[16 ஜனவரி 2026]
[எழுசீர் சந்த விருத்தம். அடிக்கு 30 மாத்திரைகள்.
முதல் 3 அடிகள்: தனதனx6 + தானதனா; 4ஆம் பொது அடி: தனதன தந்தன தானன தந்தன தத்தன தத்தன தானதனா]
அடியவர் திருவடி தொழும் வரம்
கலைகளி னுதயமு னடியிடு சதிநடை கனகச பையினர சானவனே!
……கடையிடை முதலென உயர்தமி ழறிவவை களியொடு நிறுவிய கூடலனே
சிலையொடு மழுவொடு தழலொடு பனிமிகு சிகரமி சையமரு மோதவசீ!
……சிவசிவ சம்புச டாதர சங்கர சிற்பர நர்த்தன நாயகனே! ..(1)
நவையறு மடியவ ருனதடி அனுதின(ம்) நனிபர விசைதனி லாழ்பவனே!
……நகையுதி ருனமுக மலரென மலரவு(ம்) நலவள மளவற ஈபவனே!
சிவையொடு மகவொடு கவினொடு கனிவொடு திமிலெழு பரியம ரீச்சுரனே!
……சிவசிவ சம்புச டாதர சங்கர சிற்பர நர்த்தன நாயகனே! ..(2)
கழுதொடு நடமிட வுடலெரி சுடுபொடி தடவிய கவினுறு மேனியனே!
……களமதி லலைதரு கொடுவிட முணவரு கறைதனை அணியென ஏற்றவனே!
செழுமடர் சடைதனி லொருநதி யரைமதி செறிபனி யொடுதண னாயவனே!
……சிவசிவ சம்புச டாதர சங்கர சிற்பர நர்த்தன நாயகனே! ..(3)
புரமெரி சுடுநகை புரிபவ சுரரடை புரவல எளியவர் காவலனே!
……புலியுரி அரையணி குழையிரு செவியணி புயமதி லரவணி யோகியனே!
சிரமுன தடிமல ரினிலிட நினைபவர் சிரமமு நிழலற ஓடிடுமே!
……சிவசிவ சம்புச டாதர சங்கர சிற்பர நர்த்தன நாயகனே! ..(4)
உடலிது மடிவரை உனைநினை இதயமு முனதொளி யுணரவு(ம்) நீயருளாய்!
……உலகிதி லறநெறி நிலைபெற வெளியவ ருயரிய வளமுற ஆணையிடாய்!
திடமன மளிகுண முனதரு மடியவர் திருவடி தொழுவர(ம்) நீதருவாய்!
……சிவசிவ சம்புச டாதர சங்கர சிற்பர நர்த்தன நாயகனே! ..(5)
•~•~•~•~•~•~•~•~
சொற்பிரிவு; பொருள்:
கலைகளின் உதயம் உன் அடி இடு சதி நடை! கனக சபையின் அரசானவனே!
……கடை இடை முதல் என உயர் தமிழ் அறிவு அவை களியொடு நிறுவிய கூடலனே!
சிலையொடு மழுவொடு தழலொடு பனிமிகு சிகரமிசை அமரும் ஓ தவசீ!
……சிவசிவ சம்பு சடாதர சங்கர சிற்பர நர்த்தன நாயகனே! ..(1)
[சதி நடை = நடனச் சதியும் நடையும்; கூடலன் = மதுரைக்கு உரியவன்; சிலை = வில் (பினாகம்); மழு = கோடரி; தழல் = தீ; தவசீ = தபஸ்வீ]
நவை அறும் அடியவர் உனது அடி அனுதினம் நனி பரவு இசைதனில் ஆழ்பவனே!
……நகை உதிர் உன முகம் அலரென மலரவும், நலவளம் அளவு அற ஈபவனே!
சிவையொடு மகவொடு கவினொடு கனிவொடு திமில் எழு பரி அமர் ஈச்சுரனே!
……சிவசிவ சம்பு சடாதர சங்கர சிற்பர நர்த்தன நாயகனே! ..(2)
[நவை அறும் = குற்றமற்ற; நனி பரவு = நன்றாகப் புகழ்கின்ற; அலர் என = மலர் போல; கவின் = அழகு; திமில் எழு பரி = காளை மாடு]
கழுதொடு நடமிட உடல் எரி சுடு பொடி தடவிய கவின் உறு மேனியனே!
……களம் அதில் அலை தரு கொடு விடம் உண வரு கறைதனை அணி என ஏற்றவனே!
செழும் அடர் சடைதனில். ஒரு நதி அரை மதி செறி பனியொடு தணன் ஆயவனே!
……சிவசிவ சம்பு சடாதர சங்கர சிற்பர நர்த்தன நாயகனே! ..(3)
[கழுது = பேய்; களம் = கழுத்து; அலை = கடல்; செறி = மிகுந்த: தணன் = தண்ணன்/குளிர்ந்தவன்]
புரம் எரி சுடு நகை புரிபவ! சுரர் அடை புரவல! எளியவர் காவலனே!
……புலி உரி அரை அணி, குழை இரு செவி அணி, புயமதில்்அரவு அணி யோகியனே!
சிரம் உனது அடி மலரினில் இட நினைபவர் சிரமமும் நிழல் அற ஓடிடுமே!
……சிவசிவ சம்பு சடாதர சங்கர சிற்பர நர்த்தன நாயகனே! ..(4)
உடல் இது மடி வரை உனை நினை இதயம், உனது ஒளி உணரவும் நீ அருளாய்!
……உலகு இதில் அறநெறி நிலை பெற, எளியவர் உயரிய வளம் உற ஆணையிடாய்!
திடமனம், அளி குணம், உனது அரும் அடியவர் திருவடி தொழு வரம் நீ தருவாய்!
……சிவசிவ சம்பு சடாதர சங்கர சிற்பர நர்த்தன நாயகனே! ..(5)
[மடி வரை = அழியும் வரை; அளி குணம் = அள்ளிக் கொடுக்கும் குணம்]
நல்வாழ்த்துகள்
கோபால்
[16/01/2026]
सर्वे जना: सुखिनो भवन्तु ।