"ஶ்ரீ லெஷ்மீ வராகன்"
(மீ. விசுவநாதன்)
முதலும் முடிவும் இல்லாதான் - ஆழி
நீரில் இலைமேல் மிதந்திருந்தான்
அவனின் தாளைக் கண்வைத்து - திரு
அமுதம் உண்ட திவ்வுலகம்.
(முதலும் முடிவும்)
மங்கலச் செல்வம் எம்பெருமான் - ஆதி
வராக மூர்த்தி நம்பெருமான்
மங்கையாம் லஷ்மி மடிகொண்டான் - ஶ்ரீ
வராக ரென்னும் பெயர்கொண்டான்
(முதலும் முடிவும்)
சங்கு சக்க ரகையுடையான் - மறை
காத்த மறையோன் திருமாலோன்
இங்கே பொருநை நதிக்கரையில் - அருள்
என்றும் பெருகும் பதியானோன்
(முதலும் முடிவும்)
ஆதி மூலம் என்பார்கள் - நம்
ஆதி வராகன் என்பார்கள்
நாதி அவனே என்போர்க்கு - உயிர்
நண்பன் வராக னென்பார்கள்.
(முதலும் முடிவும்)
(05.04.2026. 04.57 am)