மனிதத் தூய்மை, மனயகத் தூய்மை, மன்றத் தூய்மை என்று மாசற்ற வாழ்வில் மகிழ்ந்து, நம் மூத்த குடிகள் மண்ணில் புதைந்துள்ளனர். மனிதன் தன்னையும் தனது இருப்பிடத்தையும் சுற்றுப்புறத்தையும் தூய்மையாய் பேணிக்காத்தால் நலமோடு வாழலாம் என்று தலைமாந்தர் வாழ்ந்த சூழலையும் அக்கறையையும் தமிழ் இலக்கியங்கள் எக்காலத்திற்கும் பொருந்தும்படி எடுத்துரைக்கின்றன. தற்பொழுது மாசு என்பது சமுதாயம் சந்திக்கும் மிகப்பெரிய சவால்களில் ஒன்றாகும். இது மனித ஆரோக்கியத்தையும், சுற்றுச்சூழல் அமைப்புகளையும் கடுமையாக அச்சுறுத்தி வருகின்றன. மனம், மண், நீர், காற்று, ஒலி, ஒளி, ஆகியன மாசடைந்து இயற்கைச் சூழலுக்குக் கேடு விளைவிக்கின்றன.
மாசு வரையறைமாசு என்னும் சொல் அழுக்கு; தூய்மைக்கேடு; குற்றம்; கருமை; இருள்; மேகம்; பாவம்; தீமை; தூசு; புழுதி; புன்மை; மெய்ம்மலம்; பால்வீதிமண்டலம்; நஞ்சுக்கொடி; தூளி; பித்தநீர்; கோழை; கண்ணின் காசபடலம்; கசடு; களங்கம்; வலைவடம் என்றெல்லாம் பொருள் தருகின்றது.
மனத்தில் மாசுஆசையும், பொறாமையும், கோபமும், பகையும் மனத்தால் ஏற்படும் அழுக்குகள் ஆகும். மேலும், கொலை, தூய்மைக்குப் புறம்பான சொற்களைப் பேசுவது, பொய் சொல்வது, மனிதனை மனிதன் வெறுப்பது, பெண்களைப் பழிப்பது, பிறர் மனைவியோடு தகாத உறவு கொள்வது போன்ற செயல்களும் மன மாசு காரணமாகவே ஏற்படுகின்றன. விருப்பு, வெறுப்பு, அறியாமை ஆகிய மூன்று விதமான அழுக்குகள் மனத்தில் ஒட்டிக்கொண்டு சமுதாயத்தைச் சீரழித்துக் கொண்டிருக்கின்றன.
மக்களின் பண்புகள் சார்ந்து உருவான சமுதாயம், வடவரின் வருகைக்குப் பின் சாதியின் பெயரால் கூறுபோடப்பட்டன. அதன்பின் சமுதாய ஏற்றத்தாழ்வுகளுக்கும் பிரச்சினைகளுக்கும் சாதி ஒரு முக்கியப் பொருளாகிவிட்டது. இதனால் உடன்போக்கு செல்லும் இளவரசன்களும் இளவரசிகளும் வாழ்வைத் தொடங்கும் முன்பே வீதியில் வெட்டப்படுகின்றனர். ஒழுக்கம் உடையவராக வாழ்வதுதான் உயர்ந்த குடிப்பிறப்பாகும் என்று குறள் எண். 133 இல் வள்ளுவர் விளக்குகிறார்.
புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கிராமம் வேங்கைவயல். அந்த கிராமத்தில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி தண்ணீரில் மனிதக் கழிவு கலந்த சம்பவம் கடந்த 2022ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 26ஆம் தேதி கண்டறியப்பட்டது. இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. சாதி வெறியர்களால், பருகும் நீரில் மனிதக் கழிவு கலந்து மனிதச் சமத்துவம் சிதைக்கப்பட்டது. மக்களின் மனம் எவ்வளவுக்கெவ்வளவு தூய்மையானது என்று நினைத்துக் கொண்டிருக்கின்றோமோ அவ்வளவுக்கு வன்மம் நிறைந்ததாகவும் இருக்கிறது என்பதை வேங்கைவயல் நிகழ்வு நிரூபனமாக்கிவிட்டது. இதனைக் களையாவிடில் நாகரீகம் நலிவடையும்; பண்பாடு சிதையும் என்பதில் ஐயமில்லை.
தனிக் கிணறு, தனிக் குளம், தனிக் குவளை, தனிப் பாதை, தனிச் சுடுகாடு, தனிக் குடியிருப்பு, தனிக் கோயில், தாழ்வைக் குறிக்கும் உடல் மொழி என்று பாகுபடுத்தி களியாட்டம் போடும் கூட்டம், அவசரச் சிகிச்சையில் குருதிக் கொடை பெறும்போது மட்டும் எதிர்கருத்தின்றி மக்கள் சாதியாய் சமத்துவம் பேணுகின்றனர். சாதிக்கொடுமைக்குத் தீர்வில்லை. பாகுபாடின்றி வாழ வழியேயில்லை என்று உலகம் தடுமாறிக் கொண்டிருந்தபோது கல்வியே அதற்கான நிவாரணமாகத் தென்பட்டது. “வேற்றுமை தெரிந்த நாற்பாலுள்ளும், கீழ்ப்பால் ஒருவன் கற்பின், மேற்பால் ஒருவனும் அவன்கண் படுமே.” (புறநானூறு - 183) என்று பாடினான் பாண்டிய மன்னன் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன். சாதிப் பாகுபாட்டை ஆதரிக்காத மன்னர்கள் வாழ்ந்த மண் தமிழ் மண் என்பதனை உள்ளத்தில் நிறுத்தினால் உருவாகும் சமத்துவம்.
ஒன்றினார் வாழ்க்கையே வாழ்க்கைஓர் ஆணும் பெண்ணும் தனித்தனியாக வாழ்ந்தால் அது குடும்பமாகிவிடாது. இருவரும் இணைந்து வாழ்ந்தால்தான் அது குடும்பம். குடும்ப வாழ்க்கையில்தான் அளப்பரிய அன்பு பிறக்கும். அந்த அன்பினால்தான் சமுதாயம் சிறக்கும். குடும்பம் என்னும் நிறுவனத்தில் கணவனும் மனைவியும் சமமான பங்குதாரர்களாவார்கள். அந்த நிறுவனத்தில் கூடுதல் உரிமையென்று யாருக்கும் இல்லை. சங்ககாலச் சமுதாயத்தில் தலைவன் பொருளீட்டினான். தலைவி வீட்டைப் பராமரித்தாள். இவர்களில் யார் பெரியவர் என்ற கேள்விக்கே அங்கே இடமில்லை. இன்றைய இளந்தலைமுறையோ உடலால் கலக்கின்றனரே தவிர உள்ளத்தால் கலப்பது அரிதாகவே உள்ளது. குடும்ப வாழ்க்கையை சிறையென்று கருதியும், விட்டுக்கொடுக்கும் மனப்பாங்கு இல்லாமலும், பொருளாதார ஒப்பீட்டில் உயர்வு தாழ்வு பார்த்தும் இல்வாழ்க்கையை முறித்துக் கொள்ள இன்று பல இளம் தம்பதிகள் வழக்காடு மன்றத்தை நாடிவந்து நிற்கின்றனர். இல்லற வாழ்க்கையை இனிமையாய்க் கொண்டுசெல்ல அவர்கள் ஒவ்வொருவருக்கும் ஓத வேண்டிய பாடல் ஒன்றை குறுந்தொகை அழகுற அளிக்கின்றது.
இல்லற வாழ்க்கையைத் தொடங்கிய தன் மகளின் வாழ்க்கை எப்படியிருக்கிறது என்பதை அறிய செவிலித்தாயை அனுப்புகின்றாள் பெற்றதாய். மகளைப் பார்த்துவிட்டுத் திரும்பி வந்த செவிலித்தாயைப் பார்த்து நற்றாய் கேட்கிறாள் “ஏண்டி பார்த்தியா எப்படியிருக்கிறாள்?, இல்லாளனுக்கு நன்றாகச் சமைத்துக் கொடுக்கிறாளா?”. “நன்றாக இருக்கிறாள். சமைத்துக் கொடுக்கிறாள். புடவை அழுக்கடைந்ததையோ புகை கண்ணைக் கவ்வியதையோ அவள் பொருட்படுத்தவே இல்லை. தன் தலைவனுக்காகத் தயிர் குழம்பைச் செய்துமுடித்தாள். செய்த குழம்பை வாயில் வைக்க முடியவில்லை. ஆனால், அவனோ நன்றாகயிருக்கிறது நன்றாகயிருக்கிறது என்று சொல்லிச் சொல்லி சுவைத்துச் சாப்பிடுகிறான்.” என்றாள் செவிலித்தாய். இதனை
முளிதயிர் பிசைந்த காந்தள் மெல்விரல்,
கழுவுறு கலிங்கம்,
கழாஅது, உடீஇ,
குவளை உண்கண் குய்ப்புகை
கழுமத்
தான்துழந்து அட்ட தீம்புளிப்
பாகர்
'இனிது' எனக் கணவன் உண்டலின்,
நுண்ணிதின் மகிழ்ந்தன்று
ஒண்ணுதல் முகனே. (குறுந்தொகை - 167)
என்று பாடுகிறார் கூடலூர் கிழார். இளம் தலைமுறையினரின் இதயத்தில் புகுத்தவேண்டிய பாடல் இது.
மனித வாழ்க்கையின் அடிப்படையாய் விளங்குவது மண் வளமே. இம்மண்ணின் வளம், வீட்டுக் கழிவகளாலும், விவசாயக் கழிவுகளாலும், தொழிற்சாலைக் கழிவுகளாலும், எண்ணைய் கழிவுளாலும், நெகிழி பயன்பாட்டாலும் மாசடைந்து வருகின்றது. விளைநிலத்தில் பயன்படுத்தப்படும் “கார்போஃயூரான்” என்ற பூச்சிக்கொல்லி மண்ணில் கலப்பதால் மண்புழுக்கள் அழித்துவிடுகின்றன. மண்ணில் கலந்த இராசயன உரங்களும், பூச்சிக்கொல்லிகளும் பயிர்களின் வேர்கள் மூலம் உறிஞ்சப்பட்டு அதன் தண்டுகளில் சேமித்து வைக்கப்படுகின்றன. அந்த விளைபொருள்களை மனிதன் பயன்படுத்தும்போது பாதிப்பு ஏற்படுகிறது. திடக்கழிவுப் பொருள்கள், வேதிப்பொருள்கள், கந்தகங்கள் ஆகியன மண்ணை மாசுபடுத்தி அமிலமழை பெய்யக் காரணமாகின்றன. இதனால் நிலத்தின் வளம் பெரிதும் பாதிக்கப்படுகிறது. ஆலைக் கழிவுகளும், அனல்மின் நிலையங்களின் கழிவுகளும், கொட்டும் குப்பைகளும், வீசப்படும் நெகிழிகளும், மருத்துவக் கழிவுகளும், மதுக்குப்பி குவியலும் மண்வளச் சீர்கேட்டை உண்டாக்குகின்றன. இதனால் பரவலாக நோய்கள் ஏற்படுகின்றன. மண் மாசுபாடு காரணமாக சமுதாயம் அல்லல்பட்டு அழிவுப் பாதையை நோக்கிச் செல்கிறது. மண்வளச் சீர்கேட்டைத் தடுத்து நிலத்தினைப் பாதுகாக்க ஒவ்வொருவரும் முயல வேண்டும். கூடி ஆற்றிடும் நற்செயல்களால் எல்லா நலன்களும் கிட்டும் (குறள் 651) என்கிறார் பொய்யில் புலவர்.
நீர் மாசுபாடுஇரசாயனங்கள், எண்ணெய் கழிவுகள், மருத்துவமனைகள் மற்றும் ஆய்வகங்கள் பயன்படுத்தும் கதிரியக்கப் பொருள்களின் கழிவுகள், நீரோடையில் அம்பாரமாய குவியும் குப்பைகள், மனித மற்றும் விலங்குகளின் கழிவுகள் போன்றவை நீரில் கலப்பதால் நீர் மாசுபாடுகிறது. இதனால் நீரின் தரம் குறைந்து சுற்றுச் சூழலுக்கு அச்சுறுத்தல் ஏற்படுகிறது. மக்கள் தொகைப் பெருக்கம் காரணமாக மனிதத் தேவைகளைப் பூர்த்தி செய்ய புதுப்புது தொழிற்சாலைகள் உருவாகின்றன. பயன்பாட்டிற்காக எந்தவொரு பொருளையும் உற்பத்திசெய்யும்போது கூடவே கழிவுகளும் உற்பத்தியாகின்றன. சாராயத் தொழிற்சாலை, சர்க்கரைத் தொழிற்சாலை, காகிதத் தொழிற்சாலை, தோல் பதனிடும் தொழிற்சாலை போன்ற பல்வேறு தொழிற்சாலைகளிலிருந்து வெளியேற்றப்படும் கழிவுகள், விவசாயக் கழிவுகள் ஆகியன நீர்நிலைகளை நஞ்சாக்கிக் கொண்டிருக்கின்றன.
இந்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம், தோல் பதனிடும் தொழிற்சாலைகள், பட்டாசுகள், பல்வேறு உலோகங்களை உருக்கும் தொழிற்சாலைகள், விலங்குகளை கொல்லும் தொழிற்சாலைகள் மற்றும் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் உள்ளிட்ட 64 தொழில்களை "சிவப்பு வகை"யின் கீழ் கண்டறிந்துள்ளது. இவற்றிலிருந்து வெளியேற்றப்படும் கழிவுகள் எல்லாம் ஆறுகள், ஏரிகள், குளங்கள், நீரோடைகளில் கலப்பதால், நீரில் ஆகஸிஜன் பற்றாக்குறை ஏற்பட்டு இறந்த மண்டலங்கள் உருவாகின்றன.
புனித நதியில் நீராடினால் நல்வினைப் பயன் கிடைக்கும் என்ற பெயரில் ஒரே நாளில் ஆயிரம் பேர் இலட்சம் பேர் என ஆற்றில் இறங்கி அமிழ்தமான நீரை அசுத்தமாக்குகின்றனர். ஜனக்காடுகள் ஒரே இடத்தில் சங்கமித்து திறந்த வெளியில் மலம் கழித்தும், சவர்க்காரங்களைப் பயன்படுத்தி குளித்தும், பிளாஸ்டிக் மற்றும் மக்காத பொருட்களை அதிகப்படியாகப் பயன்படுத்தியும், சடங்கு காணிக்கைகளையும் சாம்பலையும் நீரில் மூழ்கடித்தும், எச்சிலையும், சளியையும் காரி உமிழ்ந்தும், நிலமகள் தன் புதல்வர்களுக்குக் கொடுக்கும் முலைப்பாலை அசுத்தம் செய்து ஆபத்தான பல விளைவுகள் உண்டாகக் காரணமாகின்றனர். இதனைத் தடுக்கும் வழியைத்தான் அன்றே சொன்னது ஆசாரக்கோவை,
நீராடும் போழ்தில், நெறிப் பட்டார், எஞ் ஞான்றும்,நீர் மாசுபடுவதன் காரணமாக பூமியின் உயிரியல் வளமும் உள்ளாற்றல் வளமும் குறைந்துகொண்டே வருகின்றன. காலரா, மஞ்சள் காமாலை, டைபாய்டு, புழுத்தொற்றுகள் போன்ற பலவித நோய்கள் மனித குலத்தில் பரவுகின்றன. நலமான வாழ்வை நலங்கெட வைக்கின்றன. நாகரீக வாழ்க்கையென்று நாம் உருவாக்கும் செயற்கைத் தன்மை, இயற்கைத் தன்மையைப் பாதிக்காமல் இருக்க வேண்டும். அப்பொழுது இயற்கை அதனதன் போக்கில் அதனதன் வேலையைச் செய்துகொண்டேயிருக்கும்.
நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும்காற்று மாசுபாடு என்பது தொழிற்சாலைகளிலிருந்து வெளிவரும் புகையாலும், இயந்திர வாகனங்களிலிருந்து வெளியேறும் புகையாலும், கழிவுப் பொருள்களை எரிப்பதாலும், குப்பைகளைக் கொளுத்துவதாலும், கட்டுமானங்கள் மேற்கொள்ளும்போது வெளியேறும் தூசுகளாலும், விரைவான நகரமயமாக்களாலும் ஏற்படுகின்றது. நிலக்கரியை அடிப்படையாகக் கொண்டு செயல்படும் அனல் மின் நிலையங்கள், சிமெண்ட் தொழிற்சாலைகள், எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள், ரசாயன மற்றும் ஜவுளித் தொழில்களில் இருந்து வெளியேறும் வாயுக்கள் ஆகியன காற்று மாசுபாட்டிற்கு முக்கிய ஆதாரங்களாகின்றன. இந்தத் தொழிற்சாலைகளிலிருந்து கார்பன் மோனாக்சைடு, சல்பர் டை ஆக்ஸைடு, நைட்ரஸ் ஆக்ஸைடு, ஓசோன் உள்ளிட்ட தீங்கு விளைவிக்கும் வாயுக்கள் வெளியேறுகின்றன. காற்று மாசுபாட்டினால் புவி வெப்பமடைதல் முதல் புற்றுநோய் வரை பல உடல்நலப் பிரச்சினைகள் உண்டாகின்றன.
உலக சுகாதார அமைப்பு காற்று மாசை அளவிடும் பிஎம் 2.5 நுண் துகளின் அடர்த்தி அடிப்படையில் நாடுகள் தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளன. 2024 ஆம் ஆண்டின் காற்று மாசுபாடு குறித்த புள்ளிவிவரங்களின்படி, இந்தியா அதிக காற்று மாசுபாட்டைக் கொண்ட நாடுகளில் ஐந்தாவது இடத்தில் உள்ளது. காற்று மாசுபாட்டின் காரணமாக அகமதாபாத், பெங்களூரு, சென்னை, டெல்லி, ஹைதராபாத், கொல்கத்தா, மும்பை, புனே, சிம்லா, வாரணாசி ஆகிய 10 நகரங்களில், ஆண்டுக்கு கிட்டத்தட்ட 33,000 மரணங்கள் நடப்பதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. உலக அளவில் ஆண்டுக்கு 7 மில்லியன் (70 லட்சம்) அகால மரணங்களை ஏற்படுத்துகிறது என்று புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இது ஆரோக்கியத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக விளங்குகின்றது.
சொந்த வாகனங்களைத் தவிர்த்து பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்தும்போதும், எரிபொருள் அளவைக் குறைக்கும்போதும், பட்டாசு வெடிப்பதையும் குப்பைகளை எரிப்பதையும் தவிர்ப்பதாலும் புகைபோக்கிகளுக்கு வடிகட்டிகளைப் பயன்படுத்துவதாலும் காற்று மாசுபாட்டைக் கனிசமாகக் குறைக்க முடியும்.
ஒலி, ஒளி மாசுபாடுஒலி மாசுபாடு எனபது, இயந்திரங்கள், வாகனங்கள், கட்டுமான உபகரணங்கள், தொடர்வண்டிகள், விமானங்கள், விழாக்கால ஒலி பெருக்கிகள், தொழிற்சாலைகள், உற்பத்திச் செயல்முறைகள் போன்றவற்றிலிருந்து வெளிப்படும் சத்தமாகும். மக்களின் ஒழுங்கற்ற வாழ்க்கை முறையாலும் ஒலிமாசுபாடுகள் உண்டாகின்றன. அதிக அழுத்த ஒலிப்பான்களை வாகனங்களில் பயன்படுத்தும்போது, நமக்கு எரிச்சலூட்டி நம் கவனத்தைச் சிதறடிக்கின்றன. ஒலி மாசுபாட்டினால் தூக்கம் பாதிக்கப்பட்டு மன அழுத்தம், உயர் இரத்த அழுத்தம் ஏற்படுகின்றன; கேட்கும் திறன் குறைகின்றது; பறவைகளும் பாலூட்டிகளும் பாதிக்கப்படுகின்றன; சுற்றுச் சூழல் சமநிலை சீர்கெடுகிறது. உயரழுத்த ஒலிப்பான்களைத் தவிர்ப்பதும், ஒலித் தடைகளை நிறுவுதலும் அமைதியான வாழ்வுக்கு அடித்தளமிடும்.
ஆடம்பரத்தை வெளிப்படுத்துவதற்காக அமைக்கப்படும் அலங்கார விளக்குகளாலும், விண்ணை மிரட்டும் பட்டாசு வெளிச்சத்தாலும், மிதவைச் சிறைச்சாலையிலிருந்து (அலைபேசி) வெளிப்படும் வெளிச்சத்தாலும், வாகன விளக்குகளாலும் ஒளி மாசு ஏற்படுகிறது. ஒளி மாசினால் இரவில் தூக்கத்தைத் தூண்டும் மெலடோனின் என்ற ஹார்மோனின் உற்பத்தி நம் உடலில் குறைகிறது. இதன் விளைவாக தூக்கமின்மை, உடல் சோர்வு, தலைவலி, பதட்டம் போன்ற உடல்நலக் கோளாறுகள் ஏற்படுகின்றன. அலைபேசியை அதிகநேரம் பயன்படுத்தும்போது கண்ணிமைக்கும் நேரம் குறைவதோடு, கண் எரிச்சல், நீர் கசிதல் உள்ளிட்ட பிரச்சினைகளால் கண் பார்வை பாதிக்கப்படுகின்றன. அதிகப்படியான வெளிச்சத்தை உமிழும் விளக்குகளை வாகனங்களில் பொருத்தி உபயோகிக்கும்போது இரவில் ஒளி மாசுபாடு உச்சம் பெறுகிறது. இதனால் இரவு நேர விபத்துகள் அதிகளவில் நடைபெறுகின்றன. தேவைக்கேற்ற வெளிச்சப் பயன்பாடு விபத்துகளைத் தடுக்கும்; கண்களைக் காக்கும்.
ஒலி, ஒளி மாசுபாட்டை உண்டாக்கும் கருவிகளை உற்பத்தி செய்ய அனுமதி; விற்பனை செய்ய அனுமதி; பயன்படுத்தினால் குற்றமாகும். “கருத்தடை செய்துவிட்டால் உருவம் எப்படி உருவாகும்? மாசு எப்படிப் பிறக்கும்?” என்பது சாமானியன் சிந்தனை.
மாசில்லா மனம் கொண்ட படைப்பாளிபசியால் துடிக்கின்ற குழந்தைகளுக்கு உண்ணக் கொடுக்க உணவில்லை. தனது மூன்று குழந்தைகளும் இறந்துவிட்டனர். நான்காவது குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தையும் இறந்து போனது. அக்குழந்தை பிறக்கும்போது தொட்டில் வாங்கக் காசில்லை; செத்தபிறகு சவப்பெட்டி வாங்கக் காசில்லை. வறுமை வாட்டியது. என்றாலும் அவன் தனக்காகவும் தன் குடும்பத்திற்காகவும் சிந்திக்கவில்லை. மனக்கசப்பு எழவில்லை. சுயசிந்தனைக்குள் சுருங்கிப் போகாமல், சமுதாயத்தின் வளர்ச்சி பற்றியே சிந்தித்தான். சமுதாயத்தின் பிரச்சினைகளைத் தன் நெஞ்சில் சுமந்து, அவற்றின் தீர்வுகளுக்காகச் சிந்தித்தான். அவன்தான் காரல் மார்க்ஸ். அவன் எழுதிய புத்தகம்தான் மூலதனம். இந்தப் புத்தகத்தை எழுதுவதற்காக 1700 நூல்களைப் படித்தார் கார்ல் மார்க்ஸ். “இவ்வளவு வறுமைக்கும் துன்பத்திற்கும் இடையில் உலகில் வேறு எந்தப் புத்தகமும் எழுதப்பட்டிருக்க முடியாது” என்கிறார் சாமிநாத சர்மா.
படைப்பாளி என்பவன் இயற்கைத் தாயின் குழந்தை. அவன் எதை வெளியில் சொன்னாலும் அது உண்மையாக இருக்கும்; பொருத்தமாக இருக்கும்; உலகிற்குப் பயன்படக்கூடியதாக இருக்கும். தன்னைச் சுற்றியுள்ள உலகத்தில், எந்த மூலையில் பாதிப்புகள் நிகழ்ந்தாலும், தனக்கு நேர்ந்ததாக எண்ணி அந்தப் பாதிப்புகளின் தீவிரத்தை மக்களுக்கு உணர்த்தி அந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண மக்கள் சக்தியை உந்தித் தள்ளுபவன்தான் படைப்பாளி. சமுதாய அமைப்பில் புரையோடிப் போன புண்களாக ஏராளமான இடையூறுகள் உள்ளன. அவற்றைத் தீர்ப்பதற்காக புதுப்புது சிந்தனைகளை படைப்பாளிகள் அளித்துக் கொண்டேயிருக்கிறார்கள். இதனை
மாசில் பனுவற் புலவர் புகழ்புல.
நாவிற். புனைந்த நன்கவிதை மாறாமை
மேவிப் பரந்து விரைந்து
வினைநந்தத்
தாயிற்றே தண்ணம் புனல்;
( பரிபாடல் - 6)
என்ற பாடல் மூலம் ஆசிரியர் நல்லந்துவனார் பாங்குறப் பகிர்கின்றார்.
முடிவுரைஅகத்தையும் புறத்தையும் சீர்கெடுக்கும் மானிடச் சுயநலமாகிய “மாசு” வை அகற்றினால் ஆரோக்கியமாக வாழலாம். சுற்றுச் சூழல் மாசுபாட்டையும், சுகாதாரச் சீர்கேட்டையும், அக அழுக்கையும், புற அழுக்கையும் முற்றிலும் தடுப்பதற்கு முதலில் நமக்குள் சுய அலசலை மேற்கொள்ள வேண்டும். அப்பொழுது மானிடம் மாண்புறும்; சமுதாயம் மேம்படும். மனிதத் தூய்மையும், மனையகத் தூய்மையும், மக்கள் கூடும் மன்றத் தூய்மையும் வாழ்வியல் மேன்மைக்கு வழிவகுப்பன. சூழலை தூய்மையோடு வைத்திருக்க வேண்டும் என்ற எண்ணம் நம் ஒவ்வொருவருக்கும் இருந்தால் நாமும் வளம் பெறுவோம்; நாடும் வளம் பெறும்.
----------
யாழ்க்கோ
மனை எண்.79, சந்தோஷ் நகர், சூர்யா நகர் விரிவாக்கம், கோ.புதூர், மதுரை-625007.
அலைபேசி: 9551695546
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/mintamil/d88dc4c0-a867-4ddc-af94-e0141cd07d4cn%40googlegroups.com.