40. வெண்பா வித்தகம்: அலங்காரம்

112 views
Skip to first unread message

Saidevo ramaNi

unread,
Aug 19, 2021, 10:03:25 AM8/19/21
to சந்தவசந்தம்
#ரமணி_வெண்பாவித்தகம்
40. வெண்பா வித்தகம்: அலங்காரம்
40.01. தன்மையணி: பொருள், குணம், இனம், தொழில்
செய்யுள் அலங்காரம்: செய்யுளில் அணிகள்

தண்டியலங்காரம் 35 விதமான பொருள் அணிகளை விரித்துரைக்கிறது. நன்னூல் ஆசிரியர் பவணந்தி முனிவர்,
பல்வகைத் தாதுவின் உயிர்க்குடல் போற்பல
சொல்லாற் பொருட்கிட னாக வுணர்வினின்
வல்லோர் அணிபெறச் செய்வன செய்யுள்
என்கிறார். 40. வெண்பா வித்தகம்: அலங்காரம் இழைகளில் நாம் பலவிதமான பொருளணிகளை அமைத்து வெண்பாக்கள் புனைவோம்.
.
தன்மையணி என்பது
• ஒரு பொருளை அதன் இயல்பான நிலை
• விளங்குமாறு உரைத்தலாகும்.
• அதாவது உள்ளதை உள்ளவாறு
• மிகைப்படுத்தாமல் உரைத்தல்.
• உண்டு வளர்ந்தான், ஓடி வந்தான், இரண்டு கண்கள் என்பன காட்டுகள்.
.
தன்மையணி பொதுவாக நான்கு வகைகளில் அமையும்.
பொருள் தன்மையணி: பொருளின் தன்மையை உள்ளவாறு உரைத்தல்
குணத் தன்மையணி: பொருளின் குணத்தை உள்ளவாறு உரைத்தல்
இனத்/சாதித் தன்மையணி: பொருளின் இனம் சுட்டும் கூறுகளை உள்ளவாறு உரைத்தல்
தொழில் தன்மையணி: பொருளின் தொழில் பற்றி உள்ளவாறு உரைத்தல்
.
இவ்விழையில்
• மேற்காணும் நான்கு விதமான
• தன்மையணிகள் அமைவதாக
• ஒவ்வொரு விதத்துக்கும்
• இரண்டு குறள் வெண்பாக்கள் புனையலாம்.
• தன்மையணி என்பதால் உவமை, உருவகம், மிகை போன்றன கூடா.
.
40. வெண்பா வித்தகம்: அலங்காரம்
40.01. தன்மையணி: பொருள், குணம், இனம், தொழில்
அன்பர் வெண்பாக்கள்
.
01. குருநாதன் ரமணி
அலங்காரக் குறள்: தன்மையணி
(குறள் வெண்பா)
.
பொருள் தன்மையணி
குழலில் மலரிருக்கும் கூந்தலிற் பின்னல்
அழைக்கும் பெயராம் அனு. ... 1
.
நெடிய உடலெங்கும் நீறு துலங்கும்
அடியாரின் தெய்வம் அரன். ... 2
.
★★★
குணத் தன்மையணி
தொட்டாற் சிணுங்கும் சுழிக்கும் முகத்தினை
பட்டம்மாள் பெண்பெயர் பட்டு. ... 3
.
புன்னகை யில்மறையும் போலி மனம்கொண்ட
கன்னையா கட்சியவர் காப்பு. ... 4
.
★★★
இனத் தன்மையணி
பொறிமேனி பல்நஞ்சு போக்குவயிற் றுந்தி
இறையனார் நாகம் இது. ... 5
.
ஆறறிவும் நாடுவதாய் ஐம்புலன் துய்ப்பதில்
மாறிலியாய் மாந்தர் மயல். ... 6
.
★★★
தொழில் தன்மையணி
சிறகடித்துத் தூர்ந்துண்டு தேன்றுளி சேர்க்கும்
அறுபதம் தாங்கும் அலர். ... 7
.
வருவதெலாம் கொள்வர் வரவாக ஏதும்
செருவாக்கும் எத்தர் இவர். ... 8
.
★★★★★

Saidevo ramaNi

unread,
Aug 23, 2021, 9:15:19 AM8/23/21
to சந்தவசந்தம்
#ரமணி_வெண்பாவித்தகம்
40. வெண்பா வித்தகம்: அலங்காரம்
40.02.01. உவமையணி: பண்பு, தொழில், பயன்
உவமையணி என்பது
• இரண்டு பொருள்களுக் கிடையுள்ள ஒப்புமை பேசும்.
• பண்பு, தொழில், பயன் இவற்றால் ஒப்புமை விளையலாம்.
• ஒப்புமை அறியக் காரணமாய் நிற்கும் பொருள் உவமானம் (உவமை).
• அதனால் உவமிக்கப்படும் பொருள் உவமேயம் (பொருள்).
• இரு பொருள்களிடை பொதுவாய் இருக்கும் தன்மை பொதுத்தன்மை.
• வடமொழியில் இவை முறையே உபமானம், உபமேயம், சாதாரணதர்மம் எனப்படும்.
.
பண்பு என்பது
• பொருளின் குணமாய்த்
• தனக்கு வேறொரு குணமில்லாது இருப்பது.
• அது வண்ணம், வடிவு, அளவு முதலியன.
• வண்ணம்: செம்மை, வெண்மை போன்றன.
• வடிவு: நெடுமை, குறுமை போன்றன.
• அளவு: அண்மை, சேய்மை போன்றன.
• பவளம்போற் செவ்வாய்: பண்பால் விளைந்த உவமை.
• பவளம்: உவமானம்; வாய்: உவமேயம்;
• செம்மை: பொதுத்தன்மை. போல்: உவம உருபு.
.
தொழில் என்பது
• பொருளின் புடைபெயர்ச்சியாய்க்
• காலத்தோடு புலப்படுவது.
• அரிமா அன்ன அரசன் (முறையே உவமானம், உருபு, உவமேயம்; ஆளுதல் பொதுத்தன்மை)
• அறைபறை அன்னர் கயவர் (அறிவித்தல் பொதுத்தன்மை)
.
பயன் என்பது
• செயல் காரணமாகத் தோன்றுங் காரியம்.
• மாரி அன்ன மன்னன்: (முறையே உவமானம், உருபு, உவமேயம்; கொடை பொதுத்தன்மை)
• தேவர் அனையர் கயவர். (விரும்புவது செய்வது பொதுத்தன்மை)
.
இவ்விழையில்
• மேற்காணும் மூன்று விதமான
• உவமைகள் அமையப் பெறுவதாக
• மூன்று குறள் வெண்பாக்கள் புனையலாம்.
.
40.02.01. உவமையணி: பண்பு, தொழில், பயன்
அன்பர் வெண்பாக்கள்
01. குருநாதன் ரமணி
அலங்காரக் குறள்: உவமையணி
(குறள் வெண்பா)
.
பண்பு
கார்முகில் போல்விரி கூந்தலாள் கண்ணகி
சீர்மதுரை தீய்த்தாள் சினந்து.
.
தொழில்
கணினிபோல் வேகமாய்க் கன்னிவிடை தந்தாள்
அணிநிபுணர் மேடை அமர்ந்து.
.
பயன்
இறைவனைப் போல்குரு இம்மை யறுத்தே
உறுமுக்தி தந்ததும் உண்டு.
.
★★★★★
 

Saidevo ramaNi

unread,
Sep 1, 2021, 10:27:30 AM9/1/21
to சந்தவசந்தம்
#ரமணி_வெண்பாவித்தகம்
40. வெண்பா வித்தகம்: அலங்காரம்
40.02.02. உவமையணி: ஒன்றும் பலவுமாம் பொருள்கள்
உவமை அணியில்
• ஒரு பொருளை மற்றொரு பொருளுக்கோ
செவ்வான் அன்ன மேனி
• ஒரு பொருளைப் பல பொருள்களுக்கோ
வெண்பிறை போன்ற பற்கள்
• பல பொருள்களை ஒரு பொருளுக்கோ
புறமுதுகுப் பகைவர்போல் ஓடும் வாடைக் காற்று
• பல பொருள்களைப் பல பொருள்களுக்கோ
சுறாவினம் போல் வாளேந்திய வீரர்கள்
• உவமையாகக் கூறலாம்.
.
இவ்விழையில்
• ஒருபொருள் — ஒருபொருள்
• ஒருபொருள் — பலபொருள்
• பலபொருள் — ஒருபொருள்
• பலபொருள் — பலபொருள்
• ஆகிய நான்கு விதமாக உவமைகள் அமையும்
• நான்கு குறட்பாக்கள் எழுதவேண்டும்.
.
40.02.02. உவமையணி: ஒன்றும் பலவுமாம் பொருள்கள்
அன்பர் வெண்பாக்கள்
.
01. குருநாதன் ரமணி
அலங்காரக் குறள்: உவமையணி
(குறள் வெண்பா)
.
ஒருபொருள் — ஒருபொருள்
கயல்போல் விழிதுள்ளும் கன்னி நடனம்
மயில்போல் கரம்விரித்த வாகு!
.
ஒருபொருள் — பலபொருள்
முத்துப்போல் பற்கள் முகத்தினில் வாய்மலரும்
அத்தைமகள் புன்னைகை யாம்.
.
பலபொருள் — ஒருபொருள்
விண்மீன்போல் எண்ண வியலாத செல்வத்தைக்
கண்முன்னே கண்ட குகை!
.
பலபொருள் — பலபொருள்
பறவைகள் போல்சிறுவர் பள்ளி முடிந்தே
பறந்தனர் வீட்டினைப் பார்த்து.
.
★★★★★

Saidevo ramaNi

unread,
Sep 13, 2021, 11:07:39 AM9/13/21
to சந்தவசந்தம்
#ரமணி_வெண்பாவித்தகம்
40. வெண்பா வித்தகம்: அலங்காரம்
40.02.03. உவமையணி வகைகள்: விரி, தொகை
உவமை அணியின் வகைகளை நோக்கும் முன்னர், உவம உருபுகளை அறியலாம்.
.
உவம உருபுகள்
நன்னூல் (12)
• போல, புரைய, ஒப்ப, உறழ,
• மான, கடுப்ப, இயைப, ஏய்ப்ப,
• நேர, நிகர, அன்ன, இன்ன,
• என்பவும் பிறவும் உவமத்துருபே.
.
தொல்காப்பியம் (சூத். 286,287,291: 38)
• அன்ன, ஆங்க, இறப்ப, உறழ, என்ன, எள்ள, ஏய்ப்ப,
• ஒன்ற, ஒடுங்க, ஒப்ப, ஒட்ட, ஓட, கடுப்ப, கள்ள, காய்ப்ப,
• தகைய, நடுங்க, நந்த, நளிய, நாட, நிகர்ப்ப, நேர, நோக்க,
• புல்ல, புரைய, பொருவ, பொற்ப, போல, மதிப்ப, மருள,
• மறுப்ப, மான, மாற்ற, வியப்ப, விளைய, வீழ, வெல்ல, வென்ற.
.
சங்க இலக்கியத்தில் வழக்கொழிந்த 14 உவம உருபுகள்
• இறப்ப, ஒன்ற, ஒடுங்க, ஓட, ஒட்ட,
• கள்ள, நடுங்க, நந்த, நாட புல்ல,
• மதிப்ப, மறுப்ப, வியப்ப.
.
சங்க இலக்கியத்தில் தொல்காப்பியர் சொல்லாத 28 புதிய உவம உருபுகள்
• அமர், அவிர், ஆக, இகலிய, இயல், ஈர், உரைக்கும்,
• ஏக்குறும், ஏதம் ஏர், ஓடு, ஓங்கு, ஓர்க்கும், சால,
• சினை இய, சேர், செத்து, தேர், தோய், நவில, நான,
• நாறு, மலி, மயங்கு, மாய் முரணிய, வாய்ந்த வவ்வும்.
.
இன்றைய வழக்கில் அதிகம் வருவன
• அன்ன, இன்ன, என்ன, ஏய்ப்ப, ஒப்ப, நிகர்ப்ப, போல.
.
உதவி:
https://tamilandvedas.com/tag/உவம-உருபுகள்/
★★★
உவமை அணி வகைகள்
தண்டியலங்காரம் (32)
01. விரி உவமையணி
02. தொகை உவமையணி
03. இதரவிதர உவமையணி
04. சமுச்சய உவமையணி
05. உண்மை உவமையணி
06. மறுபொருள் உவமையணி
07. புகழ்தல் உவமையணி
08. நிந்தை உவமையணி
09. நியம உவமையணி
10. அநியம உவமையணி
11. ஐய உவமையணி
12. தெரிதருதேற்ற உவமையணி
13. இன்சொல் உவமையணி
14. விபரீத உவமையணி
15. இயம்புதல் வேட்கை உவமையணி
16. பலபொருள் உவமையணி
17. விகார உவமையணி
18. மோக உவமையணி
19. அபூத உவமையணி
20. பலவயிற் போலி உவமையணி
21. ஒருவயிற் போலி உவமையணி
22. கூடா உவமையணி
23. பொதுநீங்கு உவமையணி
24. மாலை உவமையணி
25. அற்புத உவமையணி
26. சிலேடை உவமையணி
27. அதிசய உவமையணி
28. விரோத உவமையணி
29. ஒப்புமைக்கூட்டு உவமையணி
30. தற்குறிப்பேற்ற உவமையணி
31. விலக்கு உவமையணி
32. ஏது உவமையணி
.
இவ்விழையில் இவற்றுள் முதலிரண்டாக வரும், விரி, தொகை உவமை யணிகளுக்குக் குறட்பாக்கள் புனையலாம்.
.
விரியுவமை அணியில்
• பண்பு முதலியன விரிந்துநின்று
• உவம உருபு வெளிப்படையாக வரும்.
.
தொகையுவமை அணியில்
• பண்பு முதலியன தொக்கிநின்று
• உவம உருபு மறைந்து வரும்.
.
இவ்விழையில்
• வெவ்வேறு உவம உருபுகள் வைத்து
• விரியுவமைக் குறட்பா இரண்டும்
• தொகையுவமைக் குறட்பா இரண்டும்
• இரண்டு வகைகளும் கலைந்து குறட்பா இரண்டும் புனையலாம்.
.
★★★
40.02.03. உவமையணி வகைகள்: விரி, தொகை
அன்பர் வெண்பாக்கள்
01. குருநாதன் ரமணி
விரியுவமையணி
சேல்போல் விழியாள் சிரித்தனள் என்முன்னே
வால்போல் புடவைத் தலைப்பு. ... 1
.
மலையொக்கும் துன்பம் மறையும் பனிபோல்
நிலையொப்பி உள்ளம் நிறுத்து. ... 2
.
★★★
தொகையுவமையணி
மலர்விழி தேன்மொழி மாலதியைக் கண்டேன்
நிலவுமுகம் நோக்கியே நின்று. ... 3
.
கணைவிழி தைக்கக் கனிமனம் கொண்டேன்
அணைவருநீர் அன்பினில் ஆழ்ந்து. ... 4
.
★★★
இரண்டும் கலந்து
மலர்ப்பாதம் போற்ற மழைபோல் அருள்வார்
நிலையுயர் வாழ்வாகும் நேர். ... 5
.
வண்டுவிழி என்மேலே வட்டம்போல் சுற்றுமனம்
கண்டுமொழி காதல் வலை. ... 6
.
★★★★★
 

Saidevo ramaNi

unread,
Sep 22, 2021, 1:57:35 AM9/22/21
to சந்தவசந்தம்
#ரமணி_வெண்பாவித்தகம்
40. வெண்பா வித்தகம்: அலங்காரம்
40.02.04. உவமையணி வகை: இதரவிதர
இதரவிதர உவமையணியில்
• முதலில் உவமானமாய் நின்ற பொருள் உவமேயமாகவும்
• உவமேயமாக நின்ற பொருள் உவமானமாகவும்
• ஒன்றுக்கொன்று பின்தொடர்ந்து வரும்.
• இதரவிதர: ஒன்றற்கொன்று
• மற்ற பெயர்கள்:
முதனூல்: அந்நியோந்நியோபமை
சாகித்யதர்ப்பணம்: உபமேயோபமை
தொல்காப்பியம்: தடுமாறுவமம்.
.
நினைவிற் கொணர
• ஒப்புமை அறியக் காரணமாய் நிற்கும் பொருள் உவமானம் (உவமை).
• அதனால் உவமிக்கப்படும் பொருள் உவமேயம் (பொருள்).
.
தண்டியலங்காரச் சான்றுகள்
1. களிக்கும் கயல்போலும் நின்கண்;நின் கண்போல்
களிக்கும் கயலும்; கனிவாய்த் — தளிர்க்கொடியே!
தாமரை போல்மலரும் நின்முகம்; நின்முகம்போல்
தாமரையும் செவ்வி தரும்.
.
• முன்னிரண்டடிகளில் கயலும் கண்ணும்
• பின்னிரண்டடிகளில் தாமரையும் முகமும்
• ஒன்றுக்கொன்று உவமையாக வருவது காண்க.
.
2. தளிபெற்று வைகிய தண்சுனை நீலம்
அளிபெற்றார் கண்போல் அலரும் — அளிபெற்ற
நல்லார் திருமுகத் தாற்ற நளிபெற்ற
கல்லாரம் போன்மலருங் கண்.
.
• மழையால் (தளி) மலர்ந்த நீல மலரும்
• கல்லாரம் (நீலமலர்) போல் மலர்ந்த மங்கையின் கண்ணும்
• பாடல் முழுவதும் ஒன்றுக்கொன்று உவமையானது காண்க.
.
இவ்விழையில்
• இதரவிதரமாக உவமையும் பொருளும்
• அமையுமாறு ஓர் அளவியல் வெண்பா புனையலாம்.
.
★★★
40.02.04. உவமையணி வகை: இதரவிதர
அன்பர் வெண்பாக்கள்
01. குருநாதன் ரமணி
முத்தாய் உதிர்-வாய் மொழிநின் மொழிபோல
முத்தும் உருளும்! முகத்தெழில் — பத்தினியே!
கைவிரல் வெண்டையின் காயெனில் வெண்டையுன்
கைவிரல் போல்நிற்கும் காய்த்து. ... 1
.
வேய்குழல் நாதத்தால் மேய்பசு கட்டுணல்போல்
சேய்குரல் நாதம் சிலிர்த்துவக்கும் — சேயிழையுன்
சேய்குரல் போலச் சிலுசிலுத்துக் கட்டுவதோ
வேய்குழல் நாத வியல்! ... 2
.
★★★★★

Ramamoorthy Ramachandran

unread,
Sep 22, 2021, 6:49:10 AM9/22/21
to Santhavasantham
அருமையான அறிமுகம்!

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/04c92a00-997e-41f2-91ae-92c24e2f7d28n%40googlegroups.com.

saidevo

unread,
Sep 22, 2021, 8:50:07 AM9/22/21
to santhav...@googlegroups.com
ஆஹா, புலவர் குரல் என்னை மேலும் எழுதத் தூண்டும்! மிக்க நன்றி.
ரமணி

NATARAJAN RAMASESHAN

unread,
Sep 22, 2021, 12:10:46 PM9/22/21
to santhav...@googlegroups.com

.      இதரவிதர உவமையணி


முத்தண்ண வெண்ணகையாய் மொய்நகையை இவ்வுலகில்

ஒத்திருக்கும் ஆழ்கடலின் ஒண்முத்தும் - கொத்துமலர்க்

கார்குழலில் வான்முகிலைக் காண்கின்றேன்,விண்ணெழிலி

வார்குழலைப் போலிருக்கு மாம்!


                — தில்லைவேந்தன்



NATARAJAN RAMASESHAN

unread,
Sep 22, 2021, 11:11:18 PM9/22/21
to santhav...@googlegroups.com
திருத்தம்- முத்தண்ண அல்ல-- முத்தன்ன


NATARAJAN RAMASESHAN

unread,
Sep 23, 2021, 9:01:51 PM9/23/21
to santhav...@googlegroups.com



                       இதரவிதர உவமையணி
  

கான்மேவும் முல்லை ககனத்து மீனொக்கும்;
வான்மீனோ முல்லை மலர்க்கூட்டம்.- தேன்மொழியே!
வெள்ளிக் குடமொக்கும் வெண்மதியம், வெள்ளியொளிர்
துள்ளுகுடம் தூமதியோ சொல்!
           .                        

ஓசையிடும்  ஆழியதன் ஓங்கியுயர் பேரலைகள் 
ஆசையெனச் சுற்றிமிக  அல்லலுறும் -  மாசறியா
வெண்ணிலவே! நெஞ்சமதில்  வீங்கியெழு ஆசைகளும்
தண்ணலைபோல் தாவும் தவித்து!

                                     -- தில்லைவேந்தன்







Saidevo ramaNi

unread,
Sep 26, 2021, 2:02:50 AM9/26/21
to சந்தவசந்தம்
#ரமணி_வெண்பாவித்தகம்
40. வெண்பா வித்தகம்: அலங்காரம்
40.02.05. உவமையணி வகை: சமுச்சய
சமுச்சய உவமையணியில்
• இத்தன்மையானன்றி அத்தன்மையாலும்
• இப்பொருளை அப்பொருள் ஒக்கும்
• என்று இரண்டு மூன்று முதலிய தன்மைகள்
• ஒருங்கு கூட்டிக் காரணமாகச் சொல்லப்படும்.
• சமுச்சயம் என்றால் இரண்டு மூன்று முதலியவைகளில் கூட்டம்.
• வேறு பெயர்: உம்மை உவமை (வீரசோழியம்)
.
சமுச்சய உவமையணியில்
• ஒரு பொருளுக்கு இரண்டு மூன்று பொருள்கள் உவமையாகா.
• ஒரு பொருளுக்கு இன்னும் ஒரு பொருளே உவமையாகும்.
• முதற்பொருள் இரண்டாவதன் இரண்டு மூன்று தன்மைகளில்
• ஒப்பதாக உவமை விரியும்.
.
நினைவிற் கொணர
• ஒப்புமை அறியக் காரணமாய் நிற்கும் பொருள் உவமானம் (உவமை).
• அதனால் உவமிக்கப்படும் பொருள் உவமேயம் (பொருள்).
.
தண்டியலங்காரச் சான்று
அளவே வடிவொப்ப தன்றியே பச்சை
இளவேய் நிறத்தாலு மேய்க்கும் — துளவேய்
கலைக்குமரி போர்துளக்குங் காரவுணர் வீரந்
தொலைக்குமரி யேறுகைப்பா டோள்.
.
பொருள்
துழாய் மாலை சூடிய கலை மடந்தை போரில் பகைவரை நடுக்கமுறச் செய்பவள் மட்டும் அல்லாது, வெகுண்டெழுந்த அசுரர்களின் ஆண்மையைக் கெடுக்கும் திறத்தவளாய்ச் சிங்கத்தை வாகனமாக உடையவள். அவள் தோள்கள் பசுமையான மூங்கில் போன்று அளவினாலும் வடிவத்தாலும் ஒத்திருப்பதோடு பசுமை நிறத்தினாலும் ஒக்கும்.
.
தோளுக்கு பச்சை மூங்கிலை உவமை கூறி, மூங்கிலின் நிறம், அளவு, வடிவம் ஆகிய மூவகைகளிலும் அந்த உவமை பொருந்துமாறு அமைவதால் இது சமுச்சய உவமை.
.
★★★
40.02.05. உவமையணி வகை: சமுச்சய
அன்பர் வெண்பாக்கள்
01. குருநாதன் ரமணி
கருமை நிறங்கொண்டும் கண்ணிமையீர் ஆடத்
துருதுரு என்றலைந்தும் தோயும் - இருவிழிகள்
வண்டை நிகர்க்க வனத்தில் குழலூதும்
கண்ணாநீ என்றுமென் காப்பு. ... 1
[கண்ணிமையீர்: கண்ணிமைச் சிறகு]
.
வெண்ணிறத்தால் ஒண்வகையால் மேற்பரப்பின் மென்மையால்
பெண்ணேவுன் பற்கள் பெருநீர் விளைமுத்தாம்
சிப்பி யிதழ்வாய் திறந்தே சிரித்தென்னை
இப்பொழுதே கைசேர்ப்பா யே! ... 2
.
★★★★★
 

NATARAJAN RAMASESHAN

unread,
Sep 27, 2021, 9:36:09 PM9/27/21
to santhav...@googlegroups.com

.                        சமுச்சய உவமையணி!

கழைவேய்ங்  குழலிசைக்கும் கண்மணியாம் கண்ணன்
மழைமேகம் போல்வான், வனப்பில் - விழையும்கார்
வண்ணத்தில், தண்மையில், வண்மையெனும் தன்மையில்,
எண்ணத்தில்  எப்பொழுதும் ஏத்து!

Saidevo ramaNi

unread,
Oct 4, 2021, 10:17:00 AM10/4/21
to சந்தவசந்தம்
#ரமணி_வெண்பாவித்தகம்
40. வெண்பா வித்தகம்: அலங்காரம்
40.02.06. உவமையணி வகை: உண்மை
உண்மை உவமையணியில்
• பூரணமாய் வெளிப்பட்டுப் புலப்பட்ட
• ஒப்புமையினாலே உண்மை உணர்ந்து
• உவமானத்தைக் கூறி மறுத்து
• அதன்பின் இதுவே உண்மையென்று
• உவமேயமாகிய பொருள் கூறப்படும்.
• உவமையை உள்ளவாறு உணராமல்
• அதற்கு ஒப்புமை உடைய மற்றொரு பொருள் என்று
• கருதியிருந்த விபரீத உணர்ச்சியே
• இவ்வாறு மறுத்துக் கூறுவதன் காரணமாகும்.
• வடமொழியில் இதைத் தத்துவாக்கியாநோபமை என்பர்.
.
நினைவிற் கொணர
• ஒப்புமை அறியக் காரணமாய் நிற்கும் பொருள் உவமானம் (உவமை).
• அதனால் உவமிக்கப்படும் பொருள் உவமேயம் (பொருள்).
.
தண்டியலங்காரச் சான்று
தாமரை யன்று முகமேஈ(து) ஈங்கிவையும்
காமருவண் டல்ல கருநெடுங்கண் - தேமருவு
வல்லியின் அல்லள் இவளெண் மனங்கவரும்
அல்லி மலர்க்கோதை யாள்.
.
பொருள்
இது தாமரை மலரல்ல, இவள் முகமே! இவண் இருப்பதும்
தேனுண்ணும் வண்டல்ல, அவள் கருமையான கண்களே!
இவள் தளிர் போன்ற பூங்கொடி அல்லள், என் மனம் கவரும்
மாலை யணைந்த கோதையே!
.
தாமரை, கருவண்டு உவமைகளைக் கூறிப் பின் மறுத்துச் சொல்வதால் இது உண்மையுவமை அணி.
.
★★★
40.02.06. உவமையணி வகை: உண்மை
அன்பர் வெண்பாக்கள்
01. குருநாதன் ரமணி
முத்தல்ல வெண்நகை மூரல் சிலையன்று
மத்தகம் இவ்வூரின் மங்கையென் - அத்தைமகள்!
தன்னழகிற் கேதும் தகையில்லாப் பெண்ணிவள்
என்னை விரும்புவதென் பேறு. ... 1
[மூரல்: பல்; சிலை: வில்; மத்தகம்: நெற்றி]
.
மாரியல்ல கன்னவள்ளல் மாரியது பொய்ப்பதுண்டு
மூரியல்ல கும்பகன்னன் மூரி அசைவதுண்டு
மத்தகஜம் அல்லமா மன்னன் நடையழகு
சித்தம் தெளிந்த சினம்! ... 2
[மூரி: எருமை]
.
★★★★★
 

Saidevo ramaNi

unread,
Oct 17, 2021, 1:03:49 AM10/17/21
to சந்தவசந்தம்
#ரமணி_வெண்பாவித்தகம்
40. வெண்பா வித்தகம்: அலங்காரம்
40.02.07. மறுபொருள் உவமையணி
.
மறுபொருள் உவமையணியில்
• முன்னர் உரைத்த பொருளுக்கு நிகராகப்
• பிறிதொரு பொருள் பின்னர் உரைக்கப்படும்.
• முதற்பொருள் முன்வரும் அடிகளிலும்
• இரண்டாம் பொருள் பின்வரும் அடிகளிலும் அமையும்.
• இரண்டு பொருள்களும் ஒரே தன்மை யுடையதாக இருப்பன.
• பொதுத் தன்மை ஒன்றே யாயினும்
• பொருள்கள் வெவ்வேறாய் இரண்டாகும்.—சாகித்யதர்ப்பணம்.
• பிற பெயர்கள்
• மறுபொருள் = எதிர்ப்பொருள்; எனவே பிரதிவஸ்தூபமை—முதனூல்
• எதிர்ப்பொருளுவமை—வீரசோழியம்.
.
தண்டியலங்காரச் சான்று
(நேரிசை வெண்பா: விரியுவமையணி)
.
அன்னைபோல் எவ்வுயிரும் தாங்கும் அநபாயா
நின்னையார் ஒப்பர் நிலவேந்தர் — அன்னதே
வாரி புடைசூழ்ந்த வையகத்திற் கில்லாயாற்
சூரியனே போலுஞ் சுடர்.
.
விளக்கம்
• அநபாயன், சூரியன் இரு பொருள்கள்
• இரண்டும் ஒன்றுக்கொன்று இணையாகக் கூறப்பட்டது.
• ஆரொப்பர் என்றதாலும்
• போலுஞ் சுடரில்லை என்றதாலும்
• பெறப்பட்ட ஒப்பின்மை பொதுத்தன்மை.
.
கம்பராமாயணம்
(கலிவிருத்தம்: தொகையுவமையணி)
.
அறையும் ஆடரங்கும் மடப் பிள்ளைகள்
தறையில் கீறிடின் தச்சரும் காய்வரோ?
இறையும் ஞானம் இலாதஎன் புன்கவி
முறையின் நூல் உணர்ந்தாரும் முனிவரோ?
.
★★★
40.02.07. மறுபொருள் உவமையணி
அன்பர் வெண்பாக்கள்

01. குருநாதன் ரமணி
(நேரிசை வெண்பா: விரியுவமையணி)
.
பொய்யாமல் விண்ணின்று பெய்யும் மழைபோலச்
செய்வளம் ஓங்கச் செறிவதெது? — மெய்மகிழ
அன்னம் தினம்வழங்கும் ஆலய தானம்போல்
மன்னுயிர்க்கே(து) இன்னோர் அறம்? ... 1
.
(நேரிசை வெண்பா: தொகையுவமையணி)
ஆதவன் போன்ற அறிஞர் அவைதன்னில்
யாதும் கவிப்பொருளாய் ஆவது — சாதனையோ?
தீதறு மின்மினியாய்ச் சிற்றொளிரும் என்கவிதை
ஓதல் முகஞ்சுளிப்பா ரோ? ... 2
.
★★★★★

Saidevo ramaNi

unread,
Nov 9, 2021, 1:49:03 AM11/9/21
to சந்தவசந்தம்
#ரமணி_வெண்பாவித்தகம்
40. வெண்பா வித்தகம்: அலங்காரம்
40.02.07. புகழ்தல் உவமையணி
உவமை அணியில், இரண்டு பொருள்களை ஒப்பிடும்போது பொதுவாக அது கீழுள்ள சமன்பாட்டில் அமையும்.
உவமானம் ⇒ உவமவுருபு ⇒ உவமேயம்
உவமை ⇒ உருபு ⇒ பொருள்
சான்று: மலர் ⇒ போலும் ⇒ முகம்
.
இதனை, மலர் போலும் மதிசூடி சிவனாரின் மனையாள் முகம் என்று விரித்துச் சொன்னால் அது உவமேயத்தைப் புகழ்ந்து சொல்வதாகும்.
.
இதையே, மதிசூடி சிவனாரின் பாத மலர் போலும் முகம் என்று விரித்துச் சொன்னால் அது உவமானத்தைப் புகழ்ந்து சொல்வதாகும். இவ்வாறு சொல்வது புகழ்தல் உவமையணி.
.
புகழ்தல் உவமையணியில்
• உவமேயத்தை (பொருளை) வாளா விடுத்து
• யாதேனும் ஒரு மேன்மை காட்டி
• உவமானம் (உவமை) புகழ்ந்துரைக்கப்படும்.
• இதனை முதனூலார் பிரசஞ்சோபமை என்பர். (பிரசஞ்சா=துதி)
• உவமேயத்தைப் புகழவில்லை யெனினும் அது
• ஒப்புமையால் பெருஞ்சிறப்பு அடையும்.
.
தண்டியலங்காரச் சான்று
(நேரிசை வெண்பா)
இறையோன் சடைமுடிமே லெந்நாளுந் தங்கும்
பிறையேர் திருநுதலும் பெற்ற — தறைகடல்சூழ்
பூவலயந் தாங்கு மரவின் படம்புரையும்
பாவைநின் னல்குற் பரப்பு.
.
விளக்கம்
இங்கு, பாவையின் நெற்றிக்கு உவமையாகச் சொல்லப்பட்ட பிறைநிலவு, சிவபெருமான் திருமுடியில் தங்கும் புகழ்ச்சியையும், அல்குலுக்கு உவமை சொல்லப்பட்ட ஆதிசேடன் என்னும் பாம்பின் படம், பூவுலகைத் தாங்குகின்ற புகழ்ச்சியையும் சுட்டுதலால், இது புகழ் உவமையாயிற்று.
.
★★★
40.02.07. புகழ்தல் உவமையணி
அன்பர் வெண்பாக்கள்
01. குருநாதன் ரமணி
(நேரிசை வெண்பா: புகழ்தல் உவமையணி)
பொன்னிநதி பாயப் பொலிமருத வாய்க்காலில்
மின்னுகயல் போல்விழிகொள் கன்னியே — உன்னிடையோ
ஈசர் துடிபோல் இழைந்தாடி மோனமாய்
நேசம் விரிக்கும் நிறம். ... 1
.
மயிலிறகு சூட்டிய மாமலர்க் கண்ணன்
ஒயிலாக ஊதும் குழலோ - பயின்றே
இழைநரம்பை மின்விழியாள் மீட்டவொலி யாழோ
குழந்தாய் நினது குரல்! ... 2
.
★★★★★
 
Reply all
Reply to author
Forward
0 new messages