தை மகள் வருவாள்
(எல்லாச் சீரும் ரகர எதுகையில் அமைந்த பாட்டு)
(திருஞானசம்பந்தர் பாடிய வழிமொழித் திருவிராகப் பதிகத்தின் சந்த அமைப்பைத் தழுவி எழுதியது)
(சந்தக் குழிப்பு :
தனதனன தனதனன தனதனன தனதனன
… தனதனன தனதனனனா)
எரிதிகழும் ஒருதிகிரி இரதமுடை இரவியென
… இருளுலகில் அரியவருவாள்
தெரிவரிய பெருநெறிகள் தருகுறளின் இருசிறிய
… திருவடிகள் பரவவருவாள்
மருவளரும் விரிபொழிலும் அருவயலும் விரைபுனலும்
… வரையில்வளம் மருவவருவாள்
உருளுலகில் வரமெதுவும் அருளமுத சுரபியென
… உரைவளர்தை அரிவையவளே.
பதம் பிரித்து:
எரி திகழும் ஒரு திகிரி இரதம் உடை இரவி என
… இருள் உலகில் அரிய வருவாள்
தெரிவு அரிய பெரு நெறிகள் தரு குறளின் இரு சிறிய
… திருவடிகள் பரவ வருவாள்
மரு வளரும் விரி பொழிலும் அரு வயலும் விரை புனலும்
… வரை இல் வளம் மருவ வருவாள்
உருள் உலகில் வரம் எதுவும் அருள் அமுத சுரபி என
… உரை வளர் தை அரிவை அவளே.
(திகிரி = சக்கரம்;
அரிய = அழிக்க;
இருள் உலகில் அரிய வருவாள் = உலகில் இருள் அரிய வருவாள் என்று படிக்கவும்;
பரவ = புகழ;
தெரிவு அரிய = அறிவதற்கு அரிய;
மரு வளரும் = வாசனை மிகுந்த;
விரை புனல் = விரைந்து செல்லும் ஆற்று நீர்;
வரை இல் = வரம்பு இல்லாத;
உரை வளர் = புகழ் மிகுந்த;
அரிவை = பெண்)
- இமயவரம்பன்