உறையூர் என்னும் திருக்கோழி
கோழியும் கடலும் கோயில் கொண்ட
கோவலரே யொப்பர் குன்றமன்ன
பாழியும் தோழுமோர் நான்குடையர்
பண்டிவர் தம்மையுங் கண்டறியோம்
வாழியரோ விவர் வண்ண மென்னில்
மாகடல் போன்றுளர் கையில் வெய்ய
ஆழியொன் றேந்தியோர் சங்கு பற்றி
அச்சோ ஒருவர் அழகியவா (1762)
பெரிய திருமொழி 9-2-5
[...]
வரலாறு
இந்த உறையூரில் தர்மவர்மாவின் வம்சத்தில் பிறந்த நந்தசோழன்
என்னும் மன்னன் மிகச் சிறந்த பக்திமானாக அரங்கனுக்குத் தொண்டு
செய்வதில் பேரவா கொண்டவனாயிருந்தான் புத்திரப்பேறில்லாத பெரும்
கவலை மட்டும் அவன் நெஞ்சைவிட்டு நீங்கா திருக்கவே இதற்கும்
ஸ்ரீரங்கநாதனே பதில் சொல்லட்டும் என்று காத்திருந்தான்.
பக்தனுக்கருளும் பரந்தாமன் வைகுண்டத்தில் இலட்சுமி தேவியைக்
கடைக்கண்ணால் நோக்கி நந்தசோழனுக்கு புத்திரியாகுமாறு அருள,
உறையூரில் தாமரை ஓடையில் தாமரைப் பூவில் குழந்தையாக அவதரிக்க
வேட்டைக்குச் சென்ற நந்த சோழன் அம்மகவைக்கண்டெடுத்தான். கமல
மலரில் கண்டெடுத்தமையால் கமலவல்லி என்று பெயரிட்டு அன்புடன்
வளர்த்து வர நாளொருமேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்த
கமலவல்லி திருமணப் பருவம் எய்தினாள். ஒருநாள் ஸ்ரீரெங்கநாதன் குதிரை
மீதேறி பலாச வனத்தில் வேட்டைக்கு வந்ததுபோல் உலாவர, தோழிமாருடன்
அப்பக்கம் வந்த கமலவல்லி, எம்பெருமான் பேரழகைக்கண்டு யார் இவர் என
வியந்தனள். தன் பேரழகை முழுவதும் எம்பெருமான் கமலவல்லிக்கு
காட்டிமறைய, காதல் மோகத்தில் பக்தி வெள்ளத்தில் கலக்கலானாள்
கமலவல்லி.
மகளின் நிலைகண்டு என்னசெய்வதென்று தெரியாது மன்னன் திகைத்து
சிந்தனையில் மூழ்கியிருக்க, அவன் கனவில் வந்த பெருமான் குழந்தைப்
பேறில்லா நின் குறை தீர்க்கவே யாம் திருமகளை அனுப்பினோம். என்
சன்னதிக்கு அழைத்துக் கொண்டுவா, ஏற்றுக் கொள்கிறோம் என்று சொல்ல,
மிகவியந்து மகளை பலவாறாய் துதித்துப் போற்றி நகரை அலங்கரித்து
கமலவல்லியைத் திருமணக்கோலத்தில் ஸ்ரீரங்கம் அழைத்துவர, கோவிலினுள்
நுழைந்ததும் கமலவல்லி மண்ணில்புக்கு மறைந்து அரங்கனோடு இரண்டறக்
கலந்தாள். சேனை பரிவாரங்களுடன் இந்தக் காட்சியைக் கண்ட மன்னன் தான்
பெற்ற பெரும் பேற்றை எண்ணி வியந்து ஸ்ரீரங்கத்திற்கு எண்ணற்ற
திருப்பணிகள் செய்து உறையூர் வந்து கமலவல்லி அழகிய மணவாளன்
திருமண நினைவாக மாபெரும் கோவில் எழுப்பினான். ஸ்ரீரங்கநாதனே
அழகொழுகும் மாப்பிள்ளையாக வந்து திருமணம் செய்து கொண்டதால்
அழகிய மணவாளன் ஆனார். (இவரே மீண்டும் ஒரு
முறை வயலாளி மணவாளன் ஆவார். அதனை திருவாலி திருநகரி
ஸ்தல வரலாற்றில் காணலாம்)
[என்குறிப்பு: தலபுராணங்களில் ஒற்றுமை காண இயலாதவர் பாற்றே கவனிக்க]
[என்குறிப்பு: கற்பனைப் பஞ்சம், ஆண்டாள் கதை நினைவு வருகிறதா?]
இந்நிகழ்ச்சி நடைபெற்றது துவாபரயுகத்தின் முடிவிலென்பர். கலியுகத்தில்
ஒரு சமயம் இந்த உறையூரில் மண்மாரி பெய்து பட்டனம் முழுகிப்போக
அதன்பின் சோழ மன்னர்கள் கங்கை கொண்டானைத் தலைநகர் ஆக்கி
ஆண்டுவருங்காலை இந்த உறையூரில் ஒரு சோழ மன்னனால் கட்டப்பட்ட
கோவிலைத்தான் இப்போது நாம் காண்கிறோம். இவன் இக் கோவிலில்
அழகிய மணவாளனையும் (ஸ்ரீ ரங்கநாதனின் திருமணக்கோலம்) கமல
வல்லியையும் பிரதிட்டை செய்தான். இம்மன்னனின் பெயர்
இன்னதென்றறியுமாறில்லை.
[என்குறிப்பு: கற்பனைக் கதைகளை வரலாற்றுடன் ஒப்பிட்டு சான்று காண முயலும் பொழுது ஏற்படும் துரன்றி வேறில்லை]
[என்குறிப்பு: துவாபரயுகத்தின் முடிவில் என்றால் இவை ஏன் சங்கப்பாடல்களில் இடம்பெறவில்லை என ஓரிருவருக்கு ஐயம் வந்தால் கூட போதுமானது]
[...]
சிறப்புக்கள்
1. திருப்பாணாழ்வார் இங்குதான் அவதரித்தார். இத்தலத்தில் அவருக்கு
தனிச் சன்னதி உள்ளது.
2. சோழநாட்டின் அரண்மனையைச் சேர்ந்த யானை யொன்று
இவ்வூருக்குள் வந்தபோது ஒரு கோழி அதனை யெதிர்த்து யுத்தம் செய்து
தனது கால் நகங்களினாலும். அலகினாலும் கொத்திக் குதறி யானையின்
கண்களைக் குருடாக்கி புறமுதுகிட்டு ஓடச் செய்தது என்றும் அதனால்
இவ்வூருக்கு கோழியூர் என்ற பெயருண்டாகித் திருக்கோழியாயிற்று.
என்றுரைப்பர்.
3. கமலவல்லித் தாயாருக்கும், ஸ்ரீ ரெங்கநாதனுக்கும் நடைபெற்ற காதல்
நிகழ்வுகள் மற்றும் திருமண வைபவங்களை ஸ்ரீரெங்கராஜ சரிதபானம்
என்னும் வடநூல் சிறப்பித்துச் சிலாகித்துப் பேசுகிறது.
4. திருமங்கையாழ்வார் ஒரேயொரு பாசுரத்தால் மங்களாசாசனம்
செய்துள்ளார். இவரும் இத்தலத்தின் பெயரை மட்டுமே குறித்துள்ளார்.
குலசேகரப் பெருமாள் (குலசேகராழ்வார்) சேர, சோழ, பாண்டிய
மண்டலங்கட்கு மன்னனாய் இந்த உறையூரைத் தலைநகராகக் கொண்டு
ஆண்டு வந்தாரென்றும், அவ்வமயம் இக்கோவிலுக்கு மதில் எழுப்பியும்
அளவற்ற நிலதானமும் செய்தாரெனவும் அறியமுடிகிறது.
வரலாற்று ரீதியாக இது ஆய்வுக்குரிய விசயமாக இருந்தாலும் கீழ்வரும்
பாடலில் குலசேகராழ்வார் (கொல்லி) கொல்லிமலை, கூடல், கோழி
இம்மூன்றுக்கும் தம்மை மன்னன் என்று மறைமுகமாகச் சுட்டுவதொன்றே
ஆதாரம்.
அல்லிமாமலர் மங்கை நாதன்
அரங்கன் மெய்யடியார்கள் தம்
எல்லையிலடிமைத் திறத்தினில்
என்றும் மேவு மனத்தனாம்
கொல்லி காவலன் கூடல் நாயகன்
கோழிக்கோன் குலசேகரன்
சொல்லினின் தமிழ் மாலை வல்லவர்
தொண்டர் தொண்டர்க ளாவரே
(பெருமாள் திருமொழி 2ம் பத்து 10 ஆம் பாடல்)
5. மிகப் பிர்ம்மாண்டமான இத்திருத்தலம் பேரழகு வாய்ந்தது.
6. சிபிச் சக்கரவர்த்தி இந்த உறையூரிலிருந்து ஆட்சி புரிந்ததாகவும்
சோழர்களின் முதல் தலைநகரமாக இந்த உறையூர் விளங்க, காவிரிப் பூம்
பட்டிணம் இரண்டாவது கடற்கரைத் தலைநகரமாக விளங்கியதென்றும். இளஞ்
சேட்சென்னி என்னும் அரசன் இவ்வூரை ஆண்டதாகவும் இறைவனின்
பூஜைக்கு வைத்திருந்த மலர்களை அரசி தலையில் சூடிக்கொண்டதால்
இறைவன் சினந்து இந்த ஊரை அழித்துவிட்டதாகவும், நெருப்பு மாரி இந்த
ஊரில் பெய்ததாகவும் ஒரு வரலாறுமுண்டு. மண்மாரி பொழிந்து இவ்வூர்
அழிந்து பட்ட தென்பதற்கே ஆதாரம் அதிகம் எவ்வாறெனில் நன்றாயிருந்த
உறையூர் அழிந்துபட்ட தென்பதே நூல்கள் உரைக்கும் செய்தி, உறையூரை
ஆண்ட ஆதித்த சோழன் தன் பட்டத்து யானையின் மீது வரும்போது,
வில்வ மரத்தின் நிழலில் மறைந்து இருந்த சிவன் இவ்வூரின் பெருமையை
அவனுக்கு உணர்த்த எண்ணி அம் மரத்தின் கீழ் மேய்ந்து கொண்டிருந்த
கோழியை நோக்க, அது உக்கிரம் கொண்டு யானையைக் குத்தி வீழ்த்தியது
என்றும், இதை உணர்ந்த பின்பே, மன்னன் இவ்வூருக்கு அந்தக் கோழியின்
பெயரால், திருக்கோழி என்றே பெயரிட்டான். இவ்வூருக்கு, குக்கிடபுரி,
வாரணபுரி, கோழியூர், திருமுக்கீசுரம் என்ற பெயர்களுமுண்டு.
[என்குறிப்பு: கதைகளை கலந்து சமயக் கதைகளாக மாற்றும் முயற்சி]
7. கரிகாலச் சோழன், குலோத்துங்க சோழன், நலங்கிள்ளி, கிள்ளி
வளவன் முதலானோர் ஆண்ட இடமிது. நாயன்மார்களில் புகழ்ச் சோழர்,
கோச்செங்கன் சோழர் ஆகியோரின் பிறந்த ஊர்.
8. கமலவல்லி நாச்சியாரை திருவரங்கன் அழகிய மணவாளனாக வந்து
திருமணம் புரிந்ததை நினைவுகூறும் முகத்தான் இன்றும் வருடமொருமுறை
ஸ்ரீரங்கத்திலிருந்து அரங்கன் இங்கு எழுந்தருளி கமலவல்லி நாச்சியாருடன்
ஏகாசனத்தில் இங்கு சேவை அளிக்கிறார். இந்த திருக்கல்யாண உற்சவம்
கர்ணப் பேரழகு வாய்ந்தது.