வணக்கம்,
அண்மையில் என் மகள் தன் இரண்டாவது பிறந்த நாளைக் கொண்டாடினாள். அந்தத் தருணத்தில் அவளுக்காக எழுதிய கவிதையை இங்கே பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன் 😊😊
நன்றி,
நிரஞ்சன்
****************************************************************************************
உன் ஆகாயக் கண்களில் உயிரின்
ஆகாரம் பார்க்கிறேன் - என்றும்
சேதாரம் ஆகாத வாழ்வின்
ஆதாரம் காண்கிறேன்
உன்
புன்னகை
பார்வை
தீண்டல்
முத்தம்
பாவம்
குறும்பு
யாவுமே
அலோகாயத ரகம்
பச்சோந்தியின் நாக்குப்போல்
பாய்ந்தெதையும் பற்றும் உன்
பச்சை மதியைப்
பார்வைக்கு வைத்து
உள்ளத்தை உருக்குகிறாய்
வேகத்தைப் பெருக்குகிறாய்
உன் முகத்தை
உற்றுப் பார்க்கையில்
அனைத்து ஜீவராசிகட்கும்
அப்பனாய் மாறும்
தகவினைப் பெற்றேன்
தயை மிக உற்றேன்
அவ்வப்போது உன்னை
அதட்ட வேண்டியிருக்கிறது
நீ முள்மரமாய் மாறுதற்கன்று
நல்மரமாய் மாறுதற்கு
உன்
அழுகை, ஆனந்தம்
என்னும் இருபெரும்
எல்லைக் கோடுகளால்
ஆனது என் உலகம்
உன்
ஆனந்தத்தைப் போலோர்
ஆனந்தம் இல்லை
உன்
அழுகையைப் போலோர்
அவஸ்தை இல்லை
அகமகிழ்ச்சிக்கு
அகம் மட்டுமே
போதும் உனக்கு
அகமகிழ்ச்சிக்கு
சகம் கூடப்
போதுமானதாயில்லை எங்களுக்கு
அன்று உனக்காக ஏங்கினேன்
இன்று உன் மனத்துக்காக ஏங்குகிறேன்
கருவிக்கும் மனிதர்க்கும்
வேறுபாடு தெரியாத உலகில்
மலருக்கும் மலத்துக்கும் கூட
வேறுபாடு பாராமல் வாழ்கிறாய் நீ
பால்ய பருவம்
விடலைப் பருவம்
வாலிபப் பருவம்
என உன் மீது
அடுத்தடுத்து தாக்குதல்கள் நடந்து
உன்னில் இருக்கும்
உன் குழந்தைமை
உறைந்து போனாலும்
கவலைப்படாதே...
அன்புக்கதிர் பாய்ச்சி
அதை உடைக்க
அப்பா என்றும்
உன்னுடன் இருப்பேன்