. ஒரு கிராமம்!
உரசும் காற்றில் இலைகளெல்லாம்
ஓம்ஓம் என்றே ஒலியெழுப்ப,
அரச மரத்தின் அடியினிலே
அமர்ந்தி ருப்பான் ஆனைமுகன்.
தரிசு நிலங்கள் அருகினிலே
தண்செய்ப் பயிர்கள் தழைத்திருக்கும்
வரிசை யாகப் பனைமரங்கள்
வரப்பின் அருகில் நின்றிருக்கும்.
.
சேவல் கூவிப் பொழுதலரும்
தென்றல் வாசம் சுமந்துவரும்.
கூவும் குயில்கள் மைனாக்கள்
கொஞ்சும் கிளிகள் ஒலிகேட்கும்
காவல் தெய்வம் ஊர்காக்கும்
கவலை நீக்கித் துயர்போக்கும்
கோவில் மணியின் ஓசையினைக்
கொண்டு காற்று திசைசேர்க்கும்
வாழைத் தோட்டம் கடந்துசென்றால்
வண்ணச் சிறிய கோபுரங்கள்
ஆழம் இல்லாச் சிறுகுட்டை
அருகே பழைய மண்டபங்கள்
ஊழை உழைப்பால் வெலும்மக்கள்
உவந்து வாழும் சிறுதெருக்கள்.
கூழைக் குடிக்கும் வாழ்வெனினும்
கொள்ளும் நிறைவு கோடிபெறும்.
-- தில்லைவேந்தன்.
...