Pandiyaraja
unread,Dec 8, 2025, 1:43:05 PM (5 days ago) Dec 8Sign in to reply to author
Sign in to forward
You do not have permission to delete messages in this group
Either email addresses are anonymous for this group or you need the view member email addresses permission to view the original message
to மின்தமிழ்
இது கொஞ்சம் நீளமான கட்டுரை. இதனால் இது இரண்டு பகுதிகளாக வருகிறது.
முதற்பகுதி, நெடுநல்வாடையிலும், மதுரைக்காஞ்சியிலும் வரும் சில அடிகளைச் சேர்த்துப் பார்த்து, ஒரு புதுமையான விளக்கத்தைக் கொடுக்க முயல்கிறது.
பத்துப்பாட்டு நூல்களுள் 5, 6, 7 –ஆவதாக வருவன முல்லைப்பாட்டு, மதுரைக்காஞ்சி, நெடுநல்வாடை ஆகிய நூல்கள். இவற்றுள் மதுரைக்காஞ்சி என்பது பத்துப்பாட்டு நூல்களுள் மிக அதிகமான அடிகளைக் கொண்டது. மொத்தம் 782 அடிகள்.
தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் என்ற பாண்டிய மன்னனின் வெற்றிச் சிறப்புகளை மாங்குடிமருதனார் பாடியது.
இதற்கு முந்தைய பாடலான முல்லைப்பாட்டைப் பாடியவர் காவிரிப்பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார். மொத்தம் 103 அடிகளைக் கொண்ட இந்த நூல்தான் பத்துப்பாட்டு நூல்களுள் மிகச் சிறியது. மொத்தம் 103 அடிகள்தான்.
மதுரைக்காஞ்சிக்கு அடுத்த பாடல் நெடுநல்வாடை. 188 அடிகளைக் கொண்ட இந்த நூல் மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.
இவற்றுள், மதுரைக்காஞ்சி பாண்டியன் நெடுஞ்செழியனைப் பெயர் சொல்லிப் புகழ்ந்து பாடுவது. எனவே இது புறப்பாடல் வகையைச் சேர்ந்தது.
முல்லைப்பாட்டில் பாட்டுடைத்தலைவனைப் பற்றிய நேரடியான செய்திகள் இல்லை. ஆனால் அவன் போர்மேல் சென்றிருக்கும் ஓர் அரசன் என்று காட்டப்படுகிறான். அவன் வெற்றியுடன் திரும்ப வரும் நாளுக்காகக் காத்திருக்கும் தலைவி அரண்மனையில் இருக்கும் ஓர் அரசி என்று காட்டப்படுகிறாள். ஆய்வறிஞர்கள் இந்த அரசன் பாண்டியன் நெடுஞ்செழியனே என்று கூறுகிறார்கள்.
நெடுநல்வாடைத் தலைவனும் ஓர் அரசனே. இவனும் போர்மேல் சென்றிருக்கிறான். ஒரு நாள் நள்ளிரவில் அன்றைய போரில் காயம்பட்டிருக்கும் போர்வீர்ர்களைக் காண அவர்கள் தங்கியிருக்கும் பாசறைக்கே அரசன் செல்கிறான். அவனுக்கு வழிகாட்டியாக முன்னர் செல்லும் ஒரு வீரனின் கையிலிருக்கும் வேலின் தலையில் வேப்பம்பூ மாலை சூட்டப்பட்டிருப்பதாகப் புலவர் கூறுகிறார். வேம்பு பாண்டிய மன்னர்களுக்குரியது. எனவே இவன் பாண்டிய மன்னன் என்பது உறுதி. இவனும் மதுரைக்காஞ்சிப் பாண்டியன் நெடுஞ்செழியனே என்பது ஆய்வறிஞர்கள் கூற்று.
மதுரைக் காஞ்சியில் பாண்டிய மன்னனின் பல சிறப்புகள் கூறப்படும்போது, அவனது போர் வெற்றிகளும் குறிப்பிடப்படுகின்றன.
அரும் குழு மிளை குண்டு கிடங்கின்
உயர்ந்து ஓங்கிய நிரைப் புதவின்
நெடு மதில் நிரை ஞாயில்
அம்பு உமிழ் அயில் அருப்பம்
தண்டாது தலைச்சென்று – மதுரைக்காஞ்சி 64 – 68
சேர்தற்கரிய அடர்ந்த காவல்காட்டையும், ஆழ்ந்த கிடங்கினையும்,
உயர்ந்து வளர்ந்த, வரிசையான குறுவாயில்களைக்கொண்ட 65
நெடிய மதிலினையும், வரிசையான ஞாயில்களையும்,
அம்பு விடுகின்ற, வேல் வீசுகின்ற அரண்களையும்,
தடைப்படாமல் மேற்சென்று,
என்பது இதன் பொருள்.
அதுமட்டுமல்ல.
இரு பெரு வேந்தரொடு வேளிர் சாய
பொருது அவரைச் செரு வென்றும் - மதுரைக் 55, 56
சேர, சோழ வேந்தர்களுடன் ஐந்து வேளிர்களும் சேர்ந்து இந்தப் பாண்டியனைத் தாக்கின போது , அந்த எழுவரையும் வென்ற நிகழ்ச்சியைக் கூறும் பகுதி இது.
இதன் பின்னர் இந்தப் பாண்டியன் பாண்டிய நாட்டை மட்டுமல்ல, தென்னகத்தையே ஆளும் சிறப்பினைப் பெற்றிருந்தான்.
இப்போது நெடுநல்வாடைக்கு வருவோம்.
இப்பாடல் ஒரு மலையுச்சியில் கூதிர்கால மேகங்கள் (வடகிழக்குப் பருவ மேகங்கள்) பொழியும் முதல் மழையுடன் தொடங்குகிறது. அதன் பின்னர் மலையை ஒட்டிய பகுதிகள், (வைகை) ஆற்றில் மீன் மேயும் பறவைகள், கமுகுத் தோப்புகள். (மதுரை) நகருக்கு வெளியே இருக்கும் காவற்காடு போன்றவற்றைத் தாண்டி ’மாடம் ஓங்கிய மல்லல் மூதூரை’க் காட்டுகிறது.
பின்னர் புறநகர்ப்பகுதில் குடியிருக்கும் யவனர்களின் பிற்பகல் களியாட்டங்கள் கூறப்படுகின்றன. பின்னர், பாடல் கோட்டையின் மேற்கு வாயிலில் ’நெல்லும் மலரும் தூவிக் கைதொழுது மாலை அயரும்’ மங்கையரைக் காட்டுகிறது. பின்னர், இரவில் வீடுகளில் நடக்கும் ஆடல் பாடல் நிகழ்ச்சிகளைக் காட்டுகிறது.
இறுதியில் பாண்டியன் அரண்மனை வாயில் காட்டப்படுகிறது. பாண்டியன் அரண்மனையில் அப்போது இல்லை. (போருக்குச் சென்றிருக்கிறான்) எனவே அடுத்துள்ள அந்தப்புரம் காட்டப்படுகிறது. இங்கு ஒரு வேடிக்கை நடக்கிறது.
புலவர் அரண்மனையைப் பற்றிக் கூறாமல், அது எவ்வாறு கட்டப்பட்டது என்று கூறுகிறார்.
------------ ------ -------- மாதிரம்
விரி கதிர் பரப்பிய வியல் வாய் மண்டிலம்
இரு கோல் குறிநிலை வழுக்காது குடக்கு ஏர்பு
ஒரு திறம் சாரா அரைநாள் அமயத்து
நூல் அறி புலவர் நுண்ணிதின் கயிறு இட்டு
தேஎம் கொண்டு தெய்வம் நோக்கிப்
பெரும் பெயர் மன்னர்க்கு ஒப்ப மனை வகுத்து – நெடுநல் 72 – 78
இதன் பொருள் –
திசைகள்(எல்லாவற்றிலும்)
விரிந்த கிரணங்களைப் பரப்பின அகன்ற இடத்தையுடைய ஞாயிறு,
(நாட்டப்பட்ட)இரண்டு கோல்களின் நிழல்கள் ஒன்றும்வகையில், (கிழக்கிலிருந்து)மேற்கே செல்வதற்காக,
ஒரு பக்கத்தைச் சாராத (உச்சியில் இருக்கும்)நண்பகல் நேரத்தில், 75
(கட்டிடக்கலை)நூலை அறிந்த கலைஞர் மிகச்சரியாக நூலை நேரே பிடித்து,
திசைகளைக் குறித்துக்கொண்டு, தெய்வங்களை (ஏறிட்டுப்)பார்த்து(த் தொழுது),
பெரும் புகழ்பெற்ற அரசர்க்குத் தகுந்தவகையில் (அரண்)மனையின் பாகங்களைப் பகுத்துக்கொண்டு
பாண்டியன் அரண்மனைக்கு அஸ்திவாரம் போடுவதற்காக, அரண்மனையின் பல பாகங்களைக் குறிக்கும் வகையில் நுட்பமாகக் கயிறு அடிக்கிறதைப் புலவர் கூறுகிறார்.
அதாவது, அரண்மனை புதிதாகக் கட்டப்படுவதைப் புலவர் கூறுகிறார். அப்படியென்றால் இதுவரை மன்னன் எங்கு குடியிருந்தான்? அவன் முன்னோர்கள் எங்கு குடியிருந்தார்கள்?
இதில் நாம் ஊன்றிக் கவனிக்க வேண்டியது, இப்பகுதியில் உள்ள கடைசி அடியினைத்தான்.
பெரும் பெயர் மன்னர்க்கு ஒப்ப மனை வகுத்து – நெடுநல் – 78
அதாவது, இதுவரை பாண்டியன், மதுரைப்பகுதிக்கு மட்டும் தான் அரசனாக இருந்திருக்கிறான். சேர, சோழ, வேளிர்களை வென்ற பின்னர் அவன் தமிழகத்திற்கே பேரரசனாக ஆகிவிட்டான். அந்தப் பெரிய பெயருக்கேற்ற வகையில் இருக்கின்ற பழைய சிறிய அரண்மனையை இடித்துவிட்டு மிகப் பெரியதாகக் கட்டுகின்றான் என்பதையே புலவர் இவ்வாறு கூறுகிறார் என்பது புலனாகும்.
மதுரைக் காஞ்சியையும் நெடுநல்வாடையையும் சேர்த்துப் படித்தால்தான் இது நன்கு புலனாகும்.
அடுத்து மதுரைக்காஞ்சியையும், தாலமி (Ptolemy) யையும் சேர்த்துப் பார்க்கும் பகுதி – விரைவில் வரும்.
ப.பாண்டியராஜா