெயர்த்தெடுத்துச் சென்றதாய், தமிழக அரசு தொல்லியல் துறை வெளியிட்டுள்ள ‘கங்கைகொண்ட சோழபுரம் வரலாறு’ நூல் குறிப்பிடுகிறது.
இராஜேந்திரனுக்குத் திரிபுவன மாதேவி (வானவன் மாதேவி), முக்கோக்கிழானடிகள், அரிந்தவன் மாதேவி, பஞ்சவன் மாதேவி, வீரமாதேவி என மனைவியர் பலர் இருந்தனர்.
தன்னுடைய கடைசிக் காலத்தில் வீரமாதேவியைத் திருமணம் செய்து கொண்ட இராஜேந்திரன், அவருடன் நாடு சுற்றிப் பார்க்கப் புறப்பட்டார். தொண்டை மண்டலம்(தற்போதைய திருவண்ணாமலை மாவட்டம்) பிரம்மதேசத்தில் (பொ.யு.1044) பயணம் செய்த போது மரணமடைந்தார். அவருடன் பயணம் செய்த வீரமாதேவி உடன்கட்டை ஏறி உயிரை மாய்த்துக்கொண்டார்.
இராஜேந்திரன், சோழ மன்னர்களில் மிகவும் வலிமை வாய்ந்தவராக இருந்தார்.

இலக்குவனார் திருவள்ளுவன்

unread,
Aug 4, 2026, 8:07:08 PM (3 days ago) Aug 4
to tamil...@googlegroups.com, வல்லமை, thiru thoazhamai, மின்தமிழ்
என்னுடைய மியான்மரில் தமிழர்கள் நூலில் இருந்து ஒரு பகுதி

இராசேந்திர சோழன் வங்காளத்தின் வழியாகப் பருமாவில் இருந்த ‘பெரு’ அரசிற்கு எதிராகப் படையெடுத்தான். இருமுறை கடல் வழியாகவும் ஒரு முறை நிலத்தின் வழியாகவும் பருமாவின் மீது இராசேந்திர சோழன் படையெடுத்ததாக ஆய்வறிஞர் ஆர்.சி.மசூம்தார் கூறுகிறார்.  அகழ்வாராய்ச்சிச் சான்றுகளுடன் ஆராய்ச்சியாளர்கள் இதை உறுதி செய்கின்றனர். 1025-1027 ஆண்டுகளுக்கு இடையே ‘பெரு’ அரசு வெற்றியைப் பறைசாற்றும் நோக்கில் இராசேந்திர சோழன் இரு கருங்கல் தூண்களை நிறுவினான். இதனை அகழ்வாராய்ச்சியாளர்களும் கூறுகின்றனர்.

அவை இராசேந்திர சோழனுடைய வெற்றித்தூண்களே என இடச்சு ஆய்வாளர் தா செயின் கோ (Taw Sein Ko) உறுதி யிட்டுக் கூறியுள்ளார்(Archologicl Report on Burma. 1908, Oara 25).  (இவரைத் தேசெயென்கோ என்றும் தெசெயென்கோ என்றும் குறிப்பிடுகின்றனர்.)

பருமாவில் இன்றும் அவனின் மெய்கீர்த்திக் கல்வெட்டு

"திருமன்னி வளர இருநில மடந்தையும்

போர்ச் செயப்பாவையும் சீர்த்தனிச் செல்வியும்

தன்பெருந் தேவியராகி இன்புற"

என்னும் வரிகள் தாங்கி உள்ளன.

கி.பி.1025 இல் இராசேந்திர சோழன் கடாரம் மீது படையெடுத்தான். அதனை வென்று தன்ஆட்சியில் கீழ்க் கொணர்ந்தான். இதனைக் கலிங்கத்துப்பரணி மூலம் அறியலாம்.

“களிறு கங்கை நீர் உண்ண மண்ணையில்

காய் சீனத் தொடே கவவு செம்பியன்

குளிறு வெண்திரைக்குரை கடாரமும்

கொண்டு மண்டலமும் குடையுள் வைத்ததும்”

என்கிறது.

(களிறு=ஆண் யானை(போர் யானை) ; மண்ணை=ஒர் ஊர்; கலவு-பொருந்திய; செம்பியன்=சோழன் (இராசேந்திரன்); குளிறு=ஒலிக்கின்ற; குரை=ஆரவாரத்தை யுடைய)

கங்கையையும்மண்ணை (மான்யகேடா) நகரையும் வென்ற இராசேந்திர சோழன் கடாரத்தையும் வென்றதை இப்பாடல் கூறுகிறது.( கருநாடகாவைச் சேர்ந்த குல்பர்க்கு மாவட்டத்தில் உள்ள நகரமே மண்ணை-மான்யகேடாவாகும். இராட்டிரக் கூடர்களுக்கும் பின்னர் மேலைச் சாளுக்கியருக்கும் தலைநகராக இது விளங்கியது.)

19. வெற்றித்தூண்கள்

இக்கருத்தினை உறுதிப்படுத்தும்‌ வகையில்‌, பருமாவின்‌ தொல்பொருள்‌ ஆராய்ச்சியாளர்‌ ‘பெகூ’விற்கு அருகில்‌ ஆறு பட்டைகளைக் கொண்ட இரண்டு வெற்றித்‌ தூண்களைக்‌ கண்டு பிடித்தனர்‌. அவற்றை ஆராய்ந்து பார்த்த பின்னர்‌, “கி.பி. 1025-1027 அளவில்‌ நடைபெற்ற இராசேந்திர சோழனின்‌ படை யெடுப்பில்‌ நாட்டப்பட்ட வெற்றித்தூண்கள்‌ அவை'' எனும்‌ முடிவிற்கு அவர்கள்‌ வந்தனர்‌. அவற்றில்‌ காணப்படும்‌ கல்‌ வெட்டுத் தொடர்களால்‌, இம்முடிவிற்கு வந்தனர்‌. அத்தூண்களில்‌ கி.பி. பதினோராம்‌ நூரற்றாண்டுக்குரிய கிரந்தக் கலப்பு தமிழ்மொழி வரிவடிவத்தில்‌ கல்வெட்டுச்‌ செய்திகள்‌ பொறிக்கப்பட்டுள்ளதைக் கண்டுள்ளனர்‌. இத்தூண்‌ கல்வெட்டுகளை ஆராய்ந்த பருமியக் ‌கல்வெட்டுத்துறை அதிகாரி தா செயின் கோ (Taw Sein Ko) என்பவர்‌; *அவை இராசேந்திர சோழனுடைய வெற்றித்‌ தூண்களேஎன்பதை அறுதியிட்டு உறுதியாகக் கூறியுள்ளார்."

20. ‘மலாயா’வில் உள்ள ‘கெடா’தான் கடாரமா?

1918 வரை ஆராய்ச்சியாளர்‌ கடாரம்‌, பருமாவில்‌ உள்ளதாகவே கருதினர்‌. மலாயாவில் உள்ள கெடா என்னும் பகுதிதான் கடாரம் எனச் சிலர் கூறுகின்றனர். 1918 ஆம் ஆண்டில் கோடசு (CODES)  என்னும் இடச்சு ஆய்வாளர் அவ்வாறே கருதுவதாகத் தெரிவிக்கிறார். இவருடைய கருத்தினையே, சமகாலத்து அறிஞர்கள்‌ போற்றத்‌தொடங்கினர்‌. இதன்‌ விளைவாகப்‌ பெகூவில்‌ உள்ள இரு வெற்றித்தூண்‌ தமிழ்க்‌ கல்வெட்டுகள்‌, பொய்யானவை என்று தவறுதலாகப் புறக்கணிக்கப்பட்டன.

 ஆனால், கல்வெட்டுக் கலைஞர் வெங்கையா அவர்களின் ஆராய்ச்சி முடிவு  தா செயின் கோ (Taw Sein Ko) கருத்தையே உறுதி செய்கிறது.
(Archalogical Report on Burma 1908 Para 25)

இவருடைய கருத்தை உறுதிப்படுத்துவது போல: பருமாவில் உள்ள பப்பாளம் என்னும் துறைமுக நகரத்தை இராசேந்திரன் கைப்பற்றிய வரலாற்றுச் செய்தி அமைகிறது.

கல்வெட்டுக்‌ கலைஞர்‌ வெங்கையா‌, இராசேந்திரனுடைய கடாரப்படையெடுப்பில்‌ போர்‌ நடந்ததாகக்‌ குறிப்பிடப்படும்‌ இடங்களை ஆராய்ந்துள்ளார்‌. அவற்றுள்‌ ‘பப்பாளம்‌’ என்பது எங்குள்ளது? என்பதை மகாவமிசத்தின்‌ துணையைக்‌ கொண்டு, அவர்‌ முடிவு கட்டியுள்ளார்‌. பருமாவின்‌ துறைமுகத்தை ‘பப்பாளம்‌’ என மகா வமிசம்‌ சுட்டுவதில்‌ இருந்து, ‘பப்பாளம்‌’ மகாவமிசம்‌ குறிப்பிடும்‌ ‘பப்பாள’மாகவே இருத்தல்‌ கூடும்‌ எனும்‌ முடிவிற்குத்‌ தமிழ்நாட்டுக்‌ கல்‌ வெட்டு ஆராய்ச்சியாளர்‌ வெங்கையா வந்துள்ளார்‌. அதனால்‌, கடாரம்‌ என்பது பருமாவில்‌ இருந்த அரசாகவே இருத்தல்‌ வேண்டும்‌ எனத்‌ தோன்றுகிறது. எனவே, இராசேந்திரனுடைய படையெடுப்பு பற்றிக் கல்வெட்டு குறிப்பிடுகிறவை மெய்தான் என்றாகிறது.

மேலும் கி.பி.1084-1112 ஆம் ஆண்டுகளில் வாழ்ந்த கியான்சித்தா (Kyansittha) என்ற பருமிய மன்னர் சோழப் பேரரசனோடு உறவு கொண்டிருந்தார் என்கிற கல்வெட்டும் கிடைத்துள்ளது. 

 


--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamilmanram...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/tamilmanram/CAGs6Gj69uL1G9Frak35j3wA3aVxLq0L0_vfYYY25X%2BOQOKxt7g%40mail.gmail.com.


--
அயற் சொற்களையும்  அயல் எழுத்துகளையும் நீக்கித்தான் எழுத வேண்டும் என்றாலும் பிறரது கருத்துகளையும் பிற இதழ்கள் அல்லது தளங்களில் வந்த செய்திகளையும் மேலனுப்புகையில் அவ்வாறே பதிவதால் அல்லது அனுப்புவதால் தமிழ்த்தாயே பொறுத்தருள்க.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
அகரமுதல இணைய இதழ் www.akaramuthala.in

இலக்குவனார் இல்லம்,
23 எச், ஓட்டேரிச் சாலை, மடிப்பாக்கம்,சென்னை 600 091
மனை பேசி 044 2242 1759
அலை பேசி 98844 81652

/ தமிழே விழி! தமிழா விழி!
எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! /

பின்வரும் பதிவுகளைக் காண்க:


www.ilakkuvanar.com
thiru2050.blogspot.com
thiru-padaippugal.blogspot.com
http://writeinthamizh.blogspot.com/
http://literaturte.blogspot.com/
http://semmozhichutar.com

Reply all
Reply to author
Forward
0 new messages