தனியாய் அமர்வாய் தருகண் டவிடம்
கனிகாய் மலர்புல் கொடுநின் திருமுன்
குனிவார் எவரும் குறைவற் றுயரக்
கனிவாய் அருள்வாய் கருவிண் ணெனவே! ..(31)
[தரு = மரம்; திருமுன் = சன்னிதி; கருவிண் = கார்மேகம்]
[மரம் கண்ட இடத்தில் தனியாக அமர்ந்து கொண்டு, கனிகள், காய்கள், மலர்கள், அறுகம்புல், இவற்றைக் கொண்டு உன் சன்னிதியில் குனிந்து வணங்குபவர் யாவரும், குறைவேதும் இல்லாமல் உயர்வு அடைவதற்கு, மழை பொழியும் கார்மேகம் போலக் கனிவுடன் அருள்பவன் நீ!] ..(31)
வேழப் பெருமா! விதியின் மிகையாய்
ஆழப் பெருநூல் அறிவுற் றவனே!
சூழக் கணமும் சுரரும் தலைகள்
தாழப் பணியத் தயைசெய் குவையே! ..(32)
[வேழம் = யானை; விதி = பிரமன்; பெருநூல் = வேதம்]
[யானை முகனான பெருமானே! பிரமனை விடவும் அதிகமாகவும் ஆழமாகவும் வேதங்களை அறிந்தவன் நீ! உன்னைச் சூழ்ந்தவாறு கணங்களும் தேவர்களும் தம் தலைகள் தாழுமாறு பணிய, அவர்களுக்குக் கருணையோடு உதவுபவன் நீ!] ..(32)
வையஞ் சிதையா வணம்ஆண் டருளக்
கையைந் துடைநீ கழிமா உலகின்
மையத் தினிலே மறைஅச்(சு) அலனோ!
ஐயே நினைநன்(கு) அறிவார் இலரே! ..(33)
[வையம் = உலகம்; கழி மா = மிகப் பெரிய]
[இந்த உலகம் அழிந்து விடா வண்ணம் அதைக் காத்தருள்வதற்காகவே ஐந்து கைகளை உடைய நீ, இந்த மிகப் பெரிய உலகத்தின் மையத்திலே மறைவாக இருக்கும் அச்சு அல்லனோ! ஐயனே! உன்னை நன்கு (பூரணமாக) அறிந்தவர் யாரும் இலர்!] ..(33)
இலமுன் மகிழ்வுக்(கு) இனிமைப் பவனம்!
புலரும் கதிர்போல் பொலிசெம் மலர்கள்!
சலமார் கமலத் தளிர்மேல் பவனம்
செலஓம் இசையின் திரையூர் தலமே! ..(34)
[இலம் = இல்லம்; இனிமைப் பவனம் = ‘ஆனந்தபவனம்’, மஹா கணபதியின் இருப்பிடம்; சலம் = நீர்; பவனம் = காற்று; திரை = அலை]
[நீ மகிழ்வுடன் இருக்கும் உனது இல்லம் ஆனந்தபவனம் ஆகும்! அங்கே உதித்தெழும் சூரியனைப் போன்ற சிவந்த மலர்கள் பொலியும்! நீரில் நனைந்த செந்தாமரை இதழ் மேல் காற்று (உரசிச்) செல்ல, ஓம் என்னும் இசையின் அலை ஊர்ந்து செல்லும் தலம் அதுவே!] ..(34)
தலமும் சலமும் தருவும் வடிவும்
பலவா யிறையின் பதியா யிரமே!
உலகில் திகழொவ் வொருகோ யிலிலும்
விலகா(து) அமரும் விதமுன் தகையே! ..(35)
[தலம் = திருத்தலம்; சலம் = தீர்த்தம்; தரு = (தல)விருக்ஷம்; வடிவு = மூர்த்தி; பதி = ஊர்]
[திருத்தலங்களும், புண்ணிய தீர்த்தங்களும், தல விருக்ஷங்களும், மூர்த்தங்களும் பலவாறு இருக்க, தெய்வப் பதிகள் ஆயிரமாய் உள்ளன! உலகில் உள்ள ஒவ்வொரு கோவிலிலும் விடாது நீ வந்து அமரும் பாங்கே உனது பெருமை!] ..(35)
தகைசால் இமயம் தருகோ மகளும்,
சிகைசெப்(பு) ஒளிரும் சிவனும் பெறுசேய்!
பகையாம் அசுரப் படைவென்(று) அடரும்
புகையாம் கொடியாற் புகழுற் றவனே! ..(36)
[தகைசால் = பெருமை மிக்க; செப்பு = செம்பு; புகையாம் கொடி = தூமகேது]
[பெருமை மிக்க இமயம் தந்த அரசியான சக்தியும், செம்பைப் போல் ஒளிரும் சிகையை உடைய சிவபெருமானும் பெற்ற பிள்ளையே! பகைவரான அசுரப் படைகளை வென்று அடர்ந்த புகைக் கொடியை ஏந்தியவனாகப் புகழ் பெற்றவனே!] ..(36)
உற்றார் அயலார் உறவோர் பகையார்
எற்றார் எனினும் இகவாழ் வினிலே
பற்றா வதெலாம் பழுதாம் வரை!நின்
பொற்றாள் உறவோ புனிதத் தொடரே! ..(37)
[பற்று = தொடர்பு]
[நண்பர்கள், மற்றவர்கள், உறவுகள், பகைவர்கள், என யாராகிலும் எத்தகையவர்களாகிலும், இவ்வுலக வாழ்வில் நம்மோடு தொடர்பு கொள்வதெல்லாம் நாம் பழுதாகும் (நோய்ப்படும்) காலம் வரையில் தான். உன்னுடைய பொற்பாதங்களுடன் உள்ள உறவோ புனிதமாக எக்காலத்திலும் தொடரும்.] ..(37)
தொடரும் தடையும் துயரும் தொலையும்;
கடனும் கழியும்; கறைவிட்(டு) அகலும்;
விடமோ அமுதாம்; வெறுமை நிறைவாம்;
உடலும் மனமும் உனதா கிடிலே! ..(38)
[உடலும் மனமும் உனதேயாக அர்ப்பணிக்கப் பட்டுவிட்டால், தொடர்ந்து வரும் தடைகளும் துயரங்களும் தொலைந்து போகும்! கடன்கள் கரைந்து விடும்! மாசுகள் அகன்றுவிடும்! விடமும் அமுதாகும்! வெறுமை போய் நிறைவும் கைகூடும்!] ..(38)
ஆக்கும் விதியாங்(கு) அழியா(து) உலகைக்
காக்கும் பெருமாள் கருடா சனனும்
போக்கும் சிவனும் புரியப் புகுமுன்
நோக்கும் பொருள்நீ நுதிமிக் கவனே! ..(39)
[விதி = பிரமன்; கருடாசனன் = திருமால்; போக்குதல் = நீக்குதல்/இல்லாமல் செய்தல்; புரிய = (தம் தொழிலைச்) செய்ய; நுதி = கூர்ந்த ஞானம்]
[படைக்கும் பிரமனும், உலகை அழியாமல் காக்கும் பெருமாளான திருமாலும், அழிக்கும் சிவபெருமானும், தத்தம் தொழிலைச் செய்யப் புகும் முன் ஞானப் பரம்பொருளான உன்னையே தியானிப்பர்/தரிசிப்பர்.] ..(39)
வனவே டனுமாய் வளைவா ணிகனாய்
முனகும் பெருவாய் முதியோன் எனவாய்த்
தினவும் திணறித் திருடன் செயலைத்
தனதம் பிசெயத் தயைசெய் தனையே! ..(40)
[வனத்தின் வேடனாய், வளையல் விற்கும் வாணிகனாய், முனகிக் கொண்டிருக்கும் பெரிய வாயுடைய முதியவனாய் வந்து, தின்னவும் திணருவது போலத் திருட்டுச் (பாசாங்கு/ஏமாற்றுதல்) செயலை உனது தம்பியாகிய முருகன் செய்தபோது அவனுக்குக் (கண்டிக்காமல்) கிருபை செய்தாயே!!] ..(40)
நல்வாழ்த்துகள்
கோபால்
[27/12/2025]
सर्वे जना: सुखिनो भवन्तु ।