#ரமணி_தமிழ்மொழிவளர்ச்சி #ரமணி_கட்டுரை
செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகராதி
ஆங்கில அகராதிகள் பெரும்பாலும் தாம் கொள்ளும் சொற்களின் வேரும், பிறப்பும் பற்றிய செய்திகளைத் தருகின்றன. Online Etymology Dictionary என்றோர் வலைதளமே உள்ளது.
தமிழில் இதுபோல் இருக்கிறதா என்ற கேள்வியும் ஏக்கமும் எனக்கு வெகுநாட்களாக இருந்துவந்தது. அண்மையில் முகநூலில் இதுபோன்ற ஒரு பதிவைப் பார்த்தபோது அந்த ஏக்கம் அதிகரித்துத் தேடச்சொன்னது.
• ’வே' என்ற ஒற்றைத் தமிழெழுத்து அல்லது தமிழ்ச் சொல்லிற்கு 'மறை' (மறைத்து வைத்தல்) என்பது பொருளாகும்.
• தாவரங்களின் வேரானது, மண்ணுக்குள் ஓடி மறைந்து கிடப்பதாலேயே அது 'வே'ர் எனப்பட்டது.
• மறைந்திருந்து தாக்குவதாலேயே அவன் 'வே'டன் எனப்பட்டான். வேட்டையும் அப்படித்தான்.
• சுற்றிலுமிட்டு மறைத்துப் பாதுகாப்பதாலேயே 'வே'லி எனப்பட்டது. வேய்தலும் அப்படித்தான்.
• சுடுநீரில் மூலிகைகளையிட்டு, அடர்த்துணி கொண்டு நம்மை மூடிமறைத்து, அதனை முகர்ந்து நோய்போக்கும் நிகழ்வு 'வே'து பிடித்தல் எனப்பட்டது.
• 'வே'ய்ங்குழல் எனச் சங்க இலக்கியங்கள் முதல் போற்றும் பெண்ணில் அடர்க்கூந்தல், அப்படியே அவளது முழுவுடலையும் கவிழ்ந்து மறைக்கக் கூடியதாகையால் அவ்வாறு கூறப்பட்டது.
• நம்முடலின் பாகங்களையும், மானத்தையும் மறைத்துக் காப்பாற்றுவதாலேயே அவ்வுடை 'வே'ட்டி எனப்பட்டது.
• வேதத்தைக் கூட ’மறை’ என்றுதான் தனித் தமிழில் கூறுகிறோம்.
• கண்ணுக்கு தெரியாத அளவுக்கு மறைவாக விரைவாக செல்வதால் வே'கம் எனப் படுகிறது.
• உண்மைத்தன்மை தெரியாமல் இருப்பதாலேயே அது வே'டம்.
• கசப்பு வெளியே தெரியாமல் உள்ளே மறைவாக இருப்பின் அது வே'ம்பு.
• ஈராயிரம் ஆண்டுகள் வாழ்ந்திருக்கும் மொழி என்றால் சும்மாவா? தமிழைக் கொண்டாடுவோம்.
இப்பதிவிற் காணும் செய்திகளின் உண்மை அறியப் புகுந்தபோது, 'செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகரமுதலி' (Tamil Lexicon Etymology Dictionary) என்னும் தொகுப்பை Internet Archive வலைதளத்தில் கண்டேன். பல ஆண்டுகளாகத் தமிழக அரசு முனைந்து உருவாக்கி வெளியிட்ட முழுத்தொகுப்பும் 10GB-க்கு மேல் கொண்ட 31 நூல்கள்/கோப்புகள்!
இப்போது நம் வே-கதைக்கு வருவோம். மேற்சொன்ன பேரகராதியில் பார்த்ததில்...
வே என்ற ஓரெழுத்துச் சொல்லுக்குண்டா பொருள்கள் இவை:
(செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரரகரமுதலி v8p3)
• தமிழ் நெடுங்கணக்கில் ஓரெழுத்து
• கொதிக்கும் நீர், எண்ணெய் முதலியவற்றிற் பக்குவப் படுதல்
இவ்வெல்லாப் பொருள்களுக்கும் அகராதியில் இலக்கிய, வழக்குச் சான்றுகள் தரப்பட்டுள்ளன.
எனவே, வே என்ற சொல்லுக்கு மறை, மறைத்துவைத்தல் என்ற பொருள் கிடையாது! இதனாற் இப்பதிவில் இப்பொருளை வைத்துச் சில வடமொழிச் சொற்களைத் தமிழாக்கிச் சொன்ன அனைத்தும் 'காதுல பூ' என்று துணிந்து சொல்லலாம்!
• வேகம்: வே => வேகு => வேகம்
• வேட்டி: வெட்டி => வேட்டி
• வேதம்: இச்சொல் அகராதியில் இல்லை! வித் என்ற வேரில் பிறந்த வடமொழிச் சொல் என்பதாலோ?
• வேய்ங்குழல்: மேய் => வேய் => வேய்தல்
• வேர்: விள் => விளர் => வியர் => வேர்
• வேலி: வேல் => வேலி (தெ. வேலுகு; க. பேலி)
இதுபோன்று பற்பல உணர்ச்சிப் பதிவுகள், அவை எவ்வளவு தூரம் உண்மை என்றறியும் ஆர்வம் சற்றும் இல்லாமல் தமிழ் மொழியைப் போற்றியும், சமயத்தில் வடமொழியைப் பழித்தும் முகநூலில் கொட்டிக் கிடக்கின்றன. அவற்றைக் குருட்டாம் போக்காக ஜால்ரா அடித்து ஆஹோ-ஒஹோ என்று பின்னூட்டமிட்டுப் புகழ்வோர் யார்க்கும் செய்திகளைச் சரிபார்க்கும் எண்ணம்கூட இல்லை. இப்படி மனம்போன போக்கில் சொல்வதெல்லாம் தமிழ் மொழி வளர்ச்சிக்கு உதவாது.
தமிழ் மொழி வளர்ச்சிக்கு நடுநிலையாக, உண்மையாகப் பாடுபடும் ஆர்வலர்கள் கீழுள்ளவை போன்ற நிகழ்வுகளைச் செயல்படுத்த வேண்டும்.
• முதலில் வீட்டில் பெரியோர் சிறியோர் எல்லோரும் பெரிதும் தமிழ் பேசினாலே தமிழ் தானாக வளரும்!
• ஒவ்வோர் ஆங்கிலச் சொல்லைப் பேசும் போதும் அதற்குத் தமிழில் என்ன என்ற சிந்தனை வரவேண்டும்.
• வீட்டில் தவறாமல் ஆங்கில அகராதி இருப்பதுபோல் ஒரு நல்ல, பெரிய அச்சிட்ட தமிழ் அகராதி இருக்கவேண்டும். ஒவ்வொருவருக்கும் ஓர் அகராதி இருந்தால் மிகவும் பயன்படும்.
• அச்சிட்ட தமிழ் அகராதிகளைத் தமிழக அரசு தள்ளுபடி விலையில் விற்கலாம்.
• பள்ளிச் சிறார்களும், கல்லூரி இளைஞர்களும், பெற்றோரும், கவிஞர்களும், அகராதியில் தாம் அறிந்த சொற்களை விவாதித்து, டிக் செய்துகொண்டு எண்ணிப் பார்த்து ஒவ்வொருவரின் தனிச்சொல் வளம் (vocabulary) என்ன என்று அறியவேண்டும்.
• பழந்தமிழ் இலக்கியத்தை அவரவர் வயதுக்குத் தக்கவாறு குடும்பத்தில் எல்லோரும் பயிலவேண்டும்.
• பள்ளிகளில் தமிழ்த்துறை ஆசிரியர்கள் ஒன்றுசேர்ந்து வகுப்பு வாரியாக மாணவர்களுக்குப் பழந்தமிழ் இலக்கியத்தில் வினாடி-வினா நிகழ்ச்சிகள் நடத்தி ஊக்குவித்துப் பரிசுகளும், சான்றிதழ்களும் தரலாம்.
• மென்பொருள் செய்கலை தெரிந்த தமிழ் ஆர்வலர்கள் தமிழ் அகராதியை மென்பொருளில் ஏற்றி, குழந்தைகள், சிறார், மற்றவர்கள் தாமறிந்த தமிழ்ச் சொல்லை எழுதிச் சரிபார்த்து, அவர்கள் தனிச்சொல்வளத்தில் (vocabulary) சேர்த்து, உமது தமிழ் வளம் இத்தனை சொற்கள் என்று சொல்லி ஊக்குவிக்கலாம்.
• தமிழ்ப் பட்டிமன்றங்கள் போல, முன்நாட்களில் நடைபெற்ற Bournvita Quiz Contest, Binny's Double or Quit போல, தமிழ் நிறுவனங்கள் இணையம் வழியாகத் தமிழில் வினாடி-வினா நிகழ்ச்சிகள் நடத்தி ரொக்கப் பரிசுகள், சான்றிதழ்கள் தரலாம்.
• தமிழ்மொழி வளர்ச்சிக்குப் பெரிதும் உதவிய சங்க இலக்கியங்கள், பக்தி இலக்கியங்களில் தமிழ் நிறுவனங்களும், ஹிந்து மடங்களும் பாட்டு, பேச்சு, கட்டுரை, வினாடி-வினா போன்ற போட்டிகளை ஆண்டுதோறும் நடத்தி, வென்றவர்களுக்குப் பதக்கம், ரொக்கம், சான்றிதழ் தரலாம்.
• ஆங்கலம், வடமொழி, மற்ற இந்திய மொழிகளில் காணும் கதை-கவிதைகளைத் தமிழில் செய்வோரை அடையாளப்படுத்து ஊக்குவித்துச் சன்மானம் தரலாம்.