தேமொழி
unread,Jul 13, 2023, 1:05:36 AM7/13/23Sign in to reply to author
Sign in to forward
You do not have permission to delete messages in this group
Either email addresses are anonymous for this group or you need the view member email addresses permission to view the original message
to மின்தமிழ்
"தில்லையம்பதி - வரலாறும், வழக்காறும்"
— முனைவர் சிவ இளங்கோ, புதுச்சேரி.
தில்லையம்பதி என்று பக்தி இலக்கியங்களில் பதியப் பெற்றிருக்கும் சிதம்பரம் நடராசர் கோயில், தமிழ்ச் சமூகத்திற்கு மிகவும் அறிமுகமான ஒன்று. அதன் மூலவரான நடராசர் ஈசனாக, சிவனாக அறியப்படுபவர். அதனால் சைவத் தலம் என்று புகழ் பெற்றது அக்கோயில். அதேநேரம் அக்கோயில் இன்றிருக்கும் அளவிலும், கட்டுமானங்களிலும் 1500 ஆண்டுகளுக்கு முன்பு இருந்திருக்க வாய்ப்பில்லை. ஒவ்வொரு காலத்திலும் அந்தந்தக் காலத்தின் மன்னர்களால் புதிதாகக் கட்டுமானங்கள் செய்யப்பட்டு, விரிவுபடுத்தப்பட்டு, நிலங்கள் எழுதி வைக்கப்பட்டு, ஆபரணங்கள் அளிக்கப்பட்டு இன்றைய நிலைக்கு வந்திருக்கிறது தில்லை நடராசர் கோயில்.
மேற்குறிப்பிட்ட உழைப்புக்கும், சொத்துகளுக்கும் எந்தவிதமான உரிமையும் இல்லாத, விண்ணில் இருந்து கடவுளோடு சேர்ந்து பூமிக்கு வந்ததாகக் கூறிக் கொள்ளும் முன் குடுமிச் சோழியர்கள்தான் இன்று தில்லை நடராசர் கோயிலை 'எங்கள் சொத்து' என்று சொந்தம் கொண்டாடி வருகின்றனர். யாருக்கும் எதுவும் சொந்தமில்லை என்பதுதான் சித்தர் தத்துவம். அதுவே பெருமளவிலான மதங்களின் கருத்தும் கூட. ஆனால் தில்லையில் தான் கோயிலையே எங்கள் சொத்து என்று சொந்தம் கொண்டாடும் உஞ்சவிருத்திக் கூட்டமும், அதற்கு இசைந்து கொடுக்கும் சாதி காக்கும் வகையறாக்களும் இருக்கின்றன. சிவன் சொத்து குலநாசம் என்பது ஒன்றுமில்லாத அப்பாவிகளுக்குத் தான். இவர்களுக்கு அல்ல.
தமிழர்களின் வழிபாட்டு முறை என்பது நடுகல் வழிபாடாகத்தான் இருந்தது. இறந்து போன முன்னோர்களை நினைத்து வணங்கும் தென்புலத்தார் வழிபாடும், ஊருக்காக, நாட்டுக்காகத் தன்னைத் தியாகம் செய்து கொண்ட வீரர்களின் பெயரும், உருவமும் பொறித்த நடுகற்களுக்கு ஊரார் செய்யும் வழிபாடுகளும்தான் சங்கத்தமிழ் நூல்களில் குறிப்பிடப்படுகின்றன. இவை கற்காலம் தொடங்கி நடந்து வருபவை. கற்காலத்தில் விலங்குகளை வேட்டையாடக் கல் ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டன. கற்கள் இருபக்கமும் மழுங்கலாகவும், ஒருபக்கம் கூராகவும் தீட்டப்பட்டு, வேல் என்ற ஆயுதத்தின் தலைப்பகுதி போலக் கைகளால் பாறைகளில் தேய்த்து வடிக்கப்பட்டன. அவற்றை ஒரு மரக்கிளையில் அல்லது கோலில் கட்டினால் அதுவே வேலாயுதம். இந்த வேலைக் கைக்கொண்டு, வேட்டை நடத்தி, மிருகங்களைக் கொன்று, கொண்டு வருபவனே வேலன். வேட்டை நடந்து முடிந்த பின்னர் நடைபெறுவது வேலன் வெறியாட்டம். இதில் ஊரார் அனைவரும் கள் அருந்தி, வேட்டை உணவை உட்கொண்டு முன்னோர்களுக்கும், வேலனுக்கும் வழிபாடு செய்வர். இனக்குழு காலத்தில் இருந்து இப்படித் தொடங்கி இன்றும் தொடர்வது தான் குலதெய்வ வழிபாடு. இதற்கு நடுகற்களும், நினைவுச் சின்னங்களும் தவிர வேறு கோயில்கள், மண்டபங்கள் ஏதுமில்லை.
பல்லவர் காலமான கி.பி. ஐந்தாம் நூற்றாண்டிற்குப் பிறகுதான் கோயில்கள் உருவாக்கம் பெற்றன. பல்லவர் காலத்தில் துவக்கம் பெற்ற கோயில் கலை, சோழர்கள் காலத்தில் உச்சம் பெற்றது. பாண்டியர்கள் கோபுரங்கள் அமைந்த கோயில்களைக் கட்டினர். இவற்றிற்குக் கோயில், கோவில், ஆலயம், தேவஸ்தானம், அம்பலம், தளி என்று இடத்திற்குத் தகுந்த பெயர்கள் சூட்டப்படுகின்றன. ஐந்தாம் நூற்றாண்டிற்கு முன்பு சமணப் பள்ளிகளும், பௌத்த மடம் அல்லது விகாரங்கள் இருந்தன. அங்கும் உருவ வழிபாட்டு முறைகள் இல்லை. மகாவீரர், புத்தர் ஆகியோரின் பாத உருவங்களைக் கல்லில் வடித்து அவற்றின் மீது மலர்களை நிறைப்பதும் தான் அவர்கள் நினைவைப் போற்றும் சடங்காக இருந்தது. இதைத்தான் நற்றாள், தாள், மாணடி என்பார் திருவள்ளுவர். அவர்களின் உருவச் சிலைகளை வழிபாட்டு வந்ததாகத் தகவல்கள் இல்லை.
சமண, பௌத்த, ஆசீவக சமயங்கள் மக்களின் ஆதரவைப் பெற்றிருந்த காலத்தில், மன்னர்களின் ஆதரவுடன் அவை கல்வி, மருத்துவம், பொதுச் சேவை என்று தங்களை நிலைப்படுத்திக் கொண்டன. அதற்காக சமணப் பள்ளிகளுக்கும், பௌத்த, ஆசீவக மடங்களுக்கும் இடம் ஒதுக்கி, மண்டபம் கட்டித் தருவதும், துறவிகளுக்குக் கற்படுகைகள் அமைத்துத் தருவதும் ஒவ்வொரு வணிகர்கள், மன்னர்களின் கடமையாக இருந்தது. இப்படி உருவானவை கி.பி. ஐந்தாம் நூற்றாண்டு வரையில் எந்தவொரு இடையூறுமின்றி நடந்து வந்தன.
பல்லவர் காலத்தின் தொடக்கத்தில் சமண, பௌத்த, ஆசீவகச் சமயங்களுக்கு அரசு ஆதரவு இருந்தது. மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகக் கைபர், போலன் கணவாய் வழியாக உள்நுழைந்த ஆரிய நாடோடிக் கூட்டம், சிந்துவெளியைத் தின்று செரித்து, வடநாட்டு அரசுகளை வஞ்சத்தால் கையகப்படுத்தி, அதில் சில பிரிவுகள் வேறு இடம் தேடிக் கி. பி. ஐந்தாம் நூற்றாண்டு வாக்கில் தட்சிணப் பிரதேசம் என்று வழங்கிய தென்னகத்தில் உள் நுழைந்தன. வடநாட்டுச் சாம்ராஜ்யங்களையே அழித்த அனுபவத்தில் தென்னகத்து மன்னர்களை வஞ்சித்து, வளைத்தெடுக்க அவர்கள் பெரும் சிரமப்படவில்லை.
பல வகைகளிலும் மயக்கப்பட்ட மன்னர்கள், வைதிக நெறிகளை ஏற்கவும், மக்களுக்குச் சேவை புரிந்து வந்த சமண, பௌத்த, ஆசீவக சமயங்கள் அரசு ஆதரவையும், அதனால் செல்வாக்கையும் இழந்தன. நாட்டில் ஆங்காங்கிருந்த சமணப் பள்ளிகளும், பௌத்த, ஆசீவக மடங்களும் வைதீக மடங்களாக மாறிப் போயின. வைதிகத்தை ஏற்ற மன்னர்கள் இம்மடங்களுக்கு இடமும், பொருளும் கொடுத்துக் கட்டுமானங்களையும் செய்து தந்தனர். வைதீகத்தின் வழி பல கடவுள்கள் கற்பிக்கப்பட்டன. தென்னகத்தின் அனைத்து சமண, பௌத்த, ஆசீவக மடங்களும் வைதிகக் கோவில்களாக மாற்றம் பெற்றன. அதற்குப் பிறகு உருவாக்கம் பெற்றவை அனைத்துமே தமிழர்கள் வாழ்வில் காணாத வைதிகக் கடவுள்களும், கோயில்களும் தான்.
அப்படி ஒரு கோயில் தான் தில்லை நடராசர் கோயிலும்.
கி.பி. ஐந்தாம் நூற்றாண்டிற்குப் பிறகு தென்னகத்தின் அனைத்து சமண, பௌத்த, ஆசீவக மடங்களும் படிப்படியாக வைதிகக் கோவில்களாக மாற்றம் பெற்றன. அதற்குப் பிறகு உருவாக்கம் பெற்றவை அனைத்துமே தமிழர்கள் வாழ்வில் காணாத வைதிகக் கடவுள்களும், கோயில்களும் தான். அப்படி ஒரு கோயில் தான் தில்லை நடராசர் கோயிலும்.
சிதம்பரம் என்று தற்போது வழங்கும் இப்பழமையான ஊர், 'தில்லை' மரங்கள் அடர்ந்த காடாக இருந்தபடியால் தில்லைக் காடு, தில்லைவனம் என்று அழைக்கப்பட்டு வந்தது. தில்லை என்று சுருக்கமாகவும் இவ்வூர் குறிக்கப்படுகிறது. தற்போது பிச்சாவரம் உப்பங்கழிக் கரைகளில் மட்டும் சில தில்லை மரங்கள் உள்ளன.
சிவபெருமானை 'ஆடல் வல்லான்' எனக் கருதி நடன அரசர் என்னும் பொருளில் நடராசர் கோயில் எனப்படுகிறது. இன்னும் அம்பலக் கூத்தன், கூத்தபிரான், அம்பலவாணன், திருச்சிற்றம்பலம், கனகசபை என்றும் ஏராளமான பெயர்கள் தில்லை நடராசர்க்கு உண்டு.
சிற்றம்பலம் என்பது சித் + அம்பலம் ஆகிய சொற்களின் கூட்டு. 'சித்' என்பதற்குக் கடவுளின் இருப்பை உண்மை நிலையாக ஏற்றுக் கொள்வது என்று பொருள். சத் என்பதற்குப் பிரம்மம் (இருப்பது) என்று பொருள். சித் என்னும் உண்மையை, அம்பலத்தில் ஆடிச் சொல்வதால் அம்பலம், சிற்றம்பலமாகிச் 'சிதம்பரம்' என்றானது. இந்தப் பொருள்களின் அடிப்படையில் கூட்டாக உருவான சொற்றொடர் தான் சத் + சித் + ஆனந்தம்; அதாவது 'சச்சிதானந்தம்' என்று சொல்வதன் அடிப்படை.
இந்தத் தில்லை அம்பலக் கோயிலை ஐம்பூதங்களில் ஒன்றான ஆகாயத் தலமாகக் குறிப்பிடுகின்றனர். அந்த ஆகாயமே அம்பலம், வெளி எனப்படுகிறது. ஐம்பூதங்களில் மற்ற பூதங்களில் ஒன்றான நிலத்திற்குக் காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலைத் தலமாகவும், நெருப்புக்குத் திருவண்ணாமலைக் கோவிலைத் தலமாகவும், நீருக்கு திருவானைக்கா ஜம்புகேஸ்வரர் கோயிலைத் தலமாகவும், காற்றுக்குத் திருக்காளத்தி காளத்தீஸ்வரர் கோயிலைத் தலமாகவும் கூறி வருகின்றனர்.
இந்த ஐம்பூதக் கோட்பாடுகள் எல்லாம் வைதிகம் உள்நுழைவதற்கு முன்பிருந்த இந்தியாவின் பழமையான சமயங்கள் போதித்தவை. அவை கடவுள், ஆன்மா குறித்துக் கற்பிக்க வில்லை. அவற்றில் இருந்து வைதீகம் பெற்றவை தான் இந்தக் கோட்பாடுகள். திருடியவை என்று கூடச் சொல்லலாம். அதாவது புத்தருக்கும் முன்பிருந்த சார்வாகம் (உலகாயதம்), சாங்கியம் (எண்ணியம்) ஆகிய பழைய சமயங்களின் கோட்பாடுகளில் இருந்து எடுக்கப்பட்டவை. நிலம், நீர், வளி, நெருப்பு, ஆகாயம் என்ற ஐம்பூதங்களின் சேர்க்கையில் தான் இந்த அண்டம் உருவான கோட்பாட்டை அவை முன் வைத்தன. இதில் உலகாயுதம், ஆகாயம் தவிர்த்து நான்கு பூதக் கோட்பாட்டைச் சொன்னது.
தானாகவே மாறிக்கொள்ளும் (இரத்தினக் கற்கள் போன்றவை) பௌதிகச் சேர்க்கையும், பலவகை உலோகங்களை உருக்கிச் சேர்த்து மாற்றும் வேதியல் சேர்க்கையும், தோற்றுவன் இல்லாமலேயே தோன்றக்கூடியவை என்றே பழைய சமயங்கள் கற்பித்தன. எனவே இல்லாத ஓர் அதிகாரத்திற்கு அல்லது கற்பிக்கப்பட்ட படைப்பின் தலைமைக்கு நாம் ஆட்பட வேண்டிய அவசியம் இல்லை என்றும், எந்த ஒரு கட்டுப்பாடும் இன்றி வாழ்க்கையை இன்பமாய் வாழலாம் என்றும், இன்பவியல் கோட்பாட்டைக் கொண்டவை தான் இந்தியாவின் ஆதிச் சமயங்கள். அதனால் பொருளுக்கு (உலகத்திற்கு) அடிப்படையான ஐம்பூதக் கோட்பாடுகளைக் குறிப்பதற்காகவே, அவற்றை நினைவுபடுத்தும் தலங்களாக ஆதியில் சமணப் பள்ளிகள், பௌத்த, ஆசீவக மடங்கள், பிற சமய மடங்கள் அமைந்திருந்தன.
கி. பி. இரண்டாம் நூற்றாண்டு தொடங்கிக் கி. பி. ஐந்தாம்/ஆறாம் நூற்றாண்டு வரையில் தமிழகத்தில் களப்பிரர் ஆட்சி இருந்தது. அதைப்பற்றிப் பேச நேர்ந்தாலே வைதிகர்களுக்கு இப்போதும் குடல் நடுங்கும். அது ஏதோ கொடுங்கோன்மை ஆட்சி என்று இன்றுவரை கதைத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால் அண்மைக்கால ஆய்வுகள், களப்பிரர் ஆட்சி என்று சொல்லப்படும் காலத்தில் சமண, பௌத்த, ஆசீவகச் சமயங்கள் ஆட்சி அதிகாரத்தோடு நெருங்கி இருந்தன என்று தெரிவிக்கின்றன. மேலும் இக்காலகட்டத்தில் தான் தமிழ் இலக்கிய, இலக்கண நூல்கள் பெருமளவில் இயற்றப்பட்டுள்ளன. தமிழில் சமண, பௌத்தக் காப்பியங்களே தொண்ணூறு விழுக்காடு என்ற அளவில் இருக்கின்றன. இது குறித்து ஆய்வாளர்கள் மயிலை சீனி வேங்கடசாமி, தெ. பொ. மீனாட்சி சுந்தரம் ஆகியோர் தங்கள் ஆய்வுகளில் குறிப்பிட்டுள்ளனர். களப்பிரர் ஆட்சியின் இறுதிக் காலத்தின் போது தான் பல்லவர்கள் ஆட்சி தமிழகத்தில் ஏற்பட்டது. பல்லவர் ஆட்சியின் தொடக்கக் காலங்களில் சமண, பௌத்த, ஆசீவக சமயங்கள் மதிக்கப்பட்டன. கி. பி. 400 - 700 என்ற காலப்பகுதியைப் பௌத்தத்தின் பொற்காலமாக ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.
இக்கால கட்டத்தில் தமிழகத்தின் காஞ்சி, காவிரிப் பூம்பட்டினம், உறந்தை, மதுரை, வஞ்சி ஆகிய தலைநகரங்களிலும், சிற்றூர்களிலும் பௌத்தம் பரவி இருந்தது. மதுரைப் பகுதிகளில் சமண, பௌத்தத் துறவிகளுக்குக் கற்படுகை போன்ற வசதிகள் வணிகர்களாலும், மன்னர்களாலும் ஏற்படுத்தித் தந்ததைக் கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன. சங்க இலக்கியங்களில் இளம்போதியார், சிறுவெண்தேரையர், தேரதரர் முதலிய பௌத்த நெறி சார்ந்த புலவர்கள் பாடி உள்ளனர். திருக்குறள், சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகிய காப்பியங்கள் சமண, பௌத்த நெறிகளையும், கருத்துகளையும் கொண்டுள்ளன. இக்காலத்தில் வடக்கில் இருந்து பல்வேறு காரணங்களுக்காகத் தெற்கு நோக்கி வந்த வைதீகக் கூட்டம் வழக்கம்போல் சமய அதிகாரத்தைக் கைப்பற்றப் பெரிதும் போராடியது. அறம் கூறி மக்களுக்குச் சேவை செய்து வந்த சமண, பௌத்த, ஆசீவகத் துறவிகள் சமுதாயத்தில் அறவோர்களாகவும், அந்தணர்களாகவும் மதிக்கப்பட்டு வந்தனர். அந்நிலையைத் தாங்கள் அடையும் பேராசையில் சமண, பௌத்தத் துறவிகளை வம்புக்கு இழுத்து, வாதத்தில் வென்றதாகக் கூறி சமண, பௌத்தத் துறவிகளை கழுவேற்றுவதும், பல்வேறு சித்திரவதைகளை நடத்துவதுமாகச் சைவமும், வைணவமும் வெறியாட்டம் ஆடித் தீர்த்தன.
இப்படிப்பட்ட கொடுமைகள் மதுரை, காஞ்சி, சிதம்பரம் பகுதிகளில் அதிகமாக நடந்தேறின. திருஞானசம்பந்தரும், திருமங்கை மன்னனும் பௌத்தத்தை வேரறுக்கத் துணிந்து செயல்பட்டனர். சம்பந்தர், தான் பாடிய ஒவ்வொரு பதிகத்திலும் (பதிகம் என்பது பத்து பாடல்கள் கொண்டது) பத்தாவது பாடலைச் சமண, பௌத்தர்களைக் கடுமையாகக் குறை சொல்வதற்காகவே பயன்படுத்தி இருக்கிறார்.
போதிமங்கையில், சாரி புத்தரின் தலைமையில் திரண்ட பௌத்த அறிஞர்களைச் சம்பந்தர் வாதில் வென்றதாகப் 'பெரிய புராணம்' குறிப்பிடுகின்றது. ஐம்பொன் புத்தர் சிலையினை மங்கைமன்னன் களவாடிச் சென்று திருவரங்கத்தில் அழகிய மணவாளனின் திருக்கோயில் பணிக்குச் செலவிட்டதாகக் 'குரு பரம்பரை நூல்கள்' கூறுகின்றன. இதே காலகட்டத்தில் மாணிக்கவாசகர் தில்லையில், பௌத்த அறிஞர்களைச் சொற்போரில் வென்று சைவர்களாக மாற்றிய நிகழ்ச்சி நடந்ததாகப் பாடி வைக்கப் பட்டுள்ளது.
இப்படி உயிர்க் கொலைகளைத் துணிந்து செய்த சைவக் குரவர்களும், வைணவ ஆழ்வார்களும் சமண, பௌத்த, ஆசீவக சமயங்களை மிகக் கடுமையாக விவரித்தும், அச்சமயக் கொள்கைகளைத் திரித்துக் கூறியும், நாகரிகமற்ற வகையில் இழிவான எண்ணங்களாலும், பாலியல் வசவுகளாலும் பாடி வைத்தனர்.
இலங்கையில் இருந்து வந்த பௌத்தத் துறவிகளைத் தில்லையில் வைத்து மாணிக்கவாசகரும், பரஞ்சோதி முனிவரும் வாதம் புரிந்து, அவர்கள் அனைவரையும் ஊமைகளாக்கிய கதையை, "புத்தரை வாதில் வென்ற சருக்கம்" என்ற தலைப்பில் 'திருவாதவூரடிகள் புராண'த்தில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. பௌத்தர்கள் அனைவரும் சைவர்களாக மாறித் தில்லைப் பெருமானின் திருவருளைப் பெற்றனர் என்றும் அப்புராணம் குறிப்பிடுகின்றது. தில்லையைச் சுற்றிலும் ஏராளமான புத்தர் சிலைகளும், பௌத்தச் சின்னங்களும் இருந்ததைப் பல்வேறு ஆய்வு நூல்கள் குறிப்பிடுகின்றன (டாக்டர் சோ. ந. கந்தசாமி, இந்தியத் தத்துவக் களஞ்சியம், தொகுதி ஒன்று, பக்கம் 342 - 353).
முற்கூறிய செய்திகள், தில்லையில் 1500 ஆண்டுகளுக்கு முன்பு பௌத்த மடம், விகாரைகள் அதிகமாக இருந்திருக்க வேண்டும் என்பதைத்தான் மெய்ப்பிக்கின்றன. தில்லையில் முன்பிருந்த பௌத்த மடம்தான் கி. பி. ஐந்தாம் நூற்றாண்டுக்குப் பிறகு பல்லவர்கள், பிற்காலச் சோழர்கள், பிற்காலப் பாண்டியர்கள் அரசாண்ட காலத்தில் வைதீகக் கோவிலாக மாற்றப்பட்டு, ஒவ்வொரு மன்னர்களாலும் விரிவு படுத்தப்பட்டு, இன்று பெரிய பரப்பளவும், மண்டபங்களும் நிறைந்த சிதம்பரம் நடராஜர் கோயிலாகக் காட்சி தருகின்றது.
இத்தனை வரலாற்றுத் தரவுகள் நிறைந்த இந்த கோயிலைத்தான் தங்களுக்கு உரியது என்றும், கோயில் நிர்வாகத்தில் அரசு தலையிடல் ஆகாது என்றும் தில்லைத் தீட்சிதர்கள் தில்லி நீதிமன்றம் வரை சென்று வாதாடினர். இதற்கு மேலும் சென்று, இந்தத் தீட்சிதர்கள், தங்களைக் கடவுளுக்கு ஒப்பானவர்களாகச் சிவபெருமானே வந்து சாட்சி சொல்லியதாகவும் கதைக்கின்றனர்.
புத்தர் கோயிலை மாற்றி அமைத்துச் சோழ மன்னர்கள் கட்டிய கோயிலை, மனுச்சக்கரவர்த்தி மரபில் வந்த இரண்யவர்மன் கட்டியதாகவும், அதற்காக, கங்கைக் கரையில் உள்ள அந்தர்வேதியில் இருந்து மூவாயிரம் அந்தணர்களைத் தில்லைக்கு அழைத்து வந்ததாகவும், அவர்களே தில்லை மூவாயிரவர் என்றும் தில்லை தீட்சிதர்களில் ஒருவரான உமாபதி சிவாச்சாரியார் என்பவர் பதினான்காம் நூற்றாண்டிலேயே 'கோயில் புராணம்' ஒன்றை எழுதி வைத்துவிட்டார். அதை மட்டுமே தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்துகின்ற தில்லைத் தீட்சிதர்கள், அதற்கு முன்பாக இருந்த பௌத்த வரலாறுகளைச் சிறிதும் கவனத்தில் எடுத்துக் கொள்வதில்லை.
இதனால் கோயில் நிர்வாகத்தில் மற்றவர்கள் தலையீட்டை மறுக்கும் தீட்சிதர்கள், இரண்யவன்மனுக்குச் சோழ மன்னராக ஆத்திமாலை சூட்டி, புலிக்கொடி கொடுத்து முடி சூட்டி, சோழர் குல அரசியைத் திருமணம் செய்து வைத்ததாகவும் தங்கள் புராணத்திலேயே கூறியுள்ளனர். இதன்படி, சோழ மன்னர்கள் கட்டுப்பாட்டில் இருந்து வந்த சிதம்பரம் நடராஜர் கோயில், பிற்காலத்தில் சோழப் பரம்பரை இல்லாது போகவே, படிப்படியாகத் தீட்சிதர்களின் கட்டுப்பாட்டிற்கு வந்து விட்டதாகத் தீட்சிதர்களே கூறுகிறார்கள்.
சோழ மன்னர்கள் கட்டுப்பாட்டில் இருந்து வந்த சிதம்பரம் நடராஜர் கோயில், பிற்காலத்தில் சோழப் பரம்பரை இல்லாது போகவே, படிப்படியாகத் தீட்சிதர்களின் கட்டுப்பாட்டிற்கு வந்து விட்டதாகத் தீட்சிதர்களே கூறுகிறார்கள்.
இவர்கள் கூறுவதில் அடிப்படையில் உண்மைக்கு மாறுபட்ட இரண்டு செய்திகள் உள்ளன. ஒன்று, சிதம்பரம் நடராசர் கோவிலைக் கட்டியது தமிழன் அல்லாத ஒரு மன்னன் என்பது. மற்றொன்று சோழர் பரம்பரை தற்போது இல்லை என்பது. தில்லை நடராசர் ஆலயம் சோழ மன்னர்களால் உருவாக்கப்பட்டதற்கும், தில்லை நடராசனையே தங்கள் குலதெய்வமாகச் சோழ மன்னர்கள் கொண்டிருந்தனர் என்பதற்கும், சேக்கிழாரின் திருத்தொண்டர் புராணமும், சிதம்பர புராணமும், பெரிய புராணத்தில் உள்ள கூற்றுவநாயனார் வரலாறும், பல்வேறு கல்வெட்டுகளும், தஞ்சைப் பெரிய கோவில் ஓவியங்களும் சான்றுகளாக விளங்குகின்றன. சோழ மன்னருக்கு ஆத்திமாலை சூட்டிப், புலிக்கொடி கொடுத்து, முடிசூட்டும் நிகழ்வு ஓவியமாகச் சிதம்பரம் கோயில் மேற்கூரையிலேயே வரையப் பட்டிருக்கிறது.
இரண்டாவதாகத் தற்போதுள்ள பிச்சாவரம் பாளையக்காரர்கள் தான் சோழ பரம்பரையினர் என்பது, தில்லைத் தீட்சிதர்களே பிச்சாவரம் பாளையக்காரர்களுக்கு சோழ மன்னர்களாக முடி சூட்டியதில் இருந்து தெரிய வருகிறது. கங்கைகொண்ட சோழபுரத்தைத் தலைமை இடமாகக் கொண்டு ஆண்டு வந்த சோழ வம்சம், பதின்மூன்றாம் நூற்றாண்டில் நலிவுற்றது. இதனால் தங்கள் இருப்பிடத்தைச் சோழர்கள் தீவுக்கோட்டைக்கு மாற்றிக் கொண்டனர். பின்னர் ஏற்பட்ட நாயக்க மன்னர்களின் ஆட்சியின் போது, 17 ஆம் நூற்றாண்டில், தஞ்சையை ஆண்டு வந்த ரகுநாத நாயக்கர், தீவுக்கோட்டையைக் கைப்பற்றியதால், சோழர்கள் அங்கிருந்து பிச்சாவரத்திற்குக் (பித்தர் புரம்) குடிபெயர்ந்து, சிறிய அளவில் அரண்மனை ஏற்படுத்திக் கொண்டு பாளையக்காரர்களாக மாறிப் போயினர். ஆனாலும், தில்லை நடராஜர் ஆலயத்தில் சோழ மன்னர்கள் முடி சூட்டிக் கொள்ளும் பஞ்சாட்சரப்படியில் பிச்சாவரம் பாளையக்காரர்களை அமர வைத்து முடி சூட்டும் வைபவம் இக்காலம் வரை பாரம்பரியமாக நடந்தேறி வருகிறது. இறுதியாக 16. 6. 1978 அன்று தில்லை நடராசர் கோயிலில் சோழ வம்சத்தின் முடிசூட்டு விழா நடந்திருக்கிறது.
"சிதம்பரம் ஸ்ரீ நடராஜப் பெருமான் சன்னிதியிலே தில்லை மூவாயிர முனிவர்கள் திருமுன்னே ஸ்ரீ பஞ்சாக்ஷரப்படியின் மீதே சோழ வம்சத்தினருக்குத் தொன்றுதொட்டு பட்டாபிஷேகம் நடந்து வந்த சம்பிரதாயப்படி அச்சோழ வம்சாவழி வந்த மன்னர் பரம்பரை உயர்திரு ஆண்டியப்ப சூரப்ப சோழனார் அவர்களின் ஜேஷ்ட குமாரர் திரு சிதம்பரநாத சூரப்ப சோழனார் பி. ஏ. வுக்கு மணிமுடி சூட்டுவிழா" நடைபெற்றதாக இதற்கான அழைப்பிதழ் தெரிவிக்கிறது.
மேலும், சிதம்பரம் கோவிலின் நடை சாத்தப்படும் போது, நுழைவாயில் கதவுச் சாவி, பிச்சாவரம் ஜமீன் அரண்மனைக்கு அன்றாடம் இரவில் பல்லக்கில் கொண்டுவரப்பட்டு, மறுநாள் அதிகாலை, திரும்பவும் அரண்மனையில் இருந்து கொண்டு செல்லப்பட்டுள்ளது என்ற செய்தியும் தெரிய வருகிறது. அண்மைக்காலம் வரை வழக்கத்தில் இருந்த இம்முறை 1980 ஆம் ஆண்டுகளில் பிச்சாவரம் அரண்மனை இடிபாடுற்றக் காலத்திற்குப் பிறகு தீட்சிதர்களால் உள்நோக்குடன் மாற்றப்பட்டு விட்டிருக்கிறது. (க.சி.து. நாராயணசாமி எழுதிய "இரண்யவர்மன் சோழ மன்னரான வரலாறு" நூல்).
இப்படித் தமிழ் மக்களுக்குச் சொந்தமான கோயிலைக், குறிப்பாகத் தமிழ் பௌத்தர்கள் உருவாக்கிய கோயிலை, யாரும் கவனிப்பாரின்றிப் போனபடியால், எங்கோ வடக்கில் இருந்து வந்த ஆரிய நாடோடிகள் தங்கள் உடைமையாகக் கைக்கொண்டு விட்டனர். இப்படி உரிமையின்றிப் பெறப்பட்ட கோயிலைத் தங்கள் சமூகத்திற்கே உரிமையானது என்றும், இறைவனோடு பூலோகத்திற்கு வந்த அந்தணர்கள் தாங்கள் என்றும் கூறி, தங்கள் ஏகபோக ராஜ்யத்தை அமைத்துக் கொண்டுள்ளனர் இந்தத் தில்லைத் தீட்சிதர்கள்.
கோயிலுக்குச் சொந்தமான 900 ஏக்கருக்கும் மேற்பட்ட நிலத்தைப் பாதி அளவிற்கு மட்டுமே குத்தகைக்கு விட்டு, முழு வருமானத்தையும் மறைத்து வருகின்றனர். கோவிலுக்கு வரும் பக்தர்களை விரட்டிப் பணம் வசூல் செய்வது, சிற்றம்பல மேடையில் ஏறி சாமி தரிசனம் செய்யப் பணம் பிடுங்குவது, பக்தர்களைக் கண்டபடித் திட்டுவது, தாக்குவது, சாதிப் பெயர்களைச் சொல்லி அவமரியாதையாகப் பேசுவது போன்ற செயல்களில் தீவிரமாகத் தினமும் ஈடுபட்டு வருகின்றனர் இந்தத் தீட்சிதர்கள்.
இவர்களில் இளைய சமுதாயத்தினரோ கோயிலுக்குள்ளேயே மது, மாமிசம், பாலியல் பிரச்சனைகளில் ஈடுபடுவதாகப் பொதுமக்களே கூறிய புகார்களை அடுத்தும், தில்லைத் தீட்சிதர்களின் கொலை, கொள்ளை, களவு, சூது, வாது, மது ஆகிய நிகழ்வுகள், பிரபலமான செய்தி ஊடகங்களில் தொடர் கட்டுரைகளாக வெளிவந்ததை அடுத்தும், மனித உரிமைகள் அமைப்புகளும், சமுதாய அமைப்புகளும், அரசியல் கட்சிகளும் கோயில் நிர்வாகத்தை அரசே ஏற்க வற்புறுத்தி வந்தனர். இதனை ஏற்று 1987 ஆம் ஆண்டில் கோயில் நிர்வாகத்தைத் தமிழக அரசின் இந்து அறநிலையத்துறை ஏற்கத் தமிழ்நாடு அரசாங்கம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து தீட்சிதர்கள் நீதிமன்றத்தில் இதற்குத் தடை உத்தரவு பெற்றனர்.
தில்லைத் தீட்சிதர்களின் எல்லை மீறிய அக்கிரமங்களின் ஒரு பகுதியாகத் தமிழ் மக்களுக்காக உருவாக்கப்பட்ட கோயிலில் தமிழில் பாட முடியாதவாறு தடை உத்தரவும் பெற்றிருக்கின்றனர். தேவாரப் பாடல்கள் முழுவதும் ஓலைச்சுவடியில் இருந்த காலத்தில் அதைப் பாதுகாக்க சோழ மன்னர் முதலாம் குலோத்துங்கன் செய்த ஏற்பாட்டின் படி, அவரது அமைச்சர் காலிங்கராயன் அத்தேவாரப் பாடல்களைச் செப்பேடுகளில் பொறித்துத் தில்லைச் சிற்றம்பலத்தில் வைத்துப் பாதுகாத்தார் என வரலாற்றுச் செய்திகள் தெரியப்படுத்துகின்றன. இந்தத் தமிழ்ப் பாடல்களைத் தான் தில்லைச் சிற்றம்பல மேடையில் பாடக்கூடாது என்று தீட்சிதர்கள் தடை உத்தரவு பெற்று இருக்கின்றனர். திருச்சிற்றம்பல மேடையில் தேவாரம் பாடக் கூடாது என்ற தீட்சிதர்களின் எதிர்ப்புக்கு இதுவரை எந்த ஆதீனமும் எதிர்ப்புத் தெரிவித்ததில்லை.
சிதம்பரம் கோயில் தொடர்பான வழக்குகள் பிரிட்டிஷ்காரர்கள் ஆட்சிக் காலத்திலிருந்தே நீதிமன்றங்களைச் சந்தித்து இருக்கின்றன. 1880 - 1890 வரை சில வழக்குகளும், பின்னர் 1890, 1939, 1952, 2007, 1997 ஆகிய ஆண்டுகளில் உயர் நீதிமன்ற வழக்குகளாகவும் நடைபெற்றன. பின்னர் தமிழ்நாடு அரசாங்கம் இந்து அறநிலையத்துறைக்குச் சிதம்பரம் கோயில் நிர்வாகத்தை மாற்றியதைத் தொடர்ந்து தீட்சிதர்கள் தொடுத்த வழக்கில், 2014 ஆம் ஆண்டில் உச்ச நீதிமன்றத்தில் தீர்ப்புச் சொல்லப்பட்டு நிர்வாகம் தில்லைத் தீட்சிதர்கள் கைக்கு மாறியது. ஆனால் இதற்கு முன் கூறிய அனைத்துத் தீர்ப்புகளிலும் தில்லை நடராசர் கோயிலைப் பொதுக் கோயில் என்று தான் உயர் நீதிமன்றங்களும், உச்ச நீதிமன்றங்களும் கூறி இருக்கின்றன. அது தீட்சிதர்களுக்குச் சொந்தமானது என்று இதுவரை வெளிவந்த எந்த நீதிமன்றத் தீர்ப்பிலும் சொல்லப்படவில்லை.
17. 3. 1890 இல் தீட்சிதர்கள் தொடர்ந்த வழக்கில் முத்துசாமி ஐயர் உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்து அளித்த தீர்ப்பிலும் தில்லை நடராசர் கோயில் பொதுக் கோயில் என்றுதான் கூறப் பட்டிருக்கிறது.
1888 ஆம் ஆண்டில் தில்லைக் கோயில் நிர்வாகத்திற்காக அறுவர் குழு ஒன்று நியமிக்கப்பட்டது. அதன் தலைவர் முத்துசாமி ஐயர். அதில் பாஷ்யம் ஐயங்கார் போன்றவர்களும் இருந்தனர். இந்த ஐயர்களும், ஐயங்கார்களும் அடங்கிய குழுதான் நடராசர் கோயில் நிர்வாகத்தை அரசு ஏற்க வேண்டும் போன்ற தீர்மானங்களை நிறைவேற்றி இருக்கின்றனர். இதை அன்று பார்ப்பன ஊடகங்களும் கூட ஆதரித்து எழுதின. "நிர்வாகத்தை அரசாங்கம் ஏற்பது தங்களைப் பாதிக்கும் என்று தீட்சிதர்கள் சொல்வதானது, குற்றவியல் சட்டம் கொண்டு வந்தால் அது எங்களைப் பாதிக்கும் எனத் திருடர்கள் சொல்வதைப் போன்றது" என்று அப்பொழுது பார்ப்பன ஏடுகளிலேயே எழுதப்பட்ட வரலாறும் உண்டு.
இந்த முன்குடுமிச் சோழியர்களைப் பற்றிப் பதினெட்டாம் நூற்றாண்டிலேயே காளமேகப் புலவர் என்னும் வைணவப் பார்ப்பனர் பாடி வைத்து விட்டார்.
"சுருக்கவிழ்ந்த முன்குடுமிச் சோழியா! சோற்றுப்
பருக்குலர்ந்த வாயா! புலையா! - திருக்குடந்தைக்
கோட்டானே! நாயே! குரங்கே! உனையொருத்திப்
போட்டாளே வேலையற்றுப் போய்!"
(தனிப்பாடற்றிரட்டு - கவி காளமேகம் பாடல்கள்) என்ற அவரது தனிப்பாடல் மூலம் இதனை அறியலாம்.
இதன் பின்னர் 1920 ஆம் ஆண்டில் நீதிக்கட்சி ஆட்சியின்போது, சென்னை மாகாணச் சட்டமன்றத்தில் "இந்து அறநிலையத் துறையை உருவாக்கும் மசோதா" 1924 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்டு, 1925 ஆம் ஆண்டு சனவரி மாதத்தில் சட்டமாக்கப் பட்டது. அன்றைய நீதிக் கட்சியினர் பெரும்பாலோர் இறை நம்பிக்கை கொண்டவர்களே என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்தியச் சமூகம் சாதிகளாலும், மதங்களாலும் பின்னிப் பிணையப்பட்டிருக்கிறது. இதற்கு வேதமும், வைதீகமும் அடிப்படைக் காரணங்களாக அமைந்திருக்கின்றன. அதை அப்படியே ஏற்றுக் கொண்டுவிட்ட இந்திய மக்கள் அதைப் போற்றிப் பாதுகாத்து வருகின்றனர்.
இன்றைக்குப் பார்ப்பனர்களே வேண்டாம் என்றாலும் கூட, அதற்கு அடுத்தடுத்த நிலையில் உள்ள சாதிக்காரர்கள் அதை விடுவதாக இல்லை. இப்படிப்பட்ட சூழ்நிலைகள் தான் பார்ப்பனர்களை இன்னும் அதிகாரத்தைத் தக்க வைத்துக் கொண்டிருக்கிறவர்களாக ஆக்கி வைத்திருக்கின்றன. அதனால்தான் இந்தக் காலத்திலும் கூட மனிதனை மனிதனாக மதிக்காத 'மனுதர்மம்' தேவை என்றும், கோயில்களில் 'உயர்சாதி ஆதிக்கம்' தேவை என்றும் அவர்களால் வெட்கமின்றிச் சொல்ல முடிகிறது.
அது மட்டுமல்லாமல் அடுத்தடுத்த சாதிகளை மிகக் கேவலமாகப் பேசுவதும், கோயில் உள்ளே வரவிடாமல் தடுப்பதும் இன்னும் நந்தனார் காலத்து நடைமுறைகள் தான் கோவில்களில் நீடித்து வருகின்றன என்ற உண்மையை அப்பட்டமாகத் தெரிவிக்கின்றன.
'காலந்தோறும் நந்தன்' என்பது கனவாக மாறுகின்ற காலத்தில் தான் சாதி, பேத வித்தியாசம் இல்லாத ஒரு சமத்துவ நிலை உருவாக்கப்படும். அப்போதுதான் 'நந்தனார் மடம்' தொடங்கி, சாதி வித்தியாசம் அற்ற ஒரு சமநிலையை உருவாக்கிடும் கனவைக் கண்ட திரு சகஜானந்தா சுவாமிகள் போன்றோரின் சமத்துவக் கனவுகள் நனவாகும்.