நூதலோசு ஐயா அவர்களுக்கு மிக்க நன்றி. தாங்கள் காட்டியிருக்கும் இரண்டாவது படத்தைப் பார்த்ததும் துள்ளிக்குதிக்காத குறைதான்(வயது?!) இதில் நெடுங்கி(ளி) என்ற சொல்லில் காணப்படும் ங் என்ற எழுத்தில் புள்ளி காணப்படுகிறது. ஆனால் இதன் காலம் 1st Century AE என்று கூறப்பட்டிருப்பது மிகவும் தவறு. கி.மு 3ஆம் நூற்றாண்டுக்கு முந்தைய மாங்குளம் எழுத்துக்களைப் போலவே இதன் எழுத்து காணப்படுகிறது. தொடக்க கால பிராமி எழுத்துக்கள் மிகப் பெரும்பாலும் நேர் கோடுகளைக் கொண்டிருக்கும். அதிலும் க என்பது மிகச் சரியான + (Plus குறி) போலவே இருக்கும். மாங்குளம் கல்வெட்டு எழுத்துக்கள் அவ்வாறே இருக்கும். அதனையும் கி.மு 3-ஆம் நூற்றாண்டு என மகாதேவன் போன்றோர் கணித்தது, அசோகன் கால பிராமியை ஒப்பீடாக வைத்தே. இப்போதுதான் கீழடி, பொருந்தல் ஆகியவற்றுக்குப் பின் நம் தமிழ் பிராமி கி.மு 6-ஆம் நூற்றாண்டுக்கு முந்தையது எனத் தெரியவந்துள்ளது. தாங்கள் காட்டியுள்ள இராமநாதபுரம் பானையோட்டு எழுத்துக்கள் நிச்சயம் கீழடி, பொருந்தல் ஆகிய பிராமிஎழுத்துக்களோடு ஒப்பிடக் கூடியவை. அந்த எழுத்துக்களில் (தொல்காப்பியப்)புள்ளி காணப்படுவது, தொல்காப்பியத்தின் காலத்தை கி.மு 600 க்குக் கொண்டுசெல்கிறது. பூலாங்குறிச்சி எழுத்துக்கள் மிகவும் வளைவான கோடுகளைக் கொண்டவை. அதனால் அதனை கி.பி 3ஆம் நூ. என்பர். அதில் புள்ளி காணப்படுவதால் தொல்காப்பியர் கி.பி.3-ஆம் நூ. சேர்ந்தவர் என்று ஐராவதம் மகாதேவனும், அவரை ஒட்டி, இப்போது கணேசனாரும் கூக்குரலிட்டு வருகின்றனர். நான் கணேசனாருக்குச் சொன்னேன். கி.மு காலத்திய பிராமி எழுத்தில் புள்ளி ஒருநாள் கிடைக்கும். இதோகிடைத்துவிட்டது. இது ஒன்றை வைத்தே தொல்காப்பியர் கி.மு 6-ஆம் நூற்றாண்டுக்கு முந்தையவர் என்று துணிந்து சொல்லலாம்.
ஐயா, இந்த இரண்டாம் (இராமநாதபுரம்) பானையோட்டு எழுத்தைப்பற்றிய செய்தியை எங்குக் கண்டீர்? அதனைப் பற்றிய மேலதிக செய்திகளைக் கொடுக்கமுடியுமா? நிச்சயம் அந்தச் செய்தியில் குறிப்பிட்டவாறு அதன் காலம் கி.பி அல்ல. புள்ளியைப் பார்த்தபின் அதன் காலத்தைப் பின்னுக்கு இழுக்கிறார்கள். ஆனால், புள்ளியைப் பார்த்தபின் தொல்காப்பியரைத்தான் முன்னுக்குத் தள்ளவேண்டும். அதனைப் பற்றிய மறு ஆய்வு தேவை. அது இப்போது எங்கே இருக்கிறது.
என்னைப் பொருத்தமட்டில் அது மிக மிக முக்கியமான பானையோடு.
மிக்க நன்றியுடன்,
ப.பாண்டியராஜா