"அவன், அது, ஆத்மா"
(ஒரு எளிய மனிதனின் சுயசரிதம்)
(மீ. விசுவநாதன்)
அத்யாயம்: 59
நாடக ஆசிரியர் “கோமல் சாமிநாதன்“
அவன் வேலை பார்த்து வந்த காட்பரி நிறுவனத்தின் தலைமை அலுவலக மேலதிகாரியாக இருந்தவர் ஆதிலக்ஷ்மணன். பம்பாய்த் தமிழ்ச் சங்கத்தின் தலைவராகவும் இருந்தவர். இலக்கிய வாதி. தமிழ் நாட்டில் இருந்து சிறந்த தமிழ் அறிஞர்களை பம்பாய் தமிழ்ச் சங்கத்திற்கு அழைத்து இலக்கிய விழாக்கள், நாடககங்கள் நடத்தி தமிழுக்குப் பெருமை சேர்த்தவர். அப்படி அழைக்கப் பட்ட கலைஞர் பெருமக்களில் நாடக ஆசிரியர் கோமல் சாமிநாதனும் ஒருவர்.
அவன் சென்னையில் காட்பரி அலுவலகத்தில் வேலை செய்து வந்தான். அவனுக்கு கவிதை, கதைகள் எழுதுவதில் ஆர்வம் இருந்ததை ஆதிலெஷ்மணன் அறிந்திருந்தார். சென்னையில் இருந்து பம்பாய்க்குச் சென்று நாடகம் நடத்துகின்ற கலைஞர்களுக்கு “ட்ரைன்” டிக்கெட் எடுத்து அதை அந்தக் குழுத்தலைவரிடம் சேர்க்கச் சொல்லி அவனை அனுப்புவது அவரது வழக்கம். 1980 ஆம் வருடம் அப்படியான ஒரு சந்தர்ப்பத்தில் கோமல் சாமிநாதன் அவர்களுக்கு அவனை அறிமுகம் செய்து வைத்தார். அதுமுதல் அவனுக்கு கோமல் சாமிநாதன் அவர்களுடன் நல்ல தொடர்பு இருந்து வந்தது.
அவர் சுபமங்களா மாத இதழின் ஆசிரியராகப் பொறுப்பேற்ற காலத்தில் ஒவ்வொரு சனிக்கிழமை மதிய வேளையிலும் அவரை அவனும், அவனுக்கு மனைவி சீதாலக்ஷ்மியும் சந்தித்து வந்தனர். சுபமங்களாவில் அவனது நண்பர்கள் கீதப்பிரியன், கவிஞர் இளையபாரதி போன்றோர் ஆசிரியர் குழுவில் இருந்தனர்.
கோமலின் "தண்ணீர் தண்ணீர்" நாடகத்தை வங்காள மொழியாக்கம் செய்தவர் சீதாலெட்சுமி விஷ்வநாத். ("சீதாலெட்சுமி விஷ்வநாத்" என்று பெயரிட்டவரே கோமல் சாமிநாதன் தான்.)
அவன் எழுதிய "முத்தையாப் பிள்ளை" என்ற சிறுகதை கணையாழி மாத இதழில் (செப்டம்பர், 1993) வெளியானது.
அந்த மாதம் அவன் கணையாழியின் ஆசிரியர் கஸ்தூரிரங்கன் அவர்களை அவரது அலுவலகத்தில் சந்தித்து விட்டுத் திரும்புகிற பொழுது,"விஸ்வநாதன்...கணையாழியில் உங்களது சிறுகதையைப் படித்தேன். நன்றாக இருக்கிறது." என்று பாராட்டி விட்டு கணையாழி ஆசிரியரைப் பார்க்கச் சென்றார் கோமல்.
சுபமங்களாவுக்காக "தேர்" என்ற தலைப்பில் சிறுகதையை அனுப்பினான். வெளியானது. அந்தக் கதையைப் பாராட்டி தி.க.சிவசங்கரன் அவர்கள் கடிதம் எழுதியிருப்பதாகச் சொல்லி அவனது முதுகைத் தட்டிக் கொடுத்தார். ('தேர்' சிறுகதையை 21ஆம் நூற்றாண்டுச் சிறந்த சிறுகதைகள் தொகுப்பிற்காகத் தேர்வு செய்திருந்தார் எழுத்தாளர் எஸ். சங்கரநாராயணன்.)
பேராசிரியர் தி. வேணுகோபாலன் (நாகநந்தி) அவர்கள் "மகாவித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை" அவர்களைப் பற்றி தி.நகர் உஸ்மான் சாலையில் இருந்த கீதாஞ்சலி திருமண மண்டபத்தில் உரை நிகழ்த்தினார். அந்நிகழ்ச்சிக்கு அவனும், சீதாலெட்சுமி யும் செல்வதாகச் சொன்ன போது,"நானும் வருகிறேன்..நாகநந்தியைப் பார்த்து நீண்ட நாள்கள் ஆகிறது" என்று வந்தார். நாகநந்தி அவர்களின் உரையில் சொக்கித்தான் போனார் கோமல் சாமிநாதன்.
அதன் பிறகு அநேகமாக அவர்கள் இருவரும் அடிக்கடி சந்தித்து வந்தனர். சுபமங்களாவுக்காக மாதம் ஒரு இலக்கியக் கூட்டம் நாகநந்தி அவர்களை வைத்து நடத்தத் திட்டமிட்டார் கோமல்.
"பாரதி இயல்" என்ற தலைப்பில் 1991 ஆம் ஆண்டு பிப்பிரவரி முதல் செப்டம்பர் மாதம் வரையில் ஒவ்வொரு மாதமும் ஒன்பதாம் தேதி மாலை 6.30 மணிக்குத் தொடங்கி இரவு எட்டு மணிவரை ஆழ்வார்பேட்டை சீனிவாச காந்தி நிலையத்தில் நிகழ்ச்சி மிகச்சிறப்பாக நடைபெற்றது. அந்த உரையைக் குறிப்பெடுத்து "பாரதி இயல்" என்ற கட்டுரையாக முனைவர் சீதாலெட்சுமி விஷ்வநாதனைக் கொண்டு எழுதச் சொல்லி சுபமங்களாவில் வெளியிட்டார் கோமல் சாமிநாதன். ஒவ்வொரு மாதமும் நாகநந்தி அவர்களின் உரையை மிகவும் ரசித்துக் கேட்டு மகிழ்ந்தார் கோமல்.
சுமார் ஐந்து வருடங்கள் (60 இதழ்கள்) சுபமங்களாவின் ஆசிரியராக இருந்து அனைத்துத் தரப்பு எழுத்தாளர்களின் கதை, கட்டுரை, நேர்காணல்களை வெளியிட்டு இலக்கிய உலகின் உன்னத இடத்தை சுபமங்களாவுக்குத் தந்துவிட்டு 1995 ஆம் ஆண்டின் இறுதியில் தனது அறுபதாவது வயதில் புற்று நோயினால் இறைநிலையை அடைந்தார்.
கோமலின் மறைவு அவனுக்கும், முனைவர் சீதாலெட்சுமி விஷ்வநாத் துக்கும், இலக்கிய உலகத்திற்கும் பெரும் இழப்பானது. கோமலின் மறைவுச் செய்தியை அவன் ஆஸ்ரேலியாவில் மகன் வீட்டில் இருந்த 'நாகநந்தி' அவர்களுக்குத் தெரியப்படுத்தினான்.
"கோமலின் மறைவு மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது. அவரது இலக்கிய, சமூகப் பணி மகத்தானது" என்று பதில் பதிவில் எழுதியிருந்தார்.
கோமல் எழுதிய "பறந்துபோன பக்கங்கள்" சயசரிதையை குவிகம் அமைப்பு நூலாக வெளியிட்டது.
"கோமல் தியேட்டர்ஸ்" என்ற நாடகக் குழுவின் மூலமாக அவரது மகள் தாரிணி கோமல், தந்தைக்குப் பெருமை சேர்க்கும் வகையில் மிகச் சிறப்பான கதையம்சங்கள் கொண்ட நாடகங்களைத் தொடர்ந்து தந்து கொண்டிருக்கிறார்.
(21.05.2026 23.11 pm)
(அவன் மீண்டும் வருவான்)