Tuesday, July 14, 2009
பிச்சை எடுக்கும் பெருமாள்! :((((((((
எங்க
ஊரில் மாரியம்மன் கோவில் தவிர, ஒரு சிவன் கோவிலும், ஒரு பெருமாள் கோவிலும்
இருக்கிறது. இது தவிர, ஐயனார் கோவில், பிடாரி கோவில் போன்ற காவல்
தெய்வங்களும், பொய்யாப் பிள்ளையார் துணையே இல்லாமல் தனியாகவும்
இருக்காங்க. இந்த ஐயனார் கோவில் பக்கம் உள்ள வயலில் உழுவதற்குத்
தோண்டியபோது சில சிலைகளும், அஸ்திவாரங்கள் போன்ற அமைப்பும் கிடைத்ததாய்ச்
சொல்கின்றனர். அந்த இடத்தில் ஒரு சிவன் கோயில் இருந்ததாயும் திருமூலர்
எழுப்பிய முதல் மாடக் கோயில் அது எனவும், அதை லிங்கத்தடி எனவும்
சொல்கின்றனர். அது பற்றிய ஆராய்ச்சிகள் எல்லாம் தனியாய் வரும். இப்போப்
பெருமாள் கோயில் பத்தி. பரம்பரை தர்மகர்த்தாக்கள் ஆன எங்க குடும்பத்தார்
அதை அரசுக்கு மாற்றி 70களின் கடைசியில் கொடுத்தாச்சு. கோவிலுக்கு என்று
எங்கள் குடும்ப நிலத்தில் இருந்து அரைவேலியும் எழுதி வைத்திருக்காங்க.
அதைத் தவிரவும், கொஞ்சம் நிலத்தில் சில மரங்கள், ஒரு கருகமரத் தோப்பு
போன்றவையும் உண்டு. இதில் மரங்கள் இருந்த நிலத்தில் மரங்கள் வெட்டப்
பட்டிருக்கின்றன. விற்கப் பட்டிருக்கிறது. கோவில் நிலத்தில் விவசாயமும்
நடைபெற்று வருகிறது. கருகத் தோப்பும் இருக்கிறது. ஆனால் பெருமாள் பிச்சை
எடுத்துக் கொண்டிருக்கிறார்.
நாங்கள் யாராவது ஊருக்குப் போனால்
தான் அவருக்குக் குளியல், துணி மாற்றம், சாப்பாடு எல்லாமே. வெளிச்சமே
அப்போது தான் பார்க்கிறார். நான் திருமணம் ஆகிவந்து இந்தக் கோயிலில் நல்ல
முறையில் எல்லாக் கால பூஜையும் நடந்து பார்த்திருக்கிறேன். ஆனால் இப்போது
ஒரு விளக்குக் கூடப் போடுவது இல்லை. கோவில் தேர்முட்டி, மற்றும் கோவிலின்
வெளிச்சுற்றுச் சுவர் இடிந்து விழுந்துவிட்டதால் அந்த இடம் எல்லாம்
ஆக்கிரமிக்கப் பட்டு இப்போது பட்டாவே போட்டுக் கொடுத்தாச்சு. கோவிலுக்கு
நேர் எதிரே சன்னதிக்கு நேரே ஒரு பெரிய மரம் வெட்டப் பட்டுப் பல
நாட்களாய்க் கிடக்கிறது. அதை அப்புறப்படுத்தச் சொல்லி தற்போதைய டிரஸ்டி
கிட்டே சொல்லியும் அவர் இதோ, போய்ச் சொல்லறேன், என்று டாடா இண்டிகாம்
ஆட்கள் மாதிரியே சொல்லிக் கொண்டிருக்கிறார். இப்போப் போனவாரம் போனபோது கூட
அப்படியே இருக்கிறது. மாடுகள் கட்டப் பட்டு, ஆடுகள் ஓய்வெடுத்துக் கொண்டு
இருக்கின்றன கோயிலுக்குப் போகும் வழியில். நிலத்தில் விளைந்து வந்த நெல்
கோவிலுக்கு அளக்கப் படவே இல்லை. நாங்க ஏதோ எங்களால் முடிஞ்ச பணத்தைக்
கொடுத்து ஒருவேளையாவது நைவேத்தியம் வைத்து விளக்கேற்றச் சொல்லி இருக்கோம்.
அதுக்கும் கொஞ்சம் பணம் கொடுத்தால் தான் அர்ச்சகரோ, குருக்களோ, பட்டரோ
வருவாங்க. வேறு ஊரில் இருந்து வந்து இருந்து செய்வதென்றால் நிரந்தரமாய்
ஏதேனும் ஒரு வருமானம் வேண்டாமா?
தன்னிடம் இருப்பதைக்
கொடுத்துவிட்டுப் பெருமாள் வேண்டுமானால் பட்டினியாய் இருப்பார்.
அவருக்குப் பரவாயில்லை. ஆனால் வந்து பூஜை செய்யறவங்களுக்குக் குடும்பம்,
குழந்தைன்னு இருக்குமே? அதுக்கு ஏதாவது கொடுக்கணுமே? கோவில் டிரஸ்டியிடம்
கேட்டால் குத்தகைக்காரர் அளக்கவில்லை என்கிறார். குத்தகைக்காரர் கிட்டே
கேட்டால் விளையவே இல்லை, சிவன் கோவிலுக்கு என்ன கொடுத்தாங்க? அவங்க கிட்டே
கேட்கிறதில்லையே, என் கிட்டே மட்டும் ஏன் கேட்கணும்? என்று சொல்றாங்க.
இந்த அழகில் பெருமாளின் இருப்பிடமே இடிந்து விழுந்து விடுமோனு பயமா வேறே
இருக்கு. கர்ப்பக் கிரகத்தில் மூலவருக்குக் கீழே வரை வேர் பிடித்து ஒரு
அரசமரம் அபாரமாய் வளர்ந்திருக்கு. அங்கங்கே விரிசல்களில் வெளவால்கள்
அடைந்துள்ளன. நாங்களும் இந்தக் கோயிலுக்குப் பராமரிப்புச் செய்து
கும்பாபிஷேகம் நடத்தப் பிரம்மப் பிரயத்தனம் செய்கிறோம். நேற்று வந்த தகவல்
படி ஊரில் யாருமே பொறுப்பு ஏற்றுக் கொள்ளத் தயார் இல்லை. கோவில் நிலத்தை
விற்றாவது அதை வைப்பு நிதியில் போட்டு அதில் இருந்து வரும் வட்டியில்
கோவிலை நிர்வாகம் செய்யலாமே எனத் தோன்றுகிறது. ஆனால் ஊர் இரண்டு பட்டுக்
கிடக்கிறபடியால் எதையும் சொல்லவோ செய்யவோ முடியவில்லை, பெருமாளே தனக்கு
ஒரு வழியைத் தேடிக்கணும்.
R.E.A.C.H. Foundation மூலம் ஏதானும் வழி
பிறக்கும் என்று ஏற்பாடுகள் செய்து வருகிறோம். இன்றைய பதிவுகள் இரண்டுமே
கொஞ்சம் சீரியஸ் பதிவாகி விட்டது. இவங்க மூலமாத் தான் ஏதேனும் செய்ய
முடியும்னு ஒரு நம்பிக்கை இருக்கு. இவங்க விலாசம்
reach.found...@gmail.com. இதிலே நம்ம சக பதிவாளர் மரபூர்
ஜெ.சந்திரசேகரன் ஒரு உறுப்பினர். அவரை ஞாயிறு அன்று போய்ப் பார்த்தோம்.
உதவிகள் செய்வதாய்ச் சொன்னாலும் எப்படி இருந்தாலும் ஊர்க்காரங்க சம்மதம்
தான் முக்கியம்னு அவரும் சொல்றார். (வழக்கம் போல் சந்திரசேகரும், நான்
நினைச்சாப்பலே இல்லை, ஹிஹிஹி) பெருமாளைப் பிச்சை எடுக்காமல் வைக்க அவரே
தான் மனசு வைக்கணும் போல் இருக்கு. மேலே இருப்பது அவர்தான் குடும்ப
சமேதராய், பொதுவாய் மூலஸ்தானத்தில் இருக்கும் திருமேனிகளைப் படம்
எடுத்துப் போடுவது இல்லை. இவருக்கு முறையான பூஜைகள் நடந்து 25 வருஷமாவது
ஆகி இருக்கும். கோவிலின் வெளிப்புறம் படம் கிடைக்கவில்லை. கிடைத்ததும்
போடுகிறேன்.
சில
மாதங்கள் முன்னே நான் போட்ட இந்தப் பதிவு இது. இப்போ இந்தப் படத்தில்
மூலவருக்கு முன்னே இருக்கும் உற்சவ விக்கிரஹங்கள் கொள்ளை அடிக்கப் பட்டது.
பெருமாளுக்கு அரைவேலி நிலம் இருந்தும் சாப்பாட்டுக்கே கஷ்டப் பட்டுட்டு
இருந்தார். இப்போ அவரோட உற்சவரையே தூக்கிண்டு போயாச்சு! நிலத்தில்
விளைந்ததை எல்லாம் இந்தக் கோயிலின் உள்ளேயே வைத்துக் கொண்டு பெருமாளுக்கு
ஒரு பிடி அரிசி கூடக் கொடுக்காமல் சாப்பிட்டிருக்காங்க. எப்படி மனசு
வந்தது? இதுக்கெல்லாம் எப்போ விடிவு காலம் பிறக்கும்?? மனசு கொதிச்சுப்
போய் எழுதி இருக்கேன். இதுக்கு என்ன நீதி? எப்போ கிடைக்கும்? கண்ணீருடனே எழுதறேன்!