—முனைவர் ப. பாண்டியராஜா
கணினி வழியாகத் தமிழ் இலக்கியங்களுக்கான தொடரடைவுகளை நான் உருவாக்கிக்கொண்டு வருவதைப் பலரும் அறிவீர்கள். கணினியின் உதவியில்லாமல் மனித முயற்சியால் அதனைச் செய்வது ஏறக்குறைய முடியாத காரியம் ஆகும்.
ஒரு சொல்லைக் கணினி வழியாகத் தேடவேண்டுமானால், அச்சொல் ஒரு தொடரில் முழுமையாக இருக்கவேண்டும்.
ஆனால் தமிழில் புணர்ச்சிவிதிகளால் ஒரு சொல்லின் எழுத்துக்கள் மாறிவிடுகின்றன. பல்நோய், பல்மருத்துவர், பன்னாட்டு நிறுவனம், பற்சிதைவு - ஆகியவற்றில் உள்ள பல் என்ற பகுதியைக் கணக்கிட முடியாது.
சங்க இலக்கியங்களில் இசின் என்ற ஒரு சொல் அடிக்கடி பயன்படுத்தப்படுகிறது.
வந்திசின், சென்றிசினோரே, கண்டிசினே ,, இப்படிப் பலவகைகளில் இந்த இசின் சொற்களில் ஒளிந்துகொண்டிருக்கிறது. இதைக் கணினி மூலம் கணக்கிடுவது எப்படி?
நான் 2001-இல் ஓய்வுபெற்ற புதிதில் கணினி வழியாகத் தமிழ் இலக்கியங்களை ஆய்வதற்கு ஒரு மென்பொருள் உருவாக்கவேண்டும் என்று முனைப்புடன் செயல்பட்டேன். ஒரு மென்பொருளையும் உருவாக்கினேன். அந்த மென்பொருளுக்கு கணியன் என்றும் பேரிட்டேன். அதன் சில பகுதிகளைக் கீழே படமாகக் கொடுத்துள்ளேன்.
அதில் ஒரு பகுதிதான் சொல் தேடல். இதற்கு நான் எழுதிய Program ஒரு தமிழ்ச் சொல்லை ஆங்கில எழுத்துக்களாக மாற்றும். தேடவேண்டிய சொல்லையும் ஆங்கில எழுத்தாகப் பெறும்.
அப்புறம் என்ன? எல்லாம் எளிதில் முடிந்துவிடும்.
நான் முன்பு குறிப்பிட்ட இசின் வரும் சொற்கள் இவ்வாறு மாற்றப்படும்.
va^ticin, cenRicinOrE, kaNdicinE .
இப்போது இதில் தேடவேண்டிய சொல் icin.
பாருங்கள், ஒவ்வொரு சொல்லிலும் இந்த icin துணுக்காக இருக்கிறது.
கணினி எளிதில் கண்டிபிடித்துக் கொடுத்துவிடும்.
பின்னர் இவ்வாறு ஆங்கில எழுத்துக்களில் உள்ளவற்றை மீண்டும் தமிழில் மாற்றிக் கொடுத்துவிடும்.
சொல்லப்போனால், இவ்வாறு தொடங்கியதுதான் என் தொடரடைவு உருவாக்க முயற்சி.
பழைய நினைவுகளைத் தூண்டிவிட்டதற்கு அன்பர் அருள் மெர்வின் அவர்களுக்கு மிக்க நன்றி.
அவரின் பாராட்டுரைகளுக்கும் மிக்க நன்றி.
__________________________________________