Pandiyaraja
unread,Oct 20, 2024, 2:26:12 PM10/20/24Sign in to reply to author
Sign in to forward
You do not have permission to delete messages in this group
Either email addresses are anonymous for this group or you need the view member email addresses permission to view the original message
to மின்தமிழ்
திராவிடம் என்றாலே சிலருக்கு மூக்கு சிவக்கும். அதன் காரணமாகவே அவர்கள் திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணத்தை எழுதிய கால்டுவெல்லைத் தூற்றி மகிழ்வர்.,
இப்போது தமிழ்த்தாய் வாழ்த்தில் அதைத் தவிர்த்துப் பாட முயல்கிறார்கள்.
இவர்கள் நாட்டுப்பண் பாடும்போது திராவிட உத்கல பங்கா என்று இனி பாடமாட்டார்களா?
இது இந்திய தேசியம் என்று கூவுவோர் சிலரின் போக்கு.
இது ஒருபக்கம்.
இந்தச் சந்தடி சாக்கில் எதற்கெடுத்தாலும் தமிழ் தேசியம் என்று கூவுவோர் சிலர் வேறு ஒரு ஆயுதத்தைக் கையில் எடுக்கிறார்கள்.
மனோன்மணீயம் சுந்தரனாரையே தாக்கத் தொடங்கியுள்ளனர்.
எத்திசையும் புகழ் மணக்க #இருந்த# பெரும் தமிழ் அணங்கே
என்ற தொடரில் உள்ள - ’இருந்த’ - என்ற சொல்லை எடுத்துக்கொண்டு, அப்படியெனில் எத்திசையும் புகழ் மணக்க இப்போது தமிழ் இருக்கவில்லையா? – என்கின்றனர்.
பண்டைக் காலத்தில் – அதாவது – தொல்காப்பியர் காலத்தில் – கன்னட, மலையாள மொழிகள் இல்லை. வேங்கட மலைக்குத் தெற்கே தமிழ் மட்டுமே பேசப்பட்டு வந்தது.
தொல்காப்பியத்துக்குப் பாயிரம் எழுதிய பனம்பாரனார்,
வடவேங்கடம், தென்குமரி ஆயிடைத்
தமிழ் கூறும் நல்லுலகத்து
என்றுதான் தன் பாயிரத்தைத் தொடங்குகிறார்.
அதாவது, வேங்கடம் முதல் குமரி வரை தமிழே பேசப்பட்டு வந்தது.
அதாவது, கிழக்கிலும், மேற்கிலும் கடலே எல்லை.
இதுதான் அன்றைய தமிழ்நாடு.
பாண்டியன் தலையாலங்கானத்துச் செரு வென்ற நெடுஞ்செழியனைப் பாடிய புலவர், தம் மதுரைக் காஞ்சி என்ற நூலில்
தென் குமரி வட பெருங்கல்
குண குட கடலா எல்லைத்
தொன்று மொழிந்து தொழில் கேட்ப
என்று அவனது புகழ் பாடுகிறார்.
இதன் பொருள்:
தெற்கே குமரியும், வடக்கே பெரிய மலையும், 70
கிழக்கிலும் மேற்கிலும் கடல்களும் எல்லையாக உள்ளவர்கள்
(தத்தம்)பழைமையான தொடர்புகளைக் கூறி, ஏவிய வழி ஒழுக,
இந்தப் பகுதிதான் அன்றைய மக்களால் திராவிடம் என்று அழைக்கப்பட்ட்து.
(சிலர், இங்கு வட பெருங்கல் என்பது இமயமலையைக் குறிக்கும் என்பர். அது பேராசை.)
இன்னும் பல நூற்றாண்டுகளுக்கு முன்னர், இன்றைய தெலுங்குப் பகுதியும், இந்தத் திராவிடப் பகுதியாக இருந்தது என்பர் வரலாற்று மொழியியலாளர்.
இந்தத் திராவிடப் பகுதியில்தான் தமிழ் ஒருகாலத்தில் கோலோச்சிக்கொண்டு இருந்தது.
நீர் நிரம்பிய கடலையே ஆடையாக உடுத்தியிருக்கும் இந்த உலகத்தின் வதனமாக – முகமாக – இருக்கும் பரத கண்டத்தில்,
நெற்றியாக இருக்கும் தெக்கணத்தில்,
அதிலுள்ள திலகமாக இருக்கும் திராவிடத்தில்
எத்திசையும் புகழ் மணக்க ஒருகாலத்தில் இருந்த தமிழ்ப் பெண்ணே என்று புலவர் கூறியிருக்கும் ஆழமான – உண்மையான – பொருளைப் புரிந்துகொள்ளாமல் அவரைக் குறை கூறுபவர்களை என்னென்பது?
அப்படி ஒரு காலத்தில் தென்னக முழுமையும் புகழுடன் இருந்த தமிழ் அணங்கே,
இப்பொழுதும் அதன் ஒரு பகுதியான இன்றைய தமிழ் நாட்டில் அதே இளமையுடன் விளங்கும் உன் திறத்தை எண்ணி எண்ணி வியந்து வாழ்த்துகிறேன் என்கிறார் மனோன்மணீயம் சுந்தரனார்.
இப்பொழுது படித்துப் பாருங்கள். பொருள் நன்கு புரியும்.
நீராருங் கடலுடுத்த நிலமடந்தைக்(கு) எழில் ஒழுகும்
சீராரும் வதனமெனத் திகழ் பரதக் கண்டமிதில்
தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்
தக்க சிறு பிறை நுதலும் தரித்த நறும் திலகமுமே!
அத் திலக வாசனை போல் அனைத்துலகும் இன்பமுற
எத்திசையும் புகழ் மணக்க இருந்த பெருந் தமிழணங்கே! தமிழணங்கே!
உன் சீரிளமைத் திறம் வியந்து செயல்மறந்து வாழ்த்துதுமே! வாழ்த்துதுமே! வாழ்த்துதுமே!
பின்குறிப்பு – நன்றாக உற்றுப்பாருங்கள். பரத நாடு என்றோ பரத தேசம் என்றோ கவிஞர் கூறவில்லை.
பரத கண்டம் என்கிறார்.
பல மொழிகள், பல இனங்கள் கொண்டது ஒரு கண்டம்.
இதை ஒரு மொழி, ஓர் இனம் என்று ஆக்க முயல்பவர்களுக்கு மூக்கு சிவக்க இதுவும் ஒரு காரணம்.
ப.பாண்டியராஜா