விநாயகர் அனுபூதி! (11-20)
எனதென் பதையின்(று) எரியிட் டிலையேல்
தனதென்(று) எனையுண் தழலா கிவிடும்!
மனமூ திடவெம் மலைபோற் கனலும்!
சினமும் பெருகும்! சிதைஇப் பொழுதே! ..(11)
[‘எனது’ என்னும் மமதையை இன்றே நீ எரித்து அழிக்கவில்லை என்றால், அது தனது என்று கொண்டு என்னை எரிக்கும் தழலாகி விடும்! (அலையும்) மனம் அதை ஊதிவிட, வெம்மையான மலைபோலத் தகிக்கலாகும்! அத்தோடு சினமும் அதிகரிக்கும். ஆகவே, இப்போதே (என் மமதையை) நீக்கிவிடுக!] ..(11)
தேடித் தெளியத் திறனற் றிலனே
பாடிப் புகழப் பணறிந் திலனே!
கூடித் துதிசெய் குழுகண் டிலனே!
சாடிப் பயனென் சடமென் றனையே? ..(12)
[நானாகவே தேடித் தெளிவடையும் திறன் அற்றவனாகவும், உன்னைப் பாடிப் புகழ்வதற்குப் பண்கள் அறியாதவனாகவும், பலரோடு கூடித் துதி செய்வதற்கும் சரியான சற்சங்கத்தை அடையாளம் காணாதவனாகவும் இருக்கிறேனே! சடமான என்னைக் குறைசொல்லி வைதாலும் பயனேது?] ..(12)
என்னோர் துணையே! இறவின் பிறகிங்(கு)
இன்னோர் பிறவிக்(கு) எறிவாய் எனிலும்
உன்னீர் அடிமீ(து) உளமொன் றுபடற்(கு)
என்னா வதுசெய் எளியேற்(கு) இறையே! ..(13)
[இறவு = இறப்பு]
[என்னுடைய ஒரே துணையானவனே! எனது இறப்புக்குப் பின், மீண்டும் ஒரு பிறவி கொடுத்து இங்கே எறியப் போகிறாய் என்றாலும், உன் இரு திருவடிகளில் என் மனம் ஒன்று படுவதற்கு ஏதாவது செய்க இறைவனே!] ..(13)
இறைவா இபநீ இதயத்(து) அலராம்
அறையின் நறையில் அழகாய் அமரப்
பறைபெற் றிலனே! பழகும் கலியின்
கறைபட் டபினே கரைகாண்(பு) அரிதே! ..(14)
[இபம் = யானை; அலர் = மலர்; நறை = நறுமணம்; பறை = இறையருள்/வரம்]
[யானை முகனாகிய இறைவனே! நீ என் இதயமாகிய மலராலான (கரு)அறையின் நறுமணத்தில் அமர்ந்திருக்க நான் பாக்கியம் பெறாதவன் ஆனேனே! என்னோடு பழகிக் கொண்டிருக்கும் கலியின் கறை பட்டபின்பு, கரையைக் காண இயலாதே!] ..(14)
அரியுண் பணியை அணியா அணியும்
பரிபூ ரணனே! பணியா ரமுடன்
பொரியும் பழமும் புசியைங் கரனே
கரியே சகமாள் கணநா யகனே! ..(15)
[அரி = காற்று; பணி = பாம்பு; கரி = யானை]
[காற்றை உண்ணும் பாம்பை அணியாக அணிகின்றவனே! பரிபூரணமானவனே! பணியாரங்களும் பொரியும் பழங்களும் உண்ணுகிற ஐங்கரனே! யானைமுகனே! இந்தச் சகத்தை ஆளும் கணநாயகப் பெருமானே!] ..(15)
கனிவென்(று) அடையக் கயிலா யமலைப்
பனியில் தனியாய்ப் படிபெற் றவரை
நனிசுற் றியவா! நசையற் றமகா
முனிசத் துவரின் முதலாம் குருவே! ..(16)
[படி = உலகம்; பெற்றவர் = தாய் தந்தை; நனி = நன்கு; நசை = ஆசை; சத்துவர் = ஸத்குணம் மட்டுமே உடையவர்]
[ஒரு கனியை வென்று அடைவதற்காகக் கயிலாய மலைப் பனியில் வீற்றிருந்த உலகின் தாய் தந்தையரைத் தனியாக நன்கு சுற்றியவனே! ஆசை அற்ற, நற்குணங்கள் மட்டுமே கொண்ட மாமுனிகளுக்கு முதலாம் குருவானவனே!] ..(16)
குருவின் குருவாம் குகசண் முகனாம்
முருகன் குமரன் முதல்வா அணலே!
ஒருகொம் புடையோய் உரகக் கடியோய்!
தருவாய் அமரர் தருவாய் வளலே! ..(17)
[உரகம் = பாம்பு; கடி = இடுப்பு]
[குருவுக்கும் குருவான குகன், சண்முகன், முருகன், குமரனுக்கு முன்னவனான அண்ணனே! ஒற்றைக் கொம்பு உடையவனே! பாம்பை இடுப்பில் (கச்சையாக) அணிந்தவனே! தேவலோக கற்பக தருவைப்போன்ற வள்ளலே! அருள் தருக!] ..(17)
வளமத் தனையும் வரமாய்த் தருவோய்!
களபச் சிரனே கருணைக் கணனே!
முளரிப் பதனே முறமாஞ் செவியோய்
அளவற் றகொடை அளிஐங் கரனே! ..(18)
[களபம் = ஆண்யானை; முளரி = தாமரை]
[எல்லா வளங்களையும் வரமாகத் தருபவனே! யானைத் தலை கொண்டவனே! கருணைமிகும் கண்களை உடையவனே! தாமரைப் பாதங்களை உடையவனே! முறம் போன்ற செவிகளைக் கொண்டவனே! அளவில்லாமல் கொடுக்கும் ஐங்கரனே!] ..(18)
கரணக் கருவிற் கருமேந் திரியப்
புரணந் தனிலும் புலனைந் தினிலும்
மரணஞ் சயனம் மருளிற் கனவில்
சரணப் பரிசம் சதமா குகவே! ..(19)
[கரணக் கரு = அந்தக்கரணம்/உள்ளுணர்வு; கருமேந்திரியம் = வேலை செய்யும் உடல் உறுப்புகள்; புரணம் = அசைவு/துடிப்பு; பரிசம் = தொடுதல்; சதம் = நிலைப்பு]
[என் உள்ளுணர்விலும், உடல் உறுப்புகளின் அசைவுகளிலும்; ஐம்புலன்களிலும், மயக்கநிலை, கனவுநிலை, உறக்கநிலை, ஆகியவற்றிலும், இறப்புநிலையிலும், உன்னுடைய திருவடிகளின் இணைப்பு நிலைத்திருக்கட்டும்] ..(19)
கவியாத் துமலர்க் கழலோ துவதும்
திவியம் கமழும் திருநா மமதைச்
செவியாற் பருகிச் சிவமாங் கனலுக்(கு)
அவியா வதுமே அடியேன் பணியே! ..(20)
[யாத்து = இயற்றி; திவியம் = தெய்விகம்/இறைமை; அவி = வேள்வியில் ஆகுதியாக இடப்படும் பொருள்]
[கவிதைகள் இயற்றி உன் திருவடிகளைத் தோத்திரம் செய்வதும், இறைமணம் கமழும் உன் திருநாமத்தைக் காதுகளால் சுவைத்தபடியே சிவம் என்னும் அக்கினியில் ஆகுதி ஆகிவிடுவதே அடியேனுடைய பணியாகும்.] ..(20)