--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAA%2BQEUekSvQDZxRcfzoSU%2BftkC9iNYPmrsMMZJXtB-X1JuLyOg%40mail.gmail.com.
தொல்காப்பியத்தில் ஆழங்கால் பட்டவர் புலவர் வெற்றியழகன் அவர்கள். தொல்காப்பிய வகுப்புகள் நடத்துபவர். தொல்காப்பியன் என்றே புனைபெயர் கொண்டவர். தொல்காப்பியம் பற்றிக் கட்டுரைகள் எழுதியவர். அவருடைய தொலைபேசி எண்- 9789043139.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CA%2BPSDBC4%3DvWv1Pjjeogik%3DhQrDZUhak5EGzbrpLVp00Kk%2BDXyg%40mail.gmail.com.
தொல்காப்பியத்தில் ஆழங்கால் பட்டவர் புலவர் வெற்றியழகன் அவர்கள். தொல்காப்பிய வகுப்புகள் நடத்துபவர். தொல்காப்பியன் என்றே புனைபெயர் கொண்டவர். தொல்காப்பியம் பற்றிக் கட்டுரைகள் எழுதியவர். அவருடைய தொலைபேசி எண்- 9789043139.
இலந்தை
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CA%2BPSDBC4%3DvWv1Pjjeogik%3DhQrDZUhak5EGzbrpLVp00Kk%2BDXyg%40mail.gmail.com.
யாடு (Aries - ram, Zodiac sign) என்னும் சொல் யாட்டை, யாண்டு என்ற ஆண்டுக்கான தமிழ்ச்சொற்கள் இரண்டையும் தந்தது. யாடு ஐ விகுதி ஏற்று யாட்டை என வந்தது. கச்சிப் பேடு --> பேடு+ஐ = பேட்டை போல. ‘யாறு, யாண்டு, யாடு, யாமை, யானை (< யால்), யாளி, யார், யாப்பு, யாக்கை, யா, யால்’ என்பன யகாரத்தில் தொடங்கும் பழந்தமிழ்ச் சொற்கள் ஆகும். இவை இடைக்காலத்தில் மொழிக்கு முதலில் வரும் யகர மெய்யை இழந்து, முறையே, ‘ஆறு, ஆண்டு, ஆடு, ஆமை, ஆனை, ஆளி, ஆர், ஆப்பு, ஆக்கை, ஆ (மரம்), ஆல் (மரம்)’ என ஆகாரத்தில் தொடங்கும் சொற்களாக மாறி அமைந்தன. காடு : காண்டா (மிருகம்), கீடு-கீண்டு (கீடம் = புழு), கூடு-கூண்டு, தாடு-தாண்டு (மேகெ தாடு - ஆடுதாண்டு காவேரி), நீடு-நீண்டு, வேடு-வேண்டு, சூடு-சூண்டு(சுண்டு), ... போல யாடு (சித்திரை மாத ராசி) தொடக்கம் ஆதலால் யாண்டு, யாட்டை எனச் சங்க காலத்தில் ஆண்டுக்குப் பெயர்.
யாடு >> யாட்டு, யாண்டு (சங்க நூல்களில்).
யாட்டுக்கோட்பாடு கொணர்ந்த சேரலாதன் - பதிற்றுப்பத்து
கனலிவட்டம் - தமிழில் Zodiac என்பதன் கலைச்சொல் (சிந்தாமணியில்) இழையில் சொல்லியுள்ளேன். எங்குமே, தொல்காப்பியர் ஆவணியை எப்பொழுதும் ஆண்டு (< யாண்டு/யாடு) பிறப்பாகக் கொள்ளவில்லை. முந்நான்கு பருவமாக சித்திரையில் தொடங்கும் 12 மாதங்களைப் பகுத்து, க்ரீஷ்ம பர்வத்தில் தொடங்கும் வட இந்திய முறையைத் தமிழகத் தட்பவெப்ப நிலைக்கு மாற்றுகிறார் காப்பியர். பிராமி எழுத்து தமிழகம் வந்தபோது, சில மாற்றங்களை - உ-ம்: புள்ளிக் கோட்பாடு - செய்தவர் தொல்காப்பியர். மேலும், வல்லமை எழுத்துக்களை வல்லெழுத்து இனமாக வைத்தார். அதே போலத்தான் வேளாண்மைக்காக கார்ப்பருவத்தை முதலில் சொல்வதும் ஆகும். சமணர்கள் பலரும் வேளாண்மைத் தொழிலர். வேளாண்மைக்கு அடிப்படை கார்காலம், எனவே 6 பருவச் சுழற்சியை வேளாண்மையை முதன்மையாக வைத்துத் தருகிறார். சமணர்கள் செய்த நிகண்டுகளும் அவ்வாறே. கனலிவட்டம் - தமிழில் Zodiac என்பதன் கலைச்சொல் (சிந்தாமணியில்) இழையில் விரிவாக விளக்கியுள்ளேன். நச்சினார்க்கினியர் திருநாளாக சிங்க மாசத்தை (ஆவணி 1) வைக்கலாம். வேளாண் சுழற்சி துவங்கும் மாதம் கார்ப்பருவம். அதற்காக, யாண்டு/யாட்டு < யாடு தமிழ் ஆண்டுப் பிறப்பு மாறுவதில்லை.
தொல்காப்பியம், ந. மு. வேங்கடசாமி நாட்டார், தமிழ்ப்பொழில், 1925
கரந்தைத் தமிழ்ச் சங்கத்து திரு. ஜெயக்குமார் அவர்களிடம் பெற்று, ஐந்து ஆண்டு முன்னர், தமிழ்ப்பொழில் இதழ்களின் பிடிஎப் கோப்புகளைத் தமிழ்மரபு அறக்கட்டளைக்கு அனுப்பினேன். தமிழ்ப்பொழில் இதழ்கள் இணையத்தில் இன்று இலங்குகின்றன. சிற்சில செந்தமிழ், செந்தமிழ்ச்செல்வி இதழ்கள் தமிழ் எண்ம நூலகத்தில் (http://tamildigitallibrary.in ) கிட்டுகின்றன. இன்னும் 3 இலட்சம் நூல்களாவது இணையம் ஏறினால், தமிழ் ஆழம் பெறும். ஆறாம் திணைத் தெய்வதம் கூகுளாண்டவர் துழாவும் தமிழ்மாணவர்க்கு அருளுவார். பல எம்.ஏ, பிஎச்டி தீஸிஸ்கள் அழியும் தறுவாயில் உள்ளன. இடைக்கால இலக்கியம் வாசிப்போரோ, அவற்றில் புலமையோ இலா ஒரு தலைமுறை உருவாகி வருதலான் வாடுகிற தமிழ்ச்சூழலைக் காண்கிறோம். பேரா. சு. பசுபதி வலைப்பதிவில் , நாட்டார் ஐயா 1925-ஆம் ஆண்டு தமிழ்ப்பொழிலில் எழுதிய கட்டுரை ஒருங்கு குறியீட்டில் வெளியாகிறது. அமெரிக்கத் தமிழ்ச் சங்கங்களின் பேரவை தொல்காப்பியர் திருநாள் என சித்திரை முதல் நாளைக் (14 - 4 - 2021) கொண்டாடும் தருணம் இது. வாசித்துப் பயன்கொள்க. ~ நா. கணேசன்
தொல்காப்பியம்
‘மறைமுதற் கிளந்த வாயான் மதிமுகிழ் முடித்த வேணி
யிறையவர்தம் பெயரை நாட்டி யிலக்கணஞ் செய்யப் பெற்றே
அறைகடல் வரைப்பிற் பாடை யனைத்தும்வென் றாரி யத்தோ
டுறழ்தரு தமிழ்த்தெய் வத்தை யுண்ணினைந் தேத்தல் செய்வாம்.'
உலகத்திலுள்ள மொழிகள் எல்லாவற்றையும் வென்று ஆரிய மொழியுடன் உறழ்வது தமிழ் என்று சில நூற்றாண்டுகளின் முன் விளங்கிய ஒரு பேரறிஞர் இப்பாட்டிலே கூறி வைத்தனர். இப்பொழுது தமிழ்மொழியுடன் வேறு மொழிகளையும் ஒருங்கு நன்காராய்ந்த ஆராய்ச்சி வல்ல புலமையாளர்கள் இம் முடிவுக்கே வருகின்றனர். தமிழ் மொழி எவ்வளவு பழமையுடையது என்பதனையும், பண்டைய நாளில் எவ்வளவு பரவியிருந்தது என்பதனையும் ஆராய்ந்தறிந்த மதிவல்லராகிய ஆசிரியர் சுந்தரம்பிள்ளை யவர்கள், அதனை,‘சதுமறையா ரியம்வருமுன் சகமுழுதும் நினதாயின்
முதுமொழிநீ யனாதியென மொழிகுவதும் வியப்பாமே.'
என்று மொழிந்தருளினர். இங்ஙனம் பழமையால் மாத்திரமன்றி, இயல்வரம்பாகிய திருந்திய நிலையாலும், இனிமை முதலியவற்றாலும் தமிழ்மொழி தலைசிறந்து விளங்குதலின், புலமையும் , தெய்வத்தன்மையும் வாய்ந்துளோர் என நம்மாற் போற்றப் பெறும் நம் பெரு மக்கள் பலரும் தமிழைக் குறிக்குமிடத்தெல்லாம் செந்தமிழ், பைந்தமிழ், இன்றமிழ் , மென்றமிழ் , வண்டமிழ் , ஒண்டமிழ் , நற்றமிழ் , சொற்றமிழ் என்றிங்கனம் அடையடுத்து வழங்குவாராயினர் . இந் நாட்டிற்குரிய தொன்முது மக்களாகிய தமிழருடன் ஆரியர் விரவி ஒரு நாட்டினராக வாழலுற்ற காலத்தில் தமிழருடைய தத்துவ ஞானங்கள் வடமொழி நூல்களாகப் பரிணமித்தன. ஆரியருடைய கலை ஞானங்களும் , கோட்பாடுகளும் தமிழிலும் ஏறின . இரு மொழியும் நம்முடைய பெருமொழிகளென இந்நாட்டு முன்னையோர் போற்றி வந்தனர். எனினும் சிற்சில துறைகளில் ஒரு மொழி மற்றொரு மொழியினும் ஒவ்வொரு காலத்திற் சிறந்து விளங்குதல் இயற்கையே. தமிழ் மொழியானது ஆரியத்தை வெல்லுதற்கு மாறு கொண்டு நிற்கின்றது என்பது தலைப்பிற் காட்டிய பாட்டிலே குறிக்கப் பெற்றுளது. உறழ்தல் என்பதற்கு ஒத்தல் என்றும் பொருள் கூறப்படினும், வெல்லுதற்கு மாறுகொள்ளல் என்பதே சிறந்த பொருளாகும் . நம் இருமொழிகளில் வடமொழி வழக்கற்று வீழ்ந்ததனையும் தமிழ்மொழி இளமைச் செவ்வியுடன் என்றும் வழங்குதற்குரியதாய் மிளிர்வதனையும் நோக்குழி தமிழ் ஆரியத்தை ஒருவாற்றால் வென்று விட்டதென்றே இப்பொழுது கூறுதலும் ஏற்புடைத்தாகும்.
தமிழ் தன் மொழியமைதியாற் பிறமொழிகளை வென்று விளங்குதலேயன்றி , தன்னிடத்துள்ள சில நூல்களாலும் வாகை சூடித் திகழ்தல் கண்கூடாம் . திருக்குறள் , திருவாசகம் , திருவாய் மொழி என்னும் நூல்களுக்கு இணையான நூல்களை வேறெம் மொழியிற் காணக்கூடும்? தொல்காப்பியம் என்னும் இயல் நூலும் அத்தன்மையதே. இயல், இசை , நாடகம் என்னும் முத்துறையிலும் முச்சங்க நாளிலே இயற்றப் பெற்றுப் பரந்து கிடந்த இலக்கண நூல்களெல்லாம் கரந்துபடவும், தொல்காப்பிய மென்னும் இவ்வியற் றமிழிலக்கணம் இன்று காறும் நின்று நிலவுவது , பல்லாயிரம் ஆண்டுகளாக நம் முன்னையோர் இதனை எங்கனம் மதித்துப் போற்றி வந்தனரென்பதற்கு உறு சான்றாகும் .
”கண்ணு தற்பெருங் கடவுளுங் கழகமோ டமர்ந்து
பண்ணு றத்தெரிந் தாய்ந்தவிப் பசுந்தமி ழேனை
மண்ணி டைச்சில விலக்கண வரம்பிலா மொழிபோ
லெண்ணி டைப்படக் கிடந்ததா வெண்ணவும் படுமோ.”
என்றிவ்வாறாக , இலக்கண வரம்புடைமையால் நம் தமிழ்மொழி நிகரற்றதென வைத்துப் போற்றப்பெறுவது புனைந்துரையாமென ஏதிலார் புறங்கூறுதற் கிடனின்றி , எய்ப்பினில் வைப்பாக இந்நூல் கிடைத்திருப்பது நாம் புரிந்த தவத்தின் பயனேயாம். தமிழின் வரலாறனைத்தும் ஒருங்குணர்ந்து கோடற்குச் சிறந்த கருவியாகவுள்ள இந்நூல் இனி எக்காலத்தும் நிலவுதலுறும் என்பதிற் சிறிதும் ஐயமில்லை . இந்நூலானது தமிழ் கூறும் நல்லுலகத்து வழக்கும் செய்யுளும் ஆராய்ந்து முந்து நூல்கண்டு முறைப்படத் தொகுத்தியற்றப்பட்டதென்பது வடவேங்கடம் என்னும் இதன் சிறப்புப் பாயிரத்தால் அறியலாவது. இந்நூலை ஆராய்ச்சி செய்யுமிடத்து இது நன்கு தெளிவாம். இந்நூலின் எழுத்ததிகாரத்து மொழி மரபின் கண்ணே மொழிக்கீறாம் எழுத்துக்கள் கூறிவருமிடத்தே , சகரமெய்யூர்ந்த முற்றுகரமும் , நகரவொற்றும் இவ்விரண்டு மொழிகட்கே ஈறாகு மென்றும், பகர மெய்யூர்ந்த முற்றுகரமும் ஞகர வொற்றும் ஒவ்வொரு மொழிக்கே ஈறாகு மென்றும் , பகர மெய்யூர்ந்த வுகர வீற்றுச்சொல் ஒன்றே தன்வினைப் பொருளும் பிறவினைப் பொருளும் பயப்ப தாமென்றும் உணர்த்துவார்,
'உச்ச காரம் இருமொழிக் குரித்தே.'
'உப்ப காரம் ஒன்றென மொழிப.'
'இருவயி னிலையும் பொருட்டா கும்மே.'
'உச்ச காரமொடு நகாரம் சிவணும்.'
'உப்ப காரமொடு ஞகாரையும் அற்றே
அப்பொரு ளிரட்டா திவணையான.'
என ஆசிரியர் கூறி வைத்திருப்பன சிலவற்றிலிருந்தே, தமிழின் இரு வகை வழக்கினு முள்ள சொற்பரப் பெல்லாம் ஒருங்கு தொகுத்து வைத்துக் கொண்டு இந்நூல் இயற்றப்பட்டதென உணரலாகும் . மற்றும், தொகைமரபின் கண்ணே ,
'அளவிற்கும் நிறையிற்கும் மொழி முதலாகி
உளவெனப் பட்ட ஒன்பதிற் றெழுத்தே
அவைதாம்,
கசதப என்றா நமவ என்றா
அகர உகரமோ டவையென மொழிப.’
என்னுஞ் சூத்திரத்தால் , தமிழக முழுதும் வழங்கிய அளவுப்பெயர், நிறைப்பெயர்களை அவற்றின் முதலெழுத் தெடுத்தோதிக் குறித்து வைத்ததும், பொருளதிகாரத்து மரபியலில், இளமைப் பெயர் , ஆண்மைப் பெயர் , பெண்மைப் பெயர் எல்லாம் எடுத்தோதி , இன்னின்னவற்றிற்கு இன்னின்ன பெயர்கள் உரியவெனக் கூறி வைத்திருப்பதும் போல்வன இவ்வுண்மையை நன்கு விளக்குவனவாகும் . தமிழுக்கே உரிய சிறப்புவாய்ந்த பொருளதிகாரத்தில் மக்களுடைய ஒழுகலாறெல்லாம் தொகுத்துணர்த்தி யிருக்கும் மாட்சி அளவிடற் பாலதன்று . இவ்வாறாக இந்நூலின் கண் அமைந்து கிடக்கும் எழுத்துச் சொற்பொருட்டிறங்களையும் , அவற்றை ஆசிரியர் கூறிச் செல்லும் நெறிமுறைகளையும் நூற்பாக்களின் திட்ப நுட்ப அழகுகளையும், இன்னோரன்ன பிற சிறப்புக்களையும் ஒரு கட்டுரையில் எழுதிக் காட்டுவதென்பது இயலாத தொன்றாம்.
இனி , இத்தகைய சீருஞ்சிறப்பும் வாய்ந்த இவ்வியல் நூலையருளிய ஆசிரியராகும் ஒல்காப்பெருமைத் தொல்காப்பியனாரது வரலாறு ஏனைப்பல ஆசிரியர்களின் வரலாறு போன்றே நாம் செவ்விதின் அறிய வொண்ணாத்தாயிற்று , இவ்வாசிரியரின் வரலாற்றுக் குறிப்புக்களாக நமக்குக் கிடைத்திருப்பன மிகச்சிலவே . இவை கொண்டு சிற்சிலர் தாம் தாம் கருதியவாது இவ்வாசிரியரைப் பற்றி எழுதியிருக்கின்றனர். யாமும் தொல்காப்பியர் வரலாறாக அறிவனவற்றைத் தொல்காப்பிய ஆராய்ச்சி முடிவிற் கூறுவேம் . இனித் தொல்காப்பிய ஆராய்ச்சியைப் பல பகுதிகளாகப் பகுத்துக் கொண்டு , அவற்றை முறையே ஒவ்வொன்றாக எழுதிவரக் கருதியுள்ளேம் . இயல்பிலே சுருங்கிய அறிவினேமாகிய யாம் பலவினை நலிவுகட்கு இடையே இப்பேராராய்ச்சியை எடுத்துக் கொண்டது தமிழன்னையின் சிறுமகார் ஆற்றும் இச்சிறு திருத்தொண்டுக்கு அன்பர்களின் அன்பு முன்னின்று ஊக்கமளிப்பது போன்று இறைவன்றிருவருள் உண்ணின்று ஊக்கமளிக்கும் என்னும் துணிபு கொண்டேயாம்.
வாழி கரந்தை வளருந் தமிழ்ச்சங்கம்
வாழி தமிழ்ப்பொழில் மாண்புடனே - வாழியரோ
மன்னுமதன் காவலராய் வண்மைபுரி வோரெவரும்
உன்னுபுக ழின்பநலம் உற்று.
நாவலர் பண்டித. நடுக்காவேரி மு. வேங்கடசாமி நாட்டார்.
வெல்லத்தமிழ் வானந்தனில் ஒளிர்நூல்களின் நடுவே
எல்லோனெனச் சுடர்பொக்கிடம் தொல்காப்பியம் வாழ்க!
வல்லோர்பலர் புகழ்சித்திரை முதல்நாளினி மேலே
தொல்காப்பியர் திருநாளென அரசாணையில் மலர்க!
- பேரா. சு. பசுபதி, கனடா
எழுத்து - சொல் - பொருள் என்ற மூன்று அதிகாரங் களையும் ஓர் அதிகாரத்திற்கு ஒன்பது வீதம் 27 இயல்களை யும் இளம்பூரணர் கணக்குப்படி 1,595 நூற்பாக்களையும், நச்சினார்க்கினியர் பேராசிரியர் கணக்குப்படி 1,611 நூற்பாக் களையும் உறுப்புகளாக உடையது தொல்காப்பியம்.
தமிழை ஆளும் மூன்றதிகாரங்கள்
மூன்றதிகாரங்களுள் எழுத்தையே தொல்காப்பியம் முன்வைக்கிறது. ஒலிப்பதிவு கண்டறியாத காலம் வரைக்கும் பேச்சுமொழி என்பது தன்மை முன்னிலைக்கு மட்டுமே உரியது. ஆனால், எழுத்து என்பதோ தன்மை - முன்னிலை - படர்க்கை என முக்காலத்திற்குமானது. எழுத்து என்பது ஒலியை ஊற்றிவைக்கும் கொள்கலன். அது அறிவின் சேமிப்புக் கிடங்கு. தலைமுறைகளுக்கான ஞானத்தைக் கடத்தி ஏகும் கருவி. மொழியின் எழுத்துகளைப் பகுப்பதென்பதே ஒரு கணிதம் மற்றும் அஃதோர் ஒலி விஞ்ஞானம். தொல்காப்பியர் ஓர் ஒலி விஞ்ஞானி.
தமிழ் எழுத்திலக்கணத்தை “நூன்மரபு, மொழிமரபு, பிறப்பியல், புணரியல், தொகைமரபு, உருபியல், உயிர்மயங்கியல், புள்ளிமயங்கியல், குற்றியலுகரப் புணரியல்” என்று 9 இயல்களில் வகைப்படுத்துகிறார் தொல்காப்பியர். “எழுத்தெனப் படுவ / அகர முதல னகர இறுவாய் / முப்பஃது என்ப / சார்ந்துவரல் மரபின் மூன்றலங் கடையே” என்று தமிழ் எழுத்துகள் மொத்தம் 33 என்று வரையறுக்கிறார். அகர முதல் ‘ன’கர ஈறாகவுள்ள முப்பதோடு, குற்றியலிகரம் குற்றியலுகரம் ஆய்தம் என்னும் மூன்றையும் கூட்டித் தமிழ் எழுத்து கள் 33 என்று முடிவுசெய்கிறார்.
தனித்தியங்கவல்ல 12 எழுத்துகளை உயிர் எழுத்துகள் என்றார், தனித்தியங்கவல்லாத 18 எழுத்துகளை மெய் யெழுத்துகள் என்றார். உயிரைச் சார்ந்து இயங்குவதே மெய் என்ற பேரறிவை மொழியின் மீது சாற்றிய முன்னோர்களின் மூதறிவைக் கருதும்போதெல்லாம் உள்ளம் களிகூர்கிறது. குற்றியலிகரம், குற்றியலுகரம், ஆய்தம் இம்மூன்றும் ஒரு சொல்லைச் சார்ந்தன்றி தனித்தியங்கும் இயல்பற்றன வாதலின் சார்பெழுத்துகள் எனப்பட்டன.
எழுத்ததிகாரத்தின் பெருமை பேசப் பிறப்பியல் ஒன்றே போதும். எழுத்துகள் பிறப்பதெங்ஙனம், அவற்றின் பிறப்பிடம் யாது என்று சிந்தித்த தொல்காப்பியர் உடல் - உயிர் - காற்று என்ற மூன்று மூலங்களோடு முடிச்சுப் போடுகிறார். “உந்தி வழியா முந்துவளி தோன்றித் / தலையினும் மிடற்றினும் நெஞ்சினும் நிலைஇப் / பல்லும் இதழும் நாவும் மூக்கும் / அண்ணமும் உளப்பட எண்முறை நிலையான்… / …பிறப்பின் ஆக்கம் வேறு வேறியல” - என்பது நுட்பமான நூற்பா.
உந்தி வழியே முந்தி எழுகின்ற காற்று தலை - மிடறு - நெஞ்சு ஆகிய மூவிடங்களில் தவழ்ந்து, பல் - உதடு - நாக்கு - மூக்கு - அண்ணம் ஆகிய ஐவகை உறுப்புகளோடு உறழ்ந்து, வெவ்வேறு உருவாய்த் தோற்றுவதே எழுத்துகளின் பிறப்பு முறையாகும் என்று அறிவியல் தளத்தில் நின்று அறுதியிட்டு அறிவிக்கிறார்.
மொழிக்கு முதலெழுத்தாக வரக்கூடியவை எவை? வாராதவை எவை என்று தொல்காப்பியர் இட்டுக்கொடுத்த சட்டம் 3000 ஆண்டுகளாய் நின்று நிலவுகிறது. உயிர் எழுத்து பன்னிரண்டும் மொழி முதலாகும். மெய்யெழுத்துகள் மொழி முதலாகா. வடநாட்டுப் பண்பாட்டுத் தாக்கத்தால் கிரந்த எழுத்துகள் தமிழுக்குள் புகத் தலைப்பட்ட காலத்தில், தொலைநோக்குப் பார்வையோடு தொல்காப்பியர் செய்த ஒரு நூற்பாதான் இன்றுவரை தமிழின் தனித்தன்மையைக் காக்கிறது; அதுதான் அந்நிய மொழியை வெளியே நிறுத்தித் தூய்மையுறுத்தித் தமிழுக்குள் அனுப்புகிறது.
காலப்போக்கில் கிரந்த எழுத்துகளின் சொற்களைத் தவிர்க்க முடியாது; ஆனால், அந்த கிரந்த எழுத்துகளைத் தவிர்க்கலாம் என்று முடிவெடுத்தான் அந்த மொழியறிஞன். “வடசொற்கிளவி வடவெழுத் தொரீஇ / எழுத்தொடு புணர்ந்த சொல்லா கும்மே” என்றான். அதாவது, வடசொற்களின் வடவெழுத்துகளைத் தமிழ் எழுத்துகளாக்கித் தமிழோடு புழங்கலாம் என்று இலக்கணச் சட்டம் இயற்றினான். லஷ்மன் - இலக்குவன் ஆனதும், ஜானகி - சானகியானதும், மஹாராஷ்டிரம் - மராட்டியம் ஆனதும், ஹைகோர்ட் - ஐகோர்ட் என்று எழுதப்படுவதும் தொல்காப்பியன் வகுத்த மொழிமரபின் தொடர்ச்சியே ஆகும். இன்று வடசொற்களையும், திசைச் சொற்களையும் அந்தந்த ஒலிவடிவில் எழுதுவது ஊடகக் கலாச்சாரமாய் இருப்பினும், தொல்காப்பியரின் செல்வாக்கு தமிழ்ப்பரப்பில் முற்றிலும் அற்றுப்போகவில்லை என்பதே மொழியின் தனித்தன்மையாகும்.
காலப்பெருவெளியில் எத்தனையோ அரசர்களின் எத்துணையோ அதிகாரங்கள் மாண்டழிந்துபோயின. ஆனால், தொல்காப்பியன் இயற்றிய மூன்று அதிகாரங்களும் இன்றுவரை ஒரு மொழியில் ஆட்சி செலுத்துகின்றன.
இரு திணைகளில் அடங்கும் உலகு
வைப்பு முறையில் எழுத்ததிகாரத்தைத் தொடர்கிறது சொல்லதிகாரம். எழுத்துக்கு முன்பே பிறந்தது சொல். சொல்லை முன்னிலைப்படுத்திப் பொருள் உண்டாவதில்லை. பொருளை முன்னிலைப்படுத்தியே சொல் உண்டாகிறது. பின்னர் அந்தப் பொருளைச் சுட்டும் சொல் தானும் ஒரு பொருளாகிறது. பொருளே சொல்லுக்கு மூலம் என்பதனால் “எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே” என்று அறைந்து சொல்கிறது தொல்காப்பியம். இன்னும் ஆழ்ந்து பார்த்தால் எந்த ஒலி எழுத்துக்குள் அடங்குகிறதோ அதுவே சொல்லாகிறது.
கடலோசை - காற்றோசை - இடியோசை - மழையோசை - பறவையோசை - விலங்கோசை - ஆற்றோசை - அருவியோசை - இசைக் கருவிகளின் இன்னோசை - முத்தம் - சிரிப்பு - முனகல் - இருமல் இவையெல்லாம் எழுத்துகளில் அடங்குவதில்லை. அதனால், இவை யாவும் ஒலிக்குறிப்பு களாகுமே அன்றிச் சொற்களாகா. எழுத்துக்குள் அடங்கும் ஒலியே சொல்லாகிறது.
இந்தப் பேரண்டத்தை அளக்கும் அத்தனை சொற்களை யும் இரண்டே இரண்டு செப்புக்குள் அடைக்கிறார் தொல்காப்பியர். ஒன்று உயர்திணை; மற்றொன்று அஃறிணை.
மனிதர் உயர்திணை; மனிதக் கூட்டம் அல்லாதவை எல்லாம் அஃறிணை. அந்த உயர்திணையை ஆண்பால், பெண்பால், பலர்பால் என்ற மூன்றுக்குள் அடக்கிய தொல்காப்பியர், அஃறிணையை ஒன்றன்பால், பலவின்பால் என்ற இரண்டுக்குள் அடக்குகிறார். இந்தச் சொற்பகுப்பைத் தமிழ் ஞானத்தின் உச்சம் என்றே கொண்டாடலாம். “இந்தோ ஐரோப்பிய மொழிகள் பல உயிருள்ளன, உயிரல்லன அனைத்தையும் உயர்திணையாகவே கொண்டு ஆண் - பெண் என்ற இரு பிரிவுக்குள் அடக்கிவிட்டன.
சித்திய மொழிக் குழுவினுள் பல எல்லாவற்றையும் அஃறிணை யாகவே கொண்டு ஒன்று - பல என்ற இரு பிரிவுக்குள் அடக்கிவிட்டன. தமிழ் ஒன்றுதான் பகுத்தறிவுக்கு மதிப்புக் கொடுத்து, அதனையுடைய மக்களை உயர்திணை எனக் கூறியுள்ளது” என்று தமது தொல்காப்பிய ஆராய்ச்சியுள் அறிஞர் சி.இலக்குவனார் சுட்டுவது அறிவுலகத்தின் ஆழ்ந்த பார்வைக்கு உள்ளாகிறது.
அந்தச் சொற்களைப் பெயர் - வினை - இடை - உரி என்று நான்காகப் பகுத்தபோது மொழியின் மொத்தக் கட்டமைப் பும் ஒரு முடிவுக்கு வந்துவிட்டது. “பொருளை உணர்த்துவது பெயர்ச்சொல். அப்பொருளின் தொழிலைச் சொல்வது வினைச்சொல். பெயருக்கும் வினைக்கும் இடையே மையமாய் இயங்குவது இடைச்சொல். பொருளின் பண்பு கூறுவது உரிச்சொல்” என்ற சிவஞான முனிவரின் தெள்ளுரையும் உள்வாங்கி உணரத்தக்கது.
சொல்லதிகாரத்தில் சொல்லப்பட்ட கிளவியாக்கம், வேற்றுமையியல், வேற்றுமை மயங்கியல், விளிமரபு, பெயரியல், வினையியல், இடையியல், உரியியல், எச்சவியல் என்ற ஒன்பது இயல்களிலும் சொல்லும், சொல் இயங்கும் அறிவியலும், மொழியின் இயக்கத்தால் பெறப்படும் விகாரங்களும், விகாரங்களால் பெறப்படும் புதுவடிவங்களும், தமிழ் மொழியின் ஒரு சொல் இப்படித்தான் இயங்கும் அல்லது இயங்க வேண்டும் என்ற ஒலிச் சட்டங்களும் வரையறுத்து வழங்கப்பட்டுள்ளன. தொல்காப்பியரின் சொல்லதிகாரத்தை இற்றைநாள் மொழியில் சொல்லறிவியல் என்றும் சொல்லலாம்.
பொருள் எனும் பேரதிகாரம்
மூன்றாம் அதிகாரத்திற்குப் பொருளதிகாரம் என்று தலைப்பிட்ட தொல்காப்பியரின் சொற்றேர்வு சுட்டுகிறது அவர் பெற்ற பேரறிவை. மனிதன் பொருள்களால் ஆக்கப்பட்டவன் மற்றும் பொருள்களை இயக்குகிறவன்; பொருள்களால் இயக்கப்படுகிறவன். பொருள்களைக் கண்டறிகிறவன்; பொருள்களை உண்டாக்குகிறவன். இறுதியில் தானும் ஒரு பொருளாகி, பின்னர் பொருளற்ற பொருளாகிக் காலப்பொருளுக்குள் மூலப்பொருளாய்க் கலக்கிறவன் அல்லது கரைகிறவன். இந்த உலகப் பொருள்கள் கட்படு பொருளென்றும் கருது பொருளென்றும் இருவகைப்படும். அவற்றை மூவகைப்படுத்தி முதற்பொருள் - கருப்பொருள் - உரிப்பொருள் என்று பகுத்தறிவால் பகுத்துப் பகுத்து வகைப்படுத்துகிறார் தொல்காப்பியர்.
முதற்பொருள் எதுவென்று முன்மொழிந்தது தொல்காப் பியரின் மூளைப்பழம் பிழிந்த சாறாகும். உயிர்த்தோற்றத் தின் மூலமாகிய இந்த நிலமென்ற உருவமும், இந்த நிலவியல் வாழ்வை இயக்குகின்ற காலம் என்ற அருவமும் முதற்பொருள் என்பது தொல்காப்பியரின் அசைக்க முடியாத அறிவின் ஆணையாகும். “முதலெனப் படுவது நிலம்பொழு திரண்டின் / இயல்பென மொழிப இயல்புணர்ந் தோரே” என்பது எங்கள் முன்னோன் எழுதிய முன்னறிவியல்.
ஐன்ஸ்டைன் முதலாக ஸ்டீபன் ஹாக்கிங்ஸ் ஈறாக விளங்கிய விஞ்ஞானிகளும் ‘காலமும் வெளியும்’ (Time and Space) என்று தேடிக் கண்டறிந்த திரவியத்தை அன்றே சுட்டிய பேரறிவு பெருமைக்குரியது.
முதற்பொருள்களில் கருக்கொள்வனவெல்லாம் கருப்பொருள்கள். அந்தக் கருப்பொருள்களின் ஒழுகலாறுகள் உரிப்பொருள்கள் என்று வகைப்படுத்தியதில் மொத்த உலகத்தையும் இந்த மூன்று பகுப்புக்குள் அடக்கி முடிக்கிறார் அறிஞர் பெருமான்.
அகத்திணையியல் - புறத்திணையியல் - களவியல் - கற்பியல் - பொருளியல் - மெய்ப்பாட்டியல் - உவமவியல் - செய்யுளியல் - மரபியல் என்ற பொருளதிகாரத்தின் 9 இயல் களிலும் தமிழர்களின் காதலும் வீரமும், நிலமும் பொழுதும், வாழ்வும் தொழிலும், உணவும் உணர்வும், கலையும் கல்வியும், வழக்கமும் ஒழுக்கமும், உறவும் பிரிவும், அறமும் மறமும், மரபும் மாற்றமும், யாப்பும் அணியுமென எல்லாப் பொருளையும் இலக்கணப்படுத்தியிருக்கிறார் தொல்காப்பியப் பேராசான்.
விஞ்ஞானத்தோடு முன்னின்றவன்
உலகத் தோற்றம் குறித்து இதுவரை இரண்டு கருத்துகள் முன்வைக்கப்பட்டுள்ளன. ஒன்று மதக் கருத்து; இன்னொன்று அறிவியல் கருத்து. இந்த அண்டமே கடவுளின் கைவினை என்ற கருத்தையே எல்லா மதங்களும் எழுதிப்போகின்றன. ஆனால், கரிமக்கொள்கை என்ற விஞ்ஞானம் இந்த பூமியின் தோற்றம் குறித்து அதுவரையில் இருந்த எல்லா நம்பிக்கைகளையும் முடிவுக்குக் கொண்டுவந்தது. ஆனால், பல நூற்றாண்டுகளுக்கு முன்பே அறிவியல் எல்லைக்குள் அண்டத்தை அளந்தது தொல்காப்பியம்.
“நிலம் தீ நீர் வளி விசும்பொடு / ஐந்தும் கலந்த மயக்கம் உலகம்” (பொருளதிகாரம் மரபியல் 86) என்று வரையறுக்கிறது தொல்காப்பியம். நிலம் - நீர் - தீ - வளி - வெளியென்ற ஐந்தின் கலவைதான் இந்த மண்கோள் என்று முரண்பாடில்லாத கருத்தை முன்மொழிகிறது. இந்த பூமி எப்படிப் படைக்கப்பட்டது என்ற மதம்சார் கருத்தியலில் தோயாமல், எதனால் படைக்கப்பட்டது என்ற மெய்ம்மையோடு மட்டும் நின்றுகொண்டதால் தொல்காப்பியத்தை எந்த நூற்றாண்டு அறிவியலும் இடறித்தள்ளவியலாது.
தொல்காப்பியர் எந்த மதத்துக்குள்ளும் தன்னை இணைத்துக்கொள்ளவில்லை. ஐவகை நிலம் காக்கத் தங்க ளைக் களப்பலியிட்டுக்கொண்ட முன்னோர்களுக்கு நட்ட நடுகல்லையே தமிழர்கள் தெய்வமென்று போற்றி வழி பட்டார்கள் என்பதையே தொல்காப்பிய நூற்பா நுதலிப் போகிறது. “காட்சி, கால்கோள் நீர்ப்படை நடுகல் / சீர்த்தகு மரபில் பெரும்படை வாழ்த்தல் என்று இருமூன்று மரபில் கல்லொடு புணர” (பொருளதிகாரம் : புறத்திணையியல் 5) என்னும் தொல்காப்பியம் நடுகல் வழிபாடுதான் தமிழர்களின் ஆதிவழிபாடு என்று சான்றளிக்கிறது. அதுவே, குலதெய்வ வழிபாடாகி இன்றுவரை நாட்டார் சமயமாய் விளங்குகிறது.
தொல்காப்பியத்தை எப்படி மதிப்பிடுவது?
மொழி, இலக்கணக் கோட்டுக்குள் இயங்கவும், அதன் ஒலி தடம் புரளாமல் பயணிக்கவும், தமிழன் ஆதிகுடி என்பதற்கு அடையாளம் காட்டவும், மொழிக்கு அறிவியலையும் வாழ்வுக்கு அறவியலையும் அடிப்படையாகக் கொண்டது தமிழ்ப் பழங்குடி என்பதற்குச் சான்று சொல்லவும், தமிழர்க்கு உச்சமாகவும் எச்சமாகவும் உள்ள தொல்லாவணமே தொல்காப்பியம் என்று மதிப்பிடலாம். தொல்காப்பியத்தைக் கட்டிக்காப்பது அரசாங்கத்தின் - அறிவுலகத்தின் கடமை மட்டுமன்று; தமிழ் மொழி பேசும் - எழுதும் ஒவ்வொருவரின் கடமையுமாகும்.
- வைரமுத்து, கவிஞர்.
மகத்தான தமிழ் ஆளுமைகளை இளைய சமூகத்திடம் கொண்டுசேர்க்கும் விதமாக கவிஞர் வைரமுத்து அரங்கேற்றிவரும் ‘தமிழாற்றுப்படை’ கட்டுரைத் தொடரில் மே 2 அன்று அவர் வாசித்த கட்டுரையின் சுருக்கப்பட்ட வடிவம்.
வாழ்த்துவெல்லத்தமிழ் வானந்தனில் ஒளிர்நூல்களின் நடுவே
எல்லோனெனச் சுடர்பொக்கிடம் தொல்காப்பியம் வாழ்க!
வல்லோர்பலர் புகழ்சித்திரை முதல்நாளினி மேலே
தொல்காப்பியர் திருநாளென அரசாணையில் மலர்க!
- பேரா. சு. பசுபதி, கனடா
தொல்காப்பியர் திருநாள் :: சித்திரை முதல் நாள்!
என்றும் தமிழ்மொழி நின்றும் நிலவிட
இன்றும் நமதுளம் வென்றும் வளர்பல துறைநூல்கள்
மன்றில் நடமிட அன்பர் உளமதில்
அன்றே முதலுல கெங்கும் புகழ்பெறப் பலவாகித்
தங்கு மகவலும் வஞ்சி வெளிவகை
துங்கக் கலிதுறை வ்ருத்தம் தாழிசை வடிவாகிச்
சங்கத் தமிழுடன் துங்கம் முறவளந்
தங்கு மியலிசை பொங்கு நடமிவை வளர்ஆலாய்
எங்கும் பலப்பல வென்னும் பாவணி
ஏயும் மொழியுட னெழுத்தின் புணர்ப்பிய லவையோடே
கங்குக் கரையில தாகு மிலக்கணங்
கண்ட புலவர்தொல் காப்பி யர்பனு வலையீந்தார்,
என்றும் நானில மொன்றும் இறையுடன்
நன்றாம் இசைதொழில் நாடும் மரமிவை விலங்கோடே
ஒன்றும் புள்பறை உறைவோர் இனத்துடன்
நின்ற முதல்கரு நிலம்சேர் உரிப்பொருள் வகைநாடி
சொல்லின் பெயர்வினை இடை உரி வகையிவை
அன்றி எச்சமும் அகத்திணை புறத்திணை அவைகூறி
சாருங் களவியல் கற்பியல் மெய்ப்பா
டோருஞ் செய்யுள் யாப்பியல் அணியியல் உரைத்தோராய்
சீரும் வண்ணமும் அணிவகை மரபுகள்
தேர்ந்தவன் பிறந்தது “சித்திரை முதல்நாள்” எனக்கூற
நேர்மைத் தமிழராய் நெஞ்சினில் பொலிவுற
ஆர்கலி மேதினி அதனை ஏற்றகம் மகிழ்வோமே
(தந்தத் தனதன தந்தத் தனதன
தந்தத் தனதன தந்தத் தனதன தனதானா)
தமிழ்த்தாய் வாழ்த்து
--------------------------------------
அசைகள் பண்டே இருவகை வந்து
விசைகொள் செங்காய் கனியென முந்தி
அரிய தண்பூ நிழலென மந்திர ஒலிகூடி
அடரும் அஞ்சீர் அடிதொடை சிந்த
தளைவ ரும்பா தகவொடு விஞ்ச
அகவல் வெண்பா கலியொடு வஞ்சிகொள் கவியாகி
இசைகொள் சிந்தோ டெழிலுற உந்தி
வணமு வந்தே அடைவுறு சந்தம்
இனிய கண்டோ எனவுறு விந்தைகொள் இசைநாதம்
இலகு பந்தா டிடவரு பண்கள்
எழிலோ டுஞ்சீர் படமிளிர் பந்தம்
இயலொ டும்பா இசையொடும் வந்தெழில் நடமாட
விசைகொள் தெம்போ டுலவிடு கின்ற
பரணி அந்தா திபெருவி ருந்து
மிளிரு பண்போ டிலகிடு செந்தமிழ் எனலாமே
விதவி தந்தேர் கவியினம் முந்தி
விரியு மன்றே புகழ்பெற விஞ்சி
மிகுவி ருந்தோ வெனவரு செந்தமி ழிதிகாசம்
திசைக ளெங்கா கினுமவை சென்று
திரைக டந்தே தெளிவுற நின்று
செயம டைந்தே அடைவுறு செந்தமிழ் பெரிதாமே
தின முவந்தே திகழ்தமிழ் “என்றன்
இதயம் என் தாய் எனதிறை என்று
திட மு ணர்ந்தே திருவடி நின் தலை பணிவாயே!
(தனன தந்தா தன தன தந்த
தனன தந்தா தன தன தந்த
தனன தந்தா தன தன தந்தன தனதான)
தினமு வந்தே திகழ்தமிழ் “என்றன் இதயம் என்தாய் எனதிறை என்று திட மு ணர்ந்தே திருவடி நின் தலை பணிவாயே! (தனன தந்தா தன தன தந்த தனன தந்தா தன தன தந்த தனன தந்தா தன தன தந்தன தனதான)
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAA%2BQEUdtJZv7Y%2BcfJATEG1nRA07UGD0bibS2GxVQad7__c2XhQ%40mail.gmail.com.
வண்ணப்பாடல் எப்படிப் பாடக்கூடாதோ அப்படிப் பாடியிருக்கிறார்கள். வார்த்தைகள் கடித்துக் குதறப்பட்டிருக்கின்றன. கேட்பதற்கு நன்றாக இருந்தால் மட்டுமே போதுமா?
On Thu, Apr 15, 2021 at 6:49 AM N. Ganesan <naa.g...@gmail.com> wrote:--தினமு வந்தே திகழ்தமிழ் “என்றன் இதயம் என்தாய் எனதிறை என்று திட மு ணர்ந்தே திருவடி நின் தலை பணிவாயே! (தனன தந்தா தன தன தந்த தனன தந்தா தன தன தந்த தனன தந்தா தன தன தந்தன தனதான)
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAA%2BQEUdtJZv7Y%2BcfJATEG1nRA07UGD0bibS2GxVQad7__c2XhQ%40mail.gmail.com.
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CA%2BPSDBAB3u1%2BH4e13%2BALjVxV_Y--xz8mWSTOta%2BM7vHPMV9hKw%40mail.gmail.com.