மணிமேகலை
22. சிறைசெய் காதை[
https://www.tamilvu.org/slet/l3200/l3200pd2.jsp?bookid=51&pno=336]
தெள்ளுநீர்க் காவிரி யாடினள் வரூஉம் 40
பார்ப்பனி மருதியைப் பாங்கோ ரின்மையின்
யாப்பறை யென்றே யெண்ணின னாகிக்
காவிரி வாயிலில் ககந்தன் சிறுவன்
நீவா என்ன நேரிழை கலங்கி
மண்திணி ஞாலத்து மழைவளந் தரூஉம்
பெண்டி ராயின் பிறர்நெஞ்சு புகாஅர்
புக்கேன் பிறனுளம் புரிநூன் மார்பன்
முத்தீப் பேணும் முறையெனக் கில்லென
மாதுய ரெவ்வமொடு மனையகம் புகாஅள்
பூத சதுக்கம் புக்கனள் மயங்கிக்
கொண்டோற் பிழைத்த குற்றந் தானிலேன்
கண்டோன் நெஞ்சில் கரப்பெளி தாயினேன்
வான்தரு கற்பின் மனையறம் பட்டேன்
யான்செய் குற்றம் யானறி கில்லேன்
பொய்யினை கொல்லோ பூத சதுக்கத்துத்
தெய்வம் நீயெனச் சேயிழை யரற்றலும்
மாபெரும் பூதந் தோன்றி மடக்கொடி
நீகே ளென்றே நேரிழைக் குரைக்கும்
தெய்வம் தொழாஅள் கொழுநற் றெழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் பெருமழை யென்றஅப்
பொய்யில் புலவன் பொருளுரை தேறாய்
பிசியும் நொடியும் பிறர்வாய்க் கேட்டு
விசிபிணி முழவின் விழாக்கோள் விரும்பிக்
கடவுள் பேணல் கடவியை யாகலின்
மடவரல் ஏவ மழையும் பெய்யாது
நிறையுடைப் பெண்டிர் தம்மே போலப்
பிறர்நெஞ்சு சுடூஉம் பெற்றியு மில்லை
ஆங்கவை யொழிகுவை யாயி னாயிழை
ஓங்கிரு வானத்து மழையுநின் மொழியது
பெட்டாங் கொழுகும் பெண்டிரைப் போலக்
கட்டா துன்னையென் கடுந்தொழிற் பாசம் 71
--
உரை:
மருதி என்னும் பார்ப்பினி காவிரி ஆற்றில் நீராடிக்கொண்டிருந்தாள். அங்கு வேறு யாரும் இல்லை. எனவே காமுகன் ஒருவன் அந்த மருதியை யாரும் இல்லாதவள் என்று எண்ணி "நீ வா" என்று தன்னோடு உறவாட அழைத்தான். மருதி கலங்கினாள்.
உலகில் மழைவளம் தரக்கூடிய பெண் என்றால் பிறர் நெஞ்சில் புகமாட்டாள். நான் பிறன் ஒருவன் நெஞ்சில் புகுந்துவிட்டேன். எனவே முத்தீ பேணும் அந்தணர் குலத்துப் பெண்ணாக இருக்க எனக்குத் தகுதி இல்லை, என்னும் வருத்தத்தோடு இல்லம் திரும்பலானாள்.
வழியில் சதுக்கப் பூதம் என்னும் தெய்வத்திடம் முறையிட்டாள். "என் கணவனுக்கு நான் பிழை செய்யவில்லை. கண்டவன் நெஞ்சில் புகுந்திருக்கிறேன். நான் செய்த குற்றம் எனக்குத் தெரியவில்லை. பூதச் சதுக்கமே! நீ இருப்பது பொய்யோ" என அரற்றினாள்.
அப்போது அந்தப் பூதம் தோன்றி அவளிடம் பேசிற்று.
பொய்யிற் புலவன்
தெய்வம் தொழாஅள் கொழுநற் தொழுதெழுவாள்
பெய்எனப் பெய்யும் மழை
என்று பொய்யிற் புலவன் சொன்ன பொருளுரையில் தெளிவு பெறுக.
நீ பிசி என்னும் புனைகதைகளையும், நொடி என்னும் விடுகதைகளையும் பிறர் சொல்ல விரும்பிக் கேட்டுக் கொட்டு முழக்குடன் விழா நடத்திக் கடவுளைப் பேணக்கூடியவள். உன்னைப் போன்ற பெண் ஏவினால் மழை பொழியாது. நெஞ்சில் நிறைவுடைமை பூண்ட பெண் போல பிறர் நெஞ்சைச் சுட்டரிக்கும் தன்மையும் உன்னிடம் இல்லை.
இத்தகைய குறைபாடுகளிலிலிருந்து நீ விடுபட்டால்தான் நீ பெய் என்றால் மழை பொழியும். ஆதலால் உன் குறையைக் கேட்டு என் பாசம் தண்டிக்காது - என்று சதுக்கப் பூதம் கூறிற்று.
உரை உதவி :
http://vaiyan.blogspot.com/2017/10/22-4-manimegalai-22-4.htmlநன்றி: முனைவர் செங்கைப் பொதுவன்
---------------------------