தேசத்தின் குரல்- 3
ஜி. சுப்பிரமணிய ஐயர்
"மகாத்மா" என முதலில் காந்தியை அழைத்தவர்.............................
கீழாம்பூர் சங்கர சுப்பிரமணியன் ஆசிரியர் கலைமகள்.................
ஜி.சுப்பிரமணிய ஐயர் 'தி ஹிந்து' பத்திரிகையைத் தொடங்கியவர் என்பதோடு, மகாகவி பாரதியாரை மதுரையிலிருந்து அழைத்து வந்து தனது 'சுதேசமித்திரனில்' உதவி ஆசிரியராகச் சேர்த்து விட்டதன் மூலம் தமிழ் நாட்டுக்கு மிகப் பெரிய உபகாரத்தைச் செய்தவர். மகாகவி பாரதியாரை பத்திரிகையாளராக அடையாளம் காட்டியவர் இவர்தான்!!
தஞ்சாவூர் பக்கத்தில் உள்ள திருவையாற்றில் பாவாசாமி மடம் தெருவில், 1855ஆம் ஆண்டில் கணபதி ஐயர், தர்மாம்பாள் தம்பதியரின் புதல்வனாகப் பிறந்தார். கணபதி ஐயர் அவ்வூர் முன்சீப் கோர்ட்டில் வழக்கறிஞராக இருந்தவர். இளம் வயதில் இவரது தந்தை காலமாகிவிட்டார். தனது ஆரம்பக் கல்வியைத் திருவையாற்றில் பயின்ற பின் தஞ்சாவூரில் பள்ளியொன்றில் ஆங்கிலத்தில் படித்து 1869 ஆம் ஆண்டு மெட்ரிக் தேறினார். பின்னர் கல்லூரியில் 1871 ஆம் ஆண்டு எஃப். ஏ எனும் இண்டர்மீடியட் தேறினார். சிறுவயதிலேயே மீனாட்சியம்மையை மணந்தார்.
சென்னை சைதாப்பேட்டையிலுள்ள ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் பயின்றார். அப்போது அதற்கு நார்மல் ஸ்கூல் என்று பெயர். பிறகு இரண்டாண்டுகள் ஆசிரியராகப் பணியாற்றினார். அதன்பின் பச்சையப்பன் கல்லூரியில் 1877இல் சேர்ந்தார். அங்குதான் பி.ஏ. படிப்பில் வெற்றி அடைந்தார். திருவல்லிக்கேணியிலுள்ள இந்து உயர்நிலைப் பள்ளி அப்போது ஆங்கிலோ-வர்னாகுலர் பள்ளி என்றிருந்தது. அதன் தலைமை ஆசிரியராக ஆனார்.
சர்.டி.முத்துசாமி ஐயரை நீதிபதியாக ஆங்கில அரசு நியமித்தது. அப்போது ஆங்கிலேயர்களே நடத்தி வந்த சில பத்திரிகைகள் இந்த நியமனத்துக்குப் பலத்த கண்டனம் தெரிவித்தன. தலையங்கங்களும் எழுதின. ஒரு கருப்பர் நீதிபதியாகிவிட்டால் இவர்கள் மற்றவர்களிடம் ஜாதிபாகுபாடு பார்ப்பதோடு பாரபட்சமாகவும் நடந்து கொள்வர் என்றெல்லாம் எழுதின. வெள்ளையர்களால் இந்தியர் ஒருவர் நீதிபதி ஆனதை ஏற்றுக்கொள்ள இயலாமல் போனது வெட்ட வெளிச்சமாகத் தெரிந்தது............
இதைக் கண்டு கொதித்துப் போன ஜி. சுப்பிரமணிய ஐயர் தன் நண்பர்களுடன் இணைந்து ஒரு பத்திரிகையைத் தொடங்கி முதலில் 80 பிரதிகள் அச்சிட்டு வெளியிட்டார். இப்படித்தான் முதன்முதலில் 'தி ஹிந்து' பத்திரிகை 1878 செப்டம்பர் 30ஆம் தேதி வெளியாயிற்று. ஆங்கில ஏகாதிபத்தியத்தின் பொய்ப் பிரச்சாரங்களை இந்த சுதேசி பத்திரிகை முறியடிக்கத் தொடங்கியது.
1898இல் ஆசிரியர் ஜி.சுப்பிரமணிய ஐயர் பத்திரிகையிலிருந்து விலகிக் கொண்டார் ஹிந்து பத்திரிகை நிர்வாகம் வேறு ஒருவரிடம் மாற்றப்பட்டது.......
சென்னை மகா ஜனசபபையை உருவாக்கியதில் இவருக்கு பெரும் பங்கு உண்டு. 1884 ஆண்டு மே மாதம் 16ஆம் தேதி ஹிந்து இதழ் அலுவலகத்தில் கூடி சபையைத் தோற்றுவித்தார்கள். பின்னர் சுதந்திரப் போராட்டத்திற்காக உருவாக்கப்பட்ட காங்கிரஸுக்கு இச்சங்கம் தான் முன்னோடியாக விளங்கியது." சென்னை மாநிலம் முழுவதற்கும் இச்சபையே மக்களின் சபை " என்று இந்தியா பத்திரிகையில் பாரதியார் எழுதியிருக்கிறார்.
1916 டிசம்பரில் லக்னோவில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில் இந்தியாவுக்கு சொந்த அரசு ஒன்று அமைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டும் பிரிட்டிஷாரிடம் அமெரிக்கா வலியுறுத்த வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றினார்கள். இந்த தீர்மானத்தில் கையெழுத்து இடும் பொழுது தேசிய காங்கிரசை தோற்றுவித்த கூட்டு நிறுவனர் என்ற முறையில் தான் கையொப்பம் இடுகிறார் சுப்பிரமணி ஐயர்.
1883 ஆண்டு சுயாட்சி வினா விடை என்ற சிறிய நூலைத் தமிழில் எழுதினார்.தமிழில் வெளிவந்த முதல் அரசியல் நூல் இதுதான். 42 வினா விடைகளைக் கொண்டது இந்த நூல்.
காந்தியடிகளை முதன்முதலாக மகாத்மா என்று அழைத்தவர் இவர்தான். 1921 டிசம்பரில் காந்தியை மகாத்மா என்று தாகூர்அழைத்தார். இதுதான் முதல் முறை என்பார்கள்.
ஆனால் 1912 டிசம்பர் 24ஆம் தேதி சுதேச மித்திரன் இதழில் தென்னாப்பிரிக்காவில் காந்தி நடத்திய போராட்டம் பற்றி எழுதியதில் காந்தியை மகாத்மா என்று க. சுப்பிரமணிய ஐயர் குறிப்பிட்டுள்ளார்.
இன்றைய சென்னை மாநிலத்தை வடிவமைத்த பெரியார்களில் ஒருவர் க.சுப்பிரமணியம் என்பார் சுரேந்திரநாத் பானர்ஜி ( A nation is making )
ஹிந்து பத்திரிகையைப் படிக்கிறவர்கள் மேல் தட்டு மக்களாக இருக்கிறார்கள். அவர்களுக்கு எளிய தமிழில் ஒரு பத்திரிகை வேண்டும் என்று விரும்பினார் சுப்பிரமணிய ஐயர். எனவே தான் சுதேசி மித்ரன் நாள் இதழைத் தொடங்கினார்.
கட்டுரைகள் எழுதுவதிலும் வல்லவர் மிகச் சிறந்த சொற்பொழிவாளர் என பாரதியார் இவரைப் பற்றி குறிப்பிடுவதுண்டு. ஒரு கப் காபி வாங்கி கொடுக்காமலேயே எப்படி வேலையை வாங்க முடியும்? என்கிற நுணுக்கமும் இவருக்கு அத்துபடி என்று பாரதி ஒரு கட்டுரையில் பத்திரிகைத் துறை அனுபவத்தை நகைச்சுவையோடு குறிப்பிட்டு இருப்பார்!!
விடுதலைக்காகத் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்ட பெருமான் இவர்!! தேசபக்தர்களுக்கு ஓடோடிப் போய் உதவிகளையும் செய்வார். சுதந்திரப் போராட்டத்தை வடிவமைத்த சிற்பிகளில் இவர் தலையானவர் என்று சொன்னால் அது மிகையல்ல.
ஒரு பத்திரிகையாளராக இருந்து பல விதத்திலும் பயனுள்ள விஷயங்களை ஜனங்களுக்குக் கொடுத்து சுதந்திர உணர்வை ஊட்டிய இந்த மகானைச் சுருக்கமாக ஜி. எஸ் என்று அழைப்பார்கள்.
காங்கிரசில் கோபாலகிருஷ்ண கோகலே ஒரு மிதவாதி. பாலகங்காதர திலகர் ஒரு தீவிரவாதி. (இங்கு பயங்கரவாதி என்று பொருள்கொள்ளக் கூடாது - காங்கிரஸ் கொள்கைகளில் புரட்சிகரமான எண்ணங்கொண்டவர்கள் என்பது பொருள்). ஜி.எஸ். திலகரின் வழித்தோன்றல். 1908இல் ஜி.எஸ். சுதேசமித்திரனில் எழுதிய ஒரு கட்டுரைக்காகக் கைது செய்யப்பட்டார். இவர் 1882 லேயே சுதேசமித்திரனைத் தொடங்கி விட்டார். தமிழில் வெளிவந்த முதல் அரசியல் நாளிதழ் சுதேசமித்திரன் தான். அதன் ஆசிரியர் ஜி.சுப்பிரமணிய ஐயர் என்பது பெருமைக்குரிய விஷயம். மிதவாதியாக இருந்து திலகர் பக்கம் சாய்ந்ததை பாரதியாரும் வரவேற்று இருக்கிறார்.
ஜி.சுப்பிரமணிய ஐயர் தான் பேசும் பொதுக்கூட்டங்களில் தனது பேச்சை முடித்துக் கொண்ட பிறகு சிறு சிறு துண்டுப் பிரசுரங்களை மக்களிடம் விநியோகிப்பார். அதற்காக இவர் தன்னுடன் ஒரு பெரிய பையையும் வைத்திருப்பார். அதில் அரசியல், சமூக சீர்திருத்தம், ஸ்தல ஸ்தாபன நிர்வாகம் போன்ற பல சிறு வெளியீடுகள் இருக்கும். அப்படி அவர் விநியோகம் செய்த ஒரு வெளியீடு அமெரிக்க நாட்டைச் சேர்ந்த பிரைன் (Bryan) என்பவர் ஆற்றிய ஒரு உரையாகும்.
அவர் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை எதிர்த்துப் பேசிய ஒரு சொற்பொழிவு அது. அதனைத் தமிழில் மொழிபெயர்த்து ஜி.சுப்பிரமணிய ஐயர் வெளியிட்டார். அதைத்தான் அவர் எல்லா கூட்டங்களிலும் மக்களிடம் விநியோகிப்பார். இது குறித்த புகார் ஒன்று சென்னை போலீஸ் கமிஷருக்குப் போனது. இந்த விவரங்கள் சென்னை போலீஸ் ஆவணங்களில் காணப்படுகிறது. போலீசார் ஜி எஸ் அவர்களை கண்டித்த போதும் தன்னுடைய இயல்பான பிரசுர விநியோகத்தை அவர் எந்த நாளும் கைவிடவில்லை!!
இவருக்கு ஒரு மகள். அவர் இளம் வயதிலேயே விதவையானார். தன் மகளுக்கு மறுமணம் செய்விக்க முயற்சிகள் எடுத்து பம்பாய் சென்று அங்கு அந்தப் பெண்ணுக்குத் திருமணமும் செய்து வைத்தார். பலர் எதிர்ப்புத் தெரிவித்தாலும் அவர் அஞ்சாமல் செய்ததோடு, விதவைகள் மறுமணத்தை ஆதரித்து எழுதியும் வந்தார். பாரதியின் 'சந்திரிகையின் கதை' எனும் புதினத்தில் இந்த விவரங்கள் அனைத்தையும் சேர்த்திருப்பதைப் பார்க்க முடியும்!
தேசபக்தர் சுப்பிரமணிய சிவா விற்கு ஆங்கில அரசு தொழுநோயை பரிசாகக் கொடுத்தது. சுப்பிரமணிய சிவாவை தனது வீட்டில் தங்க வைத்து கவனித்துக் கொண்டார் சுப்பிரமணியம்.
விதி செய்த கொடுமையா ஜி. சுப்பிரமணிய ஐயர் அவர்களுக்கும் தொழுநோய் பற்றிக் கொண்டது. அதற்காக அதை பற்றி கவலைப்படவில்லை. மகாத்மா காந்தி 1915 ஆம் ஆண்டு சென்னைக்கு வந்த பொழுது சுப்பிரமணியம் வீட்டிற்கு நேரடியாகச் சென்றார். "நாட்டு மக்களுக்கு தொண்டு செய்ய முடியாமல் படுத்து விட்டேனே" என்று கண்ணீர் விட்டார் சுப்பிரமணிய ஐயர்!
மகாத்மா அவரைத் தேற்றி அவருடைய கைகளைப் பற்றி சுத்தம் செய்து எப்பேற்பட்ட கை இது! நாட்டிற்காக எவ்வளவு உழைத்து விட்டீர்கள் கொஞ்சம் ஓய்வெடுங்கள் என்று ஆறுதல் கூறினார்.
18-4-1916 ஆம் ஆண்டு விண்ணுலகிற்குப் புறப்பட்டார் ஜி. சுப்பிரமணிய ஐயர். இவரைப் போன்ற தியாகிகளால் தான் தேசம் இன்று தலை நிமிர்ந்து நிற்கிறது.....................