குருவே சரணம்.
இந்த வருடம் 2025 அம்மன் தரிசனம் ஆன்மிக மாத இதழின் தீபாவளி மலரில் அடியேன் எழுதிய கவிதையை வெளிட்ட ஆசிரியர் J. பத்மநாபன் அவர்களுக்கு நன்றி.
"அம்மன் தரிசனம்" அலுவலக நிர்வாகிகள், ஊழியர்கள், வாசக அன்பர்கள் அனைவருக்கும் இனிய தீபாவளித் திருநாள் நல்வாழ்த்துகள்.
"நல்ல சோறு போடு"
(மீ. விசுவநாதன்)
ஊருக்குச் சோறு போடு - பெற்ற
உயிருக்கும் சோறு போடு
ஆறுக்குள் நீந்தும் உயிர்கள் - அவை
அத்தனைக்கும் சோறு போடு
வேருக்கு நீரே போல - ஏழை
வியர்வைக்கும் சோறு போடு
நேருக்கு நேரே பேசும் - நீதி
நெறிகளுக்குச் சோறு போடு.
காசுக்கே அலைந்தி டாத - ஞானக்
கல்வியெனுஞ் சோறு போடு
பாசத்தில் தீதே இல்லா - நல்ல
பண்பென்ற சோறு போடு
வாசத்தில் கொஞ்சும் சோலை - மலர்
மனத்தாலே சோறு போடு
தேசத்தில் பக்தி வைத்து - அதன்
சேவையெனுஞ் சோறு போடு
தானென்ற பசியுந் தீர - அன்புத்
தவமென்னுஞ் சோறு போடு.
ஏனென்றக் கேள்வி இன்றி - உள்
இரக்கமெனுஞ் சோறு போடு
வான்பூமி எங்கு முள்ள - இறை
வாழ்கவெனச் சோறு போடு
ஆன்மாவை அறிந்து கொள்ளும் - உள்
அறிவுக்குச் சோறு போடு
அலையலையாய்ப் பொங்கும் ஆசை - அதை
அடக்கியாளச் சோறு போடு
கலகலெனச் சிரிக்கும் பிள்ளை - உளக்
கனிபோலச் சோறு போடு
பலகலையில் சிறந்த பேர்க்கு - கர்வப்
பசிவராத சோறு போடு
உலகெலாம் அமைதி வாழ - தர்ம
உணர்வென்ற சோறு போடு.
*********************