(Picture from X - courtesy of: @vaelor0)
படம் கண்டு புனைந்த கவிதைகள்
1. ஆனை வித்தையா ஆளின் வித்தையா?
(எழுசீர்ச் சந்த விருத்தம்)
ஆனை வித்தை ஆனை வித்தை என்ற ரற்றும் மானிடா!
ஆனை வித்தை காட்ட ரெண்டு கால்சு மப்ப தாரடா?
ஆனை வித்தை காட்ட அந்த ஆள்சு மப்ப றிந்தபின்
ஆனை வித்தை ஆளின் வித்தை யாய ககத்தில் மாறுமே.
பதம் பிரித்து:
ஆனை வித்தை ஆனை வித்தை என்று அரற்றும் மானிடா!
ஆனை வித்தை காட்ட ரெண்டு கால் சுமப்பது ஆரடா?
ஆனை வித்தை காட்ட அந்த ஆள் சுமப்பு அறிந்தபின்
ஆனை வித்தை ஆளின் வித்தையாய் அகத்தில் மாறுமே.
2. தூண் எனவே ஆசானைச் சொல்லு
(வெண்பா)
யானையின் காலிடறா(து) என்றும் கவனமுடன்
மானுடன் தாங்கல் மறவாதே - ஞானமிகு
மாணவனாம் கோபுரத்தை மண்மேல் நிதம்தாங்கும்
தூணெனவே ஆசானைச் சொல்லு.
(கருத்து: யானையைத் தாங்கும் மனிதனைப்போல் , உலகம் வியந்து புகழும்படி மாணவனை உயர்த்திக் காட்டி அவனது அறிவுக்கு அடித்தளமாக விளங்கும் ஆசிரியர்கள் ஒரு கோபுரத்தைத் தாங்கும் தூண் போன்றவர்கள் ஆவர்)
- இமயவரம்பன்