Shared many years ago by Sri Harikrishnan.
Enjoy.
=========================
என்னுடைய இணைய ஆரம்ப காலத்தில் எழுதியது. இப்ப உங்களுக்காக மறு ஒலிபரப்பு.
அன்புடன்,
ஹரி கிருஷ்ணன்.
--------------------------------
கம்பனைக் கடித்த கொசு
அனுமார் லங்காபுரியில் சீதையைப் பார்த்தார். அதற்குப் பிறகு அட்டகாசம் செய்ய ஆரம்பித்தார். ராவணனுக்கு ஒரே கவலையாகிவிட்டது. என்ன செய்யலாம் என்று யோசித்துக்கொண்டிருந்த போது அவனுடைய ஐந்து சேனாதிபதிகள் வந்தனர். ஒருவன் சொன்னான். "சர்வ சக்தி வாய்ந்த கருடன் போயும் போயும் ஒரு கொசுவோடு போரிட நினைப்பதுபோல நீ இப்படிக் கவலையோடு இருக்கலாமா?"
இலங்கு வெஞ்சினத்து அம்சிறை எறுழ்வலிக் கலுழன்
உலங்கின் மேல் உருத்தன்ன நீ குரங்கின் மேல்
உருத்தால்...
(உலங்கு - கொசு)
கம்பன் நன்றாகத்தான் கொசுக்கடியால் கஷ்டப்பட்டிருக்கிறான். அதனால்தான் பொருத்தமான உருவகத்தைச் சொன்னான். இராவணனைக் கருடனாகவும் அனுமாரைக் கொசுவாகவும் உருவகித்திருப்பதைப் பார்த்தாலே தெரியவில்லையா? கடைசியில் யார் ஜெயித்தார்கள்? கொசுவாக உருவகிக்கப்பட்ட அனுமார்தானே? கொசு, சர்வ வல்லமையுள்ள அனுமாருக்குச் சமமானதென்று கம்பனே ஒப்புக்கொண்டிருக்கிறான். அதுமட்டுமா? கொசு என்பது சாதாரண ஜீவனல்ல. ஆதிகாலத்திலிருந்தே இந்தப் பூமியை ஆண்டு வரும், சகலரும் நடுநடுங்கும் தேவதை என்பது இந்தக் கம்பராமாயணப் பாடலால் உள்ளங்கை நெல்லிக்கனியெனவும், வெள்ளிடை மலையெனவும் தெற்றென விளங்காநின்றது என்மனார் புலவர்.
அங்கிங்கெனாதபடி எங்கும் ரீங்காரமாய் கடியொடு பூர்த்தியாகி அருள்பாலிக்கும் அருள்திரு கொஸ்வாஹ்ய பரப்ரும்மம் (கொசுவாகிய பரபிரும்மம் என்று சொல்வாரும் உளர்) ஒரு காலத்தில் சைதாப்பேட்டையையும் பழைய மாம்பலத்தையும் திருத்தலமாகவும் திவ்யதேசமாகவும் கொண்டிருந்தார். இப்போது (இனி எப்போதும்?) நங்கநல்லூரில் எழுந்தருளியிருக்கிறார். "அந்த ஆள் எனக்கொரு கொசு. ஓடஓட விரட்டுவேன்" என்று அரசியல் தலைவர்கள் சவால் விடுகிறார்கள். வந்து பார்க்கச் சொல்லுங்கள் நங்கநல்லூருக்கு. ஓரிரவு. ஒரே ஓர் இரவு நங்கநல்லூரில் தங்கச் சொல்லுங்கள். வேண்டாம். பகல் கூடப் போதும். சுவாமிகள் அருட்கடாக்ஷம் வழங்க இப்போதெல்லாம் சமயம் பொழுது பார்ப்பதில்லை. "ஆதி மூலமே" என்று அழைத்தால்தான் அவர் வருவார். அனந்த காலமும் அழையாமலே வருவதற்குக் காத்திருக்கும் கொஸ்வாஹ்ய பரப்ரும்மத்தின் சக்தியையும், மஹிமையையும் பரிபூரணமாக அறியலாம்.
எல்லா நாஸ்திகர்களும் கொசுவுக்கு எதிரான போர் முழக்கங்களைத் தேர்தலுக்குத் தேர்தல் எழுப்பிக்கொண்டுதான் இருக்கிறார்கள். எலக்ஷன் ஜுரத்தில் புகைபோட்டு உபாசனையும் செய்கிறார்கள். என்ன செய்தாலும் பரப்ரும்மத்தை ஒன்றும் செய்ய முடிவதில்லை. கொசு மேட் என்று விற்கிறார்கள். ப்ளக்கில் செருகி ஸ்விட்சைப் போட்டால் கொசு ஓடிவிடுமாம். தப்பாகச் சொல்கிறார்கள். ஓடி வரும். கொசுமேட்டைச் செருகும் இடத்திலிருந்து ஒரு ரெண்டங்குலம் தள்ளியுள்ள பிளாஸ்டிக் பகுதியில் கொ.ப.ப்ரும்மம் ஆனந்தமாக அமர்ந்து, அரபுநாட்டு ஷேக் ஹூக்கா பருகுவதுபோல் கொசுமேட்டிலிருந்து புறப்படும் புகையைப் பருகிக்கொண்டிருப்பதை நங்கநல்லூரில் கண்டு களிக்கலாம்.
"ஒரு கோப்பை அமுதம் இருக்கிறது. நீயோ ஈயாக இருக்கிறாய். என்ன செய்வாய்" என்றார் ராமகிருஷ்ணர். "ஓரத்தில் உட்கார்ந்து விழுந்துவிடாமல் ஜாக்கிரதையாகப் பருகுவேன்" என்றார் விவேகானந்தர். அவர் நங்கநல்லூர்க் கொசுமூர்த்தியிடம்தான் பாடம் கற்றுக் கொண்டிருப்பார். அமுதம் என்ன ஆலகால விஷமென்றாலும் சரிதான். ஐயாவுக்கு இணை ஐயா மட்டும்தான்.
கொசுவத்திச்சுருள், ஆள்-அவுட் (தப்பாக எழுதிவிட்டேன் என்று நினைக்கிறீர்களா? இல்லை இல்லை. சொல்லும்போதே தொலைக்காட்சித் தொகுப்பாளினிகள் நினைவுக்கு வந்துவிடுகிறார்கள்.) என்று எத்தனையோ பயன்படுத்திப் பார்த்தாயிற்று. நமக்கு ஜெயம் என்பது கிடையவே கிடையாது.
அப்புறம் கொசுவலை கட்டினால் என்ன என்ற யோசனை உண்டாயிற்று. கட்டிக்கொண்டோம். உள்ளே நான்குபேர் தூங்க வசதியாகத்தான் இருந்தது. ஓரிருமுறை கண்விழித்துப் பார்க்கும்போது வலையின் வெளிப்பக்கம் முழுக்க கொசுமூர்த்திகள் தம் நாராயண சைன்யத்துடன் அணிவகுத்திருப்பது தெரிந்தது. தெருக்களில் தர்ப்பூசணிப் பழம் துண்டு போட்டு விற்பான். ஈ மொய்க்காமல் இருக்க, குழந்தைகளுக்குப் பயன்படுத்தும் மடக்கக்கூடிய கொசுவலையால் மூடிவைத்திருப்பான். கொசுவலைக்குள்ளிருந்த எங்களைப் பார்த்துக்கொண்டிருந்த கொசுக்களுக்கும் நாங்கள் அப்படித்தான் தென்பட்டிருப்போம். "சுவையான பண்டம் மூக்குக்கெட்டின தூரத்தில் கிடக்கிறதே. குறுக்கே மலை போல ஒரு மாடு படுத்திருக்கிறதே" என்று நந்தனார் பாடியதைப் போல கொசு வீரர்கள் முனகிக் கொண்டிருப்பதை அறிய முடிந்தது.
திடீரென்று எழுந்தான் என் கண்மணி. கொசுவலையை உயர்த்திக்கொண்டு வெளியேறினான். "என்னடா செய்கிறாய்" என்று பதறினேன். "ஒன் பாத்ரூம்ப்பா" என்றான் கண்மணி. அவன் அவ்வாறு உயர்த்தினானோ இல்லையோ, பள்ளிக்கூடத்தில் லாங்பெல் அடித்தவுடன் "ஓ"வென்று இரைச்சலிட்டுக்கொண்டு ஓடிவரும் குழந்தைகளைப்போல் "ரீம்" என்ற மந்திரத்தை உச்சரித்துக்கொண்டு அத்தனைக் கொசுக்களும் உள்ளே பாய்ந்தன. வலை கட்டாமல் இருந்திருந்தாலாவது கொசுக்களின் எல்லை பெரிய அளவாக இருந்திருக்கும். வலைக்குள் நுழைந்த கொசுக்களின் எல்லையோ அளவில் குறுகியது. குறுகிய எல்லைக்குள் வசமாக மாட்டிக்கொண்டோம்.
தான் பயிலாத கவசதாரணம் என்று மகாபாரதத்தில் சொல்வார்கள். துரோணர், துரியோதனனுக்கு ஒரு கவசத்தை மாட்டிவிட்டார். அர்ஜுனனுடைய அம்புகள் அவனை ஒன்றும் செய்யவில்லை. கிருஷ்ணர் பார்த்தார். "என்னடா அர்ஜுனா இது" என்று கேட்டார். "எனக்கு விளங்கிவிட்டது. இது துரோணர் கொடுத்த கவசம். இதனை அணிய மந்திரப் பயிற்சியும் வேண்டும். இவனுக்கோ அது தெரியாது. கவசத்தை மாடு சுமப்பதுபோல் சுமந்துகொண்டு நிற்கிறான்" என்று சொல்லிக்கொண்டு கவசம் மறைக்காத நகக்கண் முதலான பகுதிகளில் அம்பால் அடித்துத் துன்புறுத்தினானாம் அர்ஜுனன்.
கொசுக்கள் அர்ஜுனர்களாயினர். நாங்கள் துரியோதனர்கள் ஆயினோம். தான் பயிலாத வலை தாரணம் இருந்தென்ன, இல்லாமற்போயென்ன? கையை ஒன்று கடிக்கிறது. காலை ஒன்று கடிக்கிறது. கழுத்தில் ஒன்று. கன்னத்தில் ஒன்று. (இது ஒன்றும் சாதாரண ஒன்றல்ல. சூப்பர் ஸ்டார் ஒன்று. பாட்சா ஒரு தடவை சொன்னா...) கன்னத்தில் ஒன்று கடிக்கவும் அதை அடிக்க அரைத் தூக்கத்தில் கையை வீசினேன். அதுவோ கைக்கும் காதுமடலுக்கும் நடுவில் புகுந்துகொண்டு ரீங்கார மந்திரோபதேசம் செய்து தகப்பன் சாமியானது.
காலையில் அத்தனைபேர் உடம்பின் மேலும் பிள்ளையார் சதுர்த்தி கொண்டாடியிருந்தன கொசுக்கள். கொழுக்கட்டை கொழுக்கட்டையாக உடம்பு முழுதும் முளைத்திருந்தது. பையனின் உதட்டில் பெரிய வீக்கம். கொஸ்வாஸ்திரம்தான். அத்தனை பேர் உள்ளங்கையிலும் ரத்தம் காய்ந்திருந்தது. பாட்டிவீட்டுப் பழம்பானையில் நுழைந்து வயிறுபுடைக்கத் தின்ற எலி வெளியே வரமுடியாமல் போனதைப் போல, அளவுக்கு மேல் ரத்தம் குடித்த கொசுக்கள் (மட்டும்) பறக்க முடியாமல் எங்கள் உடல்களின் மீதே சயனிக்க, அவற்றை (மட்டும்) அடித்து வீழ்த்திய அடையாளம்தான் அது என்பதைக் கண்டுகொண்டோம்.
"இது யார் ரத்தம்ப்பா?" என்றான் பையன். "சந்தேகமில்லாமல் கொசு ரத்தம்தான்" என்றேன். "கொசு என்னோட ரத்தத்த தானே குடிச்சது? அது ஜீரணமாயிருந்தாதானே அதோட ரத்தம்? அதுக்கு முன்னாடியே கொசுவை அடிச்சதனாலே, இது என்னோட ரத்தம்தான்" என்றான் என் ரத்தத்தின் ரத்தம்.
கொசுக்களிலிருந்து தப்பிக்க ஒரே ஒரு வழிதான் இருக்கிறது. "மனிதர்களும் குரங்குகளும் நாம் உண்ண அமைந்த உணவுப் பண்டங்கள். அவற்றுக்குப் போய் பயப்படலாமா? யாராவது உண்ணும் உணவோடு சண்டை போடுவார்களா ராவணா?" என்றானாம் ஒரு ராக்ஷசன். ஆமாம். நாங்கள் உண்ண அமைந்த பண்டங்கள்தாம் என்று ஒப்புக்கொண்டு கொசுக்களை வணங்கி, "யாராவது உணவுப் பண்டங்களோடு சண்டை போடுவார்களா? ஆகவே எங்களை விட்டுவிடுங்கள்" என்று கொஸ்வாஹ்ய பரப்ரும்மத்தை அன்றாடம் வழிபடுவது ஒன்றே வழி. இதோ இருக்கிறது அந்த மஹாமந்திரம்.
"கண்ணிய மந்திரக் கருமம் காவல
மண்ணிய மனிசரும் குரங்கும் மற்றவும்
உண்ணிய அமைந்த உணவுக்கு உட்குமேல்
திண்ணிய அரக்கரின் தீரர் யாவரே"
கடைசி அடியை மட்டும் மாற்றிப் படித்துக்கொள்ளுங்கள்.
"திண்ணிய கொசுக்களின் தீரர் யாவரே" என்று.
உனக்கெப்படி இது தெரிந்தது என்கீறீர்களா? கம்பனைக் கடித்த கொசுவின் மரபுளோர் கொடுக்க வாங்கி எனக்கிது சொன்னது கவுளி.
அன்புடன்,
ஹரி கிருஷ்ணன்.
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAO96JCP2RNGSorW2cRjLmQOOqpRjsmsUWskSkdn5PWfVN7R%3DLw%40mail.gmail.com.