மேலும் சுழற்சியாண்டுகள் என்பது நடைமுறையில் கணக்கிடுதலுக்கு இடையூறாகவும் உள்ளது.
காட்டாக, நான் எனக்கு அட்சய ஆண்டு தைத்திங்கள் திருமணம் நடந்தது, எனது முதல் குழந்தை மாதவி பிறந்தது விபவ ஆண்டு சித்திரைத் திங்கள் என்று கூறினால் எத்தனைப் பேரால் திருமணம் நடந்த ஆண்டு, குழந்தை பிறந்த ஆண்டு, இவற்றுக்கு இடையே உள்ள கால இடைவெளி, மற்றும் இன்று மாதவியின் வயது போன்றவற்றை உடனே புரிந்து கொள்ள இயலும்?
இந்தத் தகவல்களை ஆங்கில நாட்காட்டி வழியாகச் சொன்னால் (அல்லது தமிழக அரசு பின்பற்றும் தமிழ்த் திருவள்ளுவராண்டு தொடராண்டுக் கணக்கிலோ சொன்னாலும்) புரிந்து கொள்ள முடியும்.
அத்துடன் நடைமுறை வாழ்க்கையில் இரயில் பயணத்திற்கு, பள்ளியில் தேர்வு நாள் அறிவிப்பிற்கு, அதையும்விட பள்ளியில் சேர்க்கும் பொழுது பிறந்தநாள் குறிப்பு ஆகிய ஆவணங்களில் நாம் ஆங்கில ஆண்டு முறைப்படி (மெட்ரிக் அளவு போல) உலகத்துடன் இசைந்து பின்பற்றுகிறோம்.
இந்திய நடுவண், மற்றும் மாநில அரசுகள் அனைத்தும் ஒரு ஆர்வக்கோளாரில் பழைய பஞ்சாங்க நாட்குறிப்பிடும் முறைகளை அதிகாரப்பூர்வமாகப் பயன்படுத்துவதையும் கைவிடுதல் நல்லது.
நாட்காட்டி ஒப்பீடுகளை வரலாறு தொல்லியல் துறையினர் மட்டும் ஆவணப்படுத்த ஒப்பிட, குறிப்பிடக் கையாளுவதுடன் நாம் நிறுத்திக் கொள்வது இந்த மில்லியனத்தில் பொருத்தமாக இருக்கும். இன்று அரசுகள் மேற்கொள்ளும் வழக்கத்தில் உள்ள முறையில், வாங்கும் பொழுது அரைகிலோ அரிசி என்றும், அது எத்தனைப் படி அரிசி என்றும் வேலை மெனக்கெட்டு அடுத்தடுத்து குறிப்பிட்டால் எப்படி இருக்குமோ அப்படித்தான் இருக்கிறது.
அடுத்தவர் வழியில் சித்திரை வைகாசி என்பதற்கும் ... ஏப்ரல் மே என்பதற்கும் என்ன வேறுபாடு? எல்லாமே கடன் வாங்கியவை. ஒன்று பலநூறு ஆண்டுகளுக்கு முன்னர் வாங்கிய கடன், மற்றொன்று சில நூறு ஆண்டுகளுக்கு முன் வாங்கிய கடன்.
ஆமாம் நாம் வாங்கியது கடன்தான் என்று விஜய் மல்லையா போல அதைப் பொருட்படுத்தாமல் போய் விடுவோமே.
..... தேமொழி