மார்கழி வெண்பா – 2025
அடியார்க்கடியான்
(புதுஅக்ரஹாரம் எஸ். பார்த்தசாரதி)
காரார் திருமேனிச் செங்கண் கதிர்மதியன்
சீரார் குணமதில் மூழ்கியே - நீராட
வாரீர் நமக்கெனவே நாரணன் நற்பறை
நேரிழை நன்னழைப்பை நேடு 1
வையத்துள் வாழவகை யிட்டு விரதத்தில்
ஐயமும் பிச்சையும் சேர்த்தங்கே - பையத்
துயிலரியைப் பாடென்ற பாவைமொழி என்றும்
உயிரெனக் கொள்ளல் உயர்வு 2
ஓங்கி யளந்த உலகிடை ஞானத்தைத்
தேங்க நிறைக்கும் குருவினை - நீங்காத
செல்வம் எனக்காட்டும் தீந்தமிழ் முப்பதைத்
தொல்மறை சாரமெனத் தேக்கு 3
வாழ வுலகில் மழையை அழைத்தவள்
ஆழி நிறத்தனைக் கொள்ளென்றாள் - ஊழியில்
ஏழை கரக்காது கைகுவிக்கக் காப்பனென்ற
தோழி செவிச்சொல் திரட்டு 4
மாயன் வடமதுரை மைந்தன் குலவிளக்கன்
தூயோர் மலர்தூவும் ஆதியன் - வாய்பாட
தீயினில் தூசாய் வினைதீர்ப்பன் பாடென்ற
தூயசொல் கோதைதமிழ் தாங்கு 5
வெள்ளத் தரவில் துயில்கொளும் வித்தகன்
உள்ளமதைக் கண்டளிப்பான் மோக்கமே - பிள்ளையாய்க்
கள்ளமிலா நெஞ்சில் அரிநாமம் தேக்கிடவே
வெள்ளமிடும் வைகுந்த வாழ்வு 6
வேதக் கடலைநல் புத்தியெனும் மத்திட்டுக்
கோதில் அமுதமே கொண்டிடுசீர் - ஆதியான்
கேசவனைப் பாடியே தேசடை என்றிட்ட
வாசக் குழலிசொல் வாழ்வு 7
கோதுகலம் கொண்டன்றோ கீதையனைக் கூவிடணும்
ஏதுமில்லை என்றிடினும் ஈவனருள் - போதிலெழு
தேவாதி தேவனையே சேவியுந்தன் ஆகாப்பான்
நாவிலிடு நம்கோதை நூல்
(ஆ- ஆன்மா) 8
மாமாயன் மாதவன் வைகுந்தன் என்றிடவே
ஏமத்தில் சிக்காது நம்மனமே - நாமங்கள்
தூமணி மாடத்தில் வைக்கும் நமையென்ற
பாமகளைப் பாராட்டிப் பாடு 9
( ஏமம்- கலக்கம்)
நாற்றத் துழாயனாம் நாரணன் நற்பாதம்
நோற்றே பிறவியறு என்றிட்டுத் - தோற்காத
ஆற்றல் அமுதிடும் பாவைப் பசுந்தமிழைப்
போற்றிப் பறைகொள் பணிந்து 10
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/8feb2207-1c42-498a-944e-a3c11cc1e9f6n%40googlegroups.com.