கோதை மோகன்:
என் மகன் தன் மகனுக்குச் சூட்டியுள்ள பெயர்
கற்றன் .
கற்றன் என்பது
கற்றவன் என்பதன்
இடைக்குறை என்கிறேன் நான்.
அது சரியா? தவறா? என்று அறிந்தோர் விளக்குங்களேன்.
🙏🙏🙏
------------------------
முதற்கண், குழந்தைக்கு வாழ்த்து.
புதுச்சொல் படைப்பு. இருபொருள் தோன்றுகிறது: (1) கற்றவன் > கற்றன் (2) கற்றை (சடைக்கற்றை) > கற்றன் (சிவன்).
-------------------
கொங்குநாட்டில் கொடுமணல் அருகே உள்ளது: கற்றாயன்காணி (கன்று + ஆயன் + காணி). கல்வெட்டில் உள்ள பெயர். கற்றாங்காணி > கத்தாங்காணி என்கிறோம். பல கூட்டங்களுக்கும் குலதெய்வம் உள்ள ஊர் இது.
Cf. கொற்றுவேலை - masonry. கொற்றனார் > கொத்தனார்.
------------------------------------
கொற்றவன் > கொற்றன். பிட்டன் கொற்றன். அதுபோல், கற்றவன் > கற்றன்
தமிழர்கள், பொங்கல் திருநாளை, பண்டை நாளில் கொண்டாடி மகிழ்ந்தனர் என்பதற்கு மறைமலை அடிகளார், புறநானூற்றில் இருந்து சான்று தருகிறார். சேர மன்னனின் படைத் தலைவரான, குதிரை மலையை ஆண்ட பிட்டங்கொற்றன் பற்றி, கருவூர்க் கதப்பிள்ளைச் சாத்தனார் பாடிய பாடலைக் குறிப்பிடுகிறார்.
(பாடலில், மரையான் = Nilgai antelope. காட்டுப்பசு என்பது வேறு, அது ஆமான் = Indian bison.
குதிரைமலை கர்நாடகத்தில் உள்ள மலை. குதிரைமுகம் போன்ற வடிவம். வஞ்சி மாநகர் (இன்றைய கரூர்) ஆண்ட சேர மன்னனின் தளபதி பித்தங்கொற்றன்).
புறநானூறு, 168 ஆவது பாடல் :
அருவி ஆர்க்குங் கழைபயில் நனந்தலைக்
கறிவளர் அடுக்கத்து மலர்ந்த காந்தள்
கொழுங் கிழங்கு மிளிரக்கிண்டிக் கிளையொடு
கடுங்கண் கேழல் உழுத பூமி
நன்னாள் வருபதம் நோக்கிக் குறவர்
உழாஅது வித்திய பரூஉக்கரல் சிறுதினை
முந்து வினையாளர் நாள் புதிது உண்மார்
மரையான் கறந்த நுரைகொள் தீம்பால்
மான்றடி புழுக்கிய புலவுநாறு குழிசி
வான்கேழ் இரும்புடை கழாஅது ஏற்றிச்
சாந்த விறகின் உவித்த புன்கம்
ததளங் கவினிய குளவி முன்றில்
செழுங்கோள்வாழை அகல்இலைப் பகுக்கும்
ஊராக் குதிரைக் கிழவ....
சேரமான் கோதைக்கு, படைத்துணைவனான பிட்டங்கொற்றன், பேராண்மையும்,
கைவண்மையும் ஒருங்கே உடையவன். அவனைப் பாட வந்த புலவர், இயற்கை
வளத்தையும், விருந்தின் சிறப்பையும் எவ்வளவு அழகாகச் சொல்லுகிறார்
பாருங்கள்!
அருவிகள் ஒலிக்கின்றன. அங்கே, மூங்கில் மரங்கள் வளர்ந்த அகன்ற
மலைச்சாரலில், மிளகுக் கொடி வளர்ந்து உள்ளது. அங்கு, மலர்ந்த காந்தளின்
கொழுவிய கிழங்கை, அஞ்சாமை உடைய கேழல் (பன்றி) தன் கூட்டத்தோடு
உழுவதுபோலக் கிளறுகிறது. அப்படிக் கிளறித் தோண்டப்பட்ட நிலத்தில், அன்று
நல்ல நாள் ஏற்பட்டதால், அங்குக் கூடிய மக்கள், உழாமலேயே விதைத்த, பருத்த
தோகையை உடைய தினைக்கதிரின் தினையை, புதிதாக உண்ணவேண்டி, காட்டுப் பசுவின்
நுரையோடு கூடிய சுவையான இனிய பாலை, மானின் தசைவேக வைத்த புலால்நாறும்
பானையில் உலைநீராக வார்ப்பர். சந்தன விறகால் எரித்து, சோறு சமைப்பர்.
அந்தச் சோற்றை, மல்லிகை மணம் கமழும் வீட்டு முற்றத்தில், வாழையின் அகன்ற
இலையில் பரிமாறி, பலரோடு உண்டு மகிழ்வர். அச்செழிப்பை உடைய குதிரை
மலையின் தலைவனே,இந்தப் பாடலில், பொங்கல் பெருநாளைக் கூறுவதற்காக, புது
நாள் என்றும், புது வரவு, புத்தரிசி, புதுப்பால் எனச்சொல்லி, வாழை
இலையில் கூடி இருந்து உண்ணும் நிலை, பொங்கலுக்கே உரிய தனிச்சிறப்பு
என்று, தமிழ் அறிஞர் பலரும் உரைக்கின்றனர்.
------------------------
கற்றான்/கற்றவன் > கற்றன் ஆவது காளமேகத்தை நினைப்பிக்கிறௌ அல்லவா?
காளமேகம் வெண்பா:
நாரா யணனை நராயணனென் றேகம்பன்
ஓராமற் சொன்ன வுறுதியால் - நேராக
வாரென்றால் வர்ரென்பென் வாளென்றால் வள்ளென்பேன்
காரென்றாற் கர்ரென்பேன் யான்.
நா. கணேசன்