குடும்ப மேற்பார்வையில் பெரும் பங்கு இக்காலத்திலும் பெண்களிடம்தான் தரப்படுகிறது.
பெண்கள் ஆண்களுக்கு இணையாகப் படிக்கிறார்கள், பட்டம் வாங்குகிறார்கள், வேலைக்குப் போகிறார்கள்.
எனவே; உங்கள் பார்வைக்கு வரும் அழைப்பிதழ்களை மேம்போக்காகப் பார்த்துவிட்டுக் கடந்து போகாதீர்கள்.
அவற்றைக் கவனமாகப் பார்வை இட்டு நிலைமையைக் கணியுங்கள்.
பெண்களின் பெயர் எத்தனை முறை இடம் பெறுகிறது?
விளக்கேற்றுதல், தமிழ்த்தாய் வாழ்த்து,
வரவேற்புரை, நெறியாள்கை,
நன்றியுரை, நாட்டுப்பண்,
இவற்றுக்கு மட்டும் பெண்கள் அழைக்கப்படுகிறார்களா?
தலைமை உரை, முன்னிலை,
சிறப்புரை, ஆய்வுரை,
நூல் அறிமுக உரை, நூல் வெளியீடு,
பரிசு வழங்கல், வாழ்த்துரை
இவற்றில் இருப்பவை எல்லாம் ஆண்கள் பங்களிப்பா ?
நிகழ்ச்சி குறித்து ஒரே ஒரு முக்கியமான படம் மட்டும்தான் பத்திரிக்கைகளில் வெளியிடுவார்கள்.
அந்தப் படங்களில் மேடைகளில் ஏதேனும் பெண் உள்ளாரா?
அப்படி இல்லை என்றால் அந்த நிகழ்ச்சிகளுக்குப் பெண்கள் மட்டும் வந்து நிகழ்ச்சியைக் கேட்டுக் கைதட்டிவிட்டுப் போகவேண்டும் என்ற எதிர்பார்ப்பு ஏற்புடையதல்ல. இந்த நிலை பெண்கள் கல்லூரி, நிறுவனங்களில் இருந்தால் நிலை மிக மிக மோசம்.
பெண்கள் இது போன்ற அழைப்பிதழைப் பார்த்தவுடன் குப்பையில் போடக் கற்றுக் கொள்ளுங்கள். பெண்களை மதிக்காத நிகழ்ச்சிகள் உங்களுக்குத் தேவை இல்லை என்று புரிந்து கொள்ளுங்கள்.
புத்தாண்டிலிருந்து உங்களுக்கு எத்தனை எத்தனையோ அழைப்பு வரும்; அவற்றில் பெண்களின் பங்களிப்பு என்னவாகக் கொடுக்கப்பட்டுள்ளது என்று பாருங்கள்.
பன்னீர் தெளிப்பது, பூக்கள் தூவுவது, பொங்கல் வைப்பது, கும்மி அடிப்பது, கோலம் போடுவது, ஆட்டம் ஆடுவது, பாட்டுப் பாடுவது, பரிசுகளைச் சுமந்து வருவது போன்றவற்றை ஒரு மாறுதலுக்காக இனி ஆண்கள் மேற்கொள்ளுங்கள்.
இந்த நூற்றாண்டிலும் ஒரு கால் நூற்றாண்டு முடிந்துவிட்டது. இது விளையாட்டு அல்ல.
செல்லும் நிகழ்ச்சிகளுக்கு வாழ்க்கைத் துணையையும் அழைத்துச் செல்லுங்கள். வீட்டிற்குச் சென்றதும் சமைத்துத்தான் சாப்பிட வேண்டும் என்றால் இருவரும் இணைந்து செய்து முடியுங்கள்.
வெளியில் சென்று தன்னார்வப் பணி செய்கிறேன், தமிழ் வளர்ச்சியில் பங்கேற்கிறேன் என்று உல்லாசமாக உட்கார்ந்து அரட்டை அடித்துவிட்டு. வீட்டிற்குச் சென்று சுடச்சுட தயாரித்து வைத்துள்ள உணவை ஒரு பிடி பிடித்துவிட்டுக் கட்டையை நீட்டி ஓய்வெடுக்கும் வாய்ப்பு கிடைத்தால் எல்லோராலும் சமூக நிகழ்ச்சிகளில் பங்களிக்க முடியும் அல்லவா?
எண்ணிப் பாருங்கள் . . .
இதை நீங்கள் படித்துக்கொண்டிருக்கும் பொழுது உங்களுக்குக் காப்பி போட்டு உணவு தயாரித்துக் கொண்டு மேசையில் வைத்துப் பணிவிடை செய்துவிட்டுச் செல்பவர் யார் ? விடை, என் மனைவி என்பது எத்தனை விழுக்காடு இருக்கும், என் கணவர் என்பது எத்தனை விழுக்காடு இருக்கக் கூடும்? அதுவே நிலைமையைச் சொல்லும்.