புகழ் பெற்ற பியானோ வாத்தியக் கலைஞர் லிடியன் நாதஸ்வரம் மற்றும் அவரது தமக்கை அமிர்தவர்ஷினி 1330 குறட்பாக்களுக்கும் இசையமைத்திருக்கின்றனர்.
இந்தக் குறட்பா பாடல் திரட்டுக்கு குறளிசைக்காவியம் என்று பெயர் சூட்டியிருக்கின்றனர்.
இந்தப் பாடல் திரட்டின் வெளியீட்டு விழா ( 2ஆம் பாகம் ) கடந்த 10ஆம் தேதி யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு இந்த மாபெரும் தமிழ்த்திருப்பணி பற்றிய ஒரு வாழ்த்துக் கவிதையை வாசித்தேன்.
அதை உங்களிடத்தில் பகிர்ந்து கொள்கிறேன்.
************************************************************************************************
குறளிசைக்காவியம்
*வள்ளுவர் வணக்கம்*
மயிலையிலே பிறந்து
நுங்கையிலே எழுந்தருளி
உலகெல்லாம் அருள் பாலிக்கும் அய்யனே
ஈரடியால் உலகளந்த துய்யனே
உன் எழுத்தும் தெய்வம்
எழுதுகோலும் தெய்வம்
வாழ்க்கை சிறக்க
நீ அளித்த 'சீர்'வரிசை ஏழு;
அந்த ஏழு தான் எமக்கு ஆறு;
அந்த ஆறில் சென்றால்
சரியாகும் ஐந்து ;
ஐந்தொழுக்கம் சொல்லும்
உன் தமிழ் தான்
எமக்கு 'நான்கு'
அந்த நான்கில் நீ வைத்தது
'அறம்', 'பொருள்', 'இன்பம்'
என்னும் மூன்று
அந்த மூன்றைப் படித்தால்
சிறக்கும்
இம்மை மறுமை
என்னும் இரண்டு
இவையெல்லாம் கொண்ட
வள்ளுவம் எங்கள்
ஒரே சொத்து
செந்நாப்போதாரே!!
எண்ணற்ற
தேசியத் தலைவர்களையும்
ஆட்கொண்டாய்
கணக்கற்ற
பன்னாட்டு சான்றோரையும்
வசப்படுத்தினாய்
காதலுக்கடுத்து
உன் தமிழுக்குத் தான்
எல்லை மீறினாலும்
தவறில்லை என்னும்
சட்டம் உண்டு போலும்
தெய்வப்புலவனே!!
நீ
தமிழ்நாட்டுப் பேருந்திலும்
ஏறிக் கொள்கிறாய்
பிரான்சு நாட்டு ரயிலிலும்
பயணம் செய்கிறாய்
பறவைகளுக்கடுத்து
உன் அறத்துக்குத் தான்
இசைவொப்பம் (Visa) இன்றி
பன்னாடு செல்லும்
சிறகுகள் உண்டு போலும்
நீ எழுதிய குறட்பாக்களில்
தமிழ் என்றே சொல்லே இல்லை
ஆயின்
உன் சொல் இன்றி
தமிழர் என்ற இனமே இல்லை
உன்னை வணங்கி
இந்த அவையேறி நிற்கின்றேன்
ஆன்ற அவையைப் பணிந்து
என்றன் கவிதையினை தருகின்றேன்
************************************************************************************************
*குறளிசைக்காவியம் - அறிமுகக் கவிதை*
வயிறுக்கு ஊதியம் உண்டு
உயிருக்கு ஊதியம் உண்டா?
உண்டென்று சொன்னார் நம் வள்ளுவர்
பொய்யாத மொழி பேசும் தெள்ளியர்
ஊதியம் என்னென்று கேட்டேன்
அவர் பதிலை உள்ளிருந்து வேட்டேன்
ஈதலும் இசைபட வாழ்தலும்
உயிருக்கு ஊதியம்
என்றார் வள்ளுவனார்
எனினும்
அதை மாற்றிப்
பொருள் கொண்டார் லிடியனார்
முதலில் குறளுக்கு இசையமைத்து
அதைக் குறளிசைக்காவியம் என்றுரைத்து
பின்னரே உலகிற்கு ஈந்திருக்கிறார் ;
வள்ளுவன் தன்னை
உலகினுக்கே தந்து
பாரதியின் தூதனாய்
பரிமளித்திருக்கிறார் ;
முதலில் குறளை இசைத்தல்
பிறகு உலகிற்கு அதை ஈதல் என
லிடியன் புரிந்து கொண்டாலும்
எந்தப் பாதகமும் இல்லை
தமிழுலகிற்கு அவர்
திருப்பணி அன்றி
வேறெந்த சாதகமும் இல்லை
இந்தக்
குறளிசைக்காவியத்தில்
ஒரு விந்தை செய்தார் லிடியன் புதிதாய் சிந்தை செய்யும் நெடியன்
முப்'பாலு'க்கு
மெட்டுகள் அமைக்க
'அமிர்தம்' தன்னை
அவர் பணித்தார்
பாலும் அமிர்தமும்
சேர்ந்ததன் பயனாய்
பாக்கள் தேனாய்
இனித்தது காண்;
பாக்கள் தோறும்
பாக்கள் தோறும்
செந்தமிழ் வாசம்
மணந்தது காண்;
(முப்)பாலை முழுதாய்
தேனாக்கியது
லிடியனின் தமக்கை
அமிர்தவர்ஷினி;
மொழியையும் இசையையும்
கண்ணெனக் கொண்டு
தரணியைப் பார்க்கும்
தகைமை சால் தர்ஷினி;
ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும்
என்ற குறளுக்கும்
மகன் தந்தைக்காற்றும் உதவி
என்னும் குறளுக்கும்
பற்பல பற்பல
உரைகள் உண்டு
இக்குறட்பாக்களுக்கு
வர்ஷினி லிடியன் தவிர
சிறந்த உதாரணங்கள்
வேறு எவர் உண்டு?
வர்ஷினி
லிடியன்
திருமிகு சதீஷ் ஜான்சி தம்பதியின்
மக்கட்(ள்) பேரு;
அவ்விருவரைக் காட்டிலும்
அவர்களுக்கு வேணுமோ
மக்கட்பேறு;
இவர்களின்
கைவண்ணத்தில்
மலர்ந்திருக்கிறது
ஆயிரத்து முந்நூற்று
முப்பது குறள்களுக்கு
இருநூறு வகை இசைகள்
இவர்கள்
உலகிசைத் தேரில்
வள்ளுவரை ஏற்றியதால்
தித்தித்து தித்தித்து
திளைக்கின்றன திசைகள்
இனி
இசைத்தட்டில் நீங்கள்
குறளும் உண்ணலாம்
பொருளும் உண்ணலாம்
குறளுக்குத் தமிழில்
எளிய உரை தந்திருக்கிறார்
சக்திவாசன் என்னும் சால்பாளர்
மன்பதை போற்றும் மாண்பாளர்
தமிழுரையை
ஆங்கிலத்தில் தந்திருக்கிறார்
Vishwas Gaitonde எனும் வித்தகர்
இருமொழிப் புலமை கமழும் நற்றவர்
வர்ஷினி,
உரைக்கும் இசையமைத்திருப்பதால்
இனி உலகம் சுகமாய்
அறம் செய்யும்
அறத்தினுக்கு அகங்களை
பணித்திடும் வேலையைக்
கொஞ்சமும் தொய்வின்றி
ஏழு ஸ்வரம் செய்யும்
குறளிசைக்காவியத்தில்
பாடியவர்கள் ஆயிரம்
இந்தப் பெரும்பணி முழுதும்
ஒரு 'தெய்வ' காரியம்
உலகம் ,
குறள் இசைக்காவியத்தை இருவரின் பத்தாண்டு கனவு
என்றுரைக்கும் ;
ஈராண்டு உழைப்பு என்றெழுதும்
குறளிசைக்காவியம் ,
நாங்கள் வாழ்வாங்கு
வாழ்ந்ததற்கான சான்று என்பர்
வர்ஷினியும் லிடியனும்
ஊதியம் என்றால் பணம்
இந்த செயற்கை நுண்ணறிவு காலத்திலே
ஊதியம் என்றால் பயன்
அந்த இயற்கை நுண்ணறிவன் காலத்திலே
வர்ஷினியும் லிடியனும்
பொருட்பாலுக்கு இசையமைத்திருக்கலாம்
ஆனால் அவர்கள் பொருளின் பால் செல்லவில்லை
பிறவிப்பயனை அடைந்ததால்
அவர்கட்கு வேறெந்த
செல்வமும் தேவையில்லை
ஈதலினால் மட்டுமே
புகழ் வரும்
என்றார் திருவள்ளுவர்
தமிழ் காதலினால்
அதை மெய்ப்பித்திருக்கிறார் திரு.சதீஷ்
தோன்றிற் புகழொடு தோன்றுக என்ற குறள் புரியவில்லை என்றால் பரவாயில்லை
சதீஷ் ஜான்சி குடும்பத்தைப் பாருங்கள்
உங்களுக்கு வேறு உரையே
தேவையில்லை
குறளிசைக்காவியம்
சதீஷ் குடும்பத்தாருக்கு
தந்திருப்பது
ஒன்றாப் புகழ்
எந்நாளும் பொன்றாப் புகழ்
வசையில்லா
இசை தந்ததால்
வர்ஷினியும் லிடியனும்
தொட்டிருக்கின்றனர் உச்சம்
விட்டிருக்கின்றனர் நல்லெச்சம் ( Legacy)
இந்த
இசைப்பிறவிகளால்
கம்பராமாயண கச்சேரி போல்
வையமெங்கும்
குறளிசைக் கச்சேரிகள் நடக்கட்டும்;
பாட்டுப்பாலம் ஏறி
வள்ளுவர் நாடு விட்டு நாடு கடக்கட்டும்;
தமிழகத்தீரே
வையகத்தீரே
குறளிசைக்காவியத்தில் ஆழுங்கள்;
குறள் காட்டும் நெறிப்படி வாழுங்கள்;
*********************************************************************************************