கலப்பை என்றால் நமக்கு உடனே நினைவுக்கு வருவது உழவர்கள் உழுவதற்குப் பயன்படுத்தும் ஒரு கருவி. ஏர் என்றும் சொல்லலாம், இது ஒரே சொல். ஆனால், சங்க காலத்தில் இது இரண்டு சொற்களின் சேர்க்கையாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. கலம் + பை = கலப்பை.
கலம் என்பதற்குப் பொதுவாக, பாத்திரம் என்று பெயர். மண்பாத்திரங்களை, மண்கலம் அல்லது மட்கலம் என்கிறோம். ஆனால் சங்ககாலத்தில் கலப்பை என்ற சொல்லில் வரும் கலம் என்பது கலன் என்ற பொருளில் இசைக்கருவியையும் குறிக்கும். அந்த இசைக்கருவிகளை எடுத்துச்செல்ல ஒரு (சாக்குப்)பையில் போட்டால், அந்தப் பையே கலப்பை. இந்தப் பையை மூடுவது எப்படி? அதன் வாயை ஒன்றாகச் சேர்த்துப் பிடித்து அதனை ஒரு கயிற்றால் முடிந்துவிடலாம். ஆனால் சங்ககாலத்தில் அந்தப் பையை அவர்கள் ஒரு சுருக்குப்பையாக வைத்திருந்தார்கள்.
இன்றைக்கும், கிராமங்களில், சில முதிய பெண்கள் தம் இடுப்பில் ஒரு சிறிய சுருக்குப்பையைச் செருகியிருப்பார்கள். அதற்குள் பெரும்பாலும் வெற்றிலை, புகையிலை போன்றவை இருக்கும். சிலர் நாணயங்கள் வைத்திருப்பர். இந்தச் சுருக்குப்பையை மூட முடிச்சுப்போடவேண்டியதில்லை. இன்றைக்கும் பெண்கள் தம் பாவாடையில் ஒரு நாடாவைச் செருகி, உடுத்துப்போது, அந்த நாடாவை இழுத்தால் , அது அவர்களின் இடுப்பை இறுக்கிக்கொள்ளும். ஏறக்குறைய அதைப்போன்றதுதான் சுருக்குப்பையும். பையின் வாயை இரண்டாகப் பிளந்து இரு பக்கங்களிலும் சிறிய கயிறுகளைச் செருகித்தைத்திருப்பார்கள். இரு பக்கங்களில் தொங்கும் கயிறுகளை இழுத்தால் பையின் வாய் மூடிக்கொள்ளும், மூடின வாயில் இரு விரல்களை நுழைத்து இரு பக்கங்களிலும் இழுத்தால் பை திறந்துகொள்ளும். கயிறுகளை இழுத்து வாயை மூடுவதைச் சுருக்குப்போடுதல் என்பார்கள். எனவேதான் அது சுருக்குப்பை எனப்படும்.
சங்ககால ஔவையார், அதியமான் நெடுமான் அஞ்சி எனப்படும் அதியமானிடம் பரிசில் வேண்டிச் செல்கிறார். அவனோ உடனே பரிசில் தராமல் காலம் தாழ்த்துகிறான். ஔவைக்குக் கோபம். உடனே தனது பொருள்களை வாரிச் சுருட்டிக்கொண்டு புறப்பட்டுவிடுகிறார். போகிற வழியில் வாயில் காப்பவனைப் பார்த்து நாலு விடு விடுகிறார். (அவன் என்ன செய்வான்? பாவம். ஆனால் அவன் மன்னனிடம் போய்ச் சொல்லவேண்டும்ல்லவா!). புலவரல்லவா! பாடலாகவே பாடித்தள்ளிவிடுகிறார்.
வாயிலோயே! வாயிலோயே!
வள்ளியோர் செவி முதல் வயங்கு மொழி வித்தித், தாம்
உள்ளியது முடிக்கும் உரன் உடை உள்ளத்து
வரிசைக்கு வருந்தும் இப் பரிசில் வாழ்க்கைப்
பரிசிலர்க்கு அடையா வாயிலோயே! 5
கடு_மான் தோன்றல், நெடுமான் அஞ்சி
தன் அறியலன்-கொல், என் அறியலன்-கொல்
அறிவும் புகழும் உடையோர் மாய்ந்து என
வறும் தலை உலகமும் அன்றே, அதனால்
காவினெம் கலனே சுருக்கினெம் கலப்பை , 10
மரம் கொல் தச்சன் கை வல் சிறாஅர்
மழு உடை காட்டகத்து அற்றே
எத் திசை செலினும் அத் திசைச் சோறே – புறம் 206
(இரண்டு முறை படித்தால் தானாகப் புரியும். அப்படியும் புரியாவிட்டால், இங்கு சொடுக்குங்கள்:
(http://tamilconcordance.in/SANG-18A.html#206)
நமக்குத் தேவை முழுப்பாடலும் அல்ல. ஒரே ஒரு அடிதான். ஆனால் அவற்றின் பின்புலம் தெரிய முழுப்பாடலையும் கொடுத்துள்ளேன். அந்த ஓர் அடி:
காவினெம் கலனே சுருக்கினெம் கலப்பை
இதன் பொருள்:
தூக்கித்தோளில் போட்டோம் எம் இசைக்கலன்களை, இழுத்துக் கட்டினோம் அந்த மூட்டைகளை,காவு என்பது தோளில் தூக்கிப்போடுதல். முருக பக்தர்கள் தோளில் சுமக்கும் காவடி இதனின்றும் பிறந்த சொல். ஆனால், ஔவை குறிப்பிடும் காவடி சற்று வேறுபாடுள்ளது.
நான் சிறுபிள்ளையாய், ஓடைப்பட்டியில் இருந்தபோது, சில வேளைகளில், வாசலில், வெண்கலமணி ஒலிக்கும். கூடவே, “அன்னக்காவடி, தருமம் தாயே” என்ற குரல் ஒலிக்கும். இவர்கள் பிச்சைக்காரர்கள் அல்லர். ஆனால் யாசகம் கேட்டுப் பிழைக்கும் இறையடியவர்கள். ஒரு பளபளப்பான உலக்கை போன்ற மரக்கடையைத் ஒரு பக்கத் தோளில் நீளவாக்கில் வைத்திருப்பார்கள். அதன் முன், பின் ஆகிய இரு முனைகளிலும், சங்கிலிகளால் பளபளக்கும் பித்தளைச் சட்டிகளைத் தொங்கவிட்டிருப்பார்கள். அந்தப் பாத்திரங்களில் வீட்டோர் அன்னம் இடுவார்கள். அதுதான் அன்னக்காவடி. கிராமங்களில் ஒன்றுமில்லாதவனைப் பார்த்து, “அவன் ஒரு அன்னக்காவடிப் பயல்” என்பார்களே அதன் பொருள் இதுதான். இந்தக் காவடியின் முக்கிய தத்துவம் : முன்னாகவும், பின்னாகவும் தொங்கும் அந்த இரண்டு பாத்திரங்களும் அவற்றிலிருக்கும் பொருள்களும் சம எடை உள்ளவைகளாக இருக்கவேண்டும், (இல்லாவிட்டால் ஒரு பக்கம் பாரம் இழுக்குமல்லவா?)
அதியமான் மேல் கோபம் கொண்ட ஔவையார், தாம் கொண்டுவந்த இசைக்கலன்களை இரண்டு பைகளில் நிரப்பி, அவற்றைத் தம் காவடியின் இரு முனைகளிலும் கோர்த்து தூக்கிக்கொண்டு செல்ல முற்படும் அந்த நிலையில்தான்,
காவினெம் கலனே சுருக்கினெம் கலப்பை
என்று சொல்கிறார்.
இதே போன்று வேறு ஒரு காட்சியை மலைபடுகடாம் என்ற பத்துப்பாட்டு நூலும் காட்டுகிறது. இது கூத்தர் ஆற்றுப்படை என்றும் அழைக்கப்படும். கூத்தர் என்போர் ஆடல், பாடல்களில் வல்லவர்கள். வள்ளல்களிடம் சென்று, தம் தொழில் திறமையை அவர்களிடம் காட்டிப் பரிசில்பெற்று வாழ்பவர்கள். அப்படி ஒரு கூத்தர் குடும்பம் புறப்படத் தயாராகிறது. எனவே, அவர்கள் தம் இசைக்கலன்களை பைகளில் கட்டி, தோளில் தூக்கிப் புறப்படும் காட்சியைப் புலவர் இவ்வாறு குறிப்பிடுகிறார்.
திரு மழை தலைஇய இருள் நிற விசும்பின்விண் அதிர் இமிழ் இசை கடுப்பப் பண் அமைத்துத்திண் வார் விசித்த #முழவொடு #ஆகுளிநுண் உருக்குற்ற விளங்கு அடர்ப் #பாண்டில்மின் இரும் பீலி அணித் தழைக் #கோட்டொடு 5கண் இடை விடுத்த களிற்று உயிர்த் #தூம்பின்இளிப் பயிர் இமிரும் குறும் பரம் தூம்பொடுவிளிப்பது கவரும் தீம் #குழல் துதைஇநடுவு நின்று இசைக்கும் அரிக் குரல் #தட்டைகடி கவர்பு ஒலிக்கும் வல் வாய் #எல்லரி 10நொடி தரு பாணிய #பதலையும் பிறவும்கார் கோள் பலவின் காய் துணர் கடுப்பநேர் சீர் சுருக்கிக் காய கலப்பையிர் – மலைபடுகடாம் 1 – 13இங்கு குறியிட்டுக் காட்டப்பட்டிருப்பவை பலவிதமான இசைக் கருவிகள். இவற்றைச் சாக்குப் பைகளில் போட்டு நிரப்பிய போது, அப் பைகள் ஒரு பலாக்காய்க்கொத்துப் போல் இருந்தனவாம். அவற்றை இரண்டு பைகளிலும் சரியான எடைகளில் போட்டு, அந்தப் பெரிய சுருக்குப்பையின் வாயை இழுத்து மூடுகிறார்களாம். அதுதான் ’நேர் சேர் சுருக்கி’. அதன்பின் அந்தக் காவடியைத் தோளின்மேல் தூக்கி வைக்கிறார்களாம். அதுதான் காய கலப்பையிர் என்பது. காய என்பதில் உள்ள ’கா’ என்பது ’தோளில் தூக்குச் சும’ என்று பொருள்தரும்.
கலப்பையைப் பற்றிப்பேசும் இந்த இரண்டு அடிகளையும் சற்று உற்றுப்பாருங்கள்.காவினெம் கலனே சுருக்கினெம் கலப்பை – ஔவையார்
நேர் சீர் சுருக்கிக் காய கலப்பையிர் – மலைபடுகடாம்
உங்களுக்கு ஏதாவது தோன்றுகிறதா? இல்லையா? நன்றாக உற்றுப்பாருங்கள்.
முன்னதில், காவுதலை முதலில் சொல்லி, பின்னர் சுருக்குதலைச் சொல்கிறார் ஔவை.
அடுத்ததில் சுருக்குவதை முதலில் சொல்லி, பின்னர் காவுதலைச் சொல்கிறது மலைபடுகடாம்.
சாதாரணமாக, நாம் புறப்படும்போது,
ஒரு பெட்டியில் துணிமணிகளை எடுத்துவைத்து,
அதை மூடி
பின்னர் அந்தப் பெட்டியைத் தூக்கிச்செல்வோம்.
இப்படித்தான் சொல்கிறது மலைபடுகடாம்.
ஆனால், ஔவையாரோ,
ஒரு பெட்டியில் துணிமணிகளை எடுத்துவைத்து,
அந்தப் பெட்டியைத் தூக்கி,
பின்னர் அதை மூடுகிறார்.
காவினெம் கலனே – சுருக்கினெம் கலப்பை.
அவ்வளவு அவசரம் ஔவையாருக்கு.
அப்படி என்ன அவசரம்?
இது அவசரம் மட்டும் அல்ல. – ஆத்திரம்.
தனக்குப் பரிசில் தராமல் ஏமாற்றுகிறானே அதியன் என்ற ஆத்திரம்.
அந்த ஆத்திரத்தில், எல்லா சாமான்களையும் பைகளில் போட்டு, அந்தக் காவடியைத் தோளில் தூக்கிக்கொண்டு நடந்துகொண்டே அதன் வாயைச் சுருக்கி மூடுகிறார்.
இந்த ஆத்திரத்தையும், அதனால் வந்த அவசரத்தையும் இந்த இரண்டு சொற்களை மாற்றிப்போட்டுக் காண்பித்திருக்கும் ஔவையின் சிறப்பே சிறப்பு.

ப.பாண்டியராஜா
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/mintamil/dcb0ffa5-b036-40b3-9fae-dc50b243ab5cn%40googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/mintamil/CAFfhOEjHyuyOkRWpXovKybEm-FJTtVgR1cYrfceP5F%2BEbM-n4Q%40mail.gmail.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/mintamil/CAGXpCc%3D9SvzRCGbg0wwzntzsWMs%2B9xjy%2By%3DDAbPyu%2BOPvsjq7A%40mail.gmail.com.