மதுரைக்கு வந்த சுனாமி (பகுதி-2)

11 views
Skip to first unread message

நா.ரா.கி.காளைராசன்

unread,
May 11, 2017, 12:27:18 PM5/11/17
to mintamil, Kalai Email, thiruppuvanam, thiruveni veni, senthamizh pavai, Mdu poovalingam sundaram, Pirama Dr Palanichamy FFE, naga rethinam, Au1 Udayaganesan, Au1 Chidambaram Puranam Book Correction, sp chinnakaruppan

பிரளயம் (பெரும் சுனாமி)

ஊழிக்காலத்தில் குமரிக்கோட்டைக் கொடுங்கடல் கொண்டதாகத் தமிழ் இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன.  பக்தி இலக்கியங்களான தலபுராணங்களிலும் கடல்கோள் பற்றிய செய்திகள் நிறைந்துள்ளன.  இதில் குறிப்பாகத் ‘திருவிளையாடல் புராணத்தில்‘ வங்கக்கடல் கரையைக் கடந்து மதுரையைத் தாக்கியதாகக் குறிப்புகள் கூறப்பட்டுள்ளன.  இருப்பினும், திருவிளையாடற் புராணத்தில் குறிப்பிடப்பெற்றுள்ள ஊழிக்காலம், பிரளயம், கடல்கோள் (சுனாமி), பற்றிய செய்திகள் விரிவாக ஆராயப்படாமலேயே உள்ளன.  
தொல்லியல்துறையினர் தமிழகத்தில் மிகவும் தொன்மையான இடுகாடுகள் பலவற்றைக் கண்டறிந்து உள்ளனர்.  இவை தவிர்த்து அரிக்கமேடு காவேரிப் பூம்பட்டிணம் ஆகிய ஊர்களின் பண்டைத்தமிழர்களின் தொன்மையான நகரங்கள் கண்டு அறியப்பட்டுள்ளன. இவற்றுடன் கீழடியிலிருந்து கொந்தகை செல்லும் வழியில் சாலைக்குக் கிழக்கே தொல்லியல்துறையினர் மிகவும் பழைமையான நகர நாகரிகம் ஒன்றைக் கண்டறிந்து ஆய்வு செய்து வருகின்றனர். 
இந்தத் தொன்மையான நகரத்தின் பெயர் “மணவூர்“ என்கிறது திருவிளையாடல் புராணம்.  சோமசுந்தரபாண்டியன் மகன் உக்கிரபாண்டியன்.  மணவூரில் பிறந்த காந்திமதியை உக்கிரபாண்டியன் மணம் செய்து கொண்ட காரணத்தினால் இந்த ஊருக்கு மணவூர் என்ற பெயர் உண்டானது என்கிறது திருவிளையாடற் புராணம்.
மணவூரைத் தலைநகராகக் கொண்டு குலசேகர பாண்டியன் ஆண்டுவந்தான்.  தனஞ்செயன் என்ற வணிகன் கடம்பவனத்தின் நடுவே சிவலிங்கம் ஒன்று இருப்பதையும், அதைத் தேவர்கள் வணங்குவதையும் கண்டுவந்து குலசேகர பாண்டிய மன்ன்னிடம் சொல்கிறான்.  மன்னனும் தனது அமைச்சர்களுடன் அங்கே சென்று சிவலிங்கத்தை வணங்கி ஆலயத்தைக் கட்டுகிறான்.   ஆலயத்தைச் சுற்றிலும் மிகவும் அருமையாகத் திட்டமிட்டு ஒரு நகரை உருவாக்குகிறான்.  இவ்வாறு குலசேகர பாண்டியனால் திட்டமிட்டு உருவாக்கப்பட்ட நகரமே இன்றைய மதுரை ஆகும்.
பண்டைய மதுரையும் மணவூரும் எப்படி அழிந்தன?

( பெருஞ் சுனாமி ) கடல்வெள்ளம், பிரளயம், ஊழிக்காலம் என்கிறது திருவிளையாடற் புராணம்.

2004ஆம் ஆண்டு தமிழகத்தைத் தாக்கிய சுனாமியைப் பற்றி நாம் அனைவரும் அறிவோம். ஆனால் இதைப்போலப் பலநூறுமடங்கு பெரிதான மிகப்பெரிய சுனாமி ஒன்று பண்டைக்காலத்தில் பாண்டியநாட்டைத் தாக்கியுள்ளது.  அந்நிகழ்ச்சி திருவிளையாடல் புராணம் ஆலவாய் காண்டத்தில் விரிவாகக் கூறப்பட்டுள்ளது.
“அழகுமிக்க அதுலகீர்த்தியும் போன்று, இருபத்திரண்டு மைந்தர்கள் வழி வழியாகத்தோன்றி, பண்டைய பாண்டிய நாட்டை ஆண்டு வந்தனர்.  இவர்களுக்குப் பின்னர் ‘கீர்த்திபூடண பாண்டியன்‘ மன்னன் ஆட்சி செய்துவரும் நாளில், மிகப் பெரிய பிரளயம் ஏற்பட்டது.   கடல்கள் ஏழும் ஒருசேரப் பொங்கி மேலெழுந்து, உருத்துச் சீறி வெகுண்டு ஆரவாரித்து, காவலாக விளங்கிய கரையைக் கடந்து தமிழுகத்தை அழித்தன.  இந்தப் பிரளயத்தில்  எட்டு மலைகளும், பெரிய அச்சத்தைத் தரும் சக்கரவாள மலையும் நிலைபெயர்ந்தன.  இப்பிரளயம் அடங்கும் முன்னரே மற்றொரு பிரளயமும் தோன்றி அளித்தது.
அந்தப்பெரிய கடல் வெள்ளத்துள் மூழ்கி, அழிவில்லாத எத்துணைப் பெரிய நிலத்திட்டுகளும், ஏழு தீவுகளும், இவைகளிலே தங்கி நிற்பனவும் செல்வனவுமாகிய பொருள்களும், உயர்ந்தமுடிகளையுடைய மலைவகைகளும், ஒழிந்தன.
ஆனாலும், நீண்ட விழிகளையுடைய மீனாட்சியம்மையின் திருக்கோயிலும், வானினின்றும் இறங்கிய இந்திரவிமானமும், பொற்றாமரை வாவியும், இறைவன் திருவிளையாட்டினால் வந்து தங்கிய மணம்வீசும் சோலைகளையுடைய இடபமலையும் (அழகர்கோயில்மலையும்), யானைமலையும், நாகமலையும், பசுவின் உருத்திரிந்த பசுமலையும்,  பன்றிமலையும் இந்தப் பிரளயத்தில் உண்டான கடல்நீரினால் அடித்துச் செல்லப்படாமல் அழியாமல் இருந்தன.
உயர்ந்த  அலைகளையுடைய கடலானது, கொதித்து எழுந்து மரங்கள் முறியக்  கல்லி எடுத்து, அதிர்ந்து ஆரவாரித்து எல்லாத் திசைகளிலும் வீசியும், கடற்கரைகளை எல்லாம் அகழ்ந்துத் தோண்டிப் பொடி செய்து திசைப்புறங்களிற் செல்லுமாறு வீசியும்,  மலைகளை யெல்லாம் மாட வரிசைகளைப் பெயர்த்து வீசியும், ஊழிக்காலத்தில் தோன்றி பிரளயத்தில் உதித்து எழுந்து வந்தன“ என்கிறது திருவிளையாடற் புராணம்.
    
திருவிளையாடற் புராணம் பாடல்கள் :

“எழில்புனையதுலகீர்த்தியெனவிருபத்திரண்டு
வழிவழிமைந்தராகிவையங்காத்தவேந்தர்
பழிதவிரதுலகீர்த்திபாண்டியன்றன்பாலின்பம்
பொழிதரவுதித்தகீர்த்திபூடணன்புரக்குநாளில்

கருங்கடலேழுங்காவற்கரைகடந்தார்த்துப்பொங்கி
ஒருங்கெழுந்துருத்துச்சீறியும்பரோடிம்பரெட்டுப்
பொருங்கட்கரியுமெட்டுப்பொன்னெடுங்கிரியுநேமிப்
பெருங்கடிவரையும்பேரப்பிரளயங்கோத்தவன்றே.

அப்பெருஞ்சலதிவெள்ளத்தழுந்தினவழிவிலாத
எப்பெரும்பொழிலுமேழுதீபமுமிவற்றுட்டங்கி
நிற்பனசெல்வவானதிணைகளுநீண்டசென்னிப்
பர்ப்பதவகையுமீறுபட்டனவாகவங்கண்.

தேனிழிகுதலைத்தீஞ்சொற்சேனெடுங்கண்ணிகோயில்
வானிழிவிமானம்பொற்றாமரைவிளையாட்டின்வந்த
கானிழியிடபக்குன்றங்கரிவரைநாகக்குன்றம்
ஆனிழிவரைவராகவரைமுதலழிவிலாத.

வெள்ளநீர்வறப்பவாதிவேதியன்ஞாலமுன்போல்
உள்ளவாறுதிப்பநல்கியும்பரோடிம்பரேனைப்
புள்ளொடுவிலங்குநல்கிக்கதிருடற்புத்தேண்மூவர்
தள்ளருமரபின்முன்போற்றமிழ்வேந்தர்தமையுந்தந்தான்.

( குறிப்பு - படங்கள் இணையத்தில் இருந்து எடுக்கப்பட்டவை.  இப்படங்களைப் பதிவு செய்தோருக்கு நன்றி)

கட்டுரையாளர் –
காசிஸ்ரீ முனைவர் நா.ரா.கி. காளைராசன்,
kalair...@gmail.com,
9443501912
நாள் - சித்திரை 28 (10.05.2017) வியாழக் கிழமை

dt.common.streams.StreamServer.cls6576.jpg
images (14).jpg
images (15).jpg
பிரளயம் மதுரைக்கு வந்த சுனாமி பகுதி - 2-1.docx
Reply all
Reply to author
Forward
0 new messages