தென்நைமிசனே நெஞ்சில் நாட்டு நிழலே

1 view
Skip to first unread message

Parthasarathy S

unread,
Feb 27, 2026, 11:00:00 PM (2 days ago) Feb 27
to santhav...@googlegroups.com

தென்நைமிசனே நெஞ்சில் நாட்டு நிழலே

அடியார்க்கடியான்

புதுஅக்ரஹாரம் எஸ். பார்த்தசாரதி, பெங்களூர்

எண்சீர்க்கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

(அடிதோறும் ஒற்றெழுத்து நீக்கி பன்னிரெண்டு எழுத்துக்கள் கொண்டது)

 

நாரணன் உன்னை நவின்றிட நல்மனம்

               நாளுமே உன்றன் நலனே நணுகிட

தோரண மாகவுன் தோத்திரம்  பாடிட

               தடைகளைத் தீர்த்துத் தடமே கொண்டிட

வாரணம் ஓங்க வருநர சிங்கனே

               வரமாய்த் தென்நைமி சமதில் சேர்ந்தனே

நீரென வுருகுமுன் நெஞ்சில் என்னையே

               நீங்கிடா திருத்தி நாட்டு நிழலிலே                                                1

 

ஓதிட நாமம் ஓராயிரம் கொண்டவா

               உள்ளமே கண்டு உதவிடும் உத்தமா

பாதியும் பாதியும் வேறென நின்றவா

               பக்தனின்  வரமதை நினைவில் கொண்டவா

ஆதியும் அந்தமும் ஆகிய சோதியா

               அண்டத்தில் கரந்தே அடுத்தொன் றில்லாதா

வேதியர் வாக்கினில் வாழ்ந்திடும் விமலா

               விண்ணவ ராகியான் பாடுவ தென்றோ?                                     2

 

கூரிடும் ஆழியும் குளிர்வெண் சங்கொடும்

               கட்கமும் தண்டமும் கணைகொள் நாணுமே

பாரிடை அருச்சையில் பாந்தமா யருளும்

               பார்கவா! ஆறொடு பேறுமாய் ஆனவா!

வேரிடும் ஞானமும் வேதமும் ஆகியே

               வேள்வியும் அவியும் வேதியர் ஆனவா

ஊரிலுள் உறவெலாம் உன்னை ஒக்குமோ

               உண்மையை உரைசெய்த் தென்நைமிசத்தனே!                         3

 

அண்டமாய் ஆயிரம் ஆயிரம் தோன்றும்

               அழகுன் உந்தியில் பூத்தநல் மரையில்

அண்டமொன் றுக்கொரு அயனை இடுவாய்

               அனைத்து யிரையும் அன்பிலே காப்பாய்

 பண்டமே பரவி பலவாய் நிற்பவா

               பழியே வொட்டாப் புகழுடை மாலவா!

துண்டவெண் பிறையன் துலங்கு மேனியா

               தென்நைமி சத்திலே தேவதை ஆனவா                                    4

 

மூலவா முதல்வா முன்னமே நின்றவா

               மூவரில் காத்தலை முக்கியம் கொண்டவா

ஆலிலை மீதிலே பாலனாய் ஆனதும்

               அப்பிரா கிரதமே யென்நான் சொல்வது?

நீலமா மேனியாய் நின்மலா நித்தியா

               நாரணா தென்நைமி சத்திலே வாழ்பவா!

காலமும் தத்துவம் கணக்கி லாதவோர்

கலக்க மில்லுல கிலெனை வைப்பாயோ                                 5

 

வேதமே ஓதுமுன் பாதமே உலகினில்

               வேறென வேறென விரிதல் ஓர்ந்தவர்

பாதமே யன்றியும் பற்றுதல் செய்வரோ

               பூதங்கள் மேலொரு புண்ணியம் ஈயுமோ?

ஓதமே சூழுவிவ் வுலகில் உந்தனின்

               ஒடுக்க மில்லாத ஒன்றையும் காண்கிலேன்

ஆதலில் அடிமை அண்டினேன் ஆண்டவா

               அருள்தென் நைமிசம் அழகே அன்பனே!                                   6

 

காலினைக் கராவும் கதுவக் கரியும்

               கதறும் மூலமே கழன்ற கங்காரம்

மாலுனை விட்டவம் மடுக்கே வந்தவர்

மறையில் மறையும் மாதவா மற்றெவர்?

மூலமாய் உணர்ந்த முனிகள் முற்றுமாய்

               முன்னமே பக்தியில் முழுதுமே ஆழ்ந்தார்

தூலமாய்ச் சூக்குமத் தானுடன் நின்றவா

               துலங்கு தென்நைமி சமெந்தாய் அருளே!                                  7

 

 மேதினி மேலுள மற்றையெத் தேவரும்

               மீதுள கருமம் மிகுத்து ளார்களே

வேதமும் சாட்சியே! வீயாத உலகாய்!

வானிடை வேரொடு மண்ணிடை தழைத்தவா!

ஆதியும் அடுத்தும் அருவினை யில்லாய்

               அரிதுயில் கொண்டே அரவணைச் சேர்ந்தாய்

ஓதறி யாவுரு ஒண்மையாம் சிங்கனே

               ஒளிர டிமைகொள் ளோங்குதாள் மீதிலே                                 8

 

நின்னுடைப் படைப்பில் நிற்பன யாவுமே

               நின்பொருட் டடிமை நினைத்தல் வேண்டுமே

தன்னுடைத் தென்றெனத் திண்ணுயிர் எண்ணுதல்

               தரணியில் இயற்கை அதுவே முரணே

இன்றிலை நாளையிவ் வெண்ணமும் மாறியே

               இன்புறு நாடிவர் ஏங்குவ தென்றுசொல்?

அன்பில ருமறை அளித்த ஆதியா!

               அரங்க மாய்தென்நை மிசத்தைக் கொண்டவா!                        9

 

ஆவியும் துடித்தி யங்குதல் நின்னதே

               பாவமே நீங்கிடப் பார்வையும் நின்னதே

மாக வைகுந்தம் மன்னுதல் உயிர்க்கே

               மரணம் தோற்றமே மழிக்கும் அல்லவோ?

நாகமாய் நச்சினை நல்குங் கலியிலே

               நின்னுடை நாமமே நல்வினை நாட்டுமே

சோகமே யொழிக்கச் சீரடி தாழ்த்தியே

               சுகமாய் அமர்ந்தாய் தென்நைமி சத்திலே!                                  10

 

மெய்யெலாம் உணர்ந்தே மன்னுயிர் உய்ந்திட

               மைவிழி மாவினை மடிகொண்ட வன்பால்

பொய்யிலா தானுரை பொருந்திக் கேட்கவே

               பையவே அவனிடம் பழகி நிற்கவே

ஐயமே தீர்க்க அருமறை காணென

               அடியார்க் கடியன் அருத்திச் செய்யுரை

செய்தவம் கூட்டுமே சிங்கனைச் சேர்க்குமே

சீரடி யாருடன் சேவிக்கக் செய்யுமே!                                         11


--
S. Parthasarathy

+91 98441 24542/9980794542

Ram Ramakrishnan

unread,
Feb 28, 2026, 8:17:37 AM (yesterday) Feb 28
to santhav...@googlegroups.com
அருமை.

இதன் வாய்பாடு மட்டும் அறிய இயலவில்லை.

அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

On Feb 27, 2026, at 23:00, Parthasarathy S <spart...@gmail.com> wrote:


--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CABNR9PcPriLS6cMve6LcJyrTPo61WAXMuD4ppf0YtsZpEPPObw%40mail.gmail.com.
Reply all
Reply to author
Forward
0 new messages